top of page
Kirupakaran

கேடான சிந்தை




நமது உள்மனம் நம்முடைய நடத்தை மற்றும் அணுகுமுறையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில், அதில் அடக்கப்பட்ட உணர்வுகள் மற்றும் மறைக்கப்பட்ட நினைவுகள் இருக்கக் கூடும். நாம் நினைப்பது, நாம் எவ்வாறு செயல்படுகிறோம் மற்றும் உணர்கிறோம் என்பதைப் பாதிக்கலாம். நாம் எப்படி உணர்கிறோம் என்பது நாம் நினைப்பதையும் செய்வதையும் பாதிக்கிறது. நாம் செய்வது நாம் எப்படி நினைக்கிறோம் மற்றும் உணர்கிறோம் என்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்படியாக, ஒன்றுக்கொன்று சார்ந்த உறவை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு வேலை நேர்காணலுக்கு போகும் ஒருவர் அது பயங்கரமாக இருக்கப் போகிறது என்று கருதுவதன் விளைவாக அவருக்கு அந்த வேலை கிடைக்காமல் போகிறது. அதே போல, காதலிக்கும் ஒருவர் அந்த நபரை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், வாழ்க்கை இனி வாழத் தகுதியற்றதாக இருக்கும் என்று நம்பலாம்.


இந்த வகையான மனதை நாம் எப்படிப் பெற்றோம், ஆண்டவர் இப்படிப் படைத்தாரா? அல்லது இந்த உள்மனம் அவரிடம் இருந்து நமக்கு வந்த ஒரு சாபமா? அதற்கான பதில் ஆதியாகமம் மற்றும் ரோமர் புத்தகங்களில் உள்ளது.


  • ஆதியாகமம் 1:27 "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்". தேவன் மனிதனைப் படைத்தபோது அவ்வளவு நன்மைகளோடு தன்னைப் போன்றேப் படைத்தார். ஆதாம் ஏவாளின் பாவத்திற்குப் பிறகு அவர்கள் தேவனால் சபிக்கப்பட்டார்கள்.

  • மனிதனுடைய இருதயத்தை தேவன் எப்படி மாற்றினார் என்பதைப் பற்றி ரோமர் 1:21 இல் வாசிக்கிறோம். ரோமர் 1:21 - "அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது".

  • உலகத்தில் உள்ளவைகளை எல்லாம் தேவன் படைத்தார் என்பதை மனிதன் அறிந்திருந்தாலும், தேவன் செய்ததை மனிதன் ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை, அவர் செய்தவற்றிற்காக அவரை மகிமைப்படுத்தவும் இல்லை. உதாரணத்திற்கு, விஞ்ஞானிகள் உலகப்படைப்பை அறிவியல் என்று கூறுகிறார்கள்.

  • இதன் விளைவாக அவனது சிந்தனை வீணாகி (ஒரு பயனற்ற நபரைப் போல), அவனது இருதயம் இருளடைந்தது.

  • அவன் (உலகத் தரத்தின்படி) தன்னை ஞானி என்று நினைத்திருந்தான் ஆனால், முட்டாள் ஆனான்.

  • ரோமர் 1:28 - "தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்".

  • மேலும், அவன் தேவனைப் புறக்கணித்து, அவரைப் பற்றிய அறிவைத் தக்கவைத்துக் கொள்ளத் தேவை இல்லை என்று தனது மனதில் கற்பித்துக் கொண்டான்.

  • அதன் விளைவு தான் இந்த கேடான சிந்தை.


கேடான சிந்தை என்றால் என்ன?

  • சமூகத்தின் தார்மீக உணர்வை அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் நேர்மை, நல்ல ஒழுக்கம், நீதி அல்லது நெறிமுறைகள் போன்ற சாதாரண தரநிலைகளில் இருந்து மாறுபடும் அல்லது விலகும் ஒரு நிலை.

