“பயபக்தி" என்ற வார்த்தையை நாம் பல்வேறு பிரசங்கங்களில் பல போதகர்கள் கூறக் கேட்டிருக்கிறோம். அப்படி என்றால் என்ன? ஆங்கில வெப்ஸ்டர் மொழிபெயர்ப்பில் "யாரோ ஒருவர் மீதோ அல்லது எதன் மீதோ ஆழ்ந்த மரியாதை" என விளக்கம் கூறப்பட்டுள்ளது.
கடவுளின் மீதான இந்த ஆழ்ந்த மரியாதையை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்துவீர்கள்? மற்ற மதங்களைப் பார்க்கும்போது, இந்துக்கள் கடவுளின் முன்னால் விழுந்து வணங்குகிறார்கள். முஸ்லீம்கள் முழங்கால் இட்டு, தலையை கீழாய் தாழ்த்தி தங்கள் தொழுகையை பண்ணுகின்றனர். இவை யாவும் "ஆழ்ந்த மரியாதை" யைக் குறிக்கும் செயல்கள்.
கிறிஸ்தவர்களாகிய நாம் எவ்வாறு கடவுளை வணங்க வேண்டும்? இந்த கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன், புதிய ஏற்பாட்டின் முதல் புத்தகம் (மத்தேயு) மற்றும் புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகம் (வெளிப்படுத்தின விசேஷம்) ஆகியவற்றில் விவரிக்கப்பட்டுள்ள கடவுளின் குணங்களை முதலில் புரிந்துகொள்வோம். அவற்றை புரிந்துகொண்டவுடன், கடவுளின் மீதான மரியாதை நம் வழிபாட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்களே அறிவீர்கள்.
நம் தேவனை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மூன்று விஷயங்கள் உள்ளன.
அவர் நம்முடைய இம்மானுவேல்
மத்தேயு 1 ஆம் அதிகாரத்தில், தேவன் தம்மைத் தாழ்த்தி இந்த உலகிற்கு வர ஒப்புக் கொடுத்ததை அறியலாம். இது இயேசுவின் வம்சாவளியிலிருந்து தொடங்குகிறது.
இதில் தாமார், ராகாப், ரூத் மற்றும் உரியாவின் மனைவி (பத்சேபாள்) ஆகிய பெண்களைக் குறித்து கூறப்பட்டிருக்கிறது.வித்தியாசமாக நான்கு பெண்களைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால் இந்த வம்சாவளி கவனம் ஈர்க்கிறது.
இயேசு தனது வம்சாவளியில் தன்னை பாவிகளுடன் சேர்த்து அடையாளம் காட்டுகிறார் என்பதை நிரூபிக்க, இந்த நான்கு பெண்களும் இயேசுவின் வம்சாவளியில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார்கள்.
மனிதர்களுக்கும் தனக்கும் இடையே ஒரு அரிய தனித்துவத்தோடு ஒரு சாதாரண மனிதனைப் போல பிறக்க அவர் தன்னைத் தேர்ந்தெடுத்தார். அவர் பாவத்தின் மூலம் பிறக்காமல், கன்னிமேரி பரிசுத்த ஆவியின் மூலம் கருத்தரிக்கப்பட்டதன் மூலம் பிறந்தார்.
அவர் தான் பிறப்பதற்கு ஒரு மேய்ப்பனின் தொழுவத்தை தேர்வு செய்தார் - வரலாற்றில் இது போன்று எவரும் எளிமையிலும் எளிமையான இடத்தை பிறந்த இடமாக தேர்வு செய்ததில்லை.
அவர் இயேசு என்ற பெயரைப் பெற்றார் - அதன் பொருள், இயேசு நம் பாவத்தில் நம்மை சந்திக்கிறார், அவருடைய நோக்கம் நம் பாவங்களிலிருந்து நம்மை காப்பாற்றுவதாகும். அவர் முதலில் நம்மை பாவத்தின் தண்டனையிலிருந்தும், பின்னர் பாவத்தின் சக்தியிலிருந்தும், இறுதியாக பாவத்தின் இருப்பிலிருந்தும் காப்பாற்றுகிறார் என்பதாகும்.
பவுல் எழுதுகிறார், 'அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். ' அப்போஸ்தலர் 4:12
நம்முடைய தேவனுக்கு பல பெயர்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இம்மானுவேல். இம்மானுவேல் என்பதற்கு "கடவுள் நம்மோடு இருக்கிறார்" என்று அர்த்தம். நாம் அவரிடத்திற்கு வர முடியும் என்பதை இது காட்டுகிறது; அதாவது அவர் நம்மிடம் வந்திருந்தால், நாமும் அவரிடம் வரலாம். “பிறகு, இயேசு கிறிஸ்து ‘நம்மோடு கடவுள்’ என்றால், நாம் எந்த கேள்வியோ தயக்கமோ இல்லாமல் கடவுளிடம் வரலாம். நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கு கடவுளை அறிமுகப்படுத்த உங்களுக்கு பாதிரியார் அல்லது பரிந்துரையாளர் தேவையில்லை, ஏனென்றால் தேவனை தம்மை தாம் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்.” என்று ஸ்பர்ஜன் கூறுகிறார்
ஜீவபுஸ்தகம் / ஆட்டுக்குட்டி
நியாயத்தீர்ப்பு இருக்கையில் இருக்கும்போது அவர் எப்படி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நாம் வெளிப்படுத்தின விசேஷம் 5 ஆம் அதிகாரத்திற்குத் திரும்புவோம்.
