top of page
Kirupakaran

கொடுக்கும் கிருபை


தண்ணீர் உள்ள கிணற்றில் இருந்து, தண்ணீரை இறைத்து, தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டே இருந்தால் தான் அதிக தண்ணீர் ஊறும். கிணற்று நீரை அடிக்கடி பயன்படுத்தும் பொழுது தான் அதன் தரம் மேம்படும். கிணற்றில் தண்ணீர் தேங்கினால், அது காலப்போக்கில் கசப்பாக மாறி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.


நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் இது பொருந்தும். தேவன் நமக்கு உலகில் பல ஆசீர்வாதங்கள்,தாலந்துகளை வழங்கி அதை நாம் அவருடைய ஊழியங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். பல சமயங்களில் அவருடைய மகிமைக்காக அதை பயன்படுத்தாமல் வெட்கப்பட்டு பின்வாங்குகிறோம். போதகர்களோ தேவாலயங்களோ பணம் கேட்கும் போது அல்லது ஏதாவது கொடுக்குமாறு கேட்கும் போது நாம் எப்போதும் சங்கடமாக உணர்ந்து பின்வாங்குகிறோம். இதற்கு நாம் விசுவாசிகளை மட்டும் குறை கூற முடியாது. கிறிஸ்தவ மண்டலத்தில் பலர் தேவாலயத்தையும் / ஊழியத்தையும் தேவனோடு லாபம் ஈட்டும் தொழிலாக பயன்படுத்துகிறார்கள். தேவனுக்கு கொடுப்பது ஒரு முதலீட்டு வணிகம், இங்கே நாம் கொடுக்கும் பணத்திற்கு வருமானம் கிடைக்கும் என்று நம்ப வைத்து விசுவாசிகளின் மனதையும் கெடுத்துள்ளனர். இந்தக் காலத்தில் நாம் எவ்வளவு பரிதாபகரமான வாழ்க்கை வாழ்கிறோம்.


2 கொரிந்தியர் 8-9 அதிகாரங்களில் பவுல் கூறிய போதனையின் மூலம் கொடுப்பதற்கான சில கொள்கைகளைப் பற்றி தேவன் எனக்குக் கற்றுக்கொடுத்தார். அங்கு பவுல் கொரிந்து தேவாலயத்தில் பேசுகிறார். அவர்களிடம் ஊழியத்திற்குக் கொடுக்க போதுமானதாக இருந்தும் அவர்கள் கொடுக்கவில்லை. மேலும் பல்வேறு காரியங்களை விளக்கி புரிய வைக்க அவர் அவர்களை மக்கெதோனியா தேவாலயத்துடன் ஒப்பிட்டுப் பேசினார். இவை இன்று நம் காலத்திலும் உண்மையாகவே இருக்கின்றன.


தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நோக்கமும் திட்டமும் வைத்திருக்கிறார். கிறிஸ்து நம்மில் வாழ வந்ததற்குக் காரணம், அவர் திட்டமிட்டதைச் செய்வதற்காகவே. ஒரு விசுவாசி தனது சொந்த பலத்துடனும் திறமையுடனும் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ முடியும் என்றும் உலகில் ஆசீர்வாதங்களை இன்னும் அதிகமாக பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே தேவனின் கிருபையைப் பெற வேண்டும் என்று நினைப்பது தவறான புரிதல் ஆகும். நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை நாம் வீணாக்குகிறோம்.


“தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன் வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்”. 2 கொரிந்தியர் 6:1.


அப்படியென்றால் தேவன் தம்முடைய விசுவாசிகளை தம் நோக்கத்திற்காக எவ்வாறு பயன்படுத்துகிறார்? அவர் விசுவாசிகளுக்கு திறமைகள் / பணம் / செல்வம் / அதிகாரமிக்க பதவிகள் / ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் இவற்றை எல்லாம் தந்து ஆசீர்வதிக்கிறார். அவருடைய நோக்கத்திற்காகப் பயன்படுத்துவதற்காகவே விசுவாசிகளுக்கு ஆசீர்வாதம் கொடுக்கப்பட்டுளளது. இது பொதுவாக ஆண்டவர் நம்மிடம் என்ன செய்யச் சொல்கிறாரோ அதன் அடிப்படையில் அவருக்குத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் செய்யப்படுகிறது.


கொடுப்பது என்றால் பணத்தை மட்டுமே மையமாகக் கொண்டது என்று நாம் எப்போதும் தவறாகப் புரிந்துகொள்கிறோம். கொடுப்பது எப்போதும் பணத்தைப் பற்றியது அல்ல, அது நம் நேரம் / திறமை / பணம் / செல்வம் / ஆவிக்குரிய ஆசீர்வாதம் போன்ற எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.


அப்படியானால், இந்த கொடுப்பது எப்படