பவுலின் வாழ்க்கையை நாம் தொடர்ந்து படித்து புரிந்து கொள்ளுகையில், எபேசு பட்டணத்தில் அவர் செய்த பணி, சாத்தானின் வலுவான கோட்டையை அவர் எவ்வாறு எதிர்த்துப் போராடினார் , அதில் எப்படி ஜெயித்தார் என்பதை கற்பிக்க மிகவும் ஊக்கமளிக்கிறது. பவுலின் பணியைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன், எபேசு பட்டணத்தின் பின்னணியைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எபேசு பட்டணத்தின் பின்னணி
அது மூடநம்பிக்கை, பிசாசு, அறியாமை போன்றவற்றின் பிடியில் இருந்த ஒரு பட்டணம். வரலாற்றாசிரியர்கள் எபேசு நகரம் சாத்தானின் கோட்டை என்று பதிவு செய்துள்ளனர்.
வணிக ரீதியாக - எபேசு மிகவும் வளமான நகரமாக இருந்தது. ஏனெனில் அது ரோமானியப் பேரரசின் குறுக்கு சாலைகளில் அமைந்திருந்தது.
மதரீதியாக - எபேசு நகரம் தியானாள் ஆலயத்திற்கு (அர்த்தெமி) பிரபலமானது. தியானாள் என்பது பூமியின் தெய்வம் மற்றும் ஆண் மற்றும் பெண்களின் பாலியல் இனப்பெருக்க சக்திகளைக் கட்டுப்படுத்தும் தெய்வமாகக் கருதப்பட்டது. எனவே, கிரேக்கர்கள், யூதர்களின் தியானாள் வழிபாடு மிகவும் காமம் சார்ந்ததாக இருந்தது. இந்த பிரமாண்டமான தியானாள் கோவில் பண்டைய உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகும்.
ஆன்மீக ரீதியாக - எபேசு நகரம் மாந்திரீகம், பிசாசுகளை வணங்குவது, கண்கட்டி வித்தைகள், ஜோதிடம் மற்றும் அனைத்து வகையான மாய நடைமுறைகளின் மையமாக இருந்தது. இந்த நகரம் மூடநம்பிக்கைக்கு விலைபோகி , சாத்தானாலும் அவனது சூழ்ச்சிகளாலும் கவரப்பட்டிருந்தது. ஆன்மீக மற்றும் சாத்தானின் இருள் இந்த முழு நகரத்தையும் மூழ்கடித்திருந்தது.
அப்போஸ்தலர் 19:1-ஐ படிக்கும்போது, பவுல் எபேசு பட்டணத்திற்கு வரும்படிக்கு பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டதை அறிந்து கொள்ளலாம். பவுலை எபேசுவுக்குக் கொண்டு வந்து சாத்தானின் வலுவான கோட்டையை தாக்குவதற்கும் உடைப்பதற்கும் கர்த்தர் ஒரு திட்டம் வைத்திருந்தார்.
‘அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு:’ அப்போஸ்தலர் 19:1
எபேசுக்கு வந்த பிறகு அவர் செய்த முதல் காரியம், பன்னிரண்டு சீஷர்களின் மேல் கையை வைத்து பரிசுத்த ஆவியால் அவர்களை அசீர்வதித்தார். இவ்விதமாக பரிசுத்த ஆவியின் வல்லமை பவுலோடு சேர்ந்து சாத்தானின் பலமான பிடியை உடைக்கப் போராடும்.
‘அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்த ஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்.’ அப்போஸ்தலர் 19:6-7
ஆவிக்குரிய அறியாமைக்கு எதிரான போராட்டம்
‘’பின்பு பவுல் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து,மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான்.சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக் கொண்டுவந்தான்.’ அப்போஸ்தலர் 19:8-9
பவுல் நேரம் செலவிட்டு தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றி பிரசங்கித்த பிறகு ("தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக் குறித்துச் சம்பாஷணைபண்ணி"), அவர்கள் கடினப்பட்டு, பகிரங்கமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராகச் சென்றனர். (கிறிஸ்தவர்கள் "வழி" என்று அழைக்கப்பட்டனர், இது "இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது" என்ற வசனத்தில் கூறப்பட்டுள்ளது). அவர்கள் இவர்களைப் பொய்யான தெய்வம் என்று இழிவுபடுத்தினார்கள். (“சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது”’). ஜனங்களின் கண்களைக் குருடாக்கி கிறிஸ்துவைப் பொய்யாகக் காட்டுவதே சாத்தானின் போராட்டம் ஆகும்.
