top of page
Kirupakaran

கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம் – ஞானஸ்நானம்


“கிறிஸ்துவின் அடிப்படைகளுக்குத் திரும்புவோம்" என்ற புதிய தொடரைத் தொடங்கி இருக்கின்றேன். இந்தத் தொடரில், இயேசுவுடனான நமது உறவை வலுப்படுத்த ஒவ்வொரு தலைப்பையும் வேதாகமக் கண்ணோட்டத்தில் முழுமையாக ஆராயலாம்.


கிறிஸ்தவத்தின் அடிப்படைகளில் இருந்து தொடங்கலாம். ஐந்தாவது தலைப்பு ஞானஸ்நானம். ஞானஸ்நானம் என்றால் என்ன?, ஜலத்தினாலும் ஆவியினாலும் பெறுகிற ஞானஸ்நானம் மற்றும் அது திருவிருந்துடன் எவ்வாறு தொடர்புடையது என எல்லாவற்றையும் குறித்து ஆராய்வோம்.


ஞானஸ்நானம் என்றால் என்ன?

மற்ற சபைகளை விட பெந்தேகோஸ்தே சபையில் ஞானஸ்நானத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தேவாலயத்தில் குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிற நிகழ்வில் நம்மில் பலர் கலந்துகொண்டிருப்போம். இது பல வழிகளில் கொண்டாடப்படுகிறது.


எனவே, ஞானஸ்நானம் என்றால் என்ன? இதற்கான பதில் மாற்கு 16:16 இல் கொடுக்கப்பட்டுள்ளது, விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான்.


  • இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து, அவரே தேவன் மற்றும் இரட்சகர் என்பதை நம் இருதயத்திலிருந்து ஏற்றுக்கொண்ட பிறகுதான் ஞானஸ்நானம் வருகிறது, அதனால்தான் மாற்கு 16:16 இல் “விசுவாசமுள்ளவனாகி” என்று கூறப்பட்டுள்ளது.

  • ஞானஸ்நானம் பெறாமல் உங்களால் தேவனுடைய ராஜ்யத்தில் நுழைய முடியாது. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16:16

  • இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்.நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். யோவான் 3:5-8

  • ஞானஸ்நானம் இரண்டு அம்சங்களுடன் நிகழ்கிறது, யோவான் 3:5-8.

    • ஜலத்தினால் பிறப்பது - "ஜலத்தினால் ஞானஸ்நானம்"

    • ஆவியினால் பிறப்பது - "ஆவியில் ஞானஸ்நானம்"

  • ஞானஸ்நானம் எடுக்கும்போது நீங்கள் "மறுபடியும் பிறக்கிறீர்கள்". நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம்.

  • இயேசு, தேவனின் குமாரனாக இருந்த போதிலும், அவர் யோவானால் ஞானஸ்நானம் பெற்றதன் மூலம் ஞானஸ்நானம் எவ்வளவு முக்கியம் என்பதை நமக்குக் காட்டினார். அவர் அதைச் செய்தபோது, பிதாவானவர் ஒரு புறாவைப் போல அவர் மீது இறங்கி ஆவியை ஊற்றினார். அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். மாற்கு 1:9-10

  • "நாம் இயேசு கிறிஸ்துவை நம் கர்த்தராகவும் சொந்த இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறோம், மேலும் சிலுவையில் அவருடைய தியாகம் அதற்கான உரிமையை அளிக்கிறது" என்பதை நாம் விசுவாசித்த பிறகு, ஞானஸ்நானம் பெறுவதற்கு இது ஒரு வலுவான காரணம்.

  • இன்னும் குழந்தைகளாக இருக்கும்போதே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதைப் பார்க்கிறோம். நாம் கிறிஸ்துவில் விசுவாசத்துடன் இருக்கும்போது தான் உண்மையான ஞானஸ்நானம் வருகிறது. வேதத்தில் குழந்தை ஞானஸ்நானம் பற்றி எதுவும் பதிவு செய்யப்படவில்லை. எனவே குழந்தைப் பருவத்தில் செய்யப்படுவது அனைத்தும் வெறும் உலகப்பிரகாரமானது தான்.

