ஒரு நாட்டின் தூதரை பற்றி நாம் அறிவோம். அவர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நாட்டின் மிக உயர்ந்த அரசியல் நிர்வாகி. அவர் நாட்டின் மக்கள், அதன் கொள்கைகள் மற்றும் மதிப்பிற்கு பிரதிநிதியாக இருக்கிறார். அவர் ஒரு நாட்டின் குரல். அவர் மக்களை பிரதிபலிப்பார், வர்த்தக பரிமாற்றம் மூலம் செழிப்பை ஊக்குவிப்பார், உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்களுடன் நல்லுறவைப் பேண அமைதிக்காகப் பணியாற்றுவார் என்பதெல்லாம் அவர் மேலுள்ள எதிர்பார்ப்புகள். ஒரு தூதர் அரசாங்கத்திற்கு புறம்பாக ஏதாவது பேசினால், அவர் அப்பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார்.
அதே போல, கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவின் தூதர்கள். பவுல் இதைப் பற்றி 2 கொரிந்தியர் 5 ஆம் அதிகாரத்தில் பேசுகிறார்.
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம்”. 2 கொரிந்தியர் 5: 17 – 20
பவுல் கூறும் ஒரு தூதருக்கான தகுதிகள்
நம் பழைய பழக்கங்கள் எல்லாம் ஒழிந்து போயிற்று. நாம் கிறிஸ்துவின் குணாதிசயங்களுடன் மீண்டும் பிறந்த புதிய சிருஷ்டியாக இருக்கிறோம்.
ஒப்புரவாக்குதலின் ஊழியம் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் பரிசுத்தம் நம்மில் வெளிப்பட வேண்டுமானால் நாம் பாவங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும்.
ஒரு நாட்டின் தூதுவர் எவ்வாறு செயல்படுவாரோ, அதுபோலவே ஆண்டவருடைய தூதரின் பணியும் தேவனுடைய இராஜ்ஜியத்தைப் பின்பற்றுவது தான்.
ஒரு தூதரின் குறிக்கோள் ஜனங்களை ஒப்புரவாக வைப்பதாகும். இந்த உலகத்தின் விளக்கங்களுக்கு பதில் கூறுவதற்கு, தான் தேவனின் வார்த்தையை அறிந்திருக்க வேண்டும் என்பதை அவர் அறிவார். ஆனால், தன்னால் யாரையும் இணங்க வைக்க முடியாது என்பதையும் அறிவார். இன்றைய செய்தியில் பார்க்கப் போவது போல, பரிசுத்த ஆவியானவர் தாமே அவர் மூலம் அந்த விண்ணப்பத்தை வைக்கிறார். அவரே உள்ளங்களை மாற்றுகிறவர்.
கிறிஸ்துவின் தூதர்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் தன்னலமற்ற அன்பால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள்.
தேவன் தமது தூதர்களுக்கு பகுத்தறியும் திறனை அளிக்கிறார். உலகம் பார்ப்பது போல் அவர்கள் மக்களைப் பார்ப்பதில்லை.
கிறிஸ்துவின் தூதர்கள் மனிதர்களை “வழி தவறிப் போகிறவர்கள் அல்லது இரட்சிக்கப்படுகிறவர்கள்” என்று தேவன் பார்ப்பது போலவே பார்க்கிறார்கள். இரட்சிக்கப்பட்டாலும் கூட, அவர்கள் மாம்சத்தின் பின்னால் போகிறவர்களாக இருக்கலாம்.
அவர்கள், ஒருவரது தோலின் நிறம், அனுபவிக்கும் செல்வம் அல்லது வறுமையை பார்க்காமல் அவரது ஆன்மீக நிலையைப் பார்க்கிறார்கள். அவர்கள் மனிதர்களின் கண்கள் மூலம் பார்க்காமல், தேவனுடைய கண்களால் பார்க்கிறார்கள்.
கிறிஸ்துவுடைய தூதர்களின் வாழ்க்கையில் தீவிரமான, ஆவிக்குரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது, பவுல் தன்னையும், அவர்களையும் ஒரு "புத்தம் புதிய சிருஷ்டி" என்று அழைக்கிறார்.
பவுல் சொன்னது யாவும் கொரிந்து தேவாலயத்திற்கு தான், அது நமக்கு பொருந்தாது என்று கிறிஸ்தவர்களாகிய நம்மில் பலர் கூறலாம், அது உண்மையல்ல. கிறிஸ்தவர்கள் என்று நம்மை அழைத்துக் கொள்ளும் நாம் யாவரும் கிறிஸ்துவின் தூதர்கள் தான். நாம் பின்வரும் மூன்று விஷயங்களைப் புறக்கணிக்கிறோம், அதனால்தான் கிறிஸ்துவின் உண்மையான தூதராக நம்மை நாம் கருதுவதில்லை.