  • கேடான சிந்தை என்பது நீதி, நேர்மை அல்லது அறநெறிக்கு முரணான மனநிலையைக் குறிக்கிறது.

  • வேதம் கேடான சிந்தையின் நிலையைக் கூறுகிறது. ரோமர் 1:29-31 - “அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம் பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள்”.

  • கேடான சிந்தையைக் கொண்டிருக்கும்போது பாவம் மனிதனுக்குள் நுழைகிறது. மனிதனின் மயக்கமான உள்மனம் நடத்தை மற்றும் அணுகுமுறையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.


கேடான சிந்தைக்கும் பாவத்திற்குமான தொடர்பு

யாக்கோபு 1:13-16 – “சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள்”.


  • யாக்கோபு இதை நன்கு விளக்குகிறார்,

  • முதலில் "அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்" ~ இச்சைகள்

    • அடுத்தது “பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து...” ~ சோதனை

    • இறுதியாக "பாவத்தைப் பிறப்பிக்கும்.." ~ பாவம்

    • எச்சரிக்கை : "மோசம்போகாதிருங்கள்."

  • நம் இருதயத்தில் உள்ளவைகளுக்கு மனம் தான் நுழைவிடம். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். சாத்தான் மனிதர்களுக்கு விளைவுகளைப் பற்றி கூறாமல் உடனடி இன்பத்தை மட்டுமே காண்பிக்கிறான். இந்த விஷயத்தை நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் சோதிக்கப்படும் போதெல்லாம், சோதனையானது எப்போதும் ஒரு குறிப்பிட்ட தடைசெய்யப்பட்ட இன்பத்தையே அளிக்கிறது.

  • ஒருவர் ஏன் இன்னொருவரைக் கொலை செய்கிறார்? கொலையின் வேரானது ஒருவரின் அதீத கோபத்தாலோ அல்லது அந்த நபரைக் கொன்றால் கோபத்திற்கு திருப்தியாக இருக்கும் அல்லது தனது பிரச்சனை தீர்ந்துவிடும் என்ற மனத் தூண்டுதலாலோ ஏற்படுகிறது. உடனடியாகச் சோதனையானது ஆத்திரச் செயலுக்குத் தகுந்தாற்போல் கொலையை நடப்பிக்கிறது, அவன் கொலை செய்தவுடன் அது பாவத்தைப் பிறப்பிக்கிறது.

  • இதற்கு மற்றொரு உதாரணம் - ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று என்று இயேசு கூறுவது. மத்தேயு 5:27-28 - "விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று".

  • உங்கள் கண்கள் பெண்ணின் அழகைப் பார்த்து, ஆசையால் மனதைக் கெடுக்கிறது.

  • ஆசைகள் இச்சைக்கு இடமளித்து (சரீர இச்சை) சோதனைக்கு வழிவகுக்கும். இது பாவத்திற்கு அழைத்துச் செல்லும்.

  • அதனால்தான் இயேசு இச்சையான சிந்தனையை விபச்சாரத்திற்கு ஒப்பாகக் குறிப்பிடுகிறார்.


💡 தேவனின் ராஜ்யத்திலிருந்து நம்மை விலக்கிக் கூட்டிச் செல்ல சாத்தான் வைத்திருக்கும் மிகப்பெரிய கருவி, பாவத்திற்கு இட்டுச்செல்லும் படி நம் மனதை வஞ்சிப்பதே. 2 கொரிந்தியர் 11:3 - "... உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்”.

கேடான சிந்தையை மேற்கொள்ளல்

மனிதன் எப்படி அவன் கெட்ட குணங்களால் நிரம்பியிருக்கிறான் என்பதை நாம் பார்த்தோம். இந்த கேடான சிந்தையை மேற்கொள்ளும் வழிகளைப் பார்ப்போம்.


1. உங்கள் மனதை மாம்சத்தால் ஆள விடாதீர்கள்

ரோமர் 8:5-7 - "அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது".