தண்ணீரில் ஞானஸ்நானம்


யோவான் 3:5-8, "ஜலத்தினால் பிறப்பது" பற்றி பேசுகிறது, அதாவது தண்ணீரால் ஞானஸ்நானம் பெறுவது. நீங்கள் கிறிஸ்துவை உங்கள் தேவனாகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்ட பிறகு, ஞானஸ்நானத்தின் போது, உங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, கிறிஸ்துவின் தியாகத்தின் மூலம் பாவமன்னிப்பு கேட்டு, தண்ணீருக்குள் சென்று அதிலிருந்து வெளியே வருகிறீர்கள்.


உங்கள் சரீரம் தலை முதல் கால் வரை தண்ணீருக்குள் மூழ்கி வெளியே வரும்போது - ஏதோ ஒன்று நடக்கிறது. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலது பாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 1 பேதுரு 3:19-22


நாம் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுக்கும் போது பின்வருபவை நடக்கின்றன.

  • இயேசுகிறிஸ்து நமக்காக சிலுவையில் பலியானார். அவரது இரத்தத்தின் மூலம், பிறந்தது முதல் நாம் சுமந்து வரும் பாவங்களை நீக்கி, அதாவது, குவிந்துள்ள அழுக்குகளை கழுவுவது போன்று, நம்மை சுத்தப்படுத்துகிறார். பாவத்திற்கு கருவியாக இருக்கின்ற நம் சரீரத்தை முழுவதுமாகக் கழுவுகிறார். உடலின் ஒவ்வொரு உறுப்பும் அவரது இரத்தத்தால் கழுவப்படுகிறது.

  • நமது மனசாட்சி சுத்தமாகி விடுதலையாகிறது. இயேசுவின் மூலம் நீங்கள் பாவத்தின் குற்றத்திலிருந்து விடுபடுகிறீர்கள்.

  • நாம் வாழ்ந்த பழைய கட்டுண்ட வாழ்க்கையில் (மதம், மரபுகள், நம்பிக்கைகள், கட்டுகள், பணக்கார / ஏழை வேறுபாடுகள், சாதி, பாலினம்) இருந்து விடுவிக்கப்படுகிறோம். நாம் இப்போது "அடிமைத்தனத்தின் நுகத்தில்" இல்லை. சிலுவையில் கிறிஸ்து செய்த தியாகத்தால் நாம் விடுவிக்கப்படுகிறோம்.

    • யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். கலாத்தியர் 3:28

    • ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். கலாத்தியர் 5:1

  • நாம் கிறிஸ்துவின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஆவதற்கான சுதந்தரத்தைப் பெறுகிறோம் - கிறிஸ்துவின் பண்புகள் நமக்கும் வழங்கப்படுகின்றன. “அப்பா, பிதாவே” என்று கூப்பிடத்தக்கதாக கிறிஸ்துவின் அதே ஆவி நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

    • மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். ரோமர் 8:14

    • ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. கலாத்தியர் 3:27

    • மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். கலாத்தியர் 4:6-7

  • தேவனோடு வாழ்வதற்கான நிச்சயம் நமக்கு இருக்கிறது, இயேசுவின் மூலம் ஒரு நித்திய ஸ்தலத்தை அவர் நமக்கு ஆயத்தம் பண்ணியிருக்கிறார்.

ஏன் தண்ணீரில் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள ஒரு பக்க வரலாறு (தேவன் ஏன் தண்ணீரைத் தேர்ந்தெடுத்தார்? அவர் வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே? என்று எனக்கு ஒரு கேள்வி இருந்தது). அதற்கான பதில் 1 பேதுரு 3:19-22 இல் உள்ளது.

