கிறிஸ்தவ அடிப்படைகளுக்குத் திரும்புவோம் – இரட்சிப்பு
- Kirupakaran
- 6 days ago
- 6 min read

“கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம்" என்ற தொடரைத் தொடங்கி இருக்கின்றேன். இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்த, இந்தத் தொடரில், ஒவ்வொரு தலைப்பையும் வேதாகமக் கண்ணோட்டத்தில் முழுமையாக ஆராயலாம். கிறிஸ்தவத்தின் அடிப்படைகளில் இரட்சிப்பு இருந்து தொடங்குவோம்.
நீங்கள் ஒரு விபத்தில் சிக்கி, உதவியற்ற நிலையில் இருக்கும்போது, யாராவது உங்களைக் காப்பாற்றினால் நீங்கள் அவர்களை ஒரு மீட்பராகப் பார்த்து ஆழ்ந்த நன்றியுணர்வு கொள்வீர்கள். தேவனுடனான நமது உறவிலும் இதுவே உண்மை. தேவன் நாம் அவருடன் ஐக்கியமாயிருக்க வேண்டுமென்று விரும்பி அன்போடு தம்முடைய சாயலில் நம்மைப் படைத்தார். இருப்பினும், பாவம் ஆதாம் ஏவாள் வழியாக அதன் சாபங்களுடன் நுழைந்தபோது, அது நமக்கும் தேவனுக்கும் இடையில் ஒரு பிரிவினையை ஏற்படுத்தியது. பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் நமக்கு ஒரு விடுதலை தேவைப்பட்டது, அது நித்தியத்தில் தேவனோடு ஐக்கியமாக இருக்க வழிநடத்தும். இந்த பாவத்திலிருந்து விடுபட்டு தேவனோடு ஐக்கியமாகும் செயல்முறை தான் இரட்சிப்பு என்று அழைக்கப்படுகிறது.
நமக்கு ஏன் இரட்சிப்பு தேவை?
உலகத்தில் பாவம் இல்லாதவர்கள் யாரும் இல்லை; எல்லோரும், ஏதோ ஒரு விதத்தில் பாவம் செய்து தேவனுடைய மகிமையை இழக்கிறோம். பாவம் நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது, நாம் அந்தப் பிரிவில் நிலைத்திருந்தால், அதற்குப் பின்விளைவுகள் ஏற்படும் - இறுதியில், நித்தியத்தின் நிச்சயம் இல்லாத மரணம். பாவம் ஆவிக்குரிய மரணத்திற்கு வழிவகுக்கிறது, இது தேவனிடமிருந்து நித்தியமாகப் பிரிந்து செல்வதாகும், ஆனால் இரட்சிப்பின் மூலம், நாம் மீட்டெடுக்கப்பட்டு நித்திய ஜீவனாகிய வரத்தைப் பெறுகிறோம்.
எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23
இந்த இரட்சிப்பை எங்கே பெறுவது?
இரட்சிப்பு இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே கிடைக்கும். வானத்தின் கீழெங்கும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தைத் தவிர வேறு எந்த நாமத்தினாலும் நாம் இரட்சிக்கப்பட முடியாது என்று அப்போஸ்தலர் 4:10-12 இல் வேதாகமம் தெளிவாகக் கூறுகிறது,
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.
அப்போஸ்தலர் 4: 10-12
விபத்து அல்லது தீ விபத்து போன்ற ஆபத்துக் காலங்களில் ஒருவர் நம்மைக் காப்பாற்றுவது போல, இயேசு நம் இரட்சகராயிருந்து பாவத்திலிருந்து நம்மை விடுவிக்கிறார். இயேசு என்ற அவருடைய நாமத்தின் அர்த்தமே, "அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்" என்பதாகும்.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21
இயேசு நம்மை இரட்சிப்பார் என்பதை எப்படி அறிந்து கொள்வது?
அநேக மதங்கள் தங்களைக் காப்பாற்றும் ஒரு கடவுளை நம்புகின்றன, அப்படியானால் இயேசுவே நம்முடைய இரட்சகர் என்று நாம் ஏன் நம்ப வேண்டும்? சிலர் அவர் நம்மைப் போன்ற ஒரு மனிதர் என்று கூறுகிறார்கள் - அப்படியானால் ஒரு மனிதன் எப்படி நம்மைக் காப்பாற்ற முடியும்? ஏன் பிற தெய்வங்களால் நம்மைக் காப்பாற்ற முடியாது?
இயேசு வெறும் மனுஷரல்ல, மனுஷர் சாயலாக வந்த தேவகுமாரன் என்பதை பிலிப்பியர் 2: 5-11 இல் வேதம் தெளிவுபடுத்துகிறது; தேவன் தம்முடைய ஒரே குமாரனை ஒரு மனிதனாக வாழ உலகிற்கு அனுப்பினார், ஆனாலும் அவர் பாவமற்றவராக இருந்தார். அவர் மரணபரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தி, அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம் மரணத்தையும் நரகத்தையும் ஜெயித்தார். இதன் காரணமாக, அவர் நமக்கும் தேவனுக்கும் இடையே பாலமாக மாறி, சிலுவையில் தமது பணியின் மூலம் நமக்கு இரட்சிப்பை வழங்குகிறார்.
கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2: 5-11
இயேசு கிறிஸ்துவே கடைசி ஆதாம் (1 கொரிந்தியர் 15:45). மனிதன் மூலமாக பாவம் உலகிற்குள் நுழைந்ததால், தேவனின் மீட்புத் திட்டம் ஒரு மனிதனின் (இயேசு கிறிஸ்துவின்) மரணத்தின் மூலம் நிறைவேறியது. ஆதாம் மூலமாக நாம் மரணத்தைச் சுதந்தரித்தது போல, இயேசு கிறிஸ்துவின் பலியின் மூலம் நித்திய ஜீவனின் வரத்தைப் பெறுகிறோம்.
மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 1 கொரிந்தியர் 15: 21-22
இரட்சிப்பைப் பற்றிய அத்தியாவசிய உண்மைகள்
இயேசு கிறிஸ்துவில் விசுவாசம்
இயேசு கிறிஸ்துவே ஆண்டவர் என்று நீங்கள் விசுவாசித்தால், அவரை விசுவாசிக்கிற அனைவருக்கும் இரட்சிப்பின் நம்பிக்கை உண்டு.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். எபிரெயர் 11:6
ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை.
2கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. ரோமர் 8:1-2
இரட்சிப்பு என்பது அனைவருக்குமான ஒரு இலவச பரிசு - இது எந்த மதத்திற்கும் குழுவிற்கும் வரையறுக்கப்படவில்லை. சிலுவையில் இயேசுவின் தியாகம், அவர்களின் பின்னணி அல்லது நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து மக்களுக்கும் பொதுவானது. விசுவாசிகளையும் அவிசுவாசிகளையும் பாவத்திலிருந்து இரட்சிப்பதே அவரது நோக்கம்.
இயேசுவே கர்த்தர் என்று விசுவாசித்து அறிக்கையிடுகிறவர்களுக்கு இரட்சிப்பு வருகிறது. நாம் உண்மையற்றவர்களாக இருந்தாலும், அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் நம்மை விட்டு விலகாமல் நாம் அவரிடம் வரும்வரை பொறுமையாக காத்திருக்கிறார்.
இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். 2 தீமோத்தேயு 2:11-13
நற்செய்தி – இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல்
எந்த மனிதனும் இன்னொருவரின் பாவங்களைப் போக்குவதற்காக ஒருபோதும் மரித்ததில்லை. ஒருவர் மரித்த பின்பு, மரித்தவர்களாகவேஇருக்கிறார்கள். பல மதங்கள் மிருகங்களையோ பறவைகளையோ பாவத்திற்காக பலியாக செலுத்துகின்றன, ஆனால் தேவன், தம்முடைய மிகுந்த அன்பினிமித்தம், நமக்காக தம்மைத்தாமே பலியாக கொடுத்தார். இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்து மீண்டும் உயிர்த்தெழுந்து, நம்முடைய இரட்சிப்பை உறுதி செய்தார்.
இயேசுவின் மரணம் அனைவருக்கும் ஒரே முறை பலியாக இருந்தது. அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம், தேவனுடனான ஒப்புரவாகுதலின் பரிசை நாம் பெறுகிறோம். நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவால் இது சாத்தியமாகிற்று.
மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ரோமர் 6:9-11
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவியை தேவன் நமக்குத் தருகிறார், இரட்சிப்பின் மூலம் அவருடன் இணைந்திருக்க நம்மை அனுமதிக்கிறார். இதன் மூலம், பாவத்திற்கு இனி நம்மீது அதிகாரம் இல்லை.
அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். ரோமர் 8:11
இயேசு சிலுவையில் தம்முடைய கிரியையின் மூலம், நம்மை தேவனிடமிருந்து பிரித்த தடையை உடைத்தார்.
எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். எபேசியர் 2:14-16
இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம் இரட்சிப்பு
பாவத்திலிருந்து இரட்சிக்கப்படுவதற்கான ஒரே வழி இரத்தஞ்சிந்துதல் மட்டுமே. பல மதங்களிலும் பழைய ஏற்பாட்டிலும் மக்கள் தங்கள் பாவங்களுக்குப் பரிகாரமாக பலிகளைச் செலுத்தினர்.
இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தபோது, அவர் தம்மைத்தாமே ஒரு பரிபூரணமான, குற்றமற்ற பலியாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய இரத்தம் நம்முடைய இரட்சிப்பை உறுதி செய்ததோடு, கூடுதல் பலிகளை தேவையற்றதாக ஆக்கியது. கிறிஸ்துவின் இரத்தம் மாத்திரமே நமக்கு இரட்சிப்பைக் கொண்டுவர போதுமானது.
