நாம் வாழ்க்கையில் சில தடைகளை சந்திக்கும் போது மனம் சோர்ந்து போகிறோம். என் வாழ்க்கையில் நான் இதைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். உங்களில் பலருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நாம் ஏன் சோர்ந்து போகிறோம்? நான் 2 கொரிந்தியர் 4:1-4 ஐ தியானித்துக் கொண்டிருந்தபோது, எப்படி சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும் என்பதைக் குறித்து சுவாரஸ்யமான அறிவுரைகளை பவுல் வழங்குகிறதை வாசித்தேன். அது நம்மில் பலருக்கு நம் வாழ்க்கையை மறுபரிசீலனை செய்யவும், பவுலின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளவும் ஒரு சிறந்த ஆவிக்குரிய ஆலோசனையாக இருக்கும்.
நாம் சோர்ந்து (மனந்தளர்ந்து) போவதற்கான அறிகுறிகள்
ஜெபமின்மை
“சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்”. லூக்கா 18:1
லூக்கா 18:1 -ல் உள்ள வசனத்தின் சூழல் என்னவென்றால், விடாமல் தொடர்ந்து விண்ணப்பம் செய்து கொண்டே இருந்த ஒரு விதவையைப் பற்றி இயேசு தம் சீடர்களிடம் பேசுகிறார். “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்” என்று இயேசு கூறுகிறார்.
ஜெபம் என்பது ஒருவர் தேவனை சார்ந்திருக்கும் அறிகுறியாகும், மேலும் ஜெபமின்மை என்பது ஒருவர் தேவனை சார்ந்திருப்பதை நிறுத்திவிட்டதன் அறிகுறியாகும்.
நம் வாழ்க்கையில் சவால்கள் வரும்போது அல்லது நாம் மனம் தளரும் போது, நாம் ஜெபிக்கத் திரும்பாமல் நம் சுயத்தை நோக்கித் திரும்புகிறோம்.
வாழ்க்கையில் சில காரியங்கள் நம்மை மூழ்கடிக்கும் போது, சூழ்நிலைகள் நாம் இயேசுவை விட்டு விலகும்படி செய்கிறது. எல்லாவற்றையும் சுயமாக கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். தெரிந்தவர்களைக் கொண்டு அல்லது நம் திறமையைக் கொண்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்கிறோம். கிறிஸ்துவைச் சார்ந்து இருப்பதை நிறுத்துகிறோம். இங்கே தான் நாம் மனம் தளர்ந்து தாழ்ந்து போகிறோம்.
பொறுமையின்மை
“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்”. கலாத்தியர் 6:9
நாம் எதிர்பார்க்கும் காரியங்களில் உடனடியாக முடிவுகள் வர வேண்டும் என்று விரும்புகிறோம். ஏனெனில், நாம் வாழும் உலகம் ஒவ்வொரு விஷயத்திலும் நம் எதிர்பார்ப்புகளை உயர்த்தியிருப்பதால், எதற்கும் காத்திருக்க நமக்கு பொறுமை இருப்பது இல்லை. ஆவிக்குரிய காரியங்களிலும் இதுவே உண்மையாக இருக்கிறது.
ஆண்டவர் நம்மை என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்துகிறாரோ அதன் அடிப்படையில் நாம் நிறைய விஷயங்களைச் செய்கிறோம். ஆனால் ஒவ்வொரு விஷயத்திலும் அவருடைய திட்டங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர அவருக்கென்று குறிப்பிட்ட நேரம் மற்றும் காலம் உள்ளது. அவர் தமது வேலையை செய்யவில்லை என்று நினைத்து நாம் பொறுமையிழந்து சோர்ந்து போகிறோம்.
