நாம் அனைவரும் சோதனைகளுக்கு ஆளாகிறோம், சில சமயங்களில் அதற்கு இணங்கவும் செய்கிறோம். பின்பு, அதைக் குறித்து வருந்துகிறோம். சோதனைகள் தான் தேவனின் பிள்ளைகளுக்கு எதிரான பிசாசின் மிகப்பெரிய ஆயுதம். அதன் மூலம் ஜனங்களை வஞ்சிப்பதில் அவன் கெட்டிக்காரன். ஏனென்றால், பிசாசானவன் தனது சோதனைகளால் எவனை பாவத்தில் விழ வைக்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல் சுற்றித்திரிகிறான் என்று வேதம் கூறுகிறது. அதே சமயம், சோதனைகளை மேற்கொள்வதற்கு இயேசு நமக்கு பல ஆயுதங்களை கொடுத்துள்ளார். இயேசு 40 நாள் இரவும் பகலும் சோதிக்கப்பட்டார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் அவர் எப்படி சோதனைகளை மேற்கொண்டார் என்று தெரிந்து கொள்வோம். அப்பொழுது நாம் உலகில் அவற்றை மேற்கொள்வதற்கு நமது இரட்சகரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றலாம்.
இயேசு தேவனுடைய குமாரனாக இருந்ததால் மேற்கொண்டார், நான் ஒரு சாதாரண மனிதனாக இருப்பதால் என்னால் முடியாது என்று சிலர் கூறுவர். இந்தக் கற்றலுக்கு நாம் ஏன் இயேசுவை மேற்கோளாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை நான் தருகிறேன். ஏனென்றால், அவர் நாம் அனுபவிக்கும் அனைத்து சோதனைகளையும் கடந்து, அவற்றை மேற்கொண்டார்.
1. சாத்தானால் எல்லா வழிகளிலும் அவர் சோதிக்கப்பட்டார், இருந்தும் அவர் பாவம் செய்யவில்லை. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். எபிரேயர் 4:15
2. அவர் தாமே சோதிக்கப்பட்டதினாலே சோதிக்கப்படுகிற அனைவருக்கும் அவர் உதவுகிறார். ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரேயர் 2:18
வனாந்தரத்தில் இயேசு எப்படி சோதிக்கப்பட்டார் என்பதை மத்தேயு அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் மூன்று முனைகளில் சோதிக்கப்பட்டார்.
சோதனைக்கான முதல் இலக்கு - சுயஆசை
இதைப் பற்றிய விவரங்களை எனது முந்தைய பகுதியில் படிக்கவும் - https://bit.ly/3WzPWBF
சோதனைக்கான இரண்டாவது இலக்கு - பரிசுத்தம்
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிக்கையின் மேல் அவரை நிறுத்தி, மத்தேயு 4:5
அவன் அவரை பரிசுத்த நகரத்திற்கு அழைத்துச் சென்றான். (எந்தவொரு சாதாரண நகரமும் அல்ல, அது பரிசுத்த நகரம்). பரிசுத்தத்திற்கு எதிராக பாவம் செய்ய பிசாசு நம் பரிசுத்தத்திற்குக் குறிவைப்பான் என்பதை இது நிரூபிக்கிறது.
"உப்பரிக்கையின் மேல் அவரை நிறுத்தி", அவன் இயேசுவை அங்கே அழைத்துச் சென்றது போல, ஜனங்கள் நம்மைப் புகழ்வதினால் நாம் பாவம் செய்யும்படி நம்மைத் தூண்டுவதற்கு நாமும் உயர்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படலாம். உங்கள் வழிகள் நீதியானவைகள், உங்கள் வேலை / ஜெபங்கள் சிறந்தவை, நீங்கள் சிறந்த தேவ மனிதர் என்று ஜனங்கள் கூறலாம். அதில் விழுந்துவிடாதீர்கள். யாராவது உங்களைப் புகழ்ந்து பேசும்போது கவனமாக இருங்கள். அவை உங்களைக் கீழே விழ வைக்க ஒரு சோதனையாக இருக்கலாம்.
நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். மத்தேயு 4:6
இயேசுவின் பதில் - அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:7
இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்வது - இதை நம் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்
இயேசு தாம் "தேவனின் குமாரன்ˮ என்று சாத்தானுக்கு நிரூபிக்கவில்லை, அதேபோல் “நாம் தேவனின் பிள்ளைகள்” என்று நாமும் சாத்தானுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
உங்கள் பரிசுத்தத்தில் நீங்கள் சோதிக்கப்படும்போது பிசாசானவன் உங்களைச் சோதிப்பதற்கு தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்துவான். "என்பதாய் எழுதியிருக்கிறது" என்று அவன் தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்தினான். "என்றும் எழுதியிருக்கிறதே" என்று தேவனுடைய வார்த்தையைக் கூறி மட்டுமே சோதனையை மேற்கொண்டார். இரவும் பகலும் வேதத்தைத் தியானிப்பதும் அவருடன் நெருக்கமாக வாழ்வதும் மட்டுமே நமக்குப் பாதுகாப்பு.
நாம் தேவனின் பிள்ளைகள் என்பதால், இந்தப் பரிசுத்தத்தைப் பாதுகாக்க இயேசு மேலும் சில வழிகளைத் தருகிறார். பவுல் ரோமருக்கு இதைப் பற்றிய விவரங்களைத் தருகிறார்.
அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. ரோமர் 12:1
உங்களைப் பரிசுத்தமாக்குவதற்கு உங்கள் சரீரத்தை ஜீவபலியாக ஒப்புக்கொடுங்கள். பரிசுத்தமற்ற சரீரத்தையே பிசாசு பின்தொடர்கிறான். நாம் நம்மையே தேவனுக்கு ஜீவ பலியாகச் செலுத்தினால் சாத்தானின் இந்த வேதனைகளிலிருந்து பரிசுத்த ஆவியானவர் நம்மைக் காப்பார்.
பரிசுத்த ஆவியானவர் இயேசுவிற்கு "என்றும் எழுதியிருக்கிறதே" என்று சொல்லும்படி எப்படி வார்த்தைகளைக் கொடுத்து உதவினாரோ அதே போல நமக்கும் வசனத்தைக் கொடுத்து உதவுவார்.
நாம் உலகத்திற்குள் செல்லும் முன்பு, பரிசுத்த ஆவியானவரால் பாதுகாக்கப்படுவதற்காக தினமும் காலையில் இதுபோன்ற ஜெபங்களைச் செய்ய வேண்டும்.
தனிமையாக இருக்காதீர்கள் - தேவ பிள்ளைகளோடு உங்களுக்கு ஐக்கியம் இருக்க வேண்டும் - தனியாக நிற்கும் ஒருவர் எளிதில் தாக்கப்பட்டு முறியடிக்கப்படலாம், இரண்டு அல்லது மூன்று பேரெனில் சீக்கிரத்தில் முறியடிக்கப்பட முடியாது.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. பிரசங்கி 4:9,12
வேதத்தை தியானிப்பதற்கு தவறாமல் வீட்டில் விசுவாசிகளை சந்திக்கவும்.
தேவனோடு உங்கள் நடையை வலுப்படுத்த பராமரிப்பு குழு (CARE CELL) அல்லது ஜெபக் குழுவின் ஒரு பகுதியாக இருங்கள் (ஆண்கள் அல்லது பெண்கள் ஐக்கியம்).
உங்களுக்கு இந்த வகையான ஐக்கியம் இருக்கும்போது, பிரச்சனையின் போது அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?. பிரசங்கி 4:10-11
“அப்பாலே போ சாத்தானேˮ - அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:10
நாம் அவருடைய புத்திரராயிருக்கிறோம், நாம் அவருடைய சரீரத்தை தரித்தவர்களாய், இயேசுவின் இரத்தத்தால் மூடப்பட்டிருக்கிறோம்.
இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன் - "அப்பாலே போ சாத்தானே" என்று பிசாசை நேராய் எதிர்க்க நாம் இயேசுவின் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
பிசாசை எதிர்க்கும் போது சோதனைகள் விலகிப் போய்விடும். மேலும், நம்மை மீட்பதற்கு இயேசு அனுப்பும் தூதர்களால் நாம் சூழப்பட்டிருப்போம்.
சோதனைக்கான மூன்றாவது இலக்கு - உலக காரியங்கள்
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: மத்தேயு 4:8
உலகமும், உலகத்தின் ராஜ்யங்களும் பிசாசினால் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. எனவே இதை நினைவில் கொள்ளுங்கள்,நாம் வாழும் உலகம் அவனால் கட்டுப்படுத்தப்படுகிறது, விரைவில் அது முடிவுக்கு வரும். அது அவனுக்குத் தெரியும், எனவே அவன் உலகத்தின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி உலகத்தின் சோதனைகளுக்கு நம்மைக் கவர்ந்திழுப்பான்.
அவன் இயேசுவுக்கு உலகத்தின் சகல ராஜ்யங்களையும் காட்டினான், இதன் பொருள், நாம் வாழும் இடத்தை விட அழகாக இருக்கும் ஒரு புதிய இடத்திற்கு நம்மை அவனால் அழைத்துச் செல்ல முடியும். இது நம்மை சோதனையில் விழ வைப்பதற்காக செய்யும் ஒரு செயல்.
அவன் உலகத்தை மட்டுமல்லாமல், உலகத்தின் மகிமையையும் வைத்துள்ளான். "அவைகளின் மகிமையையும்" என்ற வார்த்தைகளைக் கவனியுங்கள் - இது உலகப் பொருட்களாக இருக்கலாம் - அழகான ஆண்கள் (பெண்களுக்கு), அழகான பெண்கள் (ஆண்களுக்கு), அழகான வீடுகள், பணம், பதவி என நம்மை இச்சைக்கு இட்டுச் செல்லும் எதுவாக இருந்தாலும் அதுதான் "அவைகளின் மகிமை" என்பதற்கான அர்த்தம்.
நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். மத்தேயு 4:9
நாம் தேவனை ஆராதிப்பதற்குப் பதிலாக, உலகத்தை ஆராதிக்க வேண்டும் என்று அவன் விரும்புகிறான். உலகத்தின் இச்சைகள் பிசாசை வழிபட வழிவகுக்கும், உலகில் இவை நமக்குத் தேவை, ஆனால் நாம் தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட பின்பு அது நமக்கு முதன்மையாக இருக்க முடியாது. நமது வாழ்க்கைக் கொள்கைகள் அனைத்தும் இயேசுவை முதன்மையாகவும் உலகத்தை இரண்டாம் நிலையிலும் கொண்டு இயங்க வேண்டும்.
· வசனம் நமக்கு தெளிவாக உள்ளது - இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; இது முதலாம் பிரதான கற்பனை. இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. மத்தேயு 22:37-38
இயேசுவிடம் இருந்து கற்றுகொள்வது - இதை நம் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்
சாத்தான் உலகத்தின் மகிமைகளால் உங்களைக் கவர்ந்திழுக்கும் போது –
உங்களை விட அதிகம் சம்பாதிப்பவர்கள் அல்லது வசதியான வாழ்க்கை வாழ்பவர்களைப் பார்த்து இதையெல்லாம் இழக்கிறீர்கள் என்று கவலைப்படாதீர்கள், பதட்டப்படாதீர்கள். அது அவனுடைய திட்டங்களுக்குள் உங்களை இழுப்பதற்கான ஒரு கண்ணி.
ஒப்பிட்டுப் பார்க்கும் மனப்பான்மை சாத்தானுடைய மகிமைகளை நோக்கி நம்மை இழுக்கும் ஒரு கண்ணியாக இருக்கிறது - தியானிப்பதன் மூலமும் ஜெபத்தின் மூலமும் தேவனைத் தேடுவதற்கு வசனத்தை விசுவாசியுங்கள் - முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33
சத்தியம் தெளிவாக உள்ளது, நாம் பிசாசிடம் திரும்பும் போது உலகில் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் அவன் வழங்குவான் - சாப்பிட நல்ல உணவு (தேவ கோபத்தால் வரும் நோய் / வாதைகள் இல்லாதது), வாழ நல்ல இடம் (தேவ கோபத்தின் பாடுகள் / உபத்திரவங்கள் இல்லாதது), வளங்கள் (படிப்பதற்கான கல்லூரி / உலகத் தேவைகளைக் கவனித்துக் கொள்ளத் தேவையான வேலை செய்வதற்கு இடங்கள் அல்லது செய்ய வேண்டிய வணிகம்). எல்லா தேவ மனிதர்களையும் (ஆபிரகாம், மோசே, யாக்கோபு, யோபு போன்றவர்கள்) படியுங்கள். அனைவரும் தேவனைப் பின்பற்றிய பிறகும் ஐசுவரியவான்களாய் இருந்தார்கள், அவர்கள் உலகில் வளமாக வாழ்வதற்கு தங்கள் கண்களை தேவன் மீது வைத்திருந்தார்கள், மாறாக அல்ல.
