ஒருவர் 70 முதல் 80 கிமீ/மணி சீரான வேகத்தில் வாகனத்தை ஓட்டும்போது, முக்கியமாக முன் உள்ள சாலையிலேயேக் கவனம் செலுத்துவார்.ஆனால், மெதுவாக வாகனம் ஓட்டும் போது, அவர் சுற்றுப்புறத்தில் அதிக கவனம் செலுத்துவார். திரும்பிப் பார்த்து, ரியர்வியூ கண்ணாடியைச் சரிபார்த்து தேவைப்படுமானால், வேகத்தைக் குறைக்கவும் செய்வார்.
ஒரு கிறிஸ்தவனாக இருப்பது, தேவனிடம் இருந்து பரிசு பெறுவதற்கான ஒரு பந்தயத்தைப் போன்றது என்று பவுல் கூறுகிறார் (பிலிப்பியர் 3:14). இயேசுவுடனான ஆவிக்குரிய உறவு, தொடங்கும் போது நம் கவனத்தை இயேசுவின் மீது வைத்து வேகமாக ஓடுவது போன்று இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்லும்போது, நம் வேகம் குறைந்து, உலகத்தால் திசைதிருப்பப்படலாம். உலக மக்களுடன் நம்மை ஒப்பிட ஆரம்பித்து, நமது ஆவிக்குரிய வாழ்க்கையில் இருந்து விலக ஆரம்பிக்கலாம். பவுல் எபேசியர்களுக்கு எழுதிய நிருபத்தில் திருச்சபைகளுக்கு எச்சரிக்கை விடுக்கிறார், இது நம் காலத்திற்கு மிகவும் பொருத்தமானது.
ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்ற புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறது போல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக்கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். எபேசியர் 4:17-19
இவை புறஜாதிகளைப் போல் வாழும் கிறிஸ்தவர்களுக்கான அறிவுரைகள், “கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்ற புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள்”. புறஜாதிகள் யார் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம்.
புறஜாதிகள் என்பது உருவ வழிபாட்டை கடைப்பிடிப்பவர்களையும், உண்மையான ஜீவனுள்ள தேவனைப் பற்றி அறியாதவர்களையும் குறிக்கிறது. பவுலின் காலவரிசையில், "புறஜாதியார்" என்பது யூதர் அல்லாத மற்றும் "தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களில்" ஒருவரல்லாதவரைக்குறிக்கிறது.
பவுல் நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் இந்த 5 எச்சரிக்கைகளைப் புரிந்து கொள்ளும் வரை, இந்த செய்தி உங்களுக்குப் பொருந்தாது என்று தள்ளிவிடாதீர்கள்.
எச்சரிக்கை 1 - எபேசியர் 4:17 "வீணான சிந்தை"
வீணான சிந்தை - அதாவது நமது சிந்தனைகள் மந்தமாகிவிட்டன என்று அர்த்தம். நாம் கிறிஸ்துவில் இருக்கும்போது, உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டு, தேவனுடைய சித்தத்தின்படி செய்ய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்படுகிறோம். சாத்தான் நம் கிறிஸ்தவ வாழ்க்கையை உலகத்தார் (புறஜாதிகள்) எப்படி வாழ்கிறார்கள் என்பதோடு ஒப்பிட்டுப் பார்க்க வைத்து, பாவச் செயல்களைப் பொறுத்துக்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் சரி என்று நம்மை நம்ப வைக்கும்போது, "வீணான சிந்தனை" உருவாகிறது.
சாத்தான் இந்த வலைக்குள் நம்மை எப்படி இழுக்கிறான்?
அடிக்கடி நாம், உலகத்தார் எப்படி வாழ்கிறார்கள் என்பதை பார்த்து, கிறிஸ்தவர்களாகிய நமக்கு அது சரி என்று நினைக்கிறோம். இது நம் ஆசைகளிலிருந்து தொடங்குகிறது. காம இச்சைகள் மட்டுமல்லாமல், இன்பத்திற்காக ஆசைப்படுவதும் இதில் அடங்கும். இவை நம் மனதை நிரப்பி நம் எண்ணங்களைக் குழப்புகிறது. பாவத்திற்கு அடிபணியுமாறு அது நம் இதயங்களையும் நம்மையும் தூண்டுகிறது. மேலும், இது குழப்பமான தவறான சிந்தனைக்கு வழிவகுக்கிறது. இதுவே "வீணான சிந்தனை" என்று அழைக்கப்படுகிறது.