கலாத்தியர் 6:7-9 வாசித்து, பவுல் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள். வாழ்க்கையில் சரியான தேர்வுகளை எடுங்கள். ஆவியானவரின் வழிநடத்துதலின்படி விதைத்து கிறிஸ்துவுக்கு ஆம் என்று சொல்லுங்கள். ஆனால் அது மட்டுமல்ல, நீங்கள் விதைப்பதை விட அதிகமாக அறுவடை செய்வீர்கள். ஒவ்வொரு முறை நீங்கள் விதைகளை நடும் போதும் (இங்கு விதை என்பது உங்கள் வாழ்க்கையில் தேவன் உங்களுக்காகத் திட்டமிடும் வாழ்க்கை நிகழ்வுகளைக் குறிக்கிறது) நீங்கள் விதைத்ததை விட அதிகமாகப் பெறப் போகிறீர்கள். நீங்கள் அறுவடை செய்யும்போது, தேவன் குறித்த வேளையில் தாராளமாக அறுவடை செய்வீர்கள்.
ஒழுக்கமின்மை
“ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்”. 2 தெசலோனிக்கேயர் 3:10-12
நாம் உழைத்து, அந்த உழைப்பின் பலனை உண்பதற்காகவே தேவன் இந்த உலகத்தைப் படைத்தார். நம்மில் பலர் வேலை எதுவும் செய்யாமலே பலனை மட்டும் அனுபவிக்க குறுக்கு வழிகளை நாடுகிறோம். தேவன் நமக்கு கொடுக்கும் வேலைகளை செய்யாமல், நாம் விரும்பியது கிடைக்கவில்லை என்று மனம் தளர்ந்து அவரிடம் புலம்புகிறோம்.
“ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று”, இவ்வாறு பவுல் தெசலோனிக்கேயர் சபைக்கான விதியை கொடுக்கிறார். ஆனால் உண்மையில் அவர்கள் “யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய்” இருந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
வீண் அலுவற்காரர் - சொல்லப்படும் வேலையைச் செய்வதற்குப் பதிலாக, மற்றவர்களின் வேலையில் தலையிடுபவர்கள். சிலர் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவது, கிசுகிசு, மற்றவர்களைப் பற்றி பேசுவது என செலவிட்டு, நாம் செய்யும்படி தேவன் விரும்பும் காரியத்தை செய்யாமல் நேரத்தை வீணடிக்கிறார்கள்.
பிறர் விஷயங்களில் தலையிட்டு அதில் அதிக நேரம் செலவிடுகிறோம். நாம் சோர்ந்து போவதற்கு இது ஒரு காரணம். இது இயேசு நம்மிடம் செய்யச் சொன்ன வேலையல்ல. இதுதான் பவுல் கூறும் ஒழுங்கீனமான நடத்தை.
எதிர்கால நம்பிக்கையைக் குறித்த பார்வையை இழத்தல்
“ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது”. 2 கொரிந்தியர் 4:16
மேலே உள்ள வசனத்தில் பவுல் சொல்வது என்னவென்றால், வெளிப்புறமாக நீங்கள் போராடுவதாக உணரலாம். ஆனால், நீங்கள் கடந்து செல்லும் போராட்டங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் உங்களை நாளுக்கு நாள் பலப்படுத்துகிறது. (இதை தான் உள்ளான மனுஷனானதுஎன்று குறிப்பிடுகிறார்).
உலகில் நீங்கள் கடந்து செல்வதை வைத்து உங்கள் வாழ்க்கையைப் பார்க்காதீர்கள். உங்கள் வாழ்க்கை இந்த உலகில் நீங்கள் பார்ப்பதில் இல்லை, அது நித்தியத்திற்கும் தொடரப் போகிறது. எனவே நீங்கள் பார்ப்பதை வைத்து மனம் தளர்ந்து, அதைப் பற்றி வருத்தப்படாதீர்கள்.
சோர்ந்து போகாமலிருப்பதன் இரகசியம்
பவுலின் வாழ்க்கையிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர் தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தார். அவரது வாழ்க்கையில் பாதியை சிறையில் கழித்தார். அவர் மிகவும் தாழ்மையான வாழ்க்கை வாழ்ந்த போதும் அவரது ஆவி மேலோங்கி இருந்தது என்று பல இறையியலாளர்கள் கூறுகிறார்கள். கொரிந்து தேவாலயத்தில் பேசும்போது அவர் பகிர்ந்து கொண்ட ரகசியங்கள் உள்ளன.
