top of page
Kirupakaran

கீழ்ப்படிதலில் தேர்ச்சி பெறுதல்


நம் பிள்ளைகள் நமக்கு கீழ்ப்படிவதிலும், செவிசாய்ப்பதிலும் பெற்றோர்களாகிய நமக்கு அவர்களிடம் சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அவர்களின் கீழ்ப்படிதல், அவர்கள் மீது நம் அன்பையும் பாசத்தையும் ஆழப்படுத்துவதற்கு ஒரு தூண்டுதலாக அமைகிறது. அதேபோல், நமது ஆவிக்குரிய பயணத்திலும் வளர்ச்சியிலும், தேவனுடனான நமது உறவில் கீழ்ப்படிதல் ஒரு ஆழமான பங்கைக் கொண்டுள்ளது. ஆவிக்குரிய ரீதியில் முதிர்ச்சியடைவதற்கான நமது தேடலில் இது மகத்தான முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பவுல் பிலிப்பியர்களின் சபைக்கு எழுதிய இந்த நிருபத்தில், கீழ்ப்படிதல் என்ற தலைப்பில் மதிப்புமிக்க போதனைகளை வழங்குகிறார். தேவனுடைய சித்தத்திற்கு உண்மையாக இணங்குவதற்கான பாதையில் நம்மை வழிநடத்துகிறார்.


ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். பிலிப்பியர் 2:12-16


நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?


தேவனுக்குக் கீழ்ப்படிவதன் முக்கியத்துவம் என்ன?


நாம் பிரசங்கங்களைக் கேட்கும்போதும், தேவனுடைய வசனத்தைப் படிக்கும்போதும், இன்னும் வேறு பல போதனைகளைக் கேட்கும்போதும், கீழ்ப்படிய வேண்டும் என்ற உள்ளான தூண்டுதலை அடிக்கடி அனுபவிக்கிறோம். சில நேரங்களில், நாம் அதைக் கேட்டு பின்பற்றுகிறோம், சில சமயங்களில், கவனம் திரும்பி சென்றுவிடுகிறோம். தேவன் நமக்காக உத்தேசித்துள்ள ஏராளமான ஆசீர்வாதங்களை இந்த கவனச்சிதறல்கள் இழக்க வைத்து விடும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும் என்பதை யாக்கோபு விளக்குகிறார். கீழ்ப்படியாவிட்டால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம்.

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். யாக்கோபு 1:22


நாம் எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும்?


a) யாரும் பார்க்காத போதும் கீழ்ப்படிதல்

ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். பிலிப்பியர் 2:12-13


நாம் எவ்வாறு கீழ்ப்படிய வேண்டும் என்பதை பவுல் கோடிட்டுக் காட்டுகிறார். பிலிப்பியர்களுடைய சபைக்கும் அதையே விவரிக்கிறார். தேவ பிள்ளைகளாகிய நம் ஒவ்வொருவருக்கும் இது பொருந்தும்.


  • யாரும் உங்களைப் பார்க்கும் போது மட்டும் அல்லாமல், யாரும் இல்லாத போதும் தேவனுடைய வசனத்திற்கு/கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இருங்கள், “நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும் பொழுது மாத்திரமல்ல”. யாரும் இல்லாத போது, நாம் எப்போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறோம். வெளியரங்கமாகவும் அந்தரங்கத்திலும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் என்பது தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள அறிவுரை. அதனால் தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக நாம் ஒரே மாதிரியான நபராக இருக்கிறோம்.

  • தேவனை அறியாத பலரை எதிர்கொள்ளும் உலகில் இருக்கும்போது நமது கீழ்ப்படிதல் அதிகமாக இருக்க வேண்டும் – “நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும்…”.

  • இப்படிப்பட்ட கீழ்ப்படிதல் பயத்தினால் நம்மிடம் இருந்து வர வேண்டும். ஒருவரைக் கண்டால் நமக்கு ஏற்படும் உலகப்பிரகாரமான பயம் அல்ல. இங்கே விவரிக்கப்பட்டுள்ள பயம் "தேவ பயம்" - இது கீழ்ப்படியாமைக்காக "கர்த்தருடைய நாள்" அல்லது "நியாயத்தீர்ப்பு நாளில்" தேவனிடம் கணக்குக் கொடுக்க வேண்டும் என்ற பயம்.

  • அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். 1 பேதுரு 1:17

  • பயம் வந்தவுடன் நடுக்கம் வருகிறது - இது நாம் தேவன் மீது வைத்திருக்கும் பயபக்தியினால் வருகிறது.

  • கீழ்ப்படிதல் / பயம் மற்றும் நடுக்கம் இவை யாவும் நாம் தேவனை நேசிக்கும் போது வருகிறது. இயேசு இதைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்,

  • இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால் அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. யோவான் 14:23-24

b) உள்ளார்ந்த கீழ்ப்படிதல்

உங்களைச் சுற்றி குழந்தைகள் இருந்தால் இது தெரிந்திருக்கும். நம் குழந்தைகளிடம் ஏதாவது ஒன்றை செய்வதற்கு சொல்கிறோம். உடனே அவர்கள் செய்வதில்லை. இதை செய்வதற்கு மீண்டும் மீண்டும் அவர்களைத் தள்ளிக் கொண்டே இருக்க வேண்டும். சில சமயங்களில், “சரி அம்மா, செய்கிறேன்" என்று முணுமுணுக்கும் மனப்பான்மையுடன் கீழ்ப்படிந்து, அரைகுறையாக வேலையைச் செய்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் இதைச் செய்திருப்போம் என்றும், நாமே அனுபவித்திருப்போம் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். பிலிப்பியர் 2:16


  • ஏதாவது செய்யும்படி தேவன் நம்மை அறிவுறுத்தும்போது, முறுமுறுக்கவோ குறை கூறவோ அவசியமில்லை, மாறாக, நமது தனிப்பட்ட ஆசைகளுடன் அவை ஒத்துப்போகாவிட்டாலும், மகிழ்ச்சியான உள்ளத்துடன் காரியங்களை நிறைவேற்ற வேண்டும். இந்த செயல்களை தேவன் பெரிதாக மதித்து, ஆழமாய்க் கனம் பண்ணுவார்.

  • பல சந்தர்ப்பங்களில், வாக்குவாதங்களில் ஈடுபடுவதையும், தேவனிடம் நியாயப்படுத்த முயற்சிப்பதையும், அவருடைய கட்டளைகளின் முக்கியத்துவத்தை கேள்விக்குள்ளாக்குவதையும் செய்கிறோம். தேவனின் கட்டளைகளை மறுதலிக்கும் இந்த ஆர்வம், நம்மை வழிதவறச் செய்ய சாத்தானால் அடிக்கடி கையாளப்படும் ஒரு ஏமாற்றும் உத்தி என்பதை அடையாளம் கண்டு கொள்வது மிக முக்கியம்.

  • நீங்கள் வசனத்தைப் படிக்கும்போது, எதையாவது செய்ய வேண்டும் என்பது அவருடைய வழிகாட்டுதல் என்றால், ​​"அதைச் செய்யுங்கள்". அவருடைய கோரிக்கையின் உள்நோக்கம் அல்லது விளைவை கேள்விக்குள்ளாக்காதீர்கள்.

  • நீங்கள் உள்ளார்ந்து கீழ்ப்படியும்போது, இவ்வாறு சொல்கிறீர்கள்.

    • O - தேவ வழிகாட்டுதலுக்கான திறந்தநிலை - உங்கள் ஆவிக்குரிய வழிகாட்டுதலுக்கு நான் தயாராக இருக்கிறேன்.

    • B - தேவ ஞானம் மற்றும் அதிகாரத்தின் மீதான விசுவாசம் - உங்கள் ஞானம் மற்றும் அதிகாரத்தை விசுவாசித்து என் நம்பிக்கையை ஒப்படைக்கிறேன்

    • E - தாழ்மையோடு ஒப்புக்கொடுத்தல் - நான் ஒப்புக்கொடுத்து, தேவனுக்கு அடிமையைப் போல வேலை செய்கிறேன்.

    • Y - தேவனின் சித்தம் மற்றும் வழிகாட்டுதலுக்கு இணங்குதல் - உங்கள் விருப்பத்தை பின்தள்ளி முதலில் தேவ சித்தத்தை அனுமதிக்கிறீர்கள்.

  • இயேசு உலகில் இருந்தபோது இந்த வகையான உள்ளார்ந்த கீழ்ப்படிதலைப் பின்பற்றினார், இதன் காரணமாக நமக்குத் தேவையானதைப் பெறுவதற்கு அவர் நம்முடைய இரட்சிப்பின் ஆதாரமாக இருக்கிறார்.

அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, எபிரேயர் 5:8-9


கீழ்ப்படிதலின் ஆசீர்வாதங்கள்


கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள்.

பிலிப்பியர் 2:15-16


குற்றமற்ற தன்மை மற்றும் தூய்மை


  • கீழ்ப்படிதல் நம்மை தேவனின் முன்னிலையில் பரிசுத்தமாக ஆக்குகிறது - அதனால் நீங்கள் குற்றமற்றவர்களாகவும் தூய்மையானவர்களாகவும் ஆகலாம், இது எபிரேயர் 12:14 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி நமது பரிசுத்தத்துடன் தேவனைத் தேடுவதற்கு வழிவகுக்கிறது – “….பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே”. எபிரேயர் 12:14

  • குற்றமற்று தூய்மையாக மாறுவதன் மூலம் 1 தீமோத்தேயு 6:14 இல் சொல்லப்பட்டுள்ள அவருடைய கட்டளையை நிறைவேற்றுகிறோம்.

  • எல்லாவற்றையும் உயிரோடிருக்கச்செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 1 தீமோத்தேயு 6:14

  • நாம் “குற்றமற்றவர்களாகவும் தூய்மையானவர்களாகவும்” மாறுவது நம்முடைய சொந்த பலத்தால் அல்ல. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் எவ்வாறு பழுதற்றதும் குறைபாடு இல்லாமலும் இருக்கிறதோ, அதைப் போலவே நம்மைக் குற்றமற்றவர்களாகவும் தூய்மையாகவும் ஆக்குவதற்கு ஆவியானவர் நம்மை வழிநடத்துகிறார்.

  • குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 1:19

  • நாம் தேவனுடைய வார்த்தையை நிறைவேற்றுகிறோம்.

  • உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 1 பேதுரு 1:15-16


பிரகாசிக்கும் சுடர்கள்

  • உலகத்திற்கு ஒளியைப் பிரகாசிக்க நீங்கள் ஒரு துருவ நட்சத்திரமாக இருப்பீர்கள் - "ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள்,".

  • இயேசுவின் ஒளி உங்களை தனித்து நிற்கச் செய்யும். சிலரை நாம் அடிக்கடி பார்க்கிறோம், அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்று நமக்குத் தெரியாது, ஆனால் அவர்களின் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஒரு பிரகாசமான நட்சத்திரமாக இருக்கிறார்கள்.

கிறிஸ்து வரும் நாளில் பெருமிதம்

  • நீங்கள் செய்த எதுவும் வீணாகப் போகவில்லை என்று கிறிஸ்துவின் நாளில் நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும் - “நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு,”.

  • நம்முடைய கீழ்ப்படிதலின் காரணமாக, தேவனுடைய சித்தம் மற்றும் திட்டங்கள் வெற்றிபெற உதவுகிறோம், மேலும் கிறிஸ்துவின் அங்கமாக அவருடைய வேலையில் பெருமை கொள்கிறோம்.


சுருக்கம்

எனவே அடுத்த முறை தேவன் உங்களிடமோ அல்லது என்னிடமோ பேசும்போது,

  1. நாம் வெறுமனே பிரசங்கத்தை அல்லது வசனத்தை மட்டும் கேட்கப் போவதில்லை - அப்படிச் செய்தால் நம்மை நாமே ஏமாற்றி வஞ்சித்துக் கொள்கிறோம்.

  2. யாரும் நம்மைப் பார்க்காதபோதும் கீழ்ப்படிதலுடன் இருப்போம். தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக நாம் ஒரே மாதிரியாகவே இருப்போம்.

  3. தேவனுடன் எந்த முறுமுறுப்பும் / வாக்குவாதமும் இல்லாமல் உடனடியாகக் கீழ்ப்படிவோம்.


நம் கீழ்ப்படிதலின் மூலம் தேவனுக்கு முன்பாக பரிசுத்தமாகிறோம், அவரிடமிருந்து எண்ணற்ற ஆசீர்வாதங்களை (நித்திய மற்றும் உலகப் பிரகாரமான) பெறுகிறோம்.


Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note
bottom of page