top of page
Kirupakaran

கவலையான தருணங்களை தேவ பலத்துடன் கடந்து செல்லுதல்


வாழ்க்கையில், நம் அனைவருக்கும் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் சவால்களினால் கவலைகள் வருகின்றன. ஒருவர் எவ்வளவு அமைதியாகத் தோன்றினாலும், ஒவ்வொருவருக்கும் அவருக்கென்று தனி கதை இருக்கிறது. சாலொமோனின் ஞானமான வார்த்தைகள் இந்த எண்ணத்தைக் காட்டுகின்றன.


மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். நீதிமொழிகள் 12:25


நம் கவலைக்கு என்ன காரணம்? இது, அதிகமாக எதிர்பார்க்கப்படுகின்ற விஷயங்களின் உள் உணர்வால் உருவாகின்ற ஒரு உணர்ச்சி. பதட்டம் வேறு, பயம் வேறு. பயம் என்பது ஒரு உண்மையான அச்சுறுத்தலுக்கு ஏற்படுகின்ற உணர்ச்சிபூர்வமான விளைவு அதேசமயம், கவலை என்பது எதிர்கால அச்சுறுத்தலைக் குறித்த எதிர்பார்ப்பு என வரையறுக்கப்படுகிறது.


நமது தற்போதைய நிலைமை எவ்வாறு வெளிப்படும் என்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருக்கும் போது நாம் அடிக்கடி கவலையான தருணங்களுக்கு சென்றுவிடுகிறோம். இறுதி முடிவு தெரியாததால், நம் மனம் எதிர்மறையான சிந்தனை வடிவங்களை உருவாக்க முனைகிறது, அது நமக்குள் இந்த கவலையை அதிகரிக்கிறது.


ஆவிக்குரிய வாழ்க்கையில் கவலையின் தாக்கங்கள்


நாம் தேவனோடு பயணித்து, நம் விசுவாசத்தை வெளிப்படுத்தும் போதும் கூட, இன்னும் சில சமயங்களில் நாம் மிகவும் கவலையாக உணர்கிறோம். இந்த பதட்டமான தருணங்கள் தேவனுடனான நமது ஆவிக்குரிய உறவைப் பாதிக்கலாம்.


1) சாத்தானுக்கு இடம் கொடுக்கிறோம்


நாம் கவலையால் நிரம்பியிருக்கும்போது, சாத்தான் நம்மைத் தாக்குவதற்கு நம் மனதை பிரதான இலக்காக விட்டுவிடுகிறோம்.

தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8


  • மனத் தாக்குதல் - உலகில் நாம் எதிர்கொள்ளும் கவலைகளால் நம் மனம் தெளிவில்லாமல் இருக்கும்போது, ​​நம்மை பலவீனப்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கும் சாத்தானுக்கு, நம்மைத் தாக்க ஒரு இடம் கொடுக்கிறோம். "தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;" என்ற வார்த்தை நம் மனதை நெருக்கும் கவலையைப் பற்றிய சரியான பின்னணியில் உள்ளது. பேதுரு இவ்வாறு அறிவுறுத்துகிறார், அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 1 பேதுரு 5:7

  • தேவனை சார்ந்திருத்தல் - நம்மை அறியாமலே சாத்தானுக்கு இடம் கொடுக்கும்போது, அவன் நம் சிந்தனையைத் தாக்கி, கடினமான காலங்களில் நாம் தனிமையாய் இருப்பதாக உணர வைத்து, எதிர்காலத்தைப் பற்றிய ஒரு இருண்ட படத்தை வரைகிறான். நம் நிலைமைக்கு நாம் மட்டுமே பொறுப்பு என்று நாம் நினைக்கும்படி நம்மை வஞ்சித்து, தேவனை சார்ந்து இருப்பதில் இருந்து நம்மை விலக்க முயற்சிக்கிறான்.

  • பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள் - நாம் நமது ஜெபத்தை, தேவனோடு நடப்பதை இழக்கத் தொடங்குகிறோம். பிரச்சனை மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வுகளை தொடர்ந்து சிந்தித்துக் கொண்டே இருக்கிறோம். நாம் எதிர்கொள்ளும் சவால்களை விட நமது தேவன் பெரியவர், வல்லமை வாய்ந்தவர், நமது பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டவர் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம்.

  • தேவ சித்தத்தில் இருந்து விலகிச் செல்வது - பிரச்சனையில் கவனம் செலுத்த ஆரம்பித்தவுடன், சுயமாக முடிவெடுக்க ஆரம்பிக்கிறோம். பல நேரங்களில் அது தேவ சித்தத்திற்கு எதிராக இருக்கும்.

  • முந்தைய பத்தியில் சொல்லப்பட்ட 1 பேதுரு 5:8 இல் பேதுரு பிசாசை “கெர்ச்சிக்கிற சிங்கம்” என்று விவரித்தார்.

அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள். நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். ஏசாயா 30:16-17.


நீங்கள் மனமுவந்து உங்கள் கவலைகளை அவரிடம் கொண்டு வரும்போது, அவர் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்; ஆனால் நீங்கள் விலகி ஓடினால், எதிரி வேகமாகத் துரத்துவான்! துரத்தும் வேட்டை நாய், தப்பி ஓடுவதை மேற்கொள்ளும்! “வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள்”.


2) நாம் பழைய வழிகளுக்கு நழுவிச் செல்கிறோம்


ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். மத்தேயு 6:31-32


  • விளைவுகள் என்ன என்பதை அறியாததால், பதட்டம் அடைகிறோம். “ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள்”, என்று இதை இயேசு மிகவும் எளிமையாக விவரித்தார். சிறந்த புரிதலுக்காக இதை தற்போதைய சூழலுக்கு ஏற்ப இவ்வாறு மொழிபெயர்க்கலாம்: கடனை செலுத்துவதை நான் எவ்வாறு நிர்வகிப்பது? என் மகளுக்கு அந்தப் பள்ளிப் படிப்பை நான் எப்படி கொடுப்பது? நான் எந்த காரை தேர்வு செய்ய வேண்டும்? எனக்கு என்ன வேலை வாய்ப்பு காத்திருக்கிறது? எனக்கு எப்போது பதவி உயர்வு வரும்?

  • கவலையான நேரங்களின் போது, "என் குழந்தைகளுக்கு சரியான பள்ளி எது என்று தேவனுக்குத் தெரியும்", "எனது பதவி உயர்வுக்கான சரியான நேரத்தை தேவன் வைத்திருக்கிறார்", "என் தொழில் தேர்வுகள் மற்றும் மாற்றங்களில் தேவன் என்னை வழிநடத்துகிறார்" என்று வெளிப்படுத்த மாட்டோம். இயேசுவின் மீது உள்ளார்ந்த நம்பிக்கையுடன் இந்த வார்த்தைகளைப் பேசுவது அந்த தருணங்களில் எதிரியின் செல்வாக்கை முறியடிக்கும்.

  • பல கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் மீதான விசுவாசம், உலக வாழ்க்கை இரண்டிலும் சிறந்ததை விரும்பி இரண்டையும் சமநிலையில் வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், நாம் நம்மைச் சார்ந்தும், உலகம் விரும்புவதைச் சார்ந்தும் இருந்து, நமக்கு உண்மையிலேயே என்ன தேவை என்பது தேவனுக்குத் தெரியும் என்பதை மறந்துவிடுவதால், இது நம்மைக் கவலையடையச் செய்யலாம். ஏனெனில் தேவனுடைய சத்தியம், “இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்” என்று கூறுகிறது.

  • “இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்;”, என்று இயேசு மிகத் தெளிவாக விளக்குகிறார். இப்படிப்பட்ட சிந்தனை நமக்கு இருக்கும் போது, நாம் கிறிஸ்துவுக்குள் மறுபடியும் பிறப்பதற்கு முன்பு எப்படி வாழ்ந்தோமோ அந்த பழைய வழிகளுக்கு மீண்டும் திரும்புகிறோம்.

  • கிறிஸ்துவின் விசுவாசத்திலிருந்து படிப்படியாக நழுவுகிறோம் (பின்வாங்குகிறோம்). நமது சிந்தனை கறைபடிந்து, கிறிஸ்துவை சார்ந்திருப்பதில் இருந்து நம்மை நாமே சார்ந்திருக்கும்படி மாற்றுகிறது.

கவலை குறித்து தேவனின் அறிவுரை

பவுலின் ஆலோசனை

நீங்கள் ஒன்றுக்குங்கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். பிலிப்பியர் 4:6


  • முதலாவது அறிவுரை - பெரும் போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்த பவுல், “ஒன்றுக்குங்கவலைப்படாமல்” என்ற நடைமுறை அறிவுரையை நமக்குத் தருகிறார். அவர் “ஒன்றுக்குங்கவலைப்படாமல்” என்று குறிப்பிடும் போது, அது நமது சுயம், குடும்ப சூழ்நிலைகள், சுற்றுப்புறம் மற்றும் பலவற்றைக் குறிக்கிறது.

  • இரண்டாவது அறிவுரை – “எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்”, என்ற ஒரு சிறந்த அறிவுரையை பவுல் நமக்காக வழங்குகிறார். நாம் கவலையின் சூழ்நிலையால் நிரம்பியிருக்கும்போது, பின்வருவனவற்றைச் செய்யும்படி அவர் நம்மைக் கேட்கிறார்.

  • “எல்லாவற்றையுங்குறித்து, …. ஜெபத்தினாலும்” - தேவனிடம் ஜெபம் செய்யுங்கள் - நீங்கள் ஜெபிக்கும்போது, "தேவனே, என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி எனக்கு நிச்சயமில்லை, ஆனால் என் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நான் உங்கள் மீது நம்பிக்கை வைக்கிறேன்", என்று தெரிவியுங்கள்.

  • “ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும்” - ஜெபம் மற்றும் வேண்டுதல் என்று வேதம் கூறுகிறது - ஜெபம் என்பது காரியங்களைக் கேட்பதை உள்ளடக்கியது என்று வேதம் கற்பிக்கிறது. ஒருவரிடம் ஒரு கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது உதவி கேட்பது போல், நீங்கள் தேவனிடம் தாழ்மையுடன் உதவி கேளுங்கள். நீங்கள் எங்கிருந்து தொடங்குகிறீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்தி, உங்கள் கோரிக்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக ஒன்றுமில்லாத தாழ்ந்த நிலைக்குச் செல்லுங்கள். உதாரணமாக, யாரை திருமணம் செய்வது என்று நீங்கள் முடிவு செய்யும்போது, “தேவனே, யாரை திருமணம் செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் முடிவெடுத்து எனக்கு வழி காட்டுவீர்கள் என்று நான் நம்புகிறேன்" என்று ஜெபிக்கலாம்.

  • “ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” - கிறிஸ்துவின் விசுவாசிகளாக இருக்கும் நாம், கவலையின் தருணங்களை தேவனிடம் நெருங்கி வரப் பயன்படுத்த வேண்டும். இந்த நேரங்கள் நமது ஆவிக்குரிய வாழ்க்கையைப் பலப்படுத்தலாம். எனவே, ஆவிக்குரிய ரீதியில் வளர உதவும் இந்த தருணங்களுக்காக நன்றியுடன் இருங்கள். நீங்கள் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்தும்போது, எதிரியின் பலம் குறைந்து தேவனுடைய திட்டம் விரைவில் வெற்றியடைகிறது.


இயேசு கூறும் ஆலோசனை

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். மத்தேயு 11:28-29


  • கவலையான தருணங்களில் தம்மிடம் திரும்பும்படி இயேசு நம்மைக் கேட்கிறார் – “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”.

  • இயேசு கூறுகிறார் – “நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்;”.

  • ஒரு காளையின் நுகத்தை காட்சிப்படுத்திப் பாருங்கள். காளையானது வண்டியை இழுக்கும்போது, நுகம் வண்டியின் முழு எடையையும் தாங்கி, முழு சுமையையும் காளையின் மீது ஏற்றுகிறது. காளை பாதி சுமையை மட்டும் சுமந்து கொண்டு, மற்ற பாதியை வேறு ஏதோ ஒன்று சுமந்து செல்வதை நாம் இதுவரை பார்த்ததில்லை.

