நான் தேவனுடைய வார்த்தையை தியானித்துக் கொண்டிருந்தபோது, அப்போஸ்தலர் 13:42-43 இல், கிறிஸ்துவுக்குள் வந்த புதிய விசுவாசிகளை, பவுலும் பர்னபாவும் தேவனுடைய கிருபையில் தொடரும்படி வற்புறுத்தினார்கள் என்று சொல்லப்பட்டிருந்தது. இது தேவனுடைய கிருபையில் நிலைத்திருப்பதைக் குறித்து தியானிக்க என்னைத் தூண்டியது.
‘அவர்கள் யூதருடைய ஜெப ஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள்.ஜெப ஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள்.’ அப்போஸ்தலர் 13:42-43
"கிருபையில் நிலைத்திருத்தல் " என்பதைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கு முன், கிருபை என்றால் என்ன என்று தெரிந்து கொள்வோம்.
கிருபை என்றால் என்ன?
ஆண்டவருடைய கிருபையால் நாங்கள் அதை செய்தோம் என்று அநேக கிறிஸ்தவர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறோம். உண்மையில் கிருபை என்றால் என்ன அர்த்தம் கொள்ளுகிறோம்?
கிறிஸ்தவ வரையறையில், பொதுவாக கிருபை என்பது "தகுதியற்றவர்கள் மீது தேவன் காட்டும் தயவு" அல்லது "தகுதியற்றவர்கள் மீது அவர் காட்டும் கருணை" என்று வரையறுக்கலாம். நாம் நீதியாக வாழ்வதில் குறைந்து போனாலும் அவருடைய கிருபையினால், அவர் நம்மை மன்னித்து ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்.
எளிதாகப் புரிந்து கொள்ள வேண்டுமானால்,
பழைய ஏற்பாட்டில் யாத்திராகமம் 20:1-17 வரை நமக்கு 10 கட்டளைகள் உள்ளன. எல்லா கட்டளைகளும் நாம் பின்பற்றுவதற்காக கொடுக்கப்பட்டுள்ளன. இது எந்த ஒரு விதிவிலக்கும் இல்லாமல் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் ஒவ்வொரு நாளும் / ஒவ்வொரு நிமிடமும் இந்த கட்டளைகளைப் பின்பற்றுவதில் நாம் தவறிவிடுகிறோம். ஒருமுறை நாம் தவறினாலும் இது ஒரு பாவமாக மாறும் மேலும் அதற்காக நாம் ஒரு விலை கொடுக்க வேண்டும். நம்முடைய கர்த்தராகிய இயேசு, நம்மேல் கொண்ட அன்பினால், பாவத்தின் நிமித்தம் இவ்வுலகில் ஒருவரும் அழிந்துபோகக்கூடாது என்பதற்காக, நமது பாவங்களுக்காக சிலுவை சுமந்து அவருடைய சிலுவையின் வல்லமையால் நமக்கு கிருபையை இலவசமாக அளித்தார். நாம் தெரிந்தோ / தெரியாமலோ பாவம் செய்தாலும், நாம் மனந்திரும்பி, பாவத்தை மேற்கொள்ள இது நமக்கு ஒரு வாய்ப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இது யோவான் 1:16-17 ல் நன்கு விளக்கப்பட்டுள்ளது.
‘அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம்.எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.’ யோவான் 1:16-17
நியாயப்பிரமாணம் தேவனுடைய தெய்வீக தரநிலைகளையும் அதை பூர்த்தி செய்ய முடியாத நமது இயலாமையையும் வலியுறுத்துகிறது. அதே வேளையில், கிருபை, விழுந்த மனித இனத்தை அதற்கான தண்டனையிலிருந்து மீட்கிறது. நியாயப்பிரமாணம் பிரச்சனையைச் சுட்டிக்காட்டுகிறது, கிருபை அதை சரி செய்கிறது. ரோமர் 5:20-21 இல் பவுல் இதை நன்கு விளக்குகிறார்.
‘மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.’ ரோமர் 5:20-21
பாவத்தை தோற்கடிக்கவும், பாவ வாழ்விலிருந்து விலகவும், கிருபை தேவனால் நமக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது, பாவத்தின் சம்பளம் மரணம். "தேவனுடைய கிருபை வரம் " என்பது நாம் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுடன் நித்திய ஜீவனைப் பெற்றுக் கொள்ளும்படி அவர் நமக்கு அளித்த கிருபையைக் குறிக்கிறது என்று ரோமர் 6:23 கூறுகிறது.