  • பேழை கட்டப்பட்ட நோவாவின் காலத்திலிருந்தே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருந்த கட்டுண்ட ஆவிகளுக்கு இயேசு உயிர்த்தெழுந்த பிறகு பிரகடனம் செய்தார்.

  • நோவாவும் அவரோடு கூட 8 பேரும் தண்ணீரில் இருந்து காப்பாற்றப்பட்டனர் - நோவாவின் தலைமுறையிலிருந்து காப்பாற்றப்பட்ட ஒரு தலைமுறையில் நாம் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • தண்ணீர் இப்போது நாம் பெறுகின்ற ஞானஸ்நானத்தைக் குறிக்கிறது.


ஆவியில் ஞானஸ்நானம்


மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து அதிசயப்படவேண்டாம். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். யோவான் 3:6-8

  • ஆவியானவர் ஆவியைப் பெற்றெடுக்கிறார் - இது என்ன ஆவி ~ பரிசுத்த ஆவி (இயேசுவின் ஆவியைப் பரிசுத்த ஆவியாகப் பெறுகிறோம்). நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். எபேசியர் 1:13

  • நாம் கிறிஸ்துவிற்குள் மீண்டும் பிறக்கும்போது நமக்கு உதவுமாறு ஒரு தேற்றரவாளனை இயேசு பிதாவிடம் கேட்கிறார். (உலகப் பார்வையில் 24x7 உங்களுடன் இருக்கும் ஒரு தனிப்பட்ட வழக்கறிஞர் போன்று நினைத்துக் கொள்ளுங்கள்). நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். யோவான் 14:16-17

  • பரிசுத்த ஆவியானவர் நம்முடைய தனிப்பட்ட தேற்றரவாளனாக இருக்கிறார். அவர் நமக்குக் கற்பிக்கிறார், அவர் சொன்னதை தேவனுடைய வார்த்தையின் மூலம் நமக்கு நினைவூட்டுகிறார். என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். யோவான் 14:26

  • பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறார். உலகில் நீங்கள் என்ன செய்ய வேண்டும், மனிதர்கள் அல்லது சூழ்நிலைகள் மூலம் சாத்தானால் அமைக்கப்படும் பாவப்பொறிகளை நீங்கள் எவ்வாறு தவிர்க்க வேண்டும் என்பதை உங்களுக்குக் கற்பிக்கிறார். ஆவியானவர் எப்போதும் பிதாவின் சித்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்குப் பார்ப்பார்.

  • நீங்கள் ஆவியானவரால் வழிநடத்தப்பட ஆரம்பித்தவுடன், உங்கள் பழைய மரபுகள் / பிரமாணங்கள் உங்களைக் கட்டுப்படுத்தாது, பிரமாணங்களின் பிடியிலிருந்து விடுதலையாகிறீர்கள். ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. கலாத்தியர் 5:18

  • உங்களிடமுள்ள பரிசுத்த ஆவியை உலகத்தால் பார்க்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது. அது காற்றைப் போன்றது - நீங்கள் அதை உணர்ந்தாலும் அது எங்கிருந்து வருகிறது என்று சொல்ல முடியாது. காற்று அதற்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது. நீங்கள் அதன் சத்தத்தைக் கேட்டாலும் அது எங்கிருந்து வருகிறதென்றும் எங்கு போகிறதென்றும் உங்களால் சொல்ல முடியாது. ஆவியினால் பிறந்தவனும் அப்படியே இருக்கிறான். காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். யோவான் 3:8

  • நீங்கள் ஆவியில் நடக்கும்போது, உங்கள் சுய மாம்ச இச்சையை சிலுவையில் அறைந்து, தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறீர்கள். ஒவ்வொரு நாளும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும், உள்ளான வாழ்க்கை மற்றும் வாழ்க்கையின் அனைத்து நிலைகளையும் தேவனின் ஆவியானவர் வழிநடத்துவார். பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. கலாத்தியர் 5:16-17

  • நீங்கள் அவருடைய கட்டளைகளைப் பின்பற்றி அவரோடு நடக்கும் வரை இந்த ஆவியானவர் என்றென்றும் உங்களுடன் இருப்பார் - அவர் ஒருபோதும் உங்களை விட்டு விலகவும் மாட்டார் கைவிடவும் மாட்டார்.