சாத்தான் எல்லா மனிதர்களையும் இயேசு கிறிஸ்துவின் சத்தியத்திற்கு ஆவிக்குரிய ரீதியில் குருடாக்கிவிட்டான். மனிதர்கள் படித்தவர்களாக,கலாச்சாரத்தை வெளிப்படுத்துபவர்களாக , நல்ல செயல்களைச் செய்பவர்களாக, மரியாதைக்குரிய குடிமக்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் இன்னும் ஆன்மீக ரீதியில் சாத்தானால் குருடாக்கப்பட்டும், அவர்களுடைய கொள்கைகளில் இந்த உலகத்தின் கடவுளால் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கிறார்கள். மத மரியாதை என்பது சாத்தானுடைய தீமையான ராஜ்ஜியத்தில் உடைப்பதற்கு மிகவும் கடினமானது ஆகும். மதவாதிகள் தங்கள் இயலாமையை தேவனுக்கு முன்பாக ஒப்புக்கொண்டு, கண்டனம் செய்யப்பட்ட பாவியாக கிறிஸ்துவிடம் திரும்பச் செய்வது மிகக் கடினமான காரியம் ஆகும்.
இந்த யூதர்கள் எபேசுவில் பின்பற்றப்பட்டு வந்த மாய, மந்திர சக்திகளில் ஈடுபடவில்லை. ஆனால் அவர்கள், எபேசுவில் உள்ள பிசாசுக்கு அடிபணியும் புறஜாதிகளைப் போலவே சாத்தானால் கட்டுப்படுத்தப்பட்டனர். மதம் தான் சாத்தானுடைய மிகப் பெரிய தந்திரம். ஏனெனில் அவன் மதம், நல்ல செயல்கள், பாரம்பரியம், சடங்கு மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றால் பலரைக் குருடாக்க முயற்சிக்கிறான். பவுல் இதை 2 கொரிந்தியரில் விளக்குகிறார்.
‘ எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும்தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்.’ 2 கொரிந்தியர் 4:3-4
பவுலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்
பவுலின் உதாரணம் பின்பற்றுவதற்கு மூன்று கோட்பாடுகளை அளிக்கிறது.
1. யூதர்கள் தங்கள் எதிர்ப்பில் வன்முறையில் ஈடுபடும் வரை பவுல் ஜெப ஆலயத்தில் தங்கி கிறிஸ்துவுக்காக சுவிசேஷம் செய்தார்.
2. பவுலால் ஜெப ஆலயத்தில் தங்கியிருக்க முடியவில்லை ஏனென்றால் அது அவருடைய மனப்பான்மையையும் மற்ற கிறிஸ்தவர்களின் வாழ்க்கையையும் பாதித்தது. எனவே அவர் விலகினார்.
3. பவுல் ஜெப ஆலயம் தன்னை வெளியேற்றும் வரை காத்திருக்கவில்லை, மாறாக தன்னையும் கிறிஸ்தவர்களையும் மத நம்பிக்கைகள் / தவறான போதனைகளிலிருந்து பிரித்துக் கொண்டார். மரபுகள், சடங்குகள், கருத்துக்கள், ஊழியத்தின் தத்துவம், சிறிய வேறுபாடுகள் ஆகியவற்றில் பவுல் தன்னைப் பிரித்துக் கொள்ளவில்லை, ஆனால் கிறிஸ்துவால் அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சத்தியத்திற்கு எதிரானவைகளுக்கும், தவறான மதக் கொள்கைகளுக்கும் தன்னைப் பிரித்துக் கொண்டார்.
a. பவுல் எபேசுவில் கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தங்கியிருக்கலாம். அங்கே கிறிஸ்துவுக்கு சாத்தானின் எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் அவர் அவ்வாறு இருக்க வேண்டி இருந்தது. அதே நேரத்தில் அந்தப் பகுதியில் அவிசுவாசத்தின் இருளை உடைக்கக் கூடிய மனிதர்களைப் பயிற்றுவிப்பதற்கும் அவருக்கு நேரம் தேவைப்பட்டது.
b. போராட்டங்கள் மற்றும் கடினமான வாதங்களின் விளைவாக , அவர் சிலரை கிறிஸ்துவை விசுவாசிக்கும்படி மாற்றினார். அவர்கள் வேதத்தை உலகெங்கும் அறிவிக்கும்படி சுவிசேஷகர்களாக மாறினர்.
