நாம் அனைவரும் சோதனைக்கு ஆளாகிறோம், சில சமயங்களில் அதற்கு இணங்கவும் செய்கிறோம். பின்பு, அதைக் குறித்து வருந்துகிறோம். சோதனைகள் தான் தேவனின் பிள்ளைகளுக்கு எதிரான பிசாசின் மிகப்பெரிய ஆயுதம். அதன் மூலம் ஜனங்களை வஞ்சிப்பதில் அவன் கெட்டிக்காரன். ஏனென்றால், பிசாசானவன் தனது சோதனைகளால் எவனை பாவத்தில் விழ வைக்கலாம் என்று கெர்ச்சிக்கிற சிங்கம்போல் சுற்றித்திரிகிறான் என்று வேதம் கூறுகிறது. அதே சமயம், சோதனைகளை மேற்கொள்வதற்கு இயேசு நமக்கு பல ஆயுதங்களை கொடுத்துள்ளார்.
இயேசு 40 நாள் இரவும் பகலும் சோதிக்கப்பட்டார் என்று வாசிக்கிறோம். அப்படியானால் இயேசு எப்படி சோதனைகளை மேற்கொண்டார் என்று தெரிந்து கொள்வோம். அப்பொழுது நாம் உலகில் அவற்றை மேற்கொள்வதற்கு நமது இரட்சகரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றலாம்.
இயேசு தேவனுடைய குமாரனாக இருந்ததால் மேற்கொண்டார், நான் ஒரு சாதாரண மனிதனாக இருப்பதால் என்னால் முடியாது என்று சிலர் கூறுவர். இந்தக் கற்றலுக்கு நாம் ஏன் இயேசுவை மேற்கோளாகப் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான காரணங்களை நான் தருகிறேன். ஏனென்றால், அவர் நாம் அனுபவிக்கும் அனைத்து சோதனைகளையும் கடந்து, அவற்றை மேற்கொண்டார்.
சாத்தானால் எல்லா வழிகளிலும் அவர் சோதிக்கப்பட்டார், இருந்தும் அவர் பாவம் செய்யவில்லை. நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். எபிரேயர் 4:15
அவர் தாமே சோதிக்கப்பட்டதினாலே சோதிக்கப்படுகிற அனைவருக்கும் அவர் உதவுகிறார். ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரேயர் 2:18
வனாந்தரத்தில் இயேசு எப்படி சோதிக்கப்பட்டார் என்பதை மத்தேயு அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவர் மூன்று முனைகளில் சோதிக்கப்பட்டார்.
சோதனைக்கான முதல் இலக்கு சுயஆசை / சுயஇச்சை
அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். மத்தேயு 4:2-3
இயேசு 40 நாட்கள் இரவும் பகலும் உபவாசித்திருந்தார். அவருக்குப் பசியுண்டாயிற்று. அவருடைய 'சுயம்' பசியோடிருந்தது.
சாத்தான் இயேவிடம், “நீர் தேவனுடைய குமாரனேயானால்" என்று கூறுகிறான்.
பிசாசிற்கு இயேசு தேவனின் குமாரன் என்று தெரியும், ஆனாலும் அவர் தேவனின் குமாரன் என்பதை நிரூபிக்கும்படி அவரது சுயத்தை உசுப்பி விடுகிறான். இது அவன் நமக்கு வைக்கும் பொறி.
நம் விஷயத்திலும், "நீங்கள் தேவனின் பிள்ளையா?ˮ என்று கேள்வி கேட்கலாம்.
பிசாசானவன் இயேசுவை எதில் தூண்டினான் ?
கல்லுகளை அப்பங்களாக மாற்றும்படி அவன் அவரிடம் கேட்கிறான் - இந்தக் கற்களினால் தேவன் அற்புதங்களைச் செய்திருக்கிறார் என்று பிசாசிற்குத் தெரியும்.