  • பாவத்தின் மீதான வெற்றி என்பதற்கு எண்ணங்களில் வெற்றி என்று அர்த்தம் - நம் சிந்தையை மாம்ச ஆசைகளில் வைத்திருந்தால் அது பாவத்திற்கு வழிவகுக்கும், அதனால்தான் “மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை” என்று சொல்லப்பட்டுள்ளது.

  • நாம் என்ன செய்கிறோமோ, அது தேவனைப் பிரியப்படுத்துமா? என்று சிந்திக்க வேண்டும். ஆவியால் ஆளப்படும் மனதுக்கு வாழ்வும் சமாதானமும் இருக்கும்.

2. உங்கள் மனதை தேவனுடைய வார்த்தையால் புதுப்பியுங்கள்

ரோமர் 12:2 - "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்".

  • இங்கே பரிசுத்த ஆவியானவர் நம் இருதயங்களுடன் பேசுகிறார் ~ உலகத்தின் மாதிரிகளைப் பின்பற்ற வேண்டாம்.

  • தேவனுடைய வார்த்தையால் உங்கள் மனதைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். அவருடைய வார்த்தை அவருடைய ஆவியால் ஆளப்படும் ஆசைகளால் உங்களை வழிநடத்தும்.

  • அதோடு நிற்காமல், இது தேவனிடம் இருந்து வந்ததா அல்லது சுயத்தில் இருந்து வந்ததா என்று சோதிக்கவும். ஏனெனில், தேவனுடைய பெயரால் நாம் சாத்தானால் பலமுறை ஏமாற்றப்படுகிறோம். அந்த வழியில் நாம் “பிரியமும் பரிபூரணமுமான சித்தம்” பெற்றுக் கொள்வோம்.

3. தேவனை ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி சொல்லுங்கள்

ரோமர் 1:21 - "அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது".

  • நம் மனம் ஏன் மோசமான நிலைக்கு இட்டுச் செல்லப்பட்டது என்றால், நம்மிடம் உள்ளவை அனைத்தும் தேவனிடம் இருந்து வந்தவை என்பதை ஒப்புக் கொள்ளத் தவறியதால் தான். என்னிடம் உள்ளவை அனைத்தும் என் சுயத்தினால் வந்தது என்று சொல்லும்படி நம் மனம் உருவாக்கப்பட்டுள்ளது.

  • உங்களிடம் இருப்பதைக் குறித்து பெருமை கொள்ளாதீர்கள்.

  • குடும்ப அந்தஸ்து - இது உங்கள் சொந்த முயற்சியினால் வந்தது அல்ல. கற்களைக் கூட ஆபிரகாமின் பிள்ளைகளாக எழுப்பக்கூடிய தேவனால் உண்டானது. மத்தேயு 3:9 - "ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்".

  • திறமைகள்/தாலந்துகள் - இது உங்களால் ஆனதல்ல. அது தேவனால் உங்கள் பெற்றோரிடம் இருந்து நீங்கள் பெற்றுக் கொண்டது.1 கொரிந்தியர் 4:7 - "அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக் கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?".

  • தனிப்பட்ட தோற்றம் - சரீரம்

  • நீங்கள் வகிக்கும் பதவி - அது தேவனின் ஆசீர்வாதம். நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் பேசியதைப் போன்ற ஒரு நிலையை வாழ்வோம் - லூக்கா 7:6 - "... அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல".

  • விருப்பம் / வெற்றி / தேவ தயவு - நமது வெற்றி மற்றும் ஆசீர்வாதங்கள் நமது நீதியினால் கிடைத்தது என்று நாம் நினைக்கலாம். ஆனால் அவருடைய இரக்கத்தினால் நாம் ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம். உபாகமம் 9:6 - "ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்".

  • உங்களிடம் உள்ள அனைத்தும் தேவனிடம் இருந்து வந்தவை, உங்கள் வாழ்க்கையில் இருக்கும் அனைத்து நல்ல விஷயங்களுக்கும் அவரே ஆதாரமாக இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.

