“விசுவாசம்” என்ற வார்த்தையை நம்பிக்கை என்றும் அழைக்கலாம் . ஆங்கிலத்தில் விசுவாசத்தின் வரையறை - “ஒருவரது நம்பிக்கை ஏதேனும் ஒரு பொருள் மீதோ அல்லது ஒருவர் மீதோ இருப்பது தான் விசுவாசம்“
அதேபோல், விசுவாசத்திற்கு வேதத்தில் வரையறை உள்ளது.
'விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. ' எபிரெயர் 11:1
உலக வரையறையும் வேதத்தின் வரையறையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் நேர்மாறானவை. விசுவாசம் எவ்வாறு கிரியை உள்ள விசுவாசமாக மாறியது, அதை நம் வாழ்க்கையில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது போன்று விசுவாசத்தைக் குறித்து நம்முடைய முன்னோர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள அநேகம் உள்ளன. இந்தப் பதிவில் ,கடவுளின் பிள்ளைகளாகிய நாம், வாழ்வில் விசுவாசத்தை எவ்வாறு அணுக வேண்டும், விசுவாசத்தை எவ்வாறு கையாள்வது, எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி ஆபிரகாமின் வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களின் மூலம் கற்றுக் கொள்வோம்.
விசுவாசத்தின் வரையறை - எபிரெயர் 11:1 இல் கூறப்பட்டது போல இதில் மூன்று பாகங்கள் உள்ளன .
"நம்பப்படுகிறவைகளின்" ~ நம்பிக்கை - முதலாவது கிறிஸ்து இயேசுவின் மீதான நம்பிக்கை.
"உறுதியும்" - கிறிஸ்து இயேசுவின் மீதான உறுதி, நம் சூழ்நிலைகள் எவ்வாறு சென்றாலும் கிறிஸ்து இயேசுவில் அசைக்க முடியாத உறுதி.
"காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" - நம் பார்வையில் இல்லாத ஒன்றைக் குறித்து நிச்சயமாக நம்புவது.
விசுவாசத்தின் உலக வரையறைக்கு ஒரு பகுதி மட்டுமே உள்ளது -அது யாரையாவது நம்புவது. கடவுளின் விசுவாசத்திற்கு மூன்று பகுதிகள் உள்ளன.
ஆபிரகாம் தனது வாழ்க்கையில் விசுவாசத்தை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதையும், நம் வாழ்க்கையில் விசுவாசத்தை செயல்படுத்துவதற்கு நாம் என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் பற்றி இந்த இரு சம்பவங்களின் மூலம் பார்க்கலாம்.
ஆபிரகாம் விசுவாசக் கதையில் ஈசாக்கின் பிறப்பின் கதை மற்றும் ஆபிரகாம் சோதனையைஎவ்வாறு எதிர்கொண்டார், அதன் பின் எவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்டார் என்ற இந்த இரண்டு பகுதிகளையும் குறித்து பார்ப்போம்.
ஈசாக்கின் பிறப்பின் கதை
`
குறிப்பு - இந்தப் பதிவிற்குத் தேவையான அனைத்து வேத வசனங்களையும் சுருக்கமாக விளக்க, கீழே தொகுத்துள்ளேன். நீங்கள் விரிவாகப் படிக்க விரும்பினால், ஆதியாகமம் 17-22 வரை படிக்கவும்.