  • நாம் இயேசுவிடம் வர வேண்டும் என்று வார்த்தை தெளிவாக கூறுகிறது – “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்;”. உங்கள் கவலைகளை முழுவதுமாக அவரிடம் கொடுத்து விடுங்கள். விஷயங்களை நாமே கையாள முயற்சித்துக் கொண்டு அவரை ஓரளவு மட்டும் நம்பக்கூடாது. நாம் அவரிடம் சரணடையும் போது, அது முழுமையான நிறைவான அர்ப்பணிப்பாக இருக்க வேண்டும்.

  • “அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்”, என்பதே தேவன் தரும் வாக்குத்தத்தம். கவலை நிறைந்த சமயங்களில் நமக்கு சமாதானத்தைத் தருகிறார். விஷயங்கள் நிச்சயமற்றதாக இருந்தாலும் கூட, தேவன் முழுவதுமாக கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து நாம் அமைதியாக உணர முடியும்.

  • நம்முடைய கவலையான தருணங்கள் எதிர்காலத்தைப் பற்றி நம்மைக் கவலையடையச் செய்கிறது. நாளையைப் பற்றி கவலைப்படாதே என்று இயேசு கூறுகிறார் - ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும்; அந்தந்த நாளுக்கு அதினதின் பாடுபோதும். மத்தேயு 6:34

  • நாம் கவலைப்பட வேண்டாம் என்று இயேசு கேட்கிறார், ஏனென்றால் ஒவ்வொரு நாளும் நமது பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அவர் தமது எல்லாப் பிள்ளைகளையும் கவனித்துக் கொள்கிறார். எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா) சங்கீதம் 68:19. கவலையான சூழ்நிலையில் நாம் தனியாக இருக்கிறோம் என்று சாத்தானால் நம்ப வைத்து வஞ்சிக்கப்படுகிறோம்.

  • நம் வாழ்க்கைக்கான திறவுகோல்களை அவர் வைத்திருக்கிறார். ஏனெனில், நமது கடந்த காலம் / நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை எல்லாம் தேவன் அறிந்திருக்கிறார். நம் எதிர்காலம் நம் கையில் இல்லை - தேவன் எதிர்காலத்தை வைத்திருக்கிறார்! நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப் போலிருக்கிறதே. யாக்கோபு 4:14

  • கவலைப்பட வேண்டாம் என்பது தான் தேவன் கொடுக்கும் ஆலோசனை. ஏனெனில், சூழ்நிலையைப் பற்றி கவலைப்படுவதன் மூலம் நம் நிலைமையை மாற்ற முடியாது. கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? லூக்கா 12:25-26

நமக்கான தேவனின் ஆலோசனை


தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். லூக்கா 12:31,34

  • கர்த்தருக்கு மகிழ்ச்சியைத் தரும் செயல்களுக்காக பாடுபடுங்கள். நீங்கள் கவலைப்படும்போது, அந்த தருணங்களை ஜெபங்களாக மாற்றி, உங்கள் விண்ணப்பங்களையும் ஸ்தோத்திரங்களையும் தெரிவியுங்கள். தேவனின் தலையீட்டைக் கேளுங்கள், உங்கள் சூழ்நிலைகளில் அவருடைய மகிமை பிரகாசிக்கட்டும்.

  • தேவனின் காரியங்கள் மற்றும் அவரது பிரச்சனை தீர்க்கும் செயல்களை நோக்கி உங்கள் கவனத்தை செலுத்துங்கள். இது கடினமான சூழ்நிலைகளில் கவலையிலிருந்து உங்களைப் பாதுகாக்கும், சமாதானத்தைக் கொண்டுவரும். உங்கள் இருதயத்தில் தேவன் மீது அன்பு வைத்திருப்பதற்கும், அவருடைய ராஜ்யத்திற்காக பாடுபடுவதற்கும் விழிப்பான முடிவை எடுங்கள், இதனால் கவலை நிறைந்த தருணங்களை உங்களால் சமாளிக்க முடியும்.

  • பல பாடுகள் இருந்தாலும், தேவனின் ஆறுதல் அந்த சூழ்நிலைக்கு மகிழ்ச்சியையும் சமாதானத்தையும் தருகிறது. என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. சங்கீதம் 94:19


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page