பவுல் தன் ஊழியத்திற்கு நன்றியுள்ளவராக இருந்ததால் சோர்ந்து போகவில்லை
“இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்து போகிறதில்லை”. 2 கொரிந்தியர் 4:1
பவுல் தன் ஊழியத்திற்கு நன்றியுள்ளவராக இருந்ததால் சோர்ந்து போகவில்லை. அவரது ஊழியம் மற்றும் பிரசங்கங்கள் அனைத்தும் தேவ கிருபையினாலும் இரக்கத்தினாலும் கொடுக்கப்பட்டது. அவருடைய ஊழியம் தேவனின் மிகவும் அன்பான இருதயத்திலிருந்து வந்த ஒரு பரிசு என்றும் மற்றும் அவர் அதற்கு தகுதியானவர் அல்ல என்றும் உணர்ந்திருந்தார். அதைத்தான் பவுல் 2 கொரிந்தியர் 4:1 ல் குறிப்பிடுகிறார்.
2 கொரிந்தியர் 2:12 ஐ திரும்பி பாருங்கள். அதில் அவர் “கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,” என்று கூறுகிறார். “மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவா பட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில்,” 2 கொரிந்தியர் 2:12. தேவன் அவருக்கு கதவைத் திறக்கிறார், கதவு என்பது தேவனிடம் இருந்து அவர் பெற்றுக் கொண்ட ஊழியத்தைக் குறிக்கிறது.
தேவனே உங்களுக்கு ஊழியத்தையும் அல்லது உங்களுக்கு உண்டானவைகளையும் கொடுத்தார் என்பதை நீங்கள் உணரும்போது, அவர் துவங்கியதை அவரே நிலைநிறுத்துகிறார் என்பதையும் உணர்வீர்கள். சோர்ந்து போக மாட்டீர்கள். இது உள்ளத்தில் இருந்து வரும் நன்றியுணர்வு மனப்பான்மையிலிருந்து வருகிறது. மேலும், தேவனை ஆதாரமாக நம்பியிருப்பதால் உங்கள் மனம் சோர்ந்து போகாது.
பவுல் தன் நடத்தையில் கவனமாக இருந்ததால் சோர்ந்து போகவில்லை
“வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்”. 2 கொரிந்தியர் 4:2
கொரிந்து சபை அநேக பொய்யான போதகர்களாலும், தீர்க்கதரிசிகளாலும் நிரம்பியிருந்தது. அவர்களைப் போல் ஏமாற்றும் உத்தி எதையும் தான் பயன்படுத்தவில்லை என்றும் ஊழியத்தில் அவர் கொண்டிருந்த யாவும் தேவனிடத்திலிருந்து வந்தது என்றும் பவுல் கூறுகிறார்.
பவுல் எப்படி சோர்ந்து போகாமல் இருந்தார் என்பதைப் பாருங்கள். ஏனெனில் அவருக்குள் கிறிஸ்து இருந்தார். அவருக்குள் நன்றியுணர்வு மனப்பான்மை இருந்தது. அவருடைய ஊழியத்திற்கு நன்றியுள்ளவராக இருந்தார். அவர் ஊழியத்தை ஒரு வேலையாகப் பார்க்காமல் ஒரு பாக்கியமாகப் பார்த்தார். ஆண்டவருக்கு ஊழியம் செய்வதை ஒரு அற்புதமான பாக்கியமாக அவர் பார்த்தார். அந்த பாக்கியத்திற்கு தான் தகுதியானவர் அல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார். அந்த நன்றியுணர்ச்சி அவரை கவனமாக இருக்கச் செய்தது. அவர் அந்த ஊழியத்தை செய்யும் விதத்தில் கவனமாக இருந்தார். மாம்சத்தின்படி ஊழியம் செய்யும் மற்றவர்களுக்கு எதிராக அவர் இருந்தார். மேலும், தேவன் கனம் பண்ணப்படுவதையும், தேவனின் பார்வையில் தான் செய்ததைச் செய்வதையும் உறுதி செய்ய விரும்பினார்.