  • நீங்கள் தியானிப்பதற்கு கூடுதல் குறிப்புகள், உங்கள் ஆர்வத்தைப் பொறுத்து, உங்களை வழிநடத்தவும் பலப்படுத்தவும் பரிசுத்த ஆவியானவரிடம் தியானியுங்கள்.

    • தேவன் தம்முடைய ஆவியை சபைக்கு எவ்வாறு ஊற்றினார்? அப்போஸ்தலர் 2:1-15 படித்து தியானித்துப் புரிந்துகொள்ளுங்கள்.

    • மாம்சத்தில் நடப்பது VS ஆவியில் நடப்பது - கலாத்தியர் 5:16-26

    • பரிசுத்த ஆவியானவர் வழிநடத்தும் வாழ்க்கை - ரோமர் 8:1-17

    • அந்நிய பாஷையைப் புரிந்துகொள்வது - 1 கொரிந்தியர் 14:13-17

    • வெவ்வேறு வகையான ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் - 1 கொரிந்தியர் 12:8-11

  • ஜலத்தினாலும் ஆவியினாலும் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதினால், ஆவியானவர் உங்களில் வாசம் செய்து வழிநடத்துவதற்கும், பரிசுத்த திரித்துவம் உங்களில் தங்கி உங்களை வழிநடத்துவதற்கும் நீங்கள் உங்களைச் சுத்தப்படுத்துகிறீர்கள்.

திருவிருந்து (Holy Communion)

ஞானஸ்நானம் பெற்ற பிறகு, உலகில் வாழும் போது நம்மைச் சுத்தப்படுத்தும் மற்றொரு முக்கியமான ஆவிக்குரிய அம்சம் திருவிருந்து. உலகத்தில் நடக்கும்போது, உலகின் அழுக்குகள் / இச்சைகள் / பாவங்களால் நாம் நிரப்பப்படலாம்.

திருவிருந்து என்பது நம்மைப் பரிசுத்தப்படுத்தி, நமது பாவங்களிலிருந்து நம்மைத் தூய்மைப்படுத்துவதாகும்.


நாம் ஏன் பரிசுத்தமாக வாழ வேண்டும்?

நாம் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், பரிசுத்தமில்லாமல் தேவனை ஒருவரும் தரிசிக்க முடியாது. அதனால்தான் இது "திருவிருந்து" (HOLY COMMUNION). வேதத்தில் உள்ள ஒவ்வொரு புத்தகமும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளைச் சுற்றி வருகிறது - லேவியராகமம் என்பது "பரிசுத்தம்" பற்றிய புத்தகம்.

  • இந்தப் புத்தகத்தில் "பரிசுத்தம்" என்ற வார்த்தை 80 முறைக்கு மேல் வருகிறது. இந்தப் புத்தகத்தில் தேவன் தம்மை வழக்கத்திற்கு மாறான நாமத்துடன் அறிமுகப்படுத்துகிறார்.

  • நம்முடைய பரிசுத்தம் இயேசுவின் இரண்டாம் வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது - கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோகும், பூதங்கள் வெந்து உருகிப்போகும், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோகும். 2 பேதுரு 3:10

  • பரிசுத்தத்தின் விளைவாக, நாம் நித்தியமாக வாழ்வதற்கு புதிய வானத்திற்கும் பூமிக்கும் அழைத்துச் செல்லப்படுவோம் - இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்! தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போகும். அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். 2 பேதுரு 3:11-13

  • நாம் வாழ்வதற்கான கட்டளை என்னவெனில், மிகவும் பரிசுத்தமாக (கறையற்று குற்றமற்று) வாழ வேண்டும் - ஆகையால், பிரியமானவர்களே இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 2 பேதுரு 3:14

திருவிருந்து ஆராதனையில் என்ன நடக்கிறது ?


