top of page
Kirupakaran

கிறிஸ்துமஸ் பண்டிகையின் உண்மையான நோக்கம்


கிறிஸ்தவர்கள் பலர் கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பலர் நமக்கு ஒரே ஒரு பண்டிகை மட்டுமே உள்ளது, எனவே நாம் அதை நன்றாகக் கொண்டாட வேண்டும் என்று கூறுவர். டிசம்பர் மாதம் முழுவதும் கரோல் பாடலுக்குச் செல்வதும் , பல வீடுகளில் இருந்து நாங்கள் உண்ட விருந்தும், இரவு கரோல் பாடும்போது கிடைக்கும் பரிசுப் பொருட்களும் , என் வாழ்வின் மறக்க முடியாத நாட்களாகும். நான் சிறுவனாக இருந்தபோது, இதற்காகவே கிறிஸ்துமஸ் கொண்டாட வேண்டும் என்று ஏங்குவோம்.

ஆனால், நீங்கள் மேற்கத்திய நாடுகளுக்குச் சென்றால் கிறிஸ்துமஸ் சீசன் என்றால் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பரிசுகள் வழங்குவது என்று ஆகிவிட்டது.இவை அனைத்தும் நன்றி கூறுதல், அன்பளிப்பிற்காக குறைந்த விலையில் பொருட்களை வாங்குவதற்காக முண்டி அடித்துக் கொள்வதில் தொடங்குகிறது. டிசம்பர் மாதம் முழுவதும் நீங்கள் சிறந்த சலுகைகளைப் பெறலாம் என்பதால் வாங்குவதற்கான உணர்வோடு தான் அந்த மாதம் பார்க்கப்படுகிறது. "ஹேப்பி கிறிஸ்துமஸ் " என்ற வாழ்த்துகள் போய் இப்போது மக்கள் "ஹேப்பி ஹாலிடேஸ்" என்று வாழ்த்துகிறார்கள்.


கிறிஸ்தவர்கள் அல்லாத பலர்க்கு, கிறிஸ்துமஸ் தொடங்குவது என்பது அலுவலகத்தில் செய்யும் அனைத்து வேலைகளிலிருந்தும் 1 வாரம் விடுமுறையைக் குறிக்கிறது. பல நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குகின்றன. சில அலுவலகங்கள் யாரும் இல்லாதபோது அவர்கள் செய்யக்கூடிய நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யவும், சுத்தப்படுத்தவும், சிறப்பாக செயலற்ற நேரத்தை பயன்படுத்தவும் திட்டமிடுகின்றன. சிலர் இந்த நேரத்தை விடுமுறையில் செல்லவும், உறவினர்களைப் பார்க்கவும் / புத்தாண்டுக்கு முன் நிலுவையில் உள்ள சில வேலைகளைச் செய்யவும் பயன்படுத்துகிறார்கள்.

நம்மில் சிலருக்கு கிறிஸ்துமஸ் என்பது நம் குடும்பத்தைப் பார்க்கச் செல்வது, நண்பர்கள் / குடும்பத்தினரை அழைப்பது, நல்ல உணவு (பிரியாணி மற்றும் அனைத்து நல்ல அசைவ உணவுகள்) எடுத்துக் கொள்வது, தேவாலயத்திற்குச் செல்வது, நாம் வாங்கிய நல்ல கோட், பேன்ட் / சட்டை அல்லது நல்ல ஆடை அணிவது ஆகும். பெண்களுக்கு, அவர்கள் வாங்கிய புடவைகள் மற்றும் லாக்கரில் இருக்கும் நகைகள் அனைத்தையும் அணிந்துகொள்வது, ஏனெனில், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது அவர்களுக்கு தங்கள் லாக்கரில் உள்ள நகைகளின் கலெக்‌ஷன்களை அனைவருக்கும் காட்டுவது ஆகும். இளைஞர்களுக்கு அவர்கள் வாங்கிய டிரெண்டிங் டிரஸ் அணிவது. இது போல் நம் ஒவ்வொருவருக்கும் இன்னும்பல உள்ளன.

கிறிஸ்துமஸின் வரலாற்றை நீங்கள் பார்த்தால் - உண்மையில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்ட முதல் நிகழ்வு கி.பி. 336 ஆம் ஆண்டு ரோமானியப்பேரரசர் கான்ஸ்டன்டைன் காலத்தில் உள்ளது. அவ்வாறு செய்த பெருமைக்குரிய நபர் என்று குறிப்பிட்டு யாரும் இல்லை என்றாலும் ரோமானியர்கள் அதைக் கண்டுபிடித்தனர் என்று கொள்ளலாம்.