மனதை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பவுலின் ஆலோசனையுடன் உலகை மேற்கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2
தேவனுடைய வார்த்தையினாலும் அவருடைய பரிசுத்த ஆவியினாலும் நம்முடைய மனதைப் புதுப்பித்து நாம் மறுரூபமாக வேண்டும். இல்லாவிட்டால், உலகத்தின் சிந்தனையை நம்மால் மேற்கொள்ள முடியாது.
நாம் வார்த்தையில் வேரூன்றினால் மட்டுமே - இந்த இச்சைகளை எல்லாம் சோதித்து, தேவ சித்தம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்.
யோபின் வாழ்க்கைப் பாடங்கள் - என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? யோபு 31:1
சரீர இச்சைகள் வாழ்வில் எந்த வயதிலும் நம்மைத் தாக்கலாம். யோபுவிற்கு உபத்திரவங்களுக்கு முன்பு 10 பிள்ளைகள் (7 மகன்கள் / 3மகள்கள்) இருந்தனர். பாடுகளுக்குப் பிற்பாடு மீண்டும் அதே எண்ணிக்கையில் பிள்ளைகளை மீட்டுக் கொண்டார்.
ஆண்களுக்கான எச்சரிக்கை - இங்கே இச்சை என்பது பெண்கள் மீதான இச்சையைக் குறிக்கிறது. ஆண்கள் மீதான இச்சை கூடாது என்பது பெண்களுக்கான எச்சரிக்கை. இப்படித்தான் நாம் படிக்க வேண்டும்.
எனவே, நாம் கண்ணியில் சிக்காமல் இருக்க, இளம் பெண்ணைப் பார்க்க வேண்டாம் என்பது தான் யோபின் அறிவுரை. இதற்கு உதவுமாறு தேவனிடம் கேளுங்கள்.
நம் மாம்சம் பலவீனமானது, இயேசுவின் அறிவுரையை நாம் பின்பற்றாத வரை இந்த சோதனைகளை நம்மால் மேற்கொள்ள முடியாது.
நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41
ஜெபம் இல்லாவிட்டால் சோதனையில் விழுந்துவிடுவோம்.
ஜெபமே சோதனையிலிருந்து நம்மைக் காக்கும் பெரிய சுவர்.
யாக்கோபு எப்படி பெத்தேலில் தேவனோடு போராடி இஸ்ரவேல் ஆகும்படி உடைக்கப்பட்டாரோ அதே போல், தேவனிடம் கேட்பதற்கு போராட்ட மனப்பான்மையுடன் ஜெபியுங்கள்.
அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். ஆதியாகமம் 32:26,28,30
"அப்பாலே போ சாத்தானே" - அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:10
நாம் அவருடைய புத்திரராயிருக்கிறோம், அவருடைய சரீரத்தையும் அவருடைய சகல வெற்றிக் கிரீடங்களையும் அணிந்திருக்கிறோம்.
இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன் - "அப்பாலே போ சாத்தானே" என்று பிசாசை நேராய் எதிர்க்க நாம் இயேசுவின் வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும்.
சாத்தான் இந்த சோதனைகளை எந்த வரிசையிலும் கொண்டு வர முடியும், இது ஒரு தொடர் வரிசை அல்ல, அவன் எந்த வரிசையிலும் நமக்கு எதிராக எடுத்து பயன்படுத்த முடியும். நம்மைக் காத்துக் கொள்வதற்கு நம்முடைய இரட்சகரின் கீழ் மறைந்து கொள்ள வேண்டும். சோதனைகளை மேற்கொள்ள அவரது இரத்தத்தின் கீழ் அடைக்கலம் புக வேண்டும்.
அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. ரோமர் 6:11-12
சாத்தான் நம்மை சோதிக்கலாம், ஆனால் நாம் ஆராதிக்கும் தேவன் அவனை விட சிறந்தவர் மற்றும் பெரியவர் என்பதை நினைவில் வையுங்கள். அவர் நாமத்தைக் கேட்டால் அவன் நடுங்குகிறான். அவருடைய உதவியால் நம் வழியில் வரும் எதையும் நம்மால் மேற்கொள்ள முடியும். அவருடைய நாமம் இயேசு. பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 1 யோவான் 4:4
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்