அனைத்து மதங்களும் பிரார்த்தனைகளைக் கொண்டிருக்கின்றன. அவை பல வடிவங்களில் உள்ளன. சில ஜெபங்களுக்கு பதில் அளிக்கப்படுகிறது, சில ஜெபங்கள் நிறைவேறாமல் போய்விடுகின்றன. இயேசு தம்முடைய ஊழியத்தில் அடிக்கடி ஜெபம் செய்தார். அவர் ஒரு மெய்யான தேவனாக இருந்தும் ஏன் அடிக்கடி ஜெபம் செய்தார் ? அவர் தமது பிதாவின் சித்தத்தைப் புரிந்து கொள்ள / அதன் படி நடக்க ஜெபித்து வந்தார் . ஒரு முறை கெத்செமனே தோட்டத்தில் ஜெபிக்கும்போது அவர் வியர்வை இரத்தமாக மாறியது என்று நாம் வேதத்திலே படிக்கிறோம் . எவ்வளவு வேலை செய்தாலும் ஜெபத்தை மட்டும் அவர் விடாமல் கடைபிடித்து வந்தார்.
நம்முடைய இயேசுவே இவ்வளவு ஜெபித்தார் என்றால் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எவ்வளவு ஜெபிக்க வேண்டும்.
நீங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்?
நாம் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று நம் தேவன் சொல்வதாவது - 'நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது அந்தரங்கத்தில்பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 'மத்தேயு 6:6-7
ஒரு அறைக்குச் சென்று கதவை மூடி "அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு" , உங்களுக்குக்கென்றுஒரு தனி அறை இல்லை என்றால், ஒரு அமைதியான, தனிமையான இடத்தில் சென்று ஜெபம் செய்யுங்கள்.
இவ்வாறு செய்வது , எந்தவொரு தடையோ / கவனச் சிதறலோ இல்லாமல் நீங்கள் தேவனோடு ஒருமனப்பட்டு ஜெபிப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கும்.
உங்கள் ஜெபங்கள் உங்களுக்கும் / தேவனுக்கும் இடையில் மட்டும் தான் இருக்க வேண்டும். மற்றவர் பார்வைக்காக நாம் ஜெபிக்க வேண்டாம்.
நீங்கள் எதற்காக ஜெபிக்க வேண்டும்?
கிறிஸ்தவர்களாகிய நாம் வேதத்தை தினந்தோறும் வாசிக்கிறோம். பல பிரசங்கம் / போதனை செய்திகளைக் கேட்கிறோம். நாம் படிக்கும் வேத வார்த்தைகள் நம் அறிவை வலுப்படுத்தும். அதோடு மட்டுமல்லாமல் , நாம் ஜெபிக்கும் போது இந்த தேவ வார்த்தை நமக்கு ஆவிக்குரிய ஞானமாக மாறும்.
ஜெபம் நாம் தேவனுடன் பேசுவதற்கான நுழைவாயில். அதன் மூலம், நம் வாழ்வைக் குறித்து தேவனுடைய சித்தத்தை அறிந்து கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு நாளும் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை நமக்கு வழிகாட்டும் ஒரு வழிகாட்டியாக அது இருக்கும்.
'கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். ' மத்தேயு 7:7,24
நீங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும்?
நம்முடைய பரம தகப்பன் கற்றுக் கொடுத்த ஜெபம்:
'அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். நீங்கள் ஜெபம்பண்ணவேண்டியவிதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக. எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். 'மத்தேயு 6:7-15
புறஜாதியார் போல பலவற்றைக் கூறி ஜெபம் செய்யாதிருங்கள்.
பல வார்த்தைகளால் ஜெபம் செய்யாதீர்கள். உங்கள் ஜெபங்களில் அப்பா என்று அழைத்து ஜெபம் செய்யுங்கள். இது உங்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவில் நெருக்கத்தை உருவாக்குகிறது. அப்பா என்று அழைக்கும் போது அவர் மனம் இரங்கி நம்முடைய ஜெபங்களைக் கேட்டு பதில் கொடுப்பார்.
உங்களுடைய ஜெபங்கள் நன்றிகள் நிறைந்த ஜெபமாக இருக்கட்டும்.
தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கும் போது நீங்கள் புரிந்து கொண்ட காரியங்களை அவரோடு சொல்லுங்கள். அப்பொழுது அவர் தம்முடைய ஞானத்தை உங்களுக்குத் தந்து ஆவியின் பல காரியங்களை மென்மேலும் புரிய செய்வார்.