திருவிருந்து ஆராதனையைக் குறித்துப் பார்ப்பதற்கு முன், இது எவ்வாறு தொடங்கியது என்பதற்கான வரலாற்றைப் பார்க்கலாம்.

புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். மத்தேயு 26:17

  • பஸ்காவுக்கு ஆயத்தம் செய்வதில் என்ன காரியங்கள் அடங்கியிருக்கிறது? ஒரு ஆட்டுக்குட்டியை பல நாட்களுக்கு முன்பே தேர்ந்தெடுக்க வேண்டும், ஆனால் இன்னும் பல ஏற்பாடுகளும் செய்ய வேண்டியிருந்தது.

    • தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்டுக்குட்டியை ஆலயத்தில் ஒரு ஆசாரியன் பலியிட வேண்டும்.

    • புளிப்பில்லாத அப்பம், திராட்சை ரசம், கசப்பான கீரை ஆகியவற்றை வாங்க வேண்டும்.

    • ஒவ்வொரு உணவுப் பொருளும் தேவனின் செயல்களை நினைவுபடுத்தும் ஒரு சிறப்புப் பொருளை அதனதன் பொருட்டுக் கொண்டிருந்தன.

  • ஆட்டுக்குட்டி – எகிப்தில், வீடுகளின் வாசல்களில் பூசப்பட்ட அதன் இரத்தம் அவர்களை மரண தூதனிடம் இருந்து காப்பாற்றியது. ஆட்டுக்குட்டி முழுவதுமாக சுட்டு சாப்பிடப்பட்டது.

  • புளிப்பில்லாத அப்பம் - உணவை உண்ணும் அவசர முறையைக் குறிக்கிறது.

  • நான்கு கோப்பை திராட்சை ரசம் - அவர்கள் எகிப்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு தேவன் அவர்களுக்கு அளித்த நான்கு வாக்குத்தத்தங்களை அவர்களுக்கு நினைவூட்டியது. (யாத்திராகமம் 6:6-7 ~ மீட்பு | விடுதலை | நோக்கம் | மகிழ்ச்சி).

  • முழு விருந்தும், இயேசு மற்றும் அவரது சீடர்களுக்கு இடையே ஒரு புதிய உடன்படிக்கையாக நடந்தது - மத்தேயு 26:19-29

பழைய பாரம்பரிய பஸ்கா --->> புதிய உடன்படிக்கை - அப்பம் | சரீரம்


அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். மத்தேயு 26:26

  • இயேசு நமக்காக சிலுவையில் தம்மையேக் கொடுத்தபோது ஆட்டுக்குட்டியை பலியாகக் கொடுக்கும் பழைய பாரம்பரியம் இல்லாமல் போய்விட்டது.

  • இயேசு பஸ்கா விருந்தின் போது புளிப்பில்லாத அப்பத்தை பயன்படுத்தினார். வழக்கப்படி அதை ஆசிர்வதித்துப் பிட்டார். ஆனால், இயேசு, "நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது" என்று சொல்லி புதிதாக ஒன்றை அறிமுகப்படுத்தினார். பஸ்காவில், புளிப்பில்லாத அப்பம் யூதர்களுக்கு எகிப்திலிருந்து விடுதலையானதை நினைவூட்டியது. இப்போது, இந்த அப்பம் அவருடைய சரீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் அவர் மூலமாக உண்மையான விடுதலை வரும் என்பதைக் குறிக்கிறது என்றும் இயேசு கூறுகிறார்.