தேவன் ஆபிரகாமுக்குத் தோன்றிக் கொடுத்த வாக்குறுதி - 'பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவிசாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். நான் அவளைஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலேஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்துநகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்றுதன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, ' ஆதியாகமம் 17:15-17
தேவன் சாராளுக்குத் தோன்றிக் கொடுத்த வாக்குறுதி – 'ஆபிரகாமும் சாராளும் வயது சென்றுமுதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. ஆகையால், சாராள் தன்உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம்உண்டாயிருக்குமோ என்றாள். அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப்பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில்உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் பயந்து, நான்நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். ' ஆதியாகமம் 18:11-15
ஈசாக்கின் பிறப்பு - ' கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியேசாராளுக்குச் செய்தருளினார். ஆபிரகாம்முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்தகாலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். அப்பொழுது ஆபிரகாம்தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்குஈசாக்கு என்று பேரிட்டான். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம்தனக்குத் தேவன்கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான், தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோதுஆபிரகாம்நூறுவயதாயிருந்தான். அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக்கேட்கிறயாவரும் என்னோடகூட நகைப்பார்கள். சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன்சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள். 'ஆதியாகமம் 21:1-7
இந்த ஈசாக்கின் பிறப்பின் கதையில் - நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள்
தேவனின் வாக்குறுதி
ஆபிரகாமுக்கு 100 வயது மற்றும் சாராவிற்கு 90 வயது. இவ்வளவு வயதில் ஒரு குழந்தையைப் பெறுவது சாத்தியமில்லை.
தேவன் இருவரிடமும் தனிப்பட்ட முறையில் தம்முடைய வாக்குறுதியைத் தருகிறார். அவர்கள் இருவரும் வயது முதிந்தவர்கள் என்று அறிந்தும் இந்த வாக்குறுதியைத் தருகிறார்.
முதலில் அவிசுவாசம்
முதலாவது இருவரும் தேவன் கூறிய காரியத்தைக் கண்டு அவிசுவாசத்தில் சிரித்தனர்.
ஆபிரகாம் சிரித்ததைக் குறித்து வேதம் கூறுவதாவது – “அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்துநகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளைபெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு,”
சாராள் சிரித்ததைக் குறித்து வேதம் கூறுவதாவது - “ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து:”
அவர்களின் மனித உணர்வுகள் அவர்கள் முன் பார்த்தவற்றின் அடிப்படையில் அவர்களை அவிசுவாசத்தில் சிரிக்க வைத்தன.
தேவனின் மீதான விசுவாசம்
அவர்கள் தங்கள் “நம்பிக்கையை” தேவனின் மீது வைத்தபோது, அந்த அவிசுவாசம் அவர்களை விட்டுப்பிரிந்து தேவனுக்குள் உறுதியுள்ள விசுவாசம் வந்தது.
இதை நாம் எபிரெயர் 11:1 ஆம் வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்
தேவன் மீதான நம்பிக்கை - அவர்கள் இருவரும் வயது முதிர்ந்த நிலையில் இருந்தும், தங்கள்சுயத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் தேவனை நம்பினார்கள்.
உறுதி - தேவன் மீது நம்பிக்கை வைத்தவுடன், தேவன் ஈசாக்கை அவர்களுக்குப் பிள்ளையாகக்கொடுத்தார்.
ஆனால் "காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது" அவர்களுக்கு தேவன் தந்த சோதனையின் பின்பு வழங்கப்பட்டது.
ஆபிரகாமின் சோதனை மற்றும் அவரது ஆசீர்வாதம்
(காரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள ஆதியாகமம் 22 படியுங்கள்). இந்த அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவற்றை நான் தேர்ந்தெடுத்துக் கீழே தொகுத்துள்ளேன்.