நாம் செய்யும் காரியங்கள் எதிலும் தவறு இல்லை, ஆனால் கிறிஸ்துமஸின் உண்மையான நோக்கம் "இயேசு". நாம் வாழும் உலகில் நாம் "இயேசுவிடம்" இருந்து வெகுதூரம் செல்ல முனைகிறோம். கொண்டாடுவதற்கும், கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்திலிருந்து விலகிச் செல்வதற்கு பல காரணங்களைப் பயன்படுத்துவதற்கும் இதை ஒரு காரணம் ஆக்குகிறோம். நமது ஒவ்வொரு தேவைக்கும், சடங்கு / பாரம்பரியம் / வணிகம் மற்றும் முன்னுரிமைக்கும் இந்த நாளைப் பயன்படுத்துகிறோம்.


எனவே, கிறிஸ்துமஸின் உண்மையான நோக்கத்திற்குத் திரும்புவதற்கு நம் ஒவ்வொருவருக்கும் நான் சவால் விடுகிறேன்.


கிறிஸ்துமஸின் உண்மையான மையம் இயேசு என்பதால் அவரிடம் இருந்தே ஆரம்பிக்கலாம்.

21.’அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22.தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23.அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்’. மத்தேயு 1: 21-23


இயேசு மற்றும் "இம்மானுவேல்" என்ற பெயரின் அர்த்தம்

இயேசு – “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்

இயேசு மற்றும் "இம்மானுவேல்" – “தேவன் நம்மோடு இருக்கிறார்

நம்மில் யாராவது கிறிஸ்துமஸில் நம் பாவங்களை போக்க நினைக்கிறோமா என்று தெரியவில்லை, நாம் கொண்டாட்டத்தை மட்டுமே நினைக்கிறோம்.

ஆதாமின் சந்ததி முதல் நாம் செய்து கொண்டு வருகிற பாவங்களின் நிமித்தம் நம் பிதாவாகிய தேவன் மனமுடைந்து அதை முடிவுக்கு கொண்டு வர விரும்பினார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். எனவே அவர் தமது ஒரே குமாரனாகிய இயேசுவை இந்த உலகத்திற்கு வரத் தேர்ந்தெடுத்து தம் மக்களை அவர்களுடைய பாவங்களில் இருந்துக் காப்பாற்றுகிறார். இந்தப் பாதையில் அவர் சில காரியங்களைச் செய்தார்.

தாழ்மையாயிருத்தல்

இயேசுவின் குணாதிசயத்தைப் பற்றி நாம் படிக்கும்போது, அவர் ஆல்பா மற்றும் ஒமேகா, அவரே ஆதியும் அந்தமும் ஆனவர் என்று வாசிக்கிறோம். அதாவது, அவருக்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை, அவர் நித்திய தேவன்.


இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஒமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். வெளிப்படுத்திய விசேஷம் 1:8


இவ்வளவு வல்லமை பெற்ற அவர் ஏன் இவ்வுலகிற்கு வந்தார். ஒரே காரணம்

1 யோவான் 2:2 ல் எழுதப்பட்டுள்ளதை நிறைவேற்றுகிறதற்காகவே.


நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்.

1 யோவான் 2:2


1.என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 2.நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். 1 யோவான் 2:1-2


அவர் சென்ற பாதை குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு "மேய்ப்பர்களின் தொழுவத்தில் " பிறக்கும்படி ஒரு தாழ்வான இடத்தை தேர்ந்தெடுத்தார். அவர் ராஜாக்களின் ராஜா மற்றும் பிரபுக்களின் பிரபு என்பதால் அவர் ஒரு சிறந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கலாம். அவர் எல்லா நட்சத்திர மண்டலங்களுக்கும் ராஜா, எல்லாம் அவருக்கு முன்னால் தலைவணங்கும். ஆனால் அவர் ஒரு கொட்டிலில் பிறக்கும்படித் தன்னைத் தாழ்த்திக் கொள்ளத் தேர்ந்தெடுத்தார், அது அவரைப் பின்பற்றுவதற்கு அவர் காட்டிய பணிவைக் குறிக்கிறது.இரண்டாவதாக, அவர் பிறந்ததைப் பற்றிய நற்செய்தி இரவில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தேவதூதர்கள் அவரது பிறப்பை ராஜாக்களுக்கு அறிவிக்கவில்லை.

இயேசு எப்படி நமக்கு முன்பாக தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டாரோ, அதுபோல நாமும் நம்மைத் தாழ்த்த வேண்டும் என்பதே இந்த கிறிஸ்துமஸில் நமக்கான செய்தி.

ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.1 பேதுரு 5:6

சார்ந்திருத்தல்


இயேசு இந்த உலகத்திற்கு வந்த பிறகு , அவர் பாவமற்ற மற்றும் அவருடைய பிதாவிற்கு பிரியமான வாழ்க்கை வாழ்ந்தார். அவர் 33 1/2 ஆண்டுகள் வாழ்ந்தார் என வேத ஆராய்ச்சியாளர்கள் கூறியதை அறிந்திருக்கிறோம். குற்றமற்ற வாழ்க்கை மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று வழிநடத்துவதற்கு எப்போதும் பிதாவை சார்ந்து இருக்கும் வாழ்க்கை வாழ்ந்தார்.