‘இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள்’. அப்போஸ்தலர் 19:10
“இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும்” -- பவுலின் போதனையின் காரணமாக, சின்ன ஆசியாவில் உள்ள அனைவரும் கிறிஸ்துவின் நற்செய்தியைக் கேட்டனர். நிச்சயமாக, சின்ன ஆசியா முழுவதற்கும் பவுல் செல்லவில்லை. அவர் கிறிஸ்துவிற்காக மனிதர்களை ஆதாயம் பண்ணி , அவர்களுக்கு எபேசுவில் உள்ள தனது கிறிஸ்தவ பள்ளியில் (செமினரி) பயிற்சி அளித்தார். இவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க எல்லா இடங்களுக்கும் சென்றனர்.
மூட நம்பிக்கைக்கு எதிரான போராட்டம்
பவுல் பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு அற்புதங்கள் செய்து, நோய்களைக் குணப்படுத்தி, அங்கேயே தொடர்ந்து ஊழியம் செய்தார்.
விசேஷமான அசாதாரணமான அற்புதங்கள் – ” பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார்.”அப்போஸ்தலர் 19:11
எபேசியர்கள் மிகவும் மூடநம்பிக்கை உள்ளவர்கள். மந்திர, மாய சக்திகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தனர். சாத்தானும் தீய சக்திகளும் அந்த நகரத்தில் பல அற்புதங்களைச் செய்திருந்தன. எனவே கர்த்தர் இப்பொழுது பவுல் மூலமாக விசேஷமான அற்புதங்களைச் செய்ய வேண்டியிருந்தது. அவை யாவும் சாத்தானின் பலமான கோட்டையைத் தகர்ப்பதற்காக, பரிசுத்த ஆவியின் மூலம் கிறிஸ்துவைப் பற்றிய பவுலின் செய்தியை அங்கீகரிப்பதற்காக நிகழ்த்தப்பட்ட அசாதரணமான, விசேஷமான அற்புதங்கள். இவை சாத்தானின் அற்புதங்களை போலியானதாக மாற்றியது.
வியாதிகள் சுகமாயின – “அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும், கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. “அப்போஸ்தலர் 19:12
சாத்தானால் நோயைக் கொண்டு வர முடியும். எல்லா நோய்களும் சாத்தானிடம் இருந்து வருவதில்லை. ஆனால் சில நோய்கள் அவனிடம் இருந்து வருகின்றன. இந்த வகையான நோய்களைக் குணப்படுத்த முடியும்.
கிறிஸ்து பவுலின் மூலம் குணமாக்கிய அனைத்து நோய்களும் சாத்தானின் செல்வாக்கினால் வந்ததாகத் தெரிகிறது.
இந்த அற்புதங்களில் காணப்பட்ட அசாதாரணம் என்னவென்றால், பவுலிடமிருந்து கைக்குட்டைகள் மற்றும் கவசங்கள் (இடுப்பில் வைக்கப்படும் கந்தல் துணி கவசங்கள்) எடுக்கப்பட்டன. நோயாளிகள் அவற்றைத் தொட்டபோது, அவர்களிடமிருந்து தீய ஆவிகள் வெளியேறியதால் அவர்கள் குணமடைந்தனர். இவை நிச்சயமாக கண்கவர் அற்புதங்களாக இருந்தன. ஜனங்கள் கிறிஸ்துவின் வல்லமையைப் பற்றி பேசுவதற்கு இந்த அற்புதங்கள் வழிவகுத்தன.
பவுலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்
1. கர்த்தர் எபேசு நகரத்தின் மீது அக்கறை கொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் பவுலுக்கு குணமாக்கும் வல்லமையைக் கொடுத்து அதன் மூலம் மூடநம்பிக்கையை எதிர்க்க விரும்பினார்.
2. பரிசுத்த ஆவியின் வல்லமை சாத்தானின் மூடநம்பிக்கைக்கு ஒருக்காலும் இணையானதில்லை. ஏனெனில் இந்த குணப்படுத்துதல்களில் சில ஜனங்கள் அதைப் பற்றி பேசும்படிக்கு மிகவும் சக்திவாய்ந்தவை.