  • உங்களிடம் உள்ள அனைத்து நல்ல ஆசீர்வாதங்களுக்காகவும் அவரைத் துதித்து நன்றி செலுத்துங்கள். ஏனெனில் உங்களிடம் உள்ள ஒவ்வொரு நன்மையும் அவரிடம் இருந்தே வருகிறது.

4. பின்வாங்குதலை மேற்கொள்ளுங்கள்

  • பழைய வாழ்க்கைக்காக நாம் ஏங்கும்படி சாத்தானால் தூண்டப்படும் போது பின்வாங்குதல் நிகழ்கிறது. தேவனிடமிருந்து நாம் பெறுவது கடந்த காலத்திலிருந்து நாம் பெற்றதை விட பெரியது அல்ல என்று ஏமாற்றுவதன் மூலம் இது சாத்தான் சொல்ல முயற்சிக்கும் ஒரு பொய்.

  • தேவன் நல்லவர். அவர் நமக்கு சிறந்த விஷயங்களைக் கொடுக்க வேண்டும் என்று ஏங்குகிறார், விரும்புகிறார். நாம் இன்னும் பெறாததை விட சிறந்த விஷயங்களைப் பெற முடியும் என்று கூறுவதற்கு நாம் முடிவு செய்யலாம்.

  • அதற்கு ஒரு சிறந்த உதாரணம், மோசே எகிப்திலிருந்து மக்களை வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு அழைத்துச் சென்றபோது நடந்தது. அவர்களை வனாந்தரத்தில் நடத்திக் கொண்டு போய் வாக்களித்த தேசத்தைக் காண்பிப்பதே ஆண்டவருடைய திட்டமாக இருந்தது. அவர்களுக்கு பரலோகத்திலிருந்து மன்னாவைக் கொடுத்தார்.

  • எண்ணாகமம் 11: 5-6 - "நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்".ஆனால் ஜனங்கள் தாங்கள் எகிப்தில் உண்டதை நினைத்து அதற்காக ஏங்கினர். தாங்கள் வெறும் மன்னாவை சாப்பிடுவதினால் பசியை இழந்துவிட்டதாக புகார் கூறினார்கள்.

  • தாவீதின் அறிவுரையைக் கொண்டு பின்வாங்குவதை மேற்கொள்ளுங்கள். சங்கீதம் 26:2 - "கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும்".

  • பின்வாங்குவதை மேற்கொள்ள பவுலின் ஆலோசனையைப் பின்பற்றுங்கள் - ரோமர் 6:12-13 - "ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்".

  • உங்களைப் பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு அர்ப்பணியுங்கள் - உங்கள் உதடுகள், கால்கள், கைகள், காதுகள் மற்றும் அனைத்து உறுப்புகளையும் பாவத்திற்கு அடிபணியாதபடிக்கு தேவனிடம் ஒப்படையுங்கள். ஆஹா என்ன ஒரு அற்புதமான அறிவுரை, அதனால் அவர்களில் யாரும் பழைய வழிகளைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். நாம் பின்வாங்கிப் போய்விடாமல் சாத்தானின் வஞ்சகங்களிலிருந்து தேவன் நம்மைப் பாதுகாப்பார்.

5. அடிக்கடி சுயபரிசோதனை செய்யுங்கள்

சங்கீதம் 139:23-24 - "தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்".

  • தாவீதின் அறிவுரையைப் பின்பற்றி, ஆண்டவரிடம் கேளுங்கள். உங்கள் மனமும் சிந்தனைகளும் அவருடன் ஒத்துப்போகவில்லையா என்றும், அவற்றில் எந்தப் பகுதி தவறு என்று உங்களை ஆராயும்படியும் கேளுங்கள். அவர் உங்களுக்குச் சரியில்லாததைச் சொல்வார். உங்களைச் சுத்தப்படுத்திக் கொள்ளும்படிக்கு நீங்கள் தவறு செய்த சம்பவங்களை உங்களுக்கு நினைவூட்டுவார்.