சீன் வனாந்தரத்தில் தேவன் இஸ்ரவேலருக்கு செய்த அற்புதம் - தேவன் என்ன செய்தார் என்பதைக் காட்ட எண்ணாகமம் 20:1-20 வரையிலான வசனங்களில் சிலவற்றை எடுத்துள்ளேன். ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. எண்ணாகமம் 20:2,3,5,7-11
அவர்கள் மிரியாமை அடக்கம் செய்த பிறகு (ஆரோன் மற்றும் மோசேயின் சகோதரி) வனாந்தரத்தில் தண்ணீர் இல்லாததால் முழு இஸ்ரவேல் சபையும் கிளர்ந்தெழுந்தது. அவர்கள் தங்களுடைய பழைய வாழ்க்கையை நினைத்துக் கொண்டு, தங்களை ஏன் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்கள், இந்த இடம் பயங்கரமாய் இருக்கிறது என்றெல்லாம் வாக்குவாதம் செய்தார்கள்.
மோசேயும் ஆரோனும் உதவிக்காக தேவனை நோக்கினர், அவர் அவர்களை ஒரு கன்மலையோடு பேசச் சொன்னார்.
மோசே கோபத்தில் கன்மலையை அடித்து அவர்களின் கண்களுக்கு முன்பாக தண்ணீரை வரவழைத்தார். கன்மலையானது மொத்த சபைக்கும் அவர்களுடைய மிருகங்களுக்கும் தண்ணீர் கொடுத்தது என்று வேதம் கூறுகிறது. இஸ்ரேவேலர்கள் சுமார் 600000 பேர் மற்றும் மிருகங்கள் (ஒரு இஸ்ரேவேலருக்கு சராசரியாக 3), ஆக மொத்தம் கிட்டத்தட்ட 1.8M உயிர்கள் இந்தக் கன்மலையிலிருந்து தண்ணீரைக் குடித்தன.
நம் எல்லாரையும்விட சாத்தானுக்கு இந்தக் கதை நன்கு தெரியும். இருந்த போதும், அவன் இயேசுவிடம் “இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்" என்றான்.
தண்ணீராக மாற்றும்படி அவரிடம் கேட்கவில்லை, மாறாக, அவரது சூழ்நிலையைப் பயன்படுத்தி அதை அப்பமாக மாற்றும்படி கூறுகிறான். சாத்தானின் வஞ்சகத்தைப் பாருங்கள், நிலைமையை எப்படித் திருப்புகிறான்.
இயேசுவின் பதில் - அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:4
இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்வது - இதை நம் வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும்
இயேசு தாம் "தேவனின் குமாரன்ˮ என்று சாத்தானுக்கு நிரூபிக்கவில்லை, அதேபோல் “நாம் தேவனின் பிள்ளைகள்” என்று நாமும் சாத்தானுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.
முக்கியத்துவம் மத்தேயு 4:4 இல் சொல்லப்பட்டுள்ளது. "...தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்..". சாத்தான் நம் சுயத்தை சோதிக்கும்போது நாம் அவனை இவ்வாறு முறியடிக்கலாம்.
இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எபேசியர் 6:17
நம்முடைய வேத தியானத்தில் தவறாமல் இருக்க வேண்டும். மேலும் அவருடைய வார்த்தைகளால் நம்மை நிறைவாக வைத்துக் கொள்ள வேண்டும். அவருடைய வார்த்தைகள் மட்டுமே நமக்கு முதல் தற்காப்பாக இருக்க முடியும்.
தாவீது இரவும் பகலும் தேவனுடையக் கட்டளைகளைத் தியானித்தார், அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் - நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். உமது பிரமாணங்களில் மன மகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். சங்கீதம் 119:11,15-16
வார்த்தையைப் பயன்படுத்துவது தான் முதலாவது தற்காப்பு. வார்த்தை நம் இருதயத்திலும் மனதிலும் இருக்க வேண்டும், அப்போதுதான் அதை தற்காப்பாகப் பயன்படுத்த முடியும். வார்த்தையை நம் இருதயத்திலும் மனதிலும் தெளிவற்றதாக வைத்திருக்க முடியாது, அதை நினைவில் கொள்ள வேண்டும், அதை நாம் மனப்பாடம் செய்ய வேண்டும்.