  • நாம் அப்பத்தைச் சாப்பிடும்போது, அவர் நம்மை விடுவிப்பவர் என்றும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக அவரை விசுவாசிக்கிறோம் என்றும் சொல்கிறோம். நாம் நமது ஆவிக்குரிய வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும். அப்பத்தை உண்பதன் மூலம் நாம் சிலுவையில் நடந்தவற்றில் பங்கு கொள்கிறோம் அல்லது அதனால் பயனடைகிறோம் என்று கூறுகிறோம். நாம் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொண்டு தேவனோடு மீண்டும் ஐக்கியமாகிறோம்.

  • தேவன் நம்மை விடுதலையாக்கியதை நினைவு கூறும் வகையில் இதைச் செய்கிறோம், சிலுவையில் அவருடைய செயல்களால் நாம் இந்தப் பாவங்களிலிருந்து விடுபடுகிறோம். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5: 7-8

ஆட்டுக்குட்டியின் இரத்தம் --->> உடன்படிக்கையின் இரத்தம்


பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடுகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். மத்தேயு 26:27-29

  • திராட்சை ரசம் மற்றும் ஆட்டுக்குட்டியின் இரத்தம் போன்ற பழைய பாரம்பரியம் யாவும் அவர், “நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்என்று கூறியபோது இல்லாமல் போய்விட்டது. இது யூதர்களுக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்கும் உரித்தானது.

  • முதற்பேறான பிள்ளைகள் காப்பாற்றப்படுவதற்காக வீட்டு வாசலில் இரத்தம் தெளிக்கப்பட்ட பழைய பாரம்பரியம் இயேசுவின் இரத்தத்துடனான புதிய உடன்படிக்கையில் இல்லாமல் போய்விட்டது.

  • ஒரு உடன்படிக்கை என்பது இரு தரப்பினருக்கு இடையேயான சிறப்பு ஒப்பந்தம் போன்றது. புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறதுஎன்று இயேசு கூறும்போது, அவர் ஒரு புதிய உடன்படிக்கையைப் பற்றி பேசுகிறார். இந்த நேரத்தில், அது அவருடைய சொந்த இரத்தத்தை (“என்னுடைய இரத்தமாயிருக்கிறது”) உள்ளடக்கியது, மிருகங்களின் இரத்தம் அல்ல.

  • சிலுவையில் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சிந்தப்பட்டது; ஏனெனில், "ஊற்றப்பட்டது.அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே". எபிரெயர் 10:4

  • இயேசுவின் இரத்தம் நமக்கு உதவுகிறது - நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரெயர் 9:14,28

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்


  • அப்பம் மற்றும் திராட்சை ரசம் இயேசுவில் விசுவாசம் உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது, அதனால்தான் சபைகளில் அவர்கள் விசுவாசிகள் அல்லாதவர்களுக்கு திருவிருந்து ("அப்பம் மற்றும் திராட்சை ரசம்") வழங்குவதில்லை.

  • ஒவ்வொரு முறையும் கர்த்தருடைய பஸ்கா விருந்தில் பங்குகொள்ளும்போது, நாம் இதைச் செய்ய வேண்டும்

    • பயபக்தி - REVERENCE

    • தேவபயம் - FEAR

    • இயேசு சிலுவையில் செய்த தியாகத்திற்கான ஆழ்ந்த நன்றி உணர்வு – GRATITUDE

  • தெரிந்தே பாவம் செய்து கொண்டு ஆண்டவரிடம் என்னைக் கழுவுங்கள் என்று கேட்டு, திருவிருந்து ஆராதனையில் கலந்து கொள்ளாதீர்கள். நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம் பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? 1 கொரிந்தியர் 10:21-22

תגובה אחת

דירוג של 0 מתוך 5 כוכבים
אין עדיין דירוגים

הוספת דירוג
אורח
08 באוק׳ 2023
דירוג של 5 מתוך 5 כוכבים

😀

לייק
bottom of page