மத்தேயு 6: 9-15 இல் சொல்லப்பட்டிருக்கிற தேவனுடைய ஜெபம் நம்முடைய அன்றாட ஜெபத்திற்கான வரைபடத்தைத்தருகிறது. அவர் என்ன செய்யச் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு அதன்படி ஜெபிக்க வேண்டும்.
எனவே நீங்கள் எப்போது ஜெபிக்க வேண்டும்?
நீங்கள் எப்போது ஜெபிக்க வேண்டும், உங்கள் ஜெபங்களை கிரியை மிகுந்த ஜெபங்களாக எப்படி மாற்றுவது என்று யாக்கோபுபின் புத்தகம் நமக்குக் கற்பிக்கிறது.
1. நீங்கள் சிக்கலில் இருக்கும் போது ஜெபியுங்கள்
இது நம்மில் பலருக்கு ஆச்சரியம் தரும் வழிகாட்டல் அல்ல, நம்மில் பலர் நமக்கு சிரமம் ஏற்பட்டால் மட்டுமே தேவனை அணுகுவோம்.
'சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. ' யாக்கோபு 5:9-11
கிறிஸ்தவ வாழ்க்கை கஷ்டங்களால் நிறைந்தது என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆனால் அதற்காக, தேவன் உங்களைக் கைவிட்டு உங்களைக் கஷ்டப்படுத்துவார் என்று அர்த்தமல்ல. நீங்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான காரணம், தேவனோடு உள்ள உறவை மென்மேலும் பலப்படுத்தவும், நம்முடைய விசுவாசத்தை அதிகரிக்கவும் மேலும், நாம் அவரை சார்ந்து வாழ்வதற்காகவும் ஆகும். அதன் மூலமாய் நம்முடைய வாழ்வில் பல நல்வழிகளை அவர் காண்பிப்பார், பல நேரம் அவை நாம் எதிர்பாராத வழிகளாய் இருக்கும்.
"கடவுளே எனக்கு மட்டும் ஏன் இந்த தொல்லைகள் வருகின்றன .." என்று பல முறை முணுமுணுக்கிறோம் / புலம்புகிறோம், ஆனால் தேவனுடைய வார்த்தை கூறுகிறது “'சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். '
நாம் பாடுகளால் சூழப்படும் போது, அதனை எதிர் கொள்ள நமக்கு பொறுமையையும் / சகிப்புத்தன்மையையும் தருவார். யோபு பல பாடுகளை அனுபவித்தார். அந்தப் பாடுகள் மத்தியில் தேவன் அவருக்கு சகிப்புத்தன்மை தந்து அதைக் கடந்து வரச் செய்தார். அதன் மூலம் யோபு பல மடங்கு ஆசீர்வாதங்களைப் பெற்றார். வேதம் கூறுகிறது, ‘யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.'
2. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது ஜெபியுங்கள்
இது நம்மில் பலருக்கு ஆச்சரியமாக இருக்கும். நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது கடவுளிடம் ஜெபிப்பதில்லை. அநேக நேரங்களில், நம்முடைய மனதில் உள்ள சந்தோஷத்தை வெளிப்படுத்தும் போது நம்மை விட தேவன் மிகுந்த சந்தோஷப்படுவார். சற்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் சந்தோஷமாய் இருக்கும் போது, அதை உங்கள் பெற்றோரிடம் கூறினால் அவர்களும் உங்களை விட அதிகம் சந்தோஷப்படுவார்கள். அதைப் போல தான் நம்முடைய தேவனும் மிகுந்த சந்தோஷம் அடைவார்.
'உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். ' யாக்கோபு 5:13
“ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன்.” தாவீதின் வாழ்க்கையைப் பார்த்தால், அவர் நம் வாழ்க்கையில் நாம் பின்பற்றக்கூடிய சிறந்த எடுத்துக்காட்டு. சங்கீதப் புத்தகம் அவர் தேவனைப் புகழ்ந்ததன் அடிப்படையில் எழுதப்பட்டு இருக்கிறது.
தேவனிடம் ஆசீர்வாதங்களைப் பெற்றவுடன் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அந்த சமயங்களில் தேவனிடத்தில் சரணடைந்து அவருடைய ஆசீர்வாதங்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள். உங்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதம் உங்கள் பலத்தால் அல்ல, அவருடைய கிருபையினாலேயே என்று அவரிடம் சொல்லுங்கள். இது அவருடைய இரக்கத்தைப் பெற்று நமக்கு மேலும் கிருபையைக் கொண்டுவரும் .