மத்தேயு / மாற்கு / லூக்கா என்ற சுவிசேஷங்களைப் படிக்கும் போது, அதன் ஒவ்வொரு அதிகாரமும் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதைச் சொல்கிறது. அவருடைய பிதாவாகிய தேவன் அவரைப் போகச் சொன்னால் மட்டுமே அவர் ஒரு ஊருக்குச் செல்வார்.யாரைக் குணப்படுத்த வேண்டும் என்று பிதா கட்டளை இடுகிறாரோ அந்த அடிப்படையிலேயே அவர் முடமானவர்களையும் நோயாளிகளையும் குணப்படுத்தினார்.ஒவ்வொரு நாளும் தேவனிடம் ஜெபம் செய்வதன் மூலம் அவர் தந்தையை சார்ந்து இருந்தார்.


அவரை சார்ந்து இருக்க வேண்டும் என்பதே இந்த கிறிஸ்துமஸில் நமக்கான செய்தி. “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்ற வாக்குத்தத்தம் ஒவ்வொரு நாளும் உண்மையாக இருக்கிறது.நம் வாழ்க்கையின் சவால்களை ஒவ்வொரு நாளும் அவர் மீது வைத்து , அவர் நமக்கு சமாதானமும் இளைப்பாறுதலும் தருவார் என்று அவர் மீது விசுவாசம் வைக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.


வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது” என்றார். மத்தேயு 11:28-30


மனம் திரும்புதல்


நம்முடைய பாவங்களைப் போக்க இயேசு சிலுவையில் மரித்தார். ஆதாமின் சந்ததியில் இருந்து நாம் பெற்றுக் கொண்ட பாவமான நடத்தைகளில் நாம் வாழ்ந்து , மூழ்கிப் போயிருக்கிறோம், ஆனால், இயேசு கிறிஸ்துவின் கிருபையால் நாம் காப்பாற்றப்பட்டோம் என்று ரோமரில் படிக்கிறோம்.


‘எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்’. ரோமர் 3:23-24


நாம் செய்யும் பாவங்களுக்காக நாம் தண்டிக்கப்பட வேண்டும் என்றால், மனித இனம் மொத்தமும் நரகத்திற்குச் செல்ல வேண்டும். ஆனால் இயேசுவின் கிருபை நமக்கு உள்ளது. "கிறிஸ்து இயேசுவால் வந்த மீட்பின் மூலம்" நாம் மீண்டும் அவரிடம் திரும்பி வர அதிக அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


கிருபை என்றால் என்ன? அவர் தம்முடைய இரக்கத்தினால் நம்முடைய பாவங்களுக்காக நம்மைத் தண்டிக்காமல் இரக்கமுள்ளவராக இருந்தாலும்/ அவர் கோபப்படுவதில் தாமதமாக இருப்பதால் நாம் தொடர்ந்து பாவம் செய்கிறோம் என்று அர்த்தமா? அல்லது நான் மனந்திரும்பி ,அதே பாவத்தை மீண்டும் மீண்டும் செய்கிறேன் என்று அர்த்தமா? இயேசு இதற்காக நமக்கு கிருபை அளிக்கவில்லை.

நாம் மனந்திரும்பி அவரிடம் வரவும், அவருடைய இரத்தத்தால் நாம் கழுவப்பட்டு, நாளுக்கு நாள் தூய்மையாகி, அவருக்குப் பிரியமான வாழ்க்கையை வாழவும் கிருபை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.நியாயத்தீர்ப்பு நாளில் அவர் நம்மை அழைத்துச் சென்று நமக்கு நித்திய ஜீவனைக் கொடுப்பார்.

எனவே இந்த கிறிஸ்துமஸ் சமயத்தில் உங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புங்கள். இரகசிய வாழ்க்கையில் காணப்படும் பாவங்கள் மற்றும் நீங்கள் செய்த எல்லா பயங்கரமான பாவங்களுக்காகவும் . பாவமன்னிப்பு கேளுங்கள். இயேசுவிடம் நாம் உண்மையாக மனந்திரும்பாவிட்டால், நம்முடைய பாவங்களால் நாம் அழிந்து போவோம்.


‘அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்’. லூக்கா 13:3


ஆனால் நாம் தொடர்ந்து பாவ வாழ்க்கை வாழ்ந்தால், இயேசு கிறிஸ்துவின் பிறப்பும், அவர் சிலுவையில் மரித்ததும் நமக்கு அர்த்தமற்றதாகிவிடும். இயேசு இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் வீணாகிவிடும். இயேசு என்ற பெயரின் அர்த்தம் என்ன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இயேசு – “அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்

எனவே இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையில் இயேசு கிறிஸ்துவிடம் உங்களைத் தாழ்த்தி அவரை சார்ந்து அவரிடம் மனந்திரும்பி அவரை மையப்படுத்துங்கள்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page