top of page
Kirupakaran

சுய வஞ்சனை


பல சமயங்களில் நாம் அசலைப் போலவே இருக்கும் போலியான பொருட்களால் ஏமாற்றப்படுகிறோம். அசல் போலவே தோற்றமளித்து நம்மை ஏமாற்றும் பல பொருட்கள் உள்ளன. சமீபத்தில் சீனாவில் தயாரிக்கப்பட்ட iPhone pro 13 ஐப் பார்த்தேன், வெளியில் இருந்து பார்க்கும்போது அசல் ஐபோனின் தோற்றத்தை மிஞ்சும் அளவிற்கு இருந்தது. ஆனால் அதை வாங்கியவர் உள்ளே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கும் ஒரு வீடியோவை பார்த்தேன். அதன் உள்ளே ஒரு மோசமான கேமரா இருந்தது, ஆனால் வெளியே மூன்று போலி கேமராக்கள் இருந்தன.


நமது ஆவிக்குரிய வாழ்க்கையிலும் இதுவே நடக்கிறது. பல சமயங்களில், நாம் வேதத்தின்படி வாழ்ந்து, காரியங்களை செய்கிறோம் என்று நினைத்துக் கொள்ளும் அளவிற்கு ஏமாற்றப்படுகிறோம். ஆனால் நம் உள்ளத்தை பார்க்கும்போது, ஆண்டவர் நம்மை வாழ அழைத்ததற்கு மாறாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது நியாயத் தீர்ப்பு நாளில்தான் வெளிச்சத்துக்கு வருகிறது.


இந்த வஞ்சனையை சாத்தான் ஏவாளிடமிருந்து தொடங்கினான். அது இன்று வரை தொடர்கிறது, இன்னும் நியாயத்தீர்ப்பு நாள் வரை தொடரும். இதைப் பற்றி கொரிந்தியருக்கு பவுல் விவரிக்கிறார், ஏமாற்றுவதைப் பற்றியும், நாம் ஏமாற்றப்படுகிறோம் என்று தெரியாமலேயே கிறிஸ்துவுடன் நெருக்கமாக இருப்பதில் அதன் தாக்கத்தைப் பற்றியும் எச்சரிக்கிறார்.

“ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.” 2 கொரிந்தியர் 11:3

வஞ்சித்தல் சாத்தானிலிருந்தே தொடங்குகிறது என்று பவுல் கூறுகிறார். ஏனெனில் அவன் ஒரு தேவதூதனைப் போல நடிக்கிறான்.

“அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே.” 2 கொரிந்தியர் 11:14

ஏமாற்றத்தின் விளைவுகளை நியாயத்தீர்ப்பில் நிற்கும்போது மிகவும் தாமதமாக உணர்கிறோம். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இதேதான் நடந்தது. அவர்கள் என்ன செய்தார்கள் என்று தேவன் அவர்களிடம் கேட்கும் வரை அவர்கள் தவறை உணரவில்லை, நமக்கும் அவ்வாறே இருக்கும்.

நம்மை தேவனிடத்திலிருந்து விலகி இருக்கச் செய்யும்படி நம்மை நாமே சுயமாய் வஞ்சிக்கிறோமா என்று திரும்பி பார்க்க வேண்டிய 6 முதன்மையான விஷயங்களைக் குறித்து இந்தச் செய்தியில் பார்க்கலாம். அதனால் நமது வழிகளை மாற்றி தேவனிடம் திரும்பி வருவதற்கு இன்னும் காலதாமதம் ஆகவில்லை.


ஞானமும் புத்தியும்

“ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.” 1 கொரிந்தியர் 3:18

  • மற்றவர்களுடன் ஒப்பிடும்போது நாம் திறமையானவர்கள், புத்திசாலிகள் என்று நம்ப வைத்து ஏமாற்றப்படுகிறோம். இந்த எண்ணத்தை சாத்தான் தொடர்ந்து நம் தலையில் வைத்துக் கொண்டே இருக்கிறான். மெதுவாக நாம் செய்யும் செயல்கள் தேவனை விட பெரியது என்று நம்ப வைக்கிறான்.

  • பல சமயங்களில் நம் மனதின் எண்ணங்கள் புத்திசாலித்தனமாக இருக்கலாம் ஆனால் தேவனின் ஞானத்துடன் ஒப்பிடும்போது நாம் எப்போதும் ஒரு முட்டாள் தான். இதை தான் கொரிந்து தேவாலயத்திற்கு பவுல் சொல்கிறார்.

  • நாம் புத்திசாலிகள் சமர்த்தியமானவர்கள் என்று உணர ஆரம்பிக்கும் போது, நாம் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், நம் சுயத்திற்கு கீழ்ப்படிய ஆரம்பித்து, நமக்கான தேவனின் திட்டத்திலிருந்து மெதுவாக விலகிச் செல்கிறோம். நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கும் போதே அகங்காரம் துளிர்விடுகிறது.

  • உங்களைத் தாழ்த்தி, நீங்கள் ஒரு பூஜ்ஜியம் என்று சொல்லி, அவருக்கு ஒப்புக்கொடுங்கள். ஒவ்வொரு நாளும் வழிநடத்தும் ஞானத்தை அவர் உங்களுக்குத் தருவார்.

  • உங்களில் ஏதேனும் சுய வஞ்சனை இருக்கிறதா என்று அவரிடம் கேளுங்கள். அப்படி ஏதேனும் இருந்து, உங்கள் ஜெபம் உண்மையாக இருந்தால் அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார்.

உலகிற்கு இழத்தல்

“நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், திருடனும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” 1 கொரிந்தியர் 6: 7-10

  • சிலரால் ஏமாற்றப்பட்டு நமக்கு அநீதி இழைக்கப்படும்போது, அதை உணரும் தருணத்தில் கோபமடைந்து அவர்கள் பின்னால் சென்று சண்டையிடுகிறோம். சிலருக்கு பெரிய இழப்பு ஏற்பட்டால், அதைத் தீர்ப்பதற்கு அவர்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.

  • 1 கொரிந்தியர் 6 ஆம் அதிகாரத்தில் பவுல் சொல்வது என்னவென்றால், ஒருவன் உங்களை ஏமாற்றினாலோ அல்லது உங்களுக்கு எதிராக அநீதி இழைத்தாலோ, போராடுவதற்கு நீங்கள் இந்த உலகத்தின் மாதிரிகளை பின்பற்றினால் தேவனின் பிள்ளைகளாகிய உங்களுக்கும் அவிசுவாசிக்கும் என்ன வித்தியாசம்?

  • நாம் எதிர்த்துப் போராட வேண்டும் என்ற மனப்பான்மை, நாம் சந்தித்த இழப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நம்மை நம்ப வைப்பதற்கான சாத்தானின் ஏமாற்று மனப்பான்மையாகும்.

  • மாறாக உலகின் பார்வையில் தோற்றவர்களாக இருங்கள், ஆனால் இந்த விஷயத்தில் தேவனுக்கு அடிபணியுங்கள். ஏமாற்றுபவர் அல்லது தவறு செய்பவருக்கு எதிராக தேவன் உங்களுக்காக போராடட்டும். அவர் உங்களைப் போல சண்டையிட மாட்டார், ஆனால் உங்களை ஒரு போதும் இழப்பை சந்திக்க விடமாட்டார்.

  • சொல்வது எளிது ஆனால் கடைபிடிப்பது கடினம். யாராவது உங்களை ஏமாற்றும்போது அல்லது உங்களுக்குத் தவறு செய்யும் போது எதிர்த்து சண்டையிடாமல் இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

கெட்ட சகவாசம்

“மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.” 1 கொரிந்தியர் 15:33


“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” 2 கொரிந்தியர் 6:14

  • நல்லவர்களாலும் கெட்டவர்களாலும் நாம் சூழப்பட்டிருக்கிற இந்த உலகில், சிலர் செல்வம் மற்றும் புகழ் மீது பேராசை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் இலக்குகளை அடைய தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். வெளியில் இருந்து பார்த்தால், உலகில் நல்ல வாழ்க்கை வாழ இது ஒரு வழி போலத் தோன்றும். அது போன்ற மக்களுடன் நீங்கள் இணைந்திருந்தால் நீங்கள் செய்வதை தேவன் சரி என்று ஆமோதிப்பாரா? தவறு என்று ஆமோதிப்பாரா? என்று சோதித்துப் பாருங்கள்.

  • அதே போலவே விசுவாசிகள் மற்றும் அவிசுவாசிகளுடன் நாம் பணியாற்ற வேண்டும். பவுல் சொல்வது என்னவென்றால், அநீதியானவர்களின் செயல்களால் ஏமாற்றப்பட்டு அவர்களுடன் இணைக்கப்பட வேண்டாம். நீங்கள் அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால், அது உங்களை தேவனின் அருகாமையிலிருந்து விலகிச் செல்ல வழிவகுக்கும். “நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது?”

  • நாம் ஒரு படகு (கிறிஸ்து நிறைந்த வாழ்க்கை) தண்ணீரில் (உலகில்) இருப்பது போல் வாழ்வோம். ஒரு படகு தண்ணீரில் இருக்கும்போது அது தண்ணீரை படகின் உள்ளே வர அனுமதிக்காது. தண்ணீர் உள்ளே வந்துவிட்டாலோ அது ஒரு பேரழிவாக இருக்கும்.