பொல்லாத ஆவிகளுக்கு எதிரான போராட்டம்
“அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள்.” அப்போஸ்தலர் 19:13-14
“பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஒரு யூதனுடைய 7 குமாரர்” ஞானஸ்நானம் பெறாதவர்களாக இருந்த போதிலும், இயேசுவை ஏற்றுக் கொள்ளாத நிலையிலும் கூட, இயேசுவின் நாமத்தைப் பயன்படுத்தி, பொல்லாத ஆவிகளை விரட்டியதைக் குறித்து வாசிக்கிறோம். இந்த ஏழு மகன்களும், தன்னை அமானுஷ்யத்திற்கு ஒப்புக்கொடுத்து, இப்போது தியனாளின் வரிசையில் தன்னை ஒரு ஆசாரியன் என்று கூறிக்கொண்ட ஒரு துரோகியான யூதரின் குமாரர்களாக இருக்கலாம் அல்லது அவர் மற்றும் அவரது மகன்கள் பிசாசு விரட்டுபவர்களாக இருக்கும் அளவிற்கு, அவர் ஒரு கறைபடிந்த யூத பிரதான ஆசாரியனாக இருக்கலாம். இந்த ஏழு குமாரரும் பவுல் கிறிஸ்துவின் நாமத்தில் பிசாசுகளைத் துரத்துவதைப் பார்த்த பொழுது , அவர்களும் கிறிஸ்துவின் பெயரில் பிசாசுகளைத் துரத்தலாம் என்று நினைத்தார்கள். பொதுவாக பிசாசு விரட்டுபவர்கள் பொல்லாத ஆவிகளை வெளியேற்றுவதற்கு மந்திரங்கள், சூனியங்கள் அல்லது வசீகரமான பொருட்களைப் பயன்படுத்துவார்கள் என்பதால் இது இயேசுவின் வல்லமைக்கு ஒரு மெய்யான சாட்சி.
“பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி,பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம் பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள்.“ அப்போஸ்தலர் 19:15-16
பிசாசு வெளிப்படையாக, "இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார்" என்று சொன்னது. பிசாசு பிடித்த மனிதனிடமிருந்து அவர்கள் வேடிக்கையான மற்றும் விசித்திரமான பதிலைப் பெற்றனர். அசாதாரணமான உடல் வலிமை பிசாசு பிடித்ததன் வெளிப்பாடுகளில் ஒன்று. பிசாசு பிடித்த இந்த மனிதன் தனி ஒருவனாக அந்த ஏழு பேரையும் வழிமறித்து , அவர்களின் ஆடைகளைக் கிழித்துப் போட்டு அவர்களை மேற்கொண்டான். அவர்கள் கதவுகள் மற்றும் ஜன்னல்களிலிருந்து குதித்து, நிர்வாணிகளாக நகரத்தின் வழியே ஓடினர்.
பவுலிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்
1. கிறிஸ்துவின் நாமமும் அவருடைய வல்லமையும் பிசாசை துரத்துவதற்கு கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அதை நாம் பெற்றுக் கொள்ளலாம். கிறிஸ்துவிடமிருந்து இதைப் பெற நமக்கு மத்தியஸ்தர்கள் யாரும் தேவையில்லை.
2. எந்த மனித பலத்தாலும் பிசாசைத் துரத்தி விடமுடியாது. இயேசுகிறிஸ்துவின் நாமத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மட்டுமே சாத்தானின் வலுவான பிடியை அகற்ற முடியும்.
3. ஜனங்களை மாற்ற முயற்சிக்கும் ஸ்கேவாவின் 7 குமாரர் வேறு பெயர்களில் இன்றும் நம் மத்தியில் உள்ளனர். நீங்கள் அவர்களை "தத்துவம்" அல்லது "உளவியல்" அல்லது "சமூகவியல்" அல்லது "கம்யூனிசம்" அல்லது "கல்வி" அல்லது "அறிவியல்" என்றோ அல்லது "மதம்" என்றோ கூட அழைக்கலாம்.
