top of page

கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம் - பாவம்

Kirupakaran

கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம்" என்ற புதிய தொடரைத் தொடங்குகிறேன். இந்தத் தொடரில், இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்த ஒவ்வொரு தலைப்பையும் வேதாகமக் கண்ணோட்டத்தில் முழுமையாக ஆராயலாம்.


கிறிஸ்துவின் அடிப்படைகளில் இருந்து தொடங்குவோம். முதல் தலைப்பு 'பாவம்'. பாவம் என்றால் என்ன என்று ஆராய்வோம்.


பாவத்தின் தோற்றம்

  • பாவம், சாத்தான் என்று அழைக்கப்படும் லூசிபரிடமிருந்து உருவானது. அவன் முதலில் தேவனுடைய தூதர்களில் ஒருவனாக, ஞானம் மற்றும் அழகு மிக்கவனாக இருந்தான். இருப்பினும், அவன் பொல்லாதவனாக மாறி, தேவனுக்கு விரோதமாகக் கலகம் செய்து, பரலோகத்திலிருந்து பூமிக்குத் தள்ளப்பட்டான். இப்போது சாத்தானின் செல்வாக்கின் கீழ் உள்ள உலகம், பாவத்தால் கறைபட்டுள்ளது. எசேக்கியேல் 28:13-17

  • சாத்தான் (ஆதியாகமம் 3 ஆம் அதிகாரத்தில் சர்ப்பம் என்று குறிப்பிடப்படுபவன்) ஏதேன் தோட்டத்தில் பாவத்தை மனிதகுலத்திற்கு அறிமுகப்படுத்தினான். அங்கே, அவன் ஆதாம் மற்றும் ஏவாளை நோக்கி “நீங்கள் ... தேவர்களைப்போல் இருப்பீர்கள்” என்று கவர்ச்சியாகப் பேசித் தூண்டினான். தேவனின் கட்டளைக்கு கீழ்ப்படியாதபடி அவர்களை வழிநடத்தினான், இதன் விளைவாக அவர்கள் தேவனுக்கு முன்பாகப் பாவம் செய்தார்கள். ஆதியாகமம் 3:1-7

பாவத்தின் வரையறை

தேவனுடைய நியாயப்பிரமாணத்தை மீறுபவர்கள் பாவம் செய்கிறார்கள். இது கீழ்க்கண்ட வசனங்களில் விளக்கப்பட்டுள்ளது.

  • பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். 1 யோவான் 3:4

  • எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, ரோமர் 3:23.

  • நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 1 யோவான் 1:8

உலகமும் பாவமும்

ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். ரோமர் 5:18-19

  • ஆதாம் தேவனை நிராகரித்தபோது, அது மனிதகுலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆதாமின் பாவம் 'எல்லா மக்களுக்கும்' பாவம் மற்றும் மரணத்தின் வாயில்களைத் திறந்தது.

  • பாவம் தொற்றிப் பரவும். ஏவாள் பாவம் செய்த பிறகு, அவள் நிறுத்தாமல் ஆதாமுக்கும் சிலவற்றைக் கொடுத்து, அவனையும் பாவத்திற்கு வழிநடத்தினாள். அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். ஆதியாகமம் 3:6

  • நாம் இவ்வுலகின் இன்பங்களைத் தழுவி அதன் வழிகளின்படி வாழும்போது பாவத்திற்கு அடிமையாகி விடுகிறோம். மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? ரோமர் 6:16

  • மனிதனுக்குள் பாவம் எவ்வாறு நுழைகிறது என்பதைப் புரிந்துகொள்ள “கேடான சிந்தை” என்ற எனது வலைப்பதிவைப் படியுங்கள்.

பாவத்தின் வகைகள் என்ன ?

1. செய்கின்ற பாவங்கள் (கொலை செய்வது, காமம் போன்றவை)

  • மீறுதல் தான் மனிதகுலம் செய்த முதல் பாவம். ஒரு குறிப்பிட்ட பழத்தை உண்ண வேண்டாம் என்று ஆதாமையும் ஏவாளையும் தேவன் அறிவுறுத்தியிருந்தார். அவருடைய கட்டளையை அறிந்திருந்தும், அவர்கள் வேண்டுமென்றே கீழ்ப்படியவில்லை (ஆதியாகமம் 3:6). அவர்கள் பாவச் செயலில் தீவிரமாக ஈடுபட்டனர்.