ஜீவபுஸ்தகம்
'அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். ' வெளிப்படுத்தின விசேஷம் 5:1-4
ஜீவபுஸ்தகம் ஒரு சுருள் போன்று இருக்கும். இது ஒவ்வொரு மனிதனின் அனைத்து நல்ல / தவறான விஷயங்களைக் (பாவங்கள்) கோடிட்டுக் காட்டும் புத்தகம். ஒவ்வொரு மனிதனின் ஆரம்பக் குழந்தை காலம் முதல் இறப்பு வரையிலான அனைத்து காரியங்களும் அடங்கிய வீடியோ டேப் போல இதை நினைத்துப் பாருங்கள்.
வேறு மாதிரியான ஒரு இயேசுவை இங்கே நாம் வேறு வடிவத்தில் பார்க்கிறோம் - “ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்”, மத்தேயுவின் ஆரம்பத்தில், அவர் பூமியில் எப்படித் தாழ்ந்த கோலத்தில் இருந்தார் என்று பார்த்தோம். இங்கே அவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைக் காண்கிறோம். அவருடைய வலது கையில் ஜீவபுஸ்தகம் இருப்பதாக படிக்கிறோம்.
தேவதூதர்கள் இயேசுவைப் போற்றி புகழ்ந்து பாடுவதை நாம் படிக்கிறோம் – “புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங்கண்டேன்”
ஜீவபுஸ்தகத்தை திறக்கும் அதிகாரம் கொண்ட ஒரே ஒருவர் இயேசு மட்டுமே, வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை என்று வேதம் கூறுகிறது, “ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்”.
ஆட்டுக்குட்டி
'அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை வாங்கினார். அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: ' வெளிப்படுத்தின விசேஷம் 5:6-8
இங்கே நாம் இயேசுவின் வித்தியாசமான வடிவத்தைக் காண்கிறோம் - பணிவு, மென்மை மற்றும் தியாக அன்பைக் குறிக்கும் ஆட்டுக்குட்டியாக அவரைப் பார்க்கிறோம்.
“அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற” என்று வாசிக்கிறோம்.
இந்த ஆவியைப் பற்றி நாம் இவ்வாறு படிக்கிறோம் ' 'தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். ' ரோமர் 8:9-10
இங்கே ஒரே பரிசுத்த ஆவியின் ஏழு (நாம் படித்த ஏழு கொம்புகளை குறித்தது) தனித்துவமான வெளிப்பாடுகள் உள்ளன.
தேவனின் ஆவி,
ஞானத்தின் ஆவி,
புரிந்துகொள்ளும் ஆவி,
ஆலோசனையின் ஆவி,
வல்லமையின் ஆவி,
அறிவின் ஆவி
ஆண்டவர் மீதான பயத்தின் ஆவி
பரலோகத்தில் இயேசு எப்படி வணங்கப்படுகிறார்?
பரலோகத்தில் இயேசுவின் மீதான மரியாதை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
அவர்கள் (மூப்பர்கள் மற்றும் தேவதூதர்கள்) ஒரு புதிய துதிப்பாடலைப் பாடினர்.
'தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 'வெளிப்படுத்தின விசேஷம் 5:9
தேவதூதர்கள் (“பதினாயிரம் பதினாயிரமாகவும்” = 10,00,00,000.00 தேவதூதர்கள் ) துதி மற்றும் வணக்கத்துடன் உரத்த குரலில் பாடிவந்தனர்.
'பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின் கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதா காலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். ‘ வெளிப்படுத்தின விசேஷம் 5:11-13
தேவதூதர்கள் இரவும் பகலும் தேவனை வணங்கி துதி செய்கிறார்கள்.
இப்போது, நீங்கள் கடவுளை எப்படி வணங்குகிறீர்கள் என்ற கேள்விக்கு வருவோம்.
இந்தக் கேள்விகளை நமக்குள் கேட்டுக்கொள்வோம்.
பரலோகத்தில் தேவதூதர்கள் மற்றும் மூப்பர்கள் எப்படி வழிபடுகிறார்களோ, அதைப்போல நாமும் பயபக்தியுடன் வணங்குகிறோமா?
தம்முடைய வலது கையில் ஜீவபுஸ்தகத்தை வைத்து சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் தேவன் நம்மை நியாயம் தீர்ப்பார் என்ற அச்சத்துடனும் / பயத்துடனும் அவரை வணங்குகிறோமா?
நாம் பாவத்தை இலகுவாக, ஒரு சாதாரண மனப்பான்மையுடன் எடுத்துக்கொண்டு தேவனுக்கு முன் நம் பயபக்தியைக் காட்டுகிறோமா?