உதாரணமாக, நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் போது அரட்டையடிப்போம். இந்த உரையாடல்களில் சில, மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாகப் பேசுகிற வதந்திகளாக மாறக்கூடும். நண்பர்களுடன் பேசுவது நல்லது, கிசுகிசுப்பது தவறு. வதந்திகள் கசப்பாக உணரவைத்து, குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவுகளில் நிறைய பதட்டத்தை ஏற்படுத்தும். கிசுகிசுக்கள் சாதாரணமாகத் தோன்றினாலும், அது ஒரு சிறிய உரையாடலில் தொடங்கி, அது நம்மைப் பிடிக்க நாம் அனுமதித்தால் கோபம், பொறாமை, வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்ச்சிகளுக்கு வழிவகுக்கும்.
அநேகர் டிவி நிகழ்ச்சிகள் பார்க்கிறார்கள், அதில் தவறு ஒன்றும் இல்லை. இருப்பினும், இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் / OTT தொடர்கள் பெரும்பாலும் குடும்ப மோதல்கள் (மாமியார் / மருமகள் மோதல்கள், உடன்பிறந்தோர் மோதல்கள்), சிக்கலான உறவுகள் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தைகள் (திருமணமாகாமல் சேர்ந்து வாழ்வது / விபச்சார கதைகள்) ஆகியவற்றை சித்தரிக்கின்றன. இவற்றைப் பார்க்கும் பொழுது நமது எண்ணங்களையும் செயல்களையும் எதிர்மறையான வழியில் பாதித்து, நம் மனதைக் கெடுத்து, பாவமான நடத்தைக்கு இட்டுச் செல்கின்றன. டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நம்ப வைப்பதன் மூலம் சாத்தான் நம்மை ஏமாற்றலாம். ஆனால் நாம் எதைப் பார்க்க விரும்புகிறோம், அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதில் தான் உண்மையான பிரச்சனை இருக்கிறது. இந்தப் பாவங்கள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும். சிலருக்கு, அது குடிப்பழக்கமாக, சிலருக்கு போதைப்பொருள், விபச்சாரம் அல்லது ஆபாசமானக் காட்சிகளைப் பார்ப்பதாக இருக்கலாம். இந்தப் பட்டியல் அப்படியே நீண்டு கொண்டே போகும்.
நமது முற்பிதாக்காளாகிய ஆதாம்/ஏவாளுக்கும் இதேதான் நடந்தது. சர்ப்பம் கனியைக் காட்டி ஏவாளை வஞ்சித்து அவளது மனதை மாற்றியது. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். ஆதியாகமம் 3:6-7
எச்சரிக்கை 2 - எபேசியர் 4:18 “புத்தியில் அந்தகாரப்பட்டு” & “தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து”
நாம் தேவனோடு நடக்கும் போது, நம்மிலுள்ள இருள் விலகிச் செல்கிறது, இயேசுவின் ஒளியால் நாம் வழிநடத்தப்படுகிறோம். இது நம்மை இருளிலிருந்து தப்பிக்க வைக்கிறது. ஆனால், பவுல் “வீணான சிந்தையாலே புத்தி அந்தகாரப்பட்டது” என்று கூறுகிறார். “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு”.
புறஜாதியாரின் கண்களும் இருதயமும் சாத்தானால் இருளாக்கப்பட்டு இருக்கிறது. எனவே அவர்கள் பாவ வாழ்க்கையில் தொடர்ந்து இருக்கிறார்கள். இந்த வார்த்தை புறஜாதிகளின் இருதயம் எப்படி இருக்கிறது என்ற காரியத்தின் நிலையை விவரிக்கிறது.
அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்டமனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான். ஏசாயா 44:18,20
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரிந்தியர் 4:4
நாம் கிறிஸ்துவிடம் வரும்போது, அவர் நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்குத் திருப்புகிறார். இதைத் தவிர, இருளில் நம்மைக் கட்டுப்படுத்திய சாத்தானுடைய அதிகாரத்தை விட்டு அகற்றித் தேவனிடத்திற்குத் திரும்பும்படிப் பண்ணுகிறார்.
உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும், பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். அப்போஸ்தலர் 26:17-18
கிறிஸ்துவின் ஆவி, நம் கண்களைத் திறந்து, நம்மை இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு நடத்தி, சாத்தனிடம் இருந்து அதிகாரத்தை தேவனுக்கு திருப்புகிறது. இந்த அதிகாரத்தின் மூலம் நாம் பாவ மன்னிப்பைப் பெற்றோம்.
வீணான சிந்தையாலே புத்தி அந்தகாரப்பட்டது என்று பவுல் எச்சரிக்கிறார், “அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு”. அடுத்த கட்டம் தேவனிடமிருந்து பிரிந்து சாத்தானுக்கு மீண்டும் அதிகாரத்தை வழங்குவதாகும். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயக்கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; எபேசியர் 4:18
எச்சரிக்கை 3 - எபேசியர் 4:18 “இருதயக்கடினத்தினால்”
தேவனின் வாழ்க்கை முறையிலிருந்து நீங்கள் துண்டிக்கப்படும்போது, உங்கள் இருதயம் கடினமாகிறது. ஒருமுறை நீங்கள் பீர் குடிப்பது போன்ற ஏதாவது ஒரு பாவத்திற்கு அடிபணிந்தால், மீண்டும் மீண்டும் அந்தப் பாவம் தொடர்ந்தாலும், இந்த ஒரு முறை மட்டும் தான் என்று உங்கள் மனம் உங்களை நம்ப வைக்கும். இது மெதுவாக உங்கள் இருதயத்தின் உணர்திறனைக் குறைக்கிறது. மேலும் குடிப்பதைப் பாவமாகக் கருதாமல் ஒரு முறை குடிப்பதில் இருந்து, தனிப்பட்ட முறையில் தொடர்ந்து குடிப்பதற்கு நகரத் தொடங்குவோம்.
அப்போஸ்தலர் 26:18 ஆம் வசனம் கூறுவது போல், அவர்கள் புறஜாதிகளைப் போல ஆக தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர், அதனால் அவர்கள் சாத்தானின் அதிகாரத்தால் ஆளப்படுகிறார்கள், “தங்கள் இருதயக் கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து;”. இதனால் அவர்களின் இருதயங்கள் கடினப்பட்டுள்ளன. பழைய வாழ்க்கைக்குத் திரும்புங்கள்.
நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். கலாத்தியர் 4:8
தேவனை அறிகிற அறிவில்லாமல் புறஜாதியார் இச்சையால் நிரப்பப்படுகிறார்கள். தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், 1 தெசலோனிக்கேயர் 4:5
ரோமர் 1 ஆம் அதிகாரம் நாம் எவ்வாறு கைப்பற்றப்படுகிறோம் என்பதற்கான நிலைகளை படிப்படியாக விளக்குகிறது.
எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. ரோமர் 1:20-21
நாம் பிறக்கும்போது, தேவனின் அற்புதமான குணங்களையும் உலகில் உள்ள தெய்வீகத் தன்மையையும் பார்க்கும் திறன் நமக்கு இருக்கிறது. பலர் இதை உணர்ந்தாலும் தேவனுக்கு கனத்தைக் கொடுப்பதில்லை. மாறாக, அவர்கள் தங்கள் சொந்த திறனால் வந்தது போல் நினைக்கிறார்கள். இப்படித் திரும்பத் திரும்பச் சிந்திப்பது அவர்களின் இருதயங்களைக் கடினப்படுத்தி, தேவனின் கிருபை மற்றும் இரக்கத்தை குறைவாக பெற்றுக் கொள்ளும்படி வைக்கிறது.