நீங்கள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ பார்க்கும் ஒவ்வொரு ஆசிர்வாதங்களுக்காகவும் அவருக்கு நன்றி சொல்லுங்கள். பல நேரங்களில் நாம், நமக்கு வாழ்க்கையில் கிடைக்கும் காரியங்கள் தானாக நடக்கிறது என்று எடுத்துக் கொள்கிறோம். உங்களிடம் உள்ள சுவாசம் கடவுளின் ஆசீர்வாதம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கடவுள் தனது இரக்கத்தால் இந்த உலகில் இன்னும் ஒரு நாள் கூடுதலாக உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். தேவன் உங்களை ஆசீர்வதித்த பல விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் இருக்கலாம். உங்கள் ஆசீர்வாதங்களை மனத்தாழ்மையுடன் எண்ணுங்கள்.
நீங்கள் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு ஆசீர்வாதங்களையும் ஒரு டைரியில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். மாதத்தின் கடைசி நாளில் அதை வைத்து ஜெயும் செய்யுங்கள். நீங்கள் வியந்து போகும் அளவுக்கு இந்த லிஸ்ட் ஒரு பெரிய லிஸ்ட் ஆக இருக்கும். தேவன் இந்த ஜெபங்களை மிகுந்த கனத்துடன் அங்கீகரிப்பார்.
3. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது ஜெபியுங்கள்
நம்மில் பலர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது கடவுளிடம் ஜெபிப்போம். எனவே, இது ஆச்சரியமல்ல. நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது நம் போதகர்கள் மற்றும் மூப்பர்கள் / குடும்பத்தினர் / உறவினர்களுடன் ஜெபிக்கிறோம்.
'உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். 'யாக்கோபு 5:14-15
யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் ஆலயத்தின் மூப்பர்களை அழைத்து ஜெபிக்க வேண்டும். எண்ணெயால் அபிஷேகம் செய்து ஜெபிக்க வேண்டும் என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. எண்ணெயால் அபிஷேகம் செய்வது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த மருத்துவ உதவியை நாடுவதாக விளக்கப்படுகிறது (எண்ணெய் கொண்டு செய்யும் காரியம் அந்த நாட்களில் மருத்துவமாக கருதப்பட்டது).
நோய்வாய்ப்பட்ட ஒருவருக்காக நீங்கள் ஜெபிக்கிறீர்கள் என்றால், தேவன் நோயைக் குணமாக்குவார் என்ற நம்பிக்கையுடன் ஜெபியுங்கள். ஒரு சடங்காக ஜெபிப்பதற்காக ஜெபத்தை செய்யாதீர்கள். அநேக நேரங்களில் நோயுற்றவர்களுக்காக நாம் ஜெபிக்கும்போது பல ஜெபங்களுக்கு பதில் கிடைக்காததற்கு இதுவே காரணம்.
மற்றவர்களுக்காக ஜெபிக்கும் போது, கடவுள் அவர்களை குணமாக்குவார் என்ற விசுவாசத்தோடு ஜெபித்து, பின் இந்த விஷயத்தைக் கடவுளின் கைகளில் விட்டுவிடுங்கள்.
4. உங்கள் பாவங்களை ஒப்புக் கொண்டு ஜெபியுங்கள்
நம்மில் சிலர் இதைப் பின்பற்றுபவர்களாக இருக்கலாம். நம்மில் பலர், நாம் செய்த பாவங்கள் நம் மனதைக் கஷ்டப்படுத்தும் போது மட்டுமே இந்தப் பாவங்களை ஒப்புக்கொண்டு ஜெபிக்கிறோம். தினமும் நம்முடையப் பாவங்களை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று வேதம் சொல்கிறது.
'நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. ' யாக்கோபு 5:16
சில பாவங்கள் பொதுவானவைகளாக, எல்லோரும் அறிந்த விஷயமாக இருக்கலாம். சில பாவங்கள் இரகசிய பாவங்கள். அத்தைகைய பாவங்களைக் குறித்து தேவனிடம் பாவ மன்னிப்பு கேளுங்கள்.
ஒருவருக்கொருவர் பாவங்களை ஒப்புக்கொள்வதும், ஒருவருக்கொருவர் ஜெபிப்பதும் குணமடைய வழிவகுக்கும். ஒப்புதல் வாக்குமூலம், தீர்க்கப்படாத பாவத்தின் பாரமான சுமைகளிலிருந்து (உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும்) நம்மை விடுவித்து, பரிசுத்த ஆவியின் செயலுக்கு தடைகளை நீக்குகிறது.