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்கதகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனைசெய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரெயர் 10:5-14
இயேசு ஏன் இந்த இறுதி தியாகத்தை நமக்காக செய்தார்? நம்மை தேவனோடு ஒப்புரவாக்கி, அவருடனான நமது உறவை மீட்டெடுக்க அவர் தமது இரத்தத்தை சிந்தினார்.
நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். ரோமர் 5:8-11
உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 1 கொரிந்தியர் 6:11
இயேசு கிறிஸ்துவின் அன்பினால் இரட்சிப்பு
நாம் அவரை நேசிப்பதற்கு முன்பே இயேசு நம்மை நேசித்தார். நம் கீழ்ப்படியாமையின் மத்தியிலும், நாம் பாவிகளாக இருந்தபோதே அவர் நம்மை நேசித்தார். நம்மீது அவர் வைத்துள்ள அன்பு நமக்கு நீதியையும் நித்திய ஜீவனையும் கொண்டு வருவதைக் குறிக்கிறது.
ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும்,ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்த ஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். தீத்து 3:3-7
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும்
அவர் நம்மீது வைத்திருக்கும் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாது.
மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும் நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:38-39
இரட்சிப்பின் வாக்குத்தத்தம்: நித்திய ஜீவன்
மரணம் என்பது மதம், செல்வம், அந்தஸ்து எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் பகிர்ந்து கொள்ளும் தவிர்க்க முடியாத ஒரு விதி. இருப்பினும், இரட்சிப்பின் மூலம், நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுடன் நித்திய ஜீவனின் நிச்சயம் நமக்குக் கிடைக்கிறது.
தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16
மரணத்தை எதிர்கொண்டாலும், நம் மீட்பர் உயிருடன் இருக்கிறார் என்பதையும், ஒரு நாள் நாம் அவரைக் காண்போம் என்பதையும் அறிந்து, நமக்கு நம்பிக்கை இருக்கிறது.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது. யோபு 19:25-27
இந்த இரட்சிப்பை எவ்வாறு பெறுவது?
இரட்சிப்பு என்பது மதம், இனம், கடந்தகால பாவங்கள் அல்லது இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் கிடைக்கும் ஒரு இலவச பரிசு. அதை நாடும் அனைவருக்கும் இது வழங்கப்படுகிறது.
ஒருவர் தன் பாவங்களை உணர்ந்து, இரட்சிப்பிற்காக இயேசு கிறிஸ்துவிடம் கேட்கும்போது, அவர் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்கிறார். எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3:23
இயேசு கிறிஸ்து கர்த்தரும் இரட்சகருமானவர் என்று ஒருவர் இருதயத்திலிருந்தும் ஆத்துமாவிலிருந்தும் விசுவாசத்துடன் ஒப்புக்கொள்ளும்போது, அவர் இரட்சிப்பைப் பெறுகிறார். அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. யோவான் 3:18
ஒருவர் தான் செய்த பாவங்களை அறிக்கையிட்டு இயேசு கிறிஸ்துவிடம் என்னை மன்னித்து, உங்கள் விலைமதிப்பற்ற / குற்றமற்ற இரத்தத்தால் என்னைக் கழுவுங்கள் என்று மன்னிப்பு கேட்கும்போது, அந்த மனிதரின் பாவமும் பாவத்தின் அனைத்து அடிமைத்தனமும் நீக்கப்பட்டு புதிய நபராக மாற்றப்படுவார். ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், அப்போஸ்தலர் 3:19
இரட்சிப்பு என்பது புதிய விசுவாசிகளுக்கு மட்டுமல்லாமல் தேவனுடைய அன்பிலிருந்தும் அழைப்பிலிருந்தும் விலகிப்போன கிறிஸ்துவின் விசுவாசிகளுக்குமானது. கிறிஸ்துவை விசுவாசிக்கும் ஒவ்வொருவரும் அனுதினமும் இரட்சிப்பைப் பெற வேண்டும், ஏனென்றால் நாம் பாவம் நிறைந்த உலகில் வாழ்கிறோம், இதனால் நம் சுயத்தினால் முற்றிலும் பாவத்திலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை.
ஒவ்வொரு நாளும் இரட்சிப்பைப் பெறுவதன் மூலம், நாம் அவருடைய இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுகிறோம், அவரைப் போன்றவராக வளர்ந்து, கிறிஸ்துவின் பண்புகளுடன் புதுப்பிக்கப்பட்டு, நம்முடைய பாவ இயல்பை விட்டுவிட்டு இந்த உலகில் மேலும் நீதிமான்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் மாறுகிறோம். ஒரு நாள், நித்தியத்தில் அவரைச் சந்திக்கும் போது, நமது உண்மைத்தன்மை மற்றும் நேர்மைக்கான வெகுமதியைப் பெற்றுக் கொள்வோம்.
Amen