  • கிறிஸ்துவின் இரத்தம் உங்கள் மனதைச் சுத்தப்படுத்தும்படி கேளுங்கள் - இது நமது "மனசாட்சியை" இரத்தத்தால் சுத்திகரிக்க வழிவகுக்கும். - எபிரேயர் 9:14 - "... உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!".

  • உங்கள் மனதைக் கட்டி, உங்கள் எண்ணங்களை சுத்தமாக வைத்திருக்க தேவனிடம் ஜெபியுங்கள்.

  • மத்தேயு 26:41 - “நீங்கள் சோதனையில் சிக்காதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி சித்தமானது, ஆனால் மாம்சம் பலவீனமானது". "மாம்சத்திற்கு" எதிராக உங்கள் "ஆவியை" பலப்படுத்துங்கள். ஜெபத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். பல சமயங்களில் நாம் சாத்தானால் சோதிக்கப்படுகிறோம். அவன் நீதியையும், தேவ பக்தியையும் நம்மிடமிருந்து திருட காத்திருக்கிறான். அதனால் அவனுடைய வஞ்சனையால் நாம் சோதிக்கப்படுகிறோம். சோதனையை எதிர்த்துப் போராட நம்முடைய ஜெபம் மட்டுமே ஒரே ஆயுதம்.

  • உலகத்தின் அன்பு - 1 யோவான் 2:16 - "ஏனெனில், மாம்சத்தின் இச்சையும, கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்".

  • இந்த மூன்று சோதனைகளிலிருந்தும் காத்துக்கொள்ள தேவனிடம் ஜெபியுங்கள்.

    • சரீர இச்சை (நம் சுய விருப்பங்கள்)

    • கண்களின் இச்சை (பெண்கள், பணம், இன்பங்கள் மற்றும் விக்கிரகங்கள்)

    • ஜீவனத்தின் பெருமை (உங்களுக்கென்று எந்தத் தகுதியும் இல்லாமல், உங்களிடம் உள்ள எல்லாமே தேவனிடத்திலிருந்து பெறப்பட்டதாக இருக்கும்போது, எல்லாவற்றையும் சாதித்துவிட்டீர்கள் என்ற பெருமிதம் - 1 கொரிந்தியர் 4:6,7).

நீங்கள் இந்த ஐந்து விஷயங்களைச் செய்தவுடன், அது உங்களைக் கேடான சிந்தையில் இருந்து தேவன் முதலில் மனிதனைப் படைத்த,அவருக்குப் பிரியமான ஆவிக்குரிய சிந்தைக்கு மாற்றும். ஒவ்வொரு நாளும் நம்மை ஒரு சிறந்த மனிதனாக மாற்ற இந்த ஐந்து விஷயங்களை தினமும் பின்பற்ற வேண்டும். நாம் அவருடைய மனதை நெருங்க முடியாமல் போகலாம், ஆனால் ஒவ்வொரு நாளும் சிறப்பாக இருக்கப் போராடுவோம்.


என்னில் உள்ள அனைத்து அறிவையும் உருவாக்கியவரும், படைத்தவருமான என் ஆண்டவர் இயேசுவுக்கு இந்த 100வது வலைப்பதிவை அர்ப்பணிக்கிறேன். இந்த எழுத்து ஊழியத்தில் என்னை வழிநடத்திச் செல்ல அவருடைய கிருபையையும் இரக்கத்தையும் அளித்ததற்காக பிதாவாகிய தேவனுக்கு எல்லா துதியும் மகிமையும் செலுத்துகிறேன்.




10 views0 comments

Hozzászólások

0 csillagot kapott az 5-ből.
Még nincsenek értékelések

Értékelés hozzáadása
bottom of page