  • தாவீது ராஜா விபச்சாரம் செய்து, பின்னர் செய்த தவறை மறைப்பதற்காக உரியாவின் மரணத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த இரண்டு செயல்களும் வேண்டுமென்றே செய்த பாவங்கள் (2 சாமுவேல் 11).

  • தேவனின் கட்டளைகளுக்கு எதிரான செயல்களில் தெரிந்தே ஈடுபடுவதன் மூலம், வேண்டுமென்றே செய்யும் பாவங்களின் சுமையை நாம் அனைவரும் சுமக்கிறோம்.

2. செய்ய வேண்டியதை செய்யாமல் விடுகின்ற பாவங்கள்

ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும். யாக்கோபு 4:17

நமது பொறுப்புகளை நிறைவேற்றுவதை நாம் புறக்கணிக்கும்போது இந்த வகையானப் பாவங்களை அனுபவிக்கிறோம். நன்மை செய்யாதது மற்றும் வாக்குறுதிகள் அல்லது பொருத்தனைகளைக் கடைப்பிடிக்காதது ஆகியவை இவ்வகையானப் பாவங்களில் அடங்கும்.


3. நாம் பாவம் செய்யும்போது, நம்முடைய செயல்கள் தேவனின் கோபத்தைத் தூண்டுகின்றன. மேலும் நியாயத்தீர்ப்பு நாளில் நம் செயல்களுக்கு நாம் பொறுப்பேற்க வேண்டும். நாம் வேண்டுமென்றே செய்த பாவங்கள் (Sins of commission) மற்றும் நமது புறக்கணிப்பினால் செய்த பாவங்கள் (Sins of omission) ஆகிய இரண்டிற்கும் அவர் முன்னிலையில் நாம் பதிலளிக்க வேண்டியிருக்கும்.


4. எல்லாப் பாவமும் ஒன்று தான் - வேதம் இந்தப் பாவங்களை வரையறுக்கிறது. சிறிய பாவம், பெரிய பாவம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது.

  • ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். கொலோசெயர் 3:5-6

  • மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். கலாத்தியர் 5:19-21

நாம் எப்படி பாவம் செய்கிறோம் ?

  • வஞ்சனை - பாவத்தை நம் வாழ்வில் புகுத்த சாத்தான் வஞ்சனை என்னும் ஆயுதத்தைப் பயன்படுத்துகிறான். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த காரியத்தை செய்து வந்து கொண்டிருக்கும் அவன் ஒரு திறமையான ஏமாற்றுக்காரன். அவனுடைய சூழ்ச்சியானத் தந்திரங்களுக்கு எதிராக நாம் சக்தியற்றவர்களாக இருக்கிறோம். ஆனால், தேவனைப் பொறுத்தவரை அவனது வஞ்சகமான திட்டங்கள் எதுவும் வெற்றிபெறவில்லை.

    • "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது” (ஆதியாகமம் 3:5) என்று சொல்லி ஏவாளை ஏமாற்றினான்.

  • சோதனை - அவன் நம்மைப் பாவம் செய்யத் தூண்டுவது தான் சோதனை. பாவம் செய்யும்படியான ஆசை நம் இருதயத்திலும் மனதிலும் இருந்து தொடங்குகிறது.

    • சாத்தான் ஏவாளைச் சோதிக்கிறான் - அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். ஆதியாகமம் 3:6

  • நமது சுயம் பாவத்திற்கு அடிபணிகிறது - நாம் தேவனுக்கு நம்மை எப்படி அர்ப்பணிக்கிறோமோ அதேபோன்று நாம் மனமுவந்து பாவத்திற்கு விட்டுக்கொடுத்து, தவறு செய்ய நம்மை அனுமதிக்கிறோம்.

    • ஒரு பாவத்தைச் செய்ததன் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது; நமது செயல்களுக்கு சாத்தானின் வஞ்சனையையும் சோதனையையும் காரணமாகக் கூற முடியாது. நன்மை எது தீமை எது என்று பகுத்தறியும் திறனை தேவன் நமக்கு வழங்கியுள்ளார்.

    • நீங்கள் ஒரு பாவத்தைச் செய்யும்போது, அது எந்த வகையான பாவமாக இருந்தாலும், அந்த பாவத்திற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள், மேலும் நியாயத்தீர்ப்பு நாளில், நீங்கள் தேவனுக்குப் பதிலளிக்க வேண்டும்.

  • சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். யாக்கோபு 1:13-16

பாவத்தின் விளைவு

  • ஒவ்வொரு முறையும் நாம் ஒரு பாவச் செயலில் ஈடுபடும்போது, அது 'ஜீவபுஸ்தகத்தில்' பதிவு செய்யப்படுகிறது. நியாயத்தீர்ப்பு நாளில், நம்முடைய பாவங்களுக்கும் நீதியான செயல்களுக்கும் இடையிலான சமநிலையின் அடிப்படையில் நாம் மதிப்பிடப்படுவோம்.

    • அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, எபிரெயர் 9:27

    • மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். வெளிப்படுத்தின விசேஷம் 20:12-14

  • பாவத்தின் சம்பளம் அக்கினிக்கடலில் மரணம் (நரகம்) - பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23

  • பாவம் தொற்றக்கூடியது - பாவம் மற்றவர்களுக்கு ஒரு அலை விளைவை ஏற்படுத்துகிறது. இது உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதிக்கிறது. வேதத்தில், பாவம் பெரும்பாலும் 'புளித்த மாவுடன்' ஒப்பிடப்படுகிறது. ஒரு சிறிய பாவம் கூட தேவனுடனான நமது உறவைக் கெடுத்துவிடும் - புளிப்புள்ள கொஞ்ச மாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். கலாத்தியர் 5:9

பாவத்திலிருந்து விடுபடுதல்

பழைய உடன்படிக்கை - பழைய ஏற்பாட்டில், மக்கள் மோசேயின் அனைத்து கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் இந்தக் கட்டளைகளை மீறினால், தங்களைத் தூய்மைப்படுத்த பலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது.

உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து, உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம். நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள். உபாகமம் 12:26-28


புதிய உடன்படிக்கை - பழைய உடன்படிக்கையில், பாவங்கள் கழுவப்பட்டன, ஆனால், முழுமையாக அகற்றப்படவில்லை. எனவே, தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உலகிற்கு அனுப்பினார். அவர் பரிபூரணமான, பாவமற்ற வாழ்க்கை வாழ்ந்தார், நம் பாவங்களுக்காக குற்றமற்ற ஆட்டுக்குட்டியைப் போல (ஏசாயா 53:7 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி) பலியாகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார். எபிரேயர் 9 மற்றும் 1 யோவான் 2:2 இல், கிறிஸ்துவின் மரணம் எவ்வாறு நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்து,புதிய உடன்படிக்கையை நமக்கு அறிமுகப்படுத்தியது என்பது விளக்கப்பட்டுள்ளது.

  • நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். 1 யோவான் 2:2

  • அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார். எபிரேயர் 9:26

  • கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார். எபிரேயர் 9:28

  • அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 53:7

பாவ அறிக்கை

நாம் உண்மையிலேயே மனந்திரும்பி, “இயேசுவே, நீங்கள் என் பாவங்களுக்காக மரித்தீர்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் என் பாவங்களை அறிக்கையிட்டு, மனந்திரும்புகிறேன், என் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கிறேன்" என்ற ஒரு எளிய ஜெபத்தின் மூலம் நம்முடைய பாவங்களை ஒப்புக்கொண்டால், அவர் நம்முடைய பாவங்களை மன்னித்து, தம்முடைய இரக்கத்தினாலும் கிருபையினாலும் நம்முடைய அநீதியான செயல்களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவார். நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9


மனந்திரும்பி அறிக்கையிடுதல் - உண்மையாக மனந்திரும்புவதற்கு, உங்கள் பாவங்களுக்காக நீங்கள் வருந்த வேண்டும்;அவற்றை ஒப்புக்கொண்டால் மட்டும் போதாது. உண்மையான மனவருத்தமும் மனந்திரும்புதலும் இல்லாவிட்டால், பாவம் உங்களில் தங்கி உங்கள் அழிவுக்கு வழிவகுக்கும். அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். லூக்கா 13:3


கிறிஸ்துவின் மூலம் நமது பாவங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் - பாவங்களிலிருந்து விடுபட வேறு எந்த வழியும் இல்லை. “உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாக எண்ணுங்கள்". ஏனெனில், இயேசு மரணத்தை ஜெயித்தார். மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்ளுவதில்லை. அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். ரோமர் 6:9-11

  • “பாவத்திற்கு மரித்தவர்களாகவும் …. எண்ணிக்கொள்ளுங்கள்” - பாவத்தின் நம் மீதான கட்டுப்பாடு ஒழிந்து விட்டது, நாம் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம். நாம் பாவத்தால் கட்டுப்படுத்தப்பட்டிருந்தோம், ஆனால் இப்போது நாம் அதிலிருந்து விடுபட்டு, கிறிஸ்துவில் வாழ்ந்து, நீதியின் பாதையைப் பின்பற்றுகிறோம்.