எச்சரிக்கை 4 - எபேசியர் 4:19 - "உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்"
மயக்க மருந்து கொடுக்கப்படும் போது உண்டாகும் உணர்வை நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? பொதுவாக, பல்லைப் பிடுங்கும்போது கொடுப்பார்கள். வலியை உணராவிட்டாலும் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது நமக்குத் தெரியும். மனித இருதயங்கள் கடினப்பட்ட பிறகு இதுவே நிலைமை. குடிப்பழக்கம் ஒரு பாவம் என்று அவர்கள் உணர்வதில்லை.
பாவத்தைக் குறித்த உணர்வின்மை ஒருவரின் வாழ்க்கையில் பல புதிய பாவங்களைச் செய்ய வழிவகுக்கிறது.
நம் இருதயங்கள் பாவத்தை உணராமல் இருக்கும் போது சாத்தான் மகிழ்ச்சி அடைகிறான். இந்த நிலையில், பலவிதமான பாவச் செயல்களைச் செய்ய அவன் நம்மை வழிநடத்துகிறான். தன்னுடைய செயல்களை அறியாமல் ஆழ்ந்த போதையில் இருக்கும் ஒரு நபரை சிந்தித்துப் பாருங்கள். நம்மை அறியாமலேயே தவறான செயல்களில் ஈடுபடும் நிலை அது.
உங்களைப் பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்கி, நீங்கள் கவனிக்காத சிறிய தவறுகளைக் கண்டறியவும். கற்பழிப்பு அல்லது தொடர் கொலைகளில் ஈடுபடுபவர்கள் செய்கின்ற பாவங்களைப் போல இவை பெரியவை அல்ல என்று கருத வேண்டாம். நம் ஒவ்வொருவருக்கும் சொந்த தவறுகள் உள்ளன. நாம் தேவனிடம் உண்மையாகக் கேட்டால், அவற்றை அடையாளம் காண அவர் நமக்கு உதவ முடியும்.
· நீங்கள் பாவத்தின் மீது உணர்வில்லாதவர்களாய் மாறும்போது, அது இயல்பான வழிகளுக்கு அப்பாற்பட்டு நடந்துகொள்ள வழிவகுக்கும். கூட்டுப் பலாத்காரம் அல்லது தொடர் கொலையாளிகளைப் பற்றி கேள்விப்படுகிற போது, ஒருவரால் எப்படி இவ்வளவு கொடூரமான பாவங்களைச் செய்ய முடியும் என்று ஆச்சரியப்படுகிறோம். இது ஒரு சிறிய தவறில் இருந்து தொடங்கியிருக்கலாம்.மேலும் இருதயம் கடினமாகி, பாவத்தின் மீதான உணர்திறன் குறையும் போது, அது தீவிரமானப் பாவச் செயல்களுக்கு வழிவகுக்கிறது. அதனால்தான் "உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்" என்று வார்த்தை கூறுகிறது.
எச்சரிக்கை 5 - எபேசியர் 4:19 "ஆவலோடே நடப்பிக்கும்படி"
கிறிஸ்துவில் இருக்கும்போது, தேவையில்லாத விஷயங்களுக்காக ஏங்காத, போதுமென்ற ஆவி நம்மில் இருக்கும். நீங்கள் கிறிஸ்துவில் இருக்கும்போது, வறுமையிலும் மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கும்.
கிறிஸ்தவ வாழ்க்கையிலிருந்து புறஜாதி வாழ்க்கைக்குள் தொலைந்து போகும் போது, நாம் மிருகங்களின் நடத்தைக்கு இடமளிக்கிறோம். குரங்குக்கு உணவளிப்பதை பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு கொடுத்தாலும் அது திருப்தி அடைவதில்லை. கொடுப்பதை எடுத்துக் கொண்டு அடுத்ததைத் தேடும். நீங்கள் அடுத்ததைக் கொடுக்கும் போது, பழையதை தூக்கி எறிந்துவிட்டு புதியதை வைத்துக் கொள்ளும். அதன் பேராசையான நடத்தையின் விளைவாக இது தொடர்ந்து கொண்டே போகும்.