வேத வசனத்தை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதில் நான் பலவீனன். வசனங்களை நினைவில் கொள்ள எளிய நுட்பங்களைப் பின்பற்றுகிறேன். அலைபேசியில் ஒரு வசனத்தை வால் பேப்பராக (Wallpaper) வைத்திருப்பேன். நாளடைவில், அந்த வசனம் தவறாமல் நினைவில் இருப்பதைப் பார்க்கிறேன். நீங்களும் வசனங்களை மனப்பாடம் செய்ய உங்களுக்கு ஏற்ற நுட்பத்தைத் தேடுங்கள். என் மனைவி மனப்பாடம் செய்ய பைபிள் செயலியைப் (Bible App) பயன்படுத்துகிறார்.
வசனங்களை மீண்டும் மீண்டும் படியுங்கள். முதல் முறை படிக்கும் போது புரியாது, மீண்டும் மீண்டும் படியுங்கள். வார்த்தை உங்களை மாற்றி மனதில் பதிந்து விடும். அது நம்மை எவ்வளவு அதிகமாக மாற்றுகிறதோ, அந்த அளவுக்கு எதிரியை எதிர்த்துப் போராடும் நம்பிக்கை நமக்கு இருக்கும்.
சாத்தான் தேவனின் வார்த்தைக்கு பயப்படுகிறான், அதனால்தான் அவன் வார்த்தையை அறிந்து கொள்வதிலிருந்து / படிப்பதிலிருந்து நம்மைத் தடுக்கிறான். நீங்கள் பிரசங்கம் போன்றவற்றைக் கேட்பதில் நேரத்தை செலவிடலாம். நீங்கள் வார்த்தையைப் படித்து தியானிக்காத வரை எந்தப் பயனும் இல்லை.
வார்த்தையை நீங்கள் மீண்டும் மீண்டும் படிக்கும்போது, சோதனைகளின் சமயங்களில் இந்த வார்த்தைகளைக் கொண்டுவருவதற்கு பரிசுத்த ஆவியானவர் ஒரு உதவியாளராக செயல்படுவார். சரியான வார்த்தையை நினைவு வைத்திருப்பதில் நான் மிகவும் பலவீனமாக இருக்கிறேன், ஆனால் தேவனின் உதவியால் எனது பலவீனத்தை என்னால் மேற்கொள்ள முடிகிறது. பலவீனமான பகுதிகளில் உங்களுக்கு உதவி செய்யும்படி அவரிடம் கேளுங்கள். ஏனென்றால், வாக்குத்தத்தம் இவ்வாறு கூறுகிறது, ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எபிரேயர் 2:18
3. "அப்பாலே போ சாத்தானே" - அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். மத்தேயு 4:10
நாம் அவருடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறோம், அவருடைய சரீரத்தையும் அவருடைய சகல வெற்றிக் கிரீடங்களையும் அணிந்திருக்கிறோம். ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. கலாத்தியர் 3:27
இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன் - "அப்பாலே போ சாத்தானே", இயேசுவின் வார்த்தைகளைப் பயன்படுத்தி, சோதனைகளை நேராக எதிர்கொள்ள வேண்டும்.
அவர் நம்மை சோதனையில் விட்டுவிடமாட்டார். நம்மை மீட்க இயேசு அனுப்பும் தூதர்களால் நாம் சூழப்பட்டிருப்போம்.
நாம் பாவத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதே அவர் தூதர்களை அனுப்புவதற்குக் காரணம். நாம் சாத்தானுக்கு அடிபணியும்போது தான் சோதனைகள் நம்மை பாவத்திற்கு இட்டுச் செல்கின்றன.
எதிர்த்து நில்லுங்கள், அவன் ஓடிப்போவான் என்று வசனம் கூறுகிறது. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7
இதை பாகம் - 2 இல் தொடர்வோம். அதில் இயேசு கடந்து சென்ற மற்ற 2 சோதனைகளையும், அவற்றை அவர் எவ்வாறு மேற்கொண்டார் என்பதையும் மேலும், அதிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்வது என்பதையும் பார்ப்போம்.
ஆமென்