அவர் அழைக்கப்பட்டதற்கு திவ்விய உண்மையோடே இருந்தார். அவர் எழுதியபடியே வாழ்ந்தார். “மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது”. 2 கொரிந்தியர் 1:12
பவுல் தன் பிரசங்கத்தைக் குறித்து தாழ்மையுடன் இருந்ததால் சோர்ந்து போகவில்லை
“நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்”. 2 கொரிந்தியர் 4:5
அவர் தனது பிரசாங்கத்தைக் குறித்து தாழ்மையுடன் இருந்தார், அவரிடம் மிகுந்த பணிவு இருந்தது. “நாங்கள் எங்களையே பிரசங்கியாமல்” என்று நினைத்தாரே அன்றி அவர் எந்த வகையிலும் தன்னைப் பற்றி மேன்மையாக நினைக்கவில்லை.
பவுல் நன்றியுணர்வை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவிடமிருந்து ஊழியத்தைப் பெற்றது, தான் அதற்குத் தகுதியற்றவர் என்ற எண்ணம், அவரைச் சுற்றியுள்ள பொய்யான ஊழியங்களைக் கண்டது, இந்த உண்மைகள் யாவும் அவரது பிரசாங்கத்தைக் குறித்து தாழ்மையாக இருக்க வழிவகுத்தது. பவுல் மீது ஈர்ப்பு வைத்த மக்களை அவர் கொண்டிருக்கவில்லை. இயேசு யார் என்பதையும், தங்கள் வாழ்க்கையில் இயேசு என்ன செய்ய விரும்பினார் என்பதையும் பற்றி ஈர்க்கப்பட்ட மக்களைக் கொண்டிருந்தார்
சுருக்கம்
உங்கள் நம்பிக்கையை இழக்கச் செய்யும் இந்த நான்கு அறிகுறிகளும் வாழ்க்கைச் சூழ்நிலைகளும் உங்களிடம் உள்ளதா என சரிபாருங்கள்.
ஜெபம் இல்லாத வாழ்க்கையை வாழ்தல்.
தேவனின் திட்டங்களுக்கு காத்திருக்காமல் பொறுமையிழந்து, நமக்கு உடனடியாகத் தேவை என்று அவரிடம் கூறுதல்.
ஒழுக்கமில்லாமல் வளர்தல் - தேவன் நம்மைச் செய்ய அழைத்த வேலையைச் செய்வதற்கு மாறாக நம் வேலை அல்லாதவற்றை செய்வது.
எதிர்காலத்தைப் பற்றிய பார்வையை இழத்தல் - தேவன் என்ன திட்டமிட்டிருக்கிறார் என்பதைப் பற்றிய பார்வையை இழந்து விட்டு,உடனடியாக கிடைக்கிறதைப் பார்ப்பது.
நம்பிக்கையை இழக்காமல் இருக்க நாம் பவுலின் ஊழியத்தின் மூலம் கற்றுக்கொள்ளக்கூடிய இரகசியங்கள்
தன்னிடம் இருப்பது தேவனிடமிருந்து வந்தது, அவர் தன்னை தாங்குவார், தன்னை கவனித்துக் கொள்வார் என்ற பவுலின் நன்றியுணர்வு. நாமும் அதையே பின்பற்றுவோம்.
தன்னைச் சுற்றியுள்ள விஷயங்கள் அவ்வளவு நன்றாக இல்லாதபோதும் தேவனை மகிமைப்படுத்துகிற பவுலின் நேர்மையான அணுகுமுறை.
தான் செய்வதைக் காண்பித்துக் கொள்வதை விட, தேவனை அதிகமாக கனப்படுத்த வேண்டும் என்ற பவுலின் மனத்தாழ்மையான அணுகுமுறை.
Comments