பவுலின் கூற்றுப்படி, இங்கே பேராசை என்பது ஒரு பாவத்திற்குப் பிறகு அடுத்தடுத்து பாவத்தைச் செய்ய பேராசை கொள்வதைக் குறிக்கிறது. நீங்கள் பொய், வதந்தி, குடிப்பழக்கம் ஆகியவற்றில் விழுந்தவுடன், விபச்சாரம் மற்றும் பிற பாவங்களுக்கு அது மெதுவாக வழிவகுக்கிறது.
அதிக பாவங்களைச் செய்ய வேண்டும் என்ற பேராசை சாத்தானின் குணங்களிலிருந்து தூண்டப்படுகிறது, அதனால் அவர்கள் அவனது ராஜ்யத்திலிருந்து வெளியே வர முடியாது. தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற சுய ஆசை அதிகமாக இருக்கும். அவர்கள் அதிக இச்சையையும் அதிக பாவங்களைச் செய்யவும் விரும்புகிறார்கள்.
அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? யோபு 15:16
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன்தன் மூலையிலிருந்து தன்தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். ஏசாயா 56:11
ஜனங்கள் பாவங்களில் வளர்ந்து, தொடர்ந்து பாவ நடத்தையில் ஈடுபட்டால், தேவன் அவர்களை வாந்தி பண்ணிப் போடுவார்.
விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள். அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே. இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தைவிட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.2 பேதுரு 2:10-14,21-22
கிறிஸ்துவுடனான நமது பயணத்தில் நாம் எங்கு வழிதவறிச் சென்றிருப்போம் என்பதை அறிந்து கொள்ள, இந்த ஐந்து எச்சரிக்கைகள் மூலம் நம் வாழ்க்கையைப் பார்ப்போம். நாம் நமது இரட்சகரைப் பிரியப்படுத்தும் தூய்மையான பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்கிறோமா? அல்லது "நான் ஒரு சாதாரண மனிதன். கொலைகாரன், திருடன் அல்லது சிறையில் இருப்பவன் இவர்களைப் போல மோசமானவன் அல்ல" என்று சொல்லிக் கொண்டு நம் பாவங்களைக் குறைத்து மதிப்பிடுகிறோமா? நாம் சிறையில் இல்லை என்றாலும், கடைசி நாளில் தேவனை எதிர்கொள்ளும்போது தவறவிடலாம். இயேசுவின் அழைப்பு ஒவ்வொரு நாளும் பரிபூரணமானது.
நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், உலகில் உள்ளவர்களிடமிருந்து நீங்கள் வேறுபட்டவர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். கிறிஸ்து தம்முடைய இரத்தத்தால் உங்களைக் மீட்டுக் கொண்டதால், உங்களால் பரிசுத்தமான தூய்மையான வாழ்க்கையை வாழ முடியும். சில சமயங்களில், உங்கள் மனம் உலக வழிகளுடன் ஒப்பிட்டு, தேவனிடமிருந்து விலகி, பரிசுத்தமற்ற வாழ்க்கையை நடத்துவதற்கு உங்களைத் தூண்டலாம். ஆனால், தேவன் தமது இரத்தத்தால் உங்களை மீட்டுக் கொண்டதன் நோக்கம், உங்களைப் பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் ஆக்கி, இன்னும் அதிக பரிசுத்தத்தை நோக்கி உங்களை வழிநடத்துவதாகும். வேதம் கூறுவது போல், தேவனைத் தேடுவதற்கு பரிசுத்தமாயிருப்பது அவசியம்.
உங்களை முழுமையாக தேவனிடம் அர்ப்பணித்து, அவருடனான உங்கள் உறவை பாதிக்கக்கூடிய எதுவும் உங்களிடம் உண்டா என்று பார்க்கும்படி அவரிடம் கேளுங்கள். மனந்திரும்புதலின் ஆவிக்காகவும், இந்தப் பகுதிகளை அடையாளம் காணும் திறனுக்காகவும் ஜெபியுங்கள். அப்பொழுது, நீங்கள் கிறிஸ்துவைப் பின்பற்றும்போது ஒவ்வொரு நாளும் இன்னும் அதிக பரிசுத்தமாக முடியும். நீங்கள் சிறந்த மனிதராக மாற உதவுவதற்கு இயேசுவின் ஒளி உங்கள் வாழ்வில் பிரகாசிக்கட்டும்.
Kommentarer