4. நீங்கள் அவர்களை வெவ்வேறு பெயர்களில் அழைக்கலாம் ஆனால் அவர்களில் ஒருவருக்கு கூட மனிதனின் இருதயத்தை மாற்றவோ அல்லது சாத்தானின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவோ வல்லமை கிடையாது. கிறிஸ்துவால் மட்டுமே மக்களின் வாழ்க்கையை மாற்றி அவர்களுக்கு ஆவிக்குரிய பரிமாணத்தை கொடுக்க முடியும்.
முடிவுரை
“இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது.விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.” அப்போஸ்தலர் 19:17-20
1. “இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது”
இந்த சம்பவம், நகைச்சுவையின் காரணமாக, எபேசு நகரம் முழுவதும் அறியப்பட்டது, யூதர்களும் கிரேக்கர்களும் அதைப் பற்றி கேள்விப்பட்டனர். ஆவிக்குரிய உலகில், பிசாசுகளை விட இயேசு கிறிஸ்து அதிக வல்லமை வாய்ந்தவர் என்பது தெரிய வந்தது.
கண்ணுக்கு தெரியாத உலகில், கிறிஸ்துவுக்கு சாத்தானை விட அதிக வல்லமை இருந்தது. கிறிஸ்துவின் நாமம் மனிதர்களின் மனதில் புனிதப்படுத்தப்பட்டு மகிமைப்படுத்தப்பட்டது.
எபேசுவில் ஜனங்களுக்கு மத்தியில் பயம் ஏற்பட்டது. ஆனால் அது கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஆவிக்குரிய உலகில் கிறிஸ்துவின் வல்லமையை உணர்ந்தது, வழிதவறிய, வாஞ்சையில்லாத கிறிஸ்தவர்களை ஒரு புதிய அர்ப்பணிப்புக்கு கொண்டு வந்தது.
2. “விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள்.”
கிறிஸ்துவின் வல்லமை நம்மை ஊக்கப்படுத்துகிறது - இது தான் எபேசுவில் நடந்தது. கிறிஸ்துவை அல்லது கிறிஸ்தவத்தைப் பின்பற்றியவர்கள் பயத்திலிருந்து விலகி கிறிஸ்தவத்தை மிகவும் தைரியமாக பின்பற்றும்படிக்கான ஆவியைப் பெற்றனர்.
3. ” மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள்.”
தேவ பயம் அனைத்து சங்கிலிகளையும் உடைத்தது. மாயவித்தைக்காரர்கள் அவர்களை விட்டு விலகியது மட்டுமல்லாமல் அவற்றை பகிரங்கமாக எரிக்கவும் செய்தனர்.
மாயவித்தைக்காரர்கள் யாவரும் ஒன்றுமில்லாதவர்கள் ஆகிவிட்டனர். இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவனின் உண்மையான வல்லமையை ஜனங்கள் உணர்ந்து கொண்டதால் யாரும் அவர்களிடம் திரும்பிச் செல்லவில்லை. மேலும் உதவிக்காக அவர்களிடம் செல்லாதபடிக்கு ஆவியானவர் அவர்களைத் தடுத்துக் கொண்டார்.
“இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள்.” அப்போஸ்தலர் 19:26
4. “இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது.” அப்போஸ்தலர் 19:20
சாத்தானின் வலுவான பிடிகளை உடைக்க பவுலுக்கு நீண்ட காலம் பிடித்தது. இதற்காக 3 வருடங்களுக்கும் மேலாக அவர் அங்கே தங்க வேண்டி இருந்தது.
நாம் சாத்தானுடைய போராட்டத்தில் போராடும் போது அது ஒரு நாள் உடைந்து விடும், நீங்கள் செய்வதில் உறுதியாக இருங்கள். கர்த்தர் சாத்தானை விட பலமானவர் மற்றும் வல்லமையானவர். அது உங்கள் குடும்பம் / வேலை அல்லது சமூக சூழலில் இருக்கலாம் ஆனால் அவர் நீங்கள் போராடிக் கொண்டிருக்கும் அந்த மதிலை உடைக்கும் வல்லமை படைத்தவர்.
தேவனை தொடர்ந்து விசுவாசித்து அவர் உங்களிடம் கேட்பதைச் செய்து கொண்டே இருங்கள். சரியான நேரத்தில் காரியங்களை செய்வதற்கு அவர் திட்டம் வைத்துள்ளார்.
Comments