  • “இயேசு கிறிஸ்துவுக்குள்” - பவுல் தனது வார்த்தைகளுடன் “இயேசு கிறிஸ்துவுக்குள்” என்று சேர்க்கும் போது, அது ஒரு முக்கியமான சேர்க்கையாகிறது, ஒரு சில வார்த்தைகளில் ஆழமான அர்த்தத்தை அடைகிறது. நாம் இப்போது அனுபவிக்கும் வாழ்க்கை கிறிஸ்து இயேசுவின் மூலம் தேவனோடு இணைக்கப்பட்டுள்ளது. அவருக்கு வெளியே உண்மையான வாழ்க்கையை நாம் காணவில்லை; நாம் அனுபவிக்கும் அனைத்து தெய்வீக வாழ்க்கையும் இயேசு கிறிஸ்துவில் மட்டுமே காணப்படுகிறது. இதனாலேயே அவர் எல்லா உயிர்களுக்கும் ஆதாரமாக இருக்கிறார்.

இயேசு கிறிஸ்துவின் இரத்தம் - இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலம், நாம் கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, நமது கடந்தகால பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். மேலும், பாவம் நீக்கப்பட்டவுடன், தேவனுடைய ராஜ்யத்தில் நித்திய சுதந்தரத்தின் நிச்சயத்தை நாம் பெறுகிறோம்.

  • " ... அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்". 1 யோவான் 1:7

  • நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். எபிரேயர் 9:14-15


பாவி மனந்திரும்பும்போது பரலோகத்தில் சந்தோஷம் உண்டாகிறது

லூக்கா 15 இல் சொல்லப்பட்டுள்ள ஊதாரி குமாரனின் கதையைப் படிக்கும்போது, அது, ஒரு பாவி தேவனுக்கு முன்பாக மனந்திரும்பும்போது என்ன நடக்கும் என்பதில் உள்ள உள்ளான நுணுக்கங்களை வழங்குகிறது.

அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். லூக்கா 15:17-20

அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார். லூக்கா 15:31-32


பாவி மனந்திரும்புதலின் ஆறு நிலைகள்


1) நிலை 1 – “அவனுக்குப் புத்தி தெளிந்தபோது” - நாம் நம் வாழ்வில் முற்றிலும் வெறுமை நிலையை அடைந்து, தேவனால் மட்டுமே நமக்கு உதவ முடியும் என்பதை அங்கீகரிக்கும் போது இந்த உணர்தல் நிகழ்கிறது.

2) நிலை 2 - நாம் உடைந்து போனவர்களாக இருக்கும் போது மனந்திரும்புதலின் ஆவி நமக்கு வழங்கப்படுகிறது. “பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்” என்று ஒப்புக்கொண்டு, மனந்திரும்பி அறிக்கை பண்ணுங்கள்.

3) நிலை 3 - தேவனிடம் உங்களைத் தாழ்த்துங்கள் – “இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்”.

4) நிலை 4 - கீழ்ப்படிதல் – “எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான்”.

5) நிலை 5 - நாம் மனந்திரும்பி அறிக்கையிட்ட பிறகு, நம்மிடம் குறைபாடுகள் இருக்கின்ற போதிலும் தேவன் நம்மை வரவேற்கிறார். அவர் முன்பாக நிற்கும்போது நம்மில் இன்னும் பல குறைபாடுகள் இருக்கலாம், ஆனால் மனதுருக்கமுள்ள பிதாவாகிய அவர், 'நான் மனதை மாற்றிக் கொண்டேன்; நான் அவனைத் தழுவி என் கைகளில் வைத்துக் கொள்வேன்' என்று கூறுகிறார். “அவன் தூரத்தில் வரும்போதே,அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்”.

6) நிலை 6 - தொலைந்து போன ஒரு பாவி மனந்திரும்பி, தேவனுடைய ராஜ்யத்திற்குத் திரும்பும்போது பரலோகம் கொண்டாடுகிறது – “உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்”.

42 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page