கடவுள் ஆபிரகாமுக்குக் கட்டளையிடும் வேத வாக்கியம் : - 'அப்பொழுது அவர்: உன் புத்திரனும், உன் ஏகசுதனும், உன்நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக்குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். தேவன் அவனுக்குச் சொல்லியிருந்தஇடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம்ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகியஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். பின்பு ஆபிரகாம்தன் குமாரனைவெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல்உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல்எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். '
தேவனின் வாக்குறுதி - 'கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: நீ உன்புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; நான்உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரைமணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச்சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகலஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 'ஆதியாகமம்22:15-18
தேவனின் வாக்குறுதி நிறைவேறியது - 'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு: ஆபிரகாம்ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும்பெற்றான்; 'மத்தேயு 1:1-2
ஆபிரகாமின் சோதனை மற்றும் அதன் சூழலில் இருந்து, விசுவாசம் குறித்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பாடங்கள்
தேவனுக்குக் கீழ்ப்படிதல் - ஆபிரகாமிற்கு 100 வயதான பிறகு தான் ஈசாக்கு பிறந்தான். அதற்கு முன் அவர் எவ்வளவு நிந்தைகளையும், அவமானங்களையும் சந்தித்து இருப்பார். ஆனால் தேவன் கேட்ட உடன் , அதற்குக் கீழ்ப்படிந்தார் . 100 வருடங்களுக்குப் பிறகு தனக்குக் கிடைத்த ஒரே மகனைத் தியாகம் செய்யும்படி மனப்பூர்வமாய் கீழ்ப்படிந்தார். சற்று உங்களை அந்த சூழ்நிலையில் நிறுத்தி ஆராய்ந்து பாருங்கள். நான் கண்டிப்பாக இதற்குக் கீழ்ப்படிந்து இருக்க மாட்டேன்.
தேவன் மீதான அன்பு – ஆபிரகாம் தேவனை மிகவும் நேசித்தார். தன்னுடைய பிள்ளையை (ஈசாக்கு) விட அதிகமாகநேசித்தார் “பின்பு ஆபிரகாம்தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான்”
தேவனின் ஆசீர்வாதம்
தேவன் அவரிடமிருந்து இரண்டு விஷயங்களை எதிர்பார்த்தார், “கீழ்ப்படிதல் மற்றும் அன்பு”, இந்த இரண்டையும்ஆபிரகாம் உடனடியாகக் காட்டினார். “அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே,”
விசுவாசத்தை நாம் செயலில் காண்கிறோம் – வேதம் கூறுகிறது கிரியை இல்லாத விசுவாசம் செத்ததுக்கு ஒப்பானது, 'அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். 'யாக்கோபு 2:17
தேவனின் ஆசீர்வாதம் - நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்துநட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன்சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், நீ என்சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். ஆபிரகாம் செய்த செயலுக்குதேவன் தன்னை உறுதிப்படுத்துகிறார் “- நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து”
அவருடைய ஆசீர்வாதம் "உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும்", வானத்தின் நட்சத்திரங்களை நம்மால் எண்ணவே முடியாது, அந்த அளவிற்கு முதல் விதமான ஆசீர்வாதம்.
இரண்டாவது முறை தேவன் கொடுக்கும் ஆசீர்வாதம் "கடற்கரை மணலைப்போலவும் பெருகவேபெருகப்பண்ணுவேன்", நம்மில் யாராவது கடற்கரை மணலை எண்ண முடியுமா ? அந்த அளவிற்கு ஆசீர்வாதம் தேவனின் வார்த்தைக்கு கீழ்ப்படிவோர்க்கு கொடுக்கிறார்.
தேவனின் ஆசீர்வாதத்தை மத்தேயு 1:1-2 இல் காணலாம், "'ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: " எவ்வளவு உண்மை உள்ள தேவன் அவர்.
இதை நாம் எபிரெயர் 11:1 ஆம் வசனத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால்
தேவன் மீதான நம்பிக்கை - அவர்கள் இருவரும் வயது முதிர்ந்த நிலையில் இருந்தும், தங்கள் சுயத்தை நம்பாமல் தேவனை நம்பினார்கள்.
உறுதி - தேவன் மீது நம்பிக்கை வைத்தவுடன், தேவன் ஈசாக்கை அவர்களுக்குப் பிள்ளையாகக் கொடுத்தார்.
காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது- அவருடைய கீழ்ப்படிதலுக்கு தேவன் கொடுத்த ஆசீர்வாதம் பற்றி மத்தேயு 1:1-2 இல் படிக்கிறோம்.
விசுவாசத்தை "கிரியை உள்ள விசுவாசம்" ஆக மாற்ற நாம் செய்ய வேண்டிய காரியங்கள்
'விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர்உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். ' எபிரெயர் 11:6
நம்மில் பலர் ஆபிரகாம் / சாராவைப் போல, நமக்கு தேவையானதைப் பெற 100% வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஒரு முட்டுச்சந்தை நோக்கி ஓடும் சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளக்கூடும்.