நாம் பாவம் செய்தவரிடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கடவுளுக்கு முன்பாக இரகசியமாக மன்னிப்பு கேட்க விரும்புகிறார்கள். இது தவறு என்று கூறவில்லை. தேவனிடத்தில் மன்னிப்பு கேட்டவுடன் நாம் பாவம் செய்தவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் .
நம் மன்னிப்பு சரியான முறையில் குறிப்பிட்டதாக இருக்க வேண்டும். பொதுவானதாக இருக்கக் கூடாது. ஒரு நபர் குறித்து குறிப்பிட்டு இருந்தால் அவரிடமும் மன்னிப்பு கேட்கவேண்டும்.
மன்னிப்பு நேர்மையாக / உண்மையாக இருக்க வேண்டும். இதை நாம் லேசாக எடுத்துக் கொண்டால், நாம் கடவுளைக் கேலி செய்வது போலாகும்.
5. உணர்ச்சியுடன் ஜெபியுங்கள்
நம்முடைய ஜெபங்கள் உணர்ச்சி நிறைந்து காணப்பட வேண்டும். உணர்ச்சியற்ற ஜெபம் கிரியை இல்லாத செத்த ஜெபத்திற்கு ஒப்பானது. நம்முடைய ஜெபம் கிரியை மிகுந்த ஜெபமாக இருக்கவேண்டும் என்றால் உணர்ச்சி நிறைந்த ஜெபமாக இருக்கவேண்டும். நம்முடைய உணர்ச்சிகள் கண்ணீர் விடுவது , பாடல் படுவது , சத்தமாக பேசுவது, நடனம் ஆடுவது. இதை வெளிக்காட்டி ஜெபிக்கவும், இவரு செய்யும் போது பல நேரம் நம் ஜெபங்கள் தேவனின் பார்வையை கண்டுகொள்ள முடியும்.
6. ஆர்வத்துடன் ஜெபியுங்கள்
தேவன் அதைச் செய்வார் என்று நேர்மையுடனும் / தீவிரத்துடனும்/ நம்பிக்கையுடனும் ஜெபியுங்கள்.
'எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. ' யாக்கோபு 5:17-18
எலியாவின் ஜெபம் சக்திவாய்ந்ததாக இருந்தது. 3 வருடங்கள் 6 மாதங்களுக்கு மழை பெய்யவில்லை, ஆனால் எலியா ஜெபித்த போது மீண்டும் மழை பெய்தது. நம்மால் சாத்தியமில்லாத விஷயங்களை தேவனால் செய்ய முடியும் என்று 1 ராஜாக்கள் 18 இல் படிக்கிறோம். யாராவது மழையை நிறுத்தி மழை பெய்யச் செய்ய முடியுமா? ஆனால் எலியா தனது உற்சாகமான ஜெபங்களைக் கொண்டு இதைச் செய்து முடித்தார்.
7. தேவ விருப்பத்தைப் புரிந்து கொள்ள ஜெபியுங்கள்
பல முறை நாம் நம்முடைய சொந்த ஆசைகளுடன் சுற்றித் திரிகிறோம். தேவன் நமக்கு அந்த ஆசீர்வாதம் தருவார் என்று நினைக்கிறோம். பல நேரங்களில், நமது சுய விருப்பும் / தேவனின் சித்தமும் எதிர் மறையாக இருக்கும். நாம் தேவனோடு நடக்கும் போது தான் ஏன் தேவ சித்தம் நம் வாழ்விற்கு உகந்தது என்று நமக்குப் புரியும். இல்லை என்றால், நாம் கூறும் பதில் "நான் ஜெபம் பண்ணினேன் பிரதர், ஆனால் ஆண்டவர் ஒன்றும் செய்ய மாட்டேங்கிறார்", என்பதாய் இருக்கும்.
'நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். ' 1 யோவான் 5:14-15
தேவனுடைய வார்த்தை கூறுவதாவது , அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப எதையாவது கேட்டால் அவர் நாம் கேட்டதை வழங்குவார். அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்
உங்கள் ஜெபங்கள் கிரியை மிகுந்த ஜெபங்களாக இருக்க வேண்டுமென்றால், உங்கள் ஜெபத்தைத் திறம்பட செய்ய, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை மேம்படுத்த மேலே கூறிய இந்த 7 விஷயங்களையும் பின்பற்றவும்.
Comments