அவரை பயபக்தியுடன் வணங்க தேவனின் பரிசுத்த ஆவி நம்மிடம் இருக்கிறதா?
இம்மானுவேல் என்ற வார்த்தை சொல்வதைப் போல – “தேவன் நம்மோடிருக்கிறார்” என்ற அனுபவம் நமக்கு இருக்கிறதா?
அவர் ஒரு வல்லமையான மற்றும் சக்திவாய்ந்த தேவன் என்பதை நினைவில் வையுங்கள். நாம் அவருக்கு முன்னால் தூசியாய் இருக்கிறோம். நாம் பிறப்பதற்கு முன்பே அவர் நம்மைத் தேர்ந்தெடுத்தார். நாம் பாவிகளாய் இருந்தபோதிலும் அவர் சகிப்புத்தன்மையுடன் இருக்கிறார். அவர் நமக்கு தம்முடைய கிருபையை கொடுத்ததின் நிமித்தம் நாம் மனந்திரும்ப வேண்டும் என்றுகொஞ்ச காலம் நியாயம் தீர்க்காமல் இருக்கிறார். அதனால் இந்த நேரத்தை பயன்படுத்தி பாவத்தைக் குறித்த பயத்துடன் அவரை நாடுவோம்.
எனவே, இந்த குணங்களுடன் பயபக்தியோடு தேவனை வணங்குங்கள்.
வெளிப்புறமாக – நீங்கள் தேவனை வணங்கும் போது, சாஷ்டாங்கமாக விழுந்து / கைகூப்பி / முழங்காலிட்டு / தலைகுனிந்து / கண்கள் மூடி அவரிடம் ஜெபிக்க உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த செயல்கள் மூலம், உங்களை அவரிடம் முழுமையாக ஒப்புக் கொடுக்கிறீர்கள் என்றும், நீங்கள் அவருக்கு முன்னால் உதவியற்ற நபர் என்றும் தேவனிடம் சொல்கிறீர்கள்.
பாவத்தைக் குறித்த பயம் – உங்கள் இதயத்தில் எப்போதும் பாவத்தைக் குறித்த ஒரு பயம் இருக்கட்டும். நாம் வாழும் இந்த உலகில் தொடர்ந்து நாம் பாவத்தில் விழுந்து கொண்டே தான் இருக்கிறோம். ஆனால், தேவன் நம்மை பாவத்திலிருந்து காப்பாற்ற கிருபை கொடுத்திருக்கிறார். அவருடைய கிருபையை பயன்படுத்தி பாவத்திலிருந்து மனந்திரும்பி அதில் இருந்து விலகி வாழுங்கள்.
அவர் இம்மானுவேல் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - "அவர் உங்களோடு இருக்கிறார்", தேவனைப் பின்பற்றி, பாவத்தைத் தவிர்ப்பதை உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக கொள்ளுங்கள். தேவனை பிரியப்படுத்த நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் எப்போதும் சுயபரிசோதனை செய்யுங்கள். ஏனென்றால் அவர் எப்போதும் நம்முடன் இருப்பதால், இந்த எண்ணத்தை உங்கள் இதயத்தில் வைத்து ஆக்ரோஷத்தோடு பாவத்தை எதிர்த்துப் போராடுங்கள்.
அவர் எல்லா இடங்களிலும் இருக்கிறார் - அவருடைய பிரசன்னம் தேவாலயத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் உள்ளது, அவர் உங்கள் வீட்டில் இருக்கிறார். நீங்கள் பயணம் செய்கையில் / உங்கள் அலுவலகத்தில் / பள்ளியில் என்று எல்லா இடங்களிலும், நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் இருக்கிறார் ... எனவே, நீங்கள் செய்யும் செயல்கள் மூலம் தேவனுக்கு மரியாதை செய்யுங்கள்.
இதை இவ்வாறு யோசித்துப் பாருங்கள், பிரதம மந்திரி அல்லது இந்திய ஜனாதிபதி உங்களை சந்திக்க வந்தால், நீங்கள் மிகுந்த மரியாதை காட்டுவீர்கள் அல்லவா, கவனத்துடன், சரியாக இருப்பீர்கள் அல்லவா. அது போலவே, நம் தேவன் "வானத்துக்கும் பூமிக்கும் ராஜா". நாம் அவரை வணங்கும்போது அவருக்கு 100 மடங்கு மரியாதை காட்ட வேண்டும்.
நம்முடைய செயல்கள் கடுகு விதை அளவு சிறியதாக இருந்தாலும் தேவன் ஒவ்வொரு செயல்களையும் மதித்து, தமது கிருத்துவத்தை / கிருபையை நமக்கு வழங்கி, அதன் மூலம் நாம் அவரது பரிசுத்தத்தை நோக்கி மேலும் முன்னேறிச் செல்லஉதவுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கடவுளுக்கு பயந்து உங்கள் செயல்களை (வெளியரங்கமான / உள்ளான) செய்யுங்கள்.
Comments