“'விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்”” எனவே உங்கள் தற்போதைய நிலைமை என்னவாக இருந்தாலும், தேவன் மீது விசுவாசம் கொள்ளுங்கள், அவிசுவாசம் உங்களைக் கைப்பற்ற அனுமதிக்காதீர்கள்.
பல முறை நாம் தேவனிடத்தில் ஆண்டவரே நான் உம்மை நம்புகிறேன் அப்பா என்று சொல்லுவோம். ஆனால் சாத்தான் நமக்கு பல சோதனைகளைத் தொடர்ந்து கொண்டுவந்து சவால் விடுவான். நம் விசுவாசத்திற்கு பல சந்தேகங்களைக் கொடுத்து, நமக்குள் அவிசுவாசத்தை ஏற்படுத்துவான் . பல நேரம் உலகத்தின் பார்வையில் நாம் ஒரு முட்டாள் போன்று தோன்றுவோம், ஆனாலும் தேவன் மீது உறுதியாக இருங்கள். உங்கள் விசுவாசம் கற்பாறை மீது கட்டிய விசுவாசமாக இருக்கவேண்டும்.
“அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்” அவரிடத்தில் ஜெபம் செய்யுங்கள். அவர் சொல்வது போல நடந்து அவருக்குக் கீழ்ப்படியுங்கள்.
நீங்கள் ஜெபிக்கும் போது
ஆண்டவரிடம் உங்கள் உணர்வுகளை சொல்லுங்கள் .
உங்களின் அவிசுவாசம் உண்டாகும் சூழ்நிலை / காரியங்களை அவரிடம் கூறுங்கள்.
எப்படி நடப்பது என்று வழி காட்டும் படி அவரிடம் கேளுங்கள்.
அவர் சொல்வதற்குக் கீழ்ப்படியுங்கள். எப்பொழுதும் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுங்கள்.
பயமும் / விசுவாசமும் ஒன்றுக்கொன்று எதிர்மாறாக இருக்கின்றன. பயம் இருந்தால் விசுவாசம் இருக்காது. ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கவும், சூழ்நிலையைக் குறித்த பயத்தை எடுத்துப் போடவும் ஆண்டவரிடம் கேளுங்கள். பைபிளில் 365 முறை "பயப்படாதே" என்று கடவுள் சொல்வதை நினைவில் வையுங்கள்.
விசுவாசத்தில் மூன்று நிலைகள் உள்ளன என்பதை நினைவில் கொள்வோம்.
"தேவனின் மீதான நம்பிக்கை" (நிலை 1),
"தேவனின் மீதான உறுதி" (நிலை 2) மற்றும்
"தேவனின் மீதான காணப்படாத நிச்சயம் " (நிலை 3).
விசுவாசத்தை கிரியை உள்ள விசுவாசமாக மாற்ற குறைந்தபட்சம் 2 நிலைகளை ("தேவனின் மீதான நம்பிக்கை" மற்றும் "தேவனின் மீதான உறுதி") செயல்படுத்த வேண்டும். கடவுளிடமிருந்து முழு ஆசீர்வாதத்தைப் பெற நாம் மூன்று நிலை கொள்ள வேண்டும்
ஆபிரகாமுக்கு இருந்த அதே தேவன் இன்று நம்மோடு இருக்கிறார். அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் ஒரு வேளை தாமதம் ஏற்படலாம். ஆபிரகாமுக்கு 100 ஆண்டுகள் ஆனது. ஆபிரகாமை சோதித்ததைப் போல நம்மையும் சோதிக்க தேவன் தாமதங்களைப் பயன்படுத்துகிறார் . நாம் அதற்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும்? எதற்கும் பயப்படாமல் , விசுவாசத்தின் மூன்று நிலைகளையும் நாம் கொண்டிருக்க வேண்டும் என்பதே பதிலாகும்.
Kommentarer