‘பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.’ ரோமர் 6:23
கிருபையில் நிலைத்திருத்தல்
பாவத்தை மேற்கொள்ள நமக்கு கிருபை இருக்கும் போது, நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ, நம்மை பாவத்தில் தொடரச் செய்யும்படியான சில செயல்களை செய்து விட்டு பின் தேவனுடைய கிருபையைத் தொடர்ந்து தேடுகிறோம். பாவத்தை மேற்கொள்வதற்கு நமக்கு கிருபை கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் வையுங்கள். ஆனால் நாம் இந்த கிருபையைப் பயன்படுத்தி பாவத்தை லேசாக எடுத்துக்கொள்கிறோம்.
நாம் தொடர்ந்து பாவம் செய்து கொண்டே இருக்கிறோம் ,அதனால் கிருபை நமக்கு அதிகமாக கொடுக்கப்படும் என்று சொல்ல முடியுமா? இல்லை, கிருபை அவ்வாறு செயல்படாது. நாம் மனந்திரும்பி பாவத்தை மேற்கொள்வதற்காகவே கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. துஷ்பிரயோகம் செய்ய கிருபை கொடுக்கப்படவில்லை. அப்படி இருக்குமானால் கிறிஸ்துவினுடைய மரணமும் உயிர்த்தெழுதலும் அர்த்தமற்றதாகிவிடும். இந்த கேள்விக்கு பவுல் ரோமர் 6:1-2,15 இல் நன்றாக பதிலளிக்கிறார்.
‘ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே.பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே.’ ரோமர் 6:1-2,15
இயேசு கிறிஸ்துவை தமது ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே கிருபை வழங்கப்படுகிறது, கிறிஸ்துவில் இல்லாதவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
நம்மை ஒரு விசுவாசி அல்லது கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்ளும் போது நாம் ஆதாமிலிருந்து (பாவ சுபாவம் மிக்க) வெளியே வந்துவிட்டோம் மேலும் இப்போது இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு கிறிஸ்துவில் இருக்கிறோம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். பவுல் ரோமர் 6:12 இல், நீங்கள் திரும்பிச் சென்று உங்கள் சொந்த பாவ வழிகளில் வாழ்ந்ததைப் போல வாழலாம் என்று நினைப்பது அபத்தமானது என்று கூறுகிறார்.
நாம் கிருபையைப் பெற்றுக் கொண்ட பிறகும் இரண்டு காரணங்களால் மீண்டும் மீண்டும் பாவத்தைத் தொடர்கிறோம்.
நாம் செய்வது என்னவென்றால், நமது ஆசைகளைப் பயன்படுத்தி உலகப் பிரகாரமான வாழ்க்கையை வாழ திரும்பி செல்ல முயல்கிறோம். மேலும் நமது உடல் பாவத்தில் எளிதில் விழும் வண்ணம் பலவீனமாகப் படைக்கப்பட்டுள்ளதால் பாவத்தைத் தவிர்ப்பதற்கான தொடர் போராட்டம் நமக்கு இருக்கிறது.
நாம் கிருபையில் நடந்த பிறகும் கூட , பல சமயங்களில் வாழ்க்கையின் பாவங்களிலிருந்து விடுபட கடினமாக உணர்கிறோம். அதற்குக் காரணம், சாத்தான், இப்போது நம்மால் பாவத்தை எதிர்த்துப் போராட முடியும் என்று நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறான். ஆனால் உண்மை என்னவென்றால், நாம் சுயமாக பாவத்தை எதிர்த்துப் போராடுவதற்கு பலவீனமாக இருக்கிறோம். மேலும் இந்த பாவத்தை மீண்டும் செய்ய வேண்டும் என்ற பாவ இச்சைகளில் நாம் சிக்கிக் கொள்கிறோம். உதாரணமாக, உங்களுக்கு கோபம் ஒரு பிரச்சனையாக இருந்தால், கிருபையைப் பெற்ற பிறகு ஒரு நாள் நீங்கள் வெற்றிகரமாகப் போராடலாம். ஆனால், கோபத்தை எதிர்த்துப் போராடும்படிக்கு ஒரு புதிய சூழ்நிலையைக் கொடுத்து அவன் நம்மை அதிகமாகத் தூண்டுகிறான். முந்தைய மாதிரியே நம்மால் கோபத்தை எதிர்த்து நிற்க முடியும் என்று நம்மை வஞ்சித்து நாம் தோல்வியடையும்படிச் செய்கிறான்.