பெருமை

“ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்.” கலாத்தியர் 6:3

  • நீங்கள் தேவனிடம் நெருங்கி வரும்போது, நீங்கள் உண்மையிலேயே பரிசுத்தராகவும், மற்றவர்கள் மிகவும் மோசமானவராகவும் உணரலாம். இது சாத்தான் நம்மை ஏமாற்ற முயற்சிக்கும் ஆவிக்குரிய பெருமையே அல்லாமல் வேறில்லை. மேலும் நீங்கள் தேவனை விட உயர்ந்தவர் என்று நம்ப வைக்கிறான்.

  • தேவனுடனான ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் அதிகமாக வளரும்போது, ​​உங்களை பிறருடன் ஒப்பிடும் சுய பெருமையை களையெடுக்க அவரிடம் கேளுங்கள். இதை தினமும் சோதித்துப் பார்த்து, நம்மில் உள்ள வேண்டாத செயல்களை தினமும் கொல்லும்படி பவுல் கூறுகிறார். இதனால் ஆரம்பத்தில் அது வளரும் போதே வேரிலேயே நசுக்கப்படும்.

“அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும்.” கலாத்தியர் 6:4

  • இரண்டாவதாக, நம்மிடம் உள்ள திறமைகளை பற்றி நாம் பெருமைப்படுகிறோம். நம்மிடம் இருப்பது தேவனிடம் இருந்து வந்தது, அதைப் பற்றி பெருமைப்பட வேண்டாம். நீங்கள் அழகாக இருப்பதால் உங்களுக்குப் பெருமை என்றால்,தேவன் உங்கள் அழகைப் படைத்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒன்றுமே செய்யாததை நினைத்து நீங்கள் ஏன் பெருமைப்பட வேண்டும்? வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். ஆதாரம் எங்கே என்று பாருங்கள், எல்லா ஆதாரங்களும் தேவனையே சுட்டிக்காட்டும். தேவன் உங்களுக்காகக் காரியங்களைச் செய்திருந்தால், நீங்கள் ஏன் அதைப் பற்றி பெருமைப்பட வேண்டும்.

  • பவுல் கூறுகிறார், உங்கள் பலவீனத்தைப் பற்றி மேன்மை பாராட்டுங்கள். அப்பொழுது உங்கள் பலவீனம் நம்மில் தேவனின் கிரியைகளை மகிமைப்படுத்தும்.

“நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்” 2 கொரிந்தியர் 11:30


சுயநல கிரியைகள்

“மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான்.”கலாத்தியர் 6:7-8

  • பல சமயங்களில் நாம் தேவனுக்கு நெருக்கமான வாழ்க்கையை வாழ்கிறோம் என்று கூறிக் கொண்டு, நம் மாம்சத்திற்கு விருப்பமானதைச் செய்கிறோம். அது தேவனின் கோபத்தை வரவழைக்கும் சுயநலச் செயல்கள். நாம் தேவனுக்கு நெருக்கமானவர்கள் என்று சொல்லிக்கொண்டு, அந்தச் செயல்களை சரியென்று சொல்லி வாழ்வதை வஞ்சனை என்று பவுல் அழைக்கிறார்.

  • நாம் தேவனோடு நடக்கும்போது,தேவ ஆவிக்குக் கீழ்ப்படிய வேண்டும். பல சமயங்களில் அது மாம்சத்திலிருந்து நாம் பார்ப்பதற்கு முரணாக இருக்கலாம்.

  • தேவனோடு இருக்கும் நெருக்கத்தைப் பறிக்கும் நம்மிடம் உள்ள சுயநலப் பகுதிகளைக் காட்டும்படி தேவனிடம் கேளுங்கள். உங்கள் சுயநலச் செயல்களுக்காக தேவனிடம் மனம்திரும்புங்கள்.

எதுவும் செய்யாத மனோபாவம்

“அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.”யாக்கோபு 1:22

  • நாம் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, ஒரு நல்ல மனநிறைவைப் பெற்றுக் கொண்டு, பழைய வாழ்க்கையையேத் தொடருகிறோம். நீங்கள் அந்த நிலையில் இருந்தால் அது சாத்தானின் வஞ்சனையாகும்.

  • தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து பழைய வாழ்க்கையிலிருந்து திரும்புங்கள். வெறுமனே வலது அல்லது இடதுபுறமாகத் திரும்பாதீர்கள். மாறாக நீங்கள் பழைய வாழ்க்கையின் பாதையில் செல்லாமல் இருக்க U டர்ன் செய்யுங்கள். தேவனிடம் இருந்து நீங்கள் கேட்பதைக் கடைப்பிடித்தால் மட்டுமே அது நடக்கும்.

22 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page