1.நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள கிருபையை வீணாக்குகிறோம்
“தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்”. 2 கொரிந்தியர் 6:1
கிறிஸ்துவுக்குள் நாம் மறுபடியும் பிறந்தவுடனே, அவர் நம்மைச் செய்ய அழைத்த அவருடைய சித்தத்தைச் செய்வதற்கு தேவனுடைய கிருபையைப் பெறுகிறோம்.
விசுவாசிகளுக்கு பவுல் சொல்வது என்னவென்றால், மிகுந்த வாஞ்சையுடன் தேவனுடைய கிருபையைப் பெற்ற நாம், ”தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு” என்று கூறுகிறார். பாருங்கள், கிருபை நல்லது, அது ஆவலுடன் எதிர்பார்ப்போடு பெறப்படுகிறது. எத்தனை விசுவாசிகள் தேவனுடைய இரட்சிப்பின் கிருபையை நீட்டிய கரங்களுடன் பெறுகிறார்கள். ஆனால் அவர்கள் வாழும் காலத்தில், அந்த கிருபையை அவர்கள் மூலம் செயல்பட அனுமதித்து, ஒப்புரவாக்கும் ஊழியத்தில் மற்றவர்களை இணங்க வைக்கும் வாய்ப்பை வீணாக்குகிறார்கள்.
உண்மையில், இந்த கிருபை வீணாக்கப்பட்டால், அவர்களால் ஆண்டவருக்கு எந்தப் பயனும் இல்லை. தேவனின் கிருபையைப் பெறுவதில் மிகவும் வாஞ்சையாக இருந்து, ஆனால் அதில் வாழ விருப்பமில்லாத ஒரு விசுவாசியை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தேவனுக்கு சரி என்று சொல்லி, கடந்த காலத்தில் பழகிய பழைய பழக்கங்களிலிருந்து விலகி, தினமும் சரீரத்திற்கு மரிக்க விருப்பமில்லை. அதைத்தான் “தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு” என்று பவுல் கூறுகிறார். இதை விரிவான முறையில் விளக்கியுள்ளார்.
“கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே”. கலாத்தியர் 2:20-21
வேறு விதமாகப் பார்த்தால், கிருபையை நமக்கு தேவையான காரியங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, பழைய வாழ்க்கையின் சுகத்திற்குத் தூக்கி எறிந்துவிடுகிறோம். நமக்குத் தேவைப்படும்போது மட்டுமே கிருபையைப் பயன்படுத்த விரும்புகிறோம். தேவ கிருபை அவ்வாறு செயல்படுவதில்லை. அவர் கோபப்படுவதில் தாமதிப்பார். ஆனால் நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபை என்றைக்குமானது இல்லை. அவருடைய கோபாக்கினை நாட்கள் வரும். அன்று நமக்கு கொடுக்கப்பட்ட கிருபைக்கும், நாம் அதை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தினோம் என்பதற்கும் கணக்கு கேட்கப்படும்.
2. ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை வீணாக்குகிறோம்.
“இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்”. 2 கொரிந்தியர் 5 :18-19
2 கொரிந்தியர் 5 :18 இல் பவுல் குறிப்பிடும், ஒப்புரவாக்குதலின் ஊழியம் என்றால் என்ன? இது ஆதாமிலிருந்து ஆரம்பிக்கிறது.
ஆதாமின் வேர்களில் இருந்து நாம் பாவம் செய்தோம். தேவன் பாவத்தின் நிமித்தம் மிகவும் கோபம் கொண்டு, மனிதன் புறப்பட்டு வந்த மண்ணிற்கே திரும்பும்படியாக அவனைச் சபித்தார். நம் மனித உடல் இறந்தபின் மட்கிப்போய் மண்ணாக மாறும்.
“பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்”. ஆதியாகமம் 3:17-19.
ஆனால் தேவன் அதோடு நிற்கவில்லை. மனிதன் மனந்திரும்பி தம் வழிக்குத் திரும்புவான், இதனால் சாபம் நீங்கும் என்று அவர் நீண்ட காலமாக காத்திருந்தார். இறுதியாக அவர் கிறிஸ்துவை உலகிற்கு அனுப்ப முடிவு செய்தார். மேலும் கிறிஸ்து நம் பாவங்களை சுமந்தார். நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைக் காக்கும்படிக்கு இயேசுவை தருவதற்கு தேவன் மனிதர்களுடன் ஒப்புரவாகினார். “அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது”. மத்தேயு 1:21-22
கிறிஸ்துவுக்குள் நாம் இரட்சிக்கப்பட்ட பின், கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டவுடன், நாம் சுயத்திற்கு மரித்து, நம்மில் உள்ள பழைய காரியங்களை அகற்ற வேண்டும். ஆனால், நம்மைச் சுற்றி இந்த உலகில் நிறைய பாவங்கள் உள்ளதால் மனிதர்களாகிய நாம், தேவனுடைய தரநிலைகளைக் கடைப்பிடிக்க தவறுகிறோம். நாம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டு, அவரிடம் மன்னிப்பு கேட்டு தேவனுடன் ஒப்புரவாக வேண்டும். அப்பொழுது தான் பாவம் நம் வாழ்வில் எப்போதும் நுழையாமல் இருக்கும்.
3. உலகில் சரியான உறவைப் பேணுதல்
“அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?” 2 கொரிந்தியர் 6:14
விசுவாசிகளாகிய நாம் உலகில் பல விஷயங்களைக் கையாள வேண்டி இருக்கிறது. இந்தச் செயல்பாட்டில், உலகத்துடனான நமது உறவு எப்படி இருக்கிறது? நாம் அவிசுவாசிகளுடன் இணைக்கப்பட்டு, நமது கிறிஸ்தவ வாழ்க்கையின் பரிசுத்தத்திற்கு ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறோமா?
“பிணைக்கப்படாதிருப்பீர்களாக”, அவர்களைச் சுற்றி இருக்க வேண்டாம் என்று பவுல் கூறுகிறார். கிறிஸ்துவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்திற்காக அவர்களுடன் இருக்க வேண்டாம் என்று அவர் கூறவில்லை. அவர் சொல்வது அதுவல்ல. அமைப்பின் படி, ஒரு படகு தண்ணீரில் இருக்க வேண்டும். படகில் தண்ணீர் இருப்பது ஒரு பேரழிவு. அவர்களுடன் ஒரு பிணைப்பு உறவை உருவாக்க வேண்டாம் என்று அவர் கூறுகிறார். ஒளி எவ்வாறு இருளுடன் இணைந்து வாழ முடியாது என்பதற்கு அவர் எடுத்துக்காட்டுகளைத் தருகிறார்.
தேவனின் ஒளி, நேர்மையாக வாழ்வதற்கு விசுவாசிகளுக்கு வழிகாட்டுகிறது. இந்த பூமியில் நீதியாக நடக்க தேவனுடைய ஆவி நமக்கு வெளிச்சத்தையும் புரிதலையும் தருகிறது. ஆனால், அக்கிரமமாக வாழும் அவிசுவாசியின் பின்னால் இருள் இருக்கிறது.
உங்களை சுற்றி தீங்கு விளைவிக்கும் ஒருவர் இருக்கும்போது நீங்கள் அதை அறிந்து கொள்ளலாம். எபேசியரில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, “கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்”. எபேசியர் 4:29
“கெட்ட” என்ற வார்த்தை அழுகியதைக் குறிக்கிறது. ஒரு உணவு அழுகும் போது உண்டாகிற துர்நாற்றம். அதாவது துர்நாற்றம் மற்றும் அழுகல். பல சமயங்களில், ஒருவர் பிறரை பற்றி கிசுகிசுக்கள் பேசும்போது இதை பெறுகிறோம். கெட்ட வார்த்தைகள் உங்களிடமிருந்து வருவதை அனுமதிக்காதீர்கள், மேலும், இந்த நடத்தையை ஊக்குவிக்காதீர்கள். இந்த நடத்தை கிறிஸ்துவுடன் நீங்கள் கொண்டிருக்கும் பரிசுத்தத்தை கெடுத்துவிடும்.
சுருக்கம்
உங்கள் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் கிறிஸ்துவின் தூதரா? தூதராக இருப்பதற்கு உங்களைத் தடுக்கும் குணங்கள் என்ன?
தேவன் இரக்கமுள்ளவர். அவர் இன்னும் உங்களுக்காக மிகுந்த அன்புடன் ஏங்குகிறார். அவர் உங்கள் கடந்த காலத்தைப் பொருட்படுத்துவதில்லை. அவர் உங்களோடு ஒப்புரவாகி, நித்தியத்திற்கும் நீடிக்கும் ஒரு புதிய உறவை உங்களோடு தொடங்க முடியும். உங்கள் கடந்த காலத்திலிருந்து திரும்பி பழையவற்றை உதறி விட்டு அவரிடம் வாருங்கள்.
Comments