இங்கே தான் கிருபையில் நிலைத்து நிற்பது வருகிறது. இது கிருபையில் ஆரம்பிப்பது போலவே முக்கியமானது. தேவனுடனான நமது உறவின் அடிப்படைக் கொள்கையாக எண்ணிக் கொண்டு அதை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. பல கிறிஸ்தவர்கள் கிருபையை கிறிஸ்தவ வாழ்க்கையின் அறிமுகம் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவருடனான நம் வாழ்க்கைக்கு கிருபை அடித்தளமாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
கிருபையில் தொடர்வதைக் குறித்து ரோமர் 6:13-14 இவ்வாறு விளக்குகிறது,
‘நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்.நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.’ ரோமர் 6:13-14
1 வது பாடம் - சரீரம் பாவத்தை நிறைவேற்றும் வாகனமாக இருக்கிறது. எனவே, இது உள்ளே இருந்து என்னை யார் இயக்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் பின்னால் ஒரு ஆவி உள்ளது, மேலும் ஒவ்வொரு ஆவியின் பின்னால் தேவன் (பரிசுத்த ஆவி) அல்லது சாத்தான் (தீமை) உண்டு. எனவே, இனி உங்கள் சரீரத்தின் உறுப்பினர்களை விட்டுக்கொடுக்காதீர்கள், அதைத்தான் பவுல் , ‘நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல்,’ என்று கூறுகிறார்.
2 வது மிக முக்கியமான ஆவிக்குரிய பாடம் - பாவத்தில் கவனம் செலுத்தாதீர்கள்! பாவத்தை ஜெயித்த நம் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துங்கள்! உங்கள் உணர்வுகளை அவரது கீழ் பயிற்றுவிக்க கற்றுக்கொள்ளுங்கள். மாம்சத்தால் பாதிக்கப்படாமல், தேவனுடைய ஆவியால் செல்வாக்கு பெறக்கூடிய இடத்தில் உங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்.கிருபையில் தொடர்வதற்கான பதில் இதுதான்.
3 வது பாடம் - மாம்சத்தின் மீதான வெற்றியை உங்கள் திறனால் செய்ய முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்; அது தேவனுடைய பரிசுத்த ஆவியால் செய்யப்பட வேண்டும், ஏனென்றால் அவர் மூலமாகத் தான் பாவத்தை வெல்ல முடியும். ஆனால் விசுவாசத்தின் மூலம் மட்டுமே நாம் அதை அணுக முடியும். அது நம்மிடம் அல்ல, அவருடைய வல்லமையில் உள்ளது.
அப்படியானால் எப்படி அவர் மீது கவனம் செலுத்துவது ?
1. தேவனுடன் அமைதியான நேரம் - எனவே, அமைதியான நேரம் மிகவும் முக்கியம். உங்களை சரியான இடத்தில் வைத்து உங்கள் நாளைத் தொடங்க இது உதவுகிறது. பின்னர் நாள் முழுவதும் நீங்கள் அவருடன் ஐக்கியம் கொள்ள ஆரம்பிக்கிறீர்கள். அவ்வளவுதான், இது ஒரு நல்ல ஒழுக்கம். மெதுவாக , ஆவியானவர் தாமே தம் ஞானத்தின் மூலம், நீங்கள் பாவத்தின் கண்ணிகளைத் தவிர்த்து, அதிலிருந்து விலகிச் செல்ல வேண்டிய வழியை உங்களுக்குக் காட்டுவார்.
2. தினசரி ஜெபம் - என்றால் என்ன ? வேதம் என்றால் என்ன ? துதித்தல் என்றால் என்ன? எல்லாமே நெருங்கி வருவதற்கு நம்மை நாமே வைத்துக்கொள்ளும் சூழல். அதனால் மாம்சத்திற்கு இடமளிப்பதற்கு பதிலாக இப்போது ஆவியானவர்க்கு இடமளிக்க முடியும். இதைத்தான் ரோமர் 6 இல் பவுல் கூறுகிறார்.
a. நீங்கள் முதல் வேலையாக காலையில் ஜெபிக்கும்போது, என்னுடைய வாழ்க்கையில் நீங்கள் முதல் முன்னுரிமை என்று தேவனிடம் சொல்கிறீர்கள். அவர் நீடித்த கிருபையுடன் உங்கள் வழியில் வரும் சவால்களை எதிர்த்துப் போராடுவார்.
b. அவரைச் சார்ந்திருங்கள், உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண உங்கள் முழு இருதயத்தோடும் ஆத்துமாவோடும் அவரை நம்புங்கள். இந்த முழு பிரபஞ்சத்தில் உள்ள அனைவரையும் விட அவர் மிகவும் வல்லமையானவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
3. பாவத்தை தோற்கடிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள். அதற்கு பதிலாக தேவனிடம் திரும்புங்கள். அவருடைய வல்லமையினால் உங்கள் மாம்சத்தின் பாவங்களை தோற்கடிப்பீர்கள், இதன் மூலம் நீங்கள் தேவனுடைய கிருபையில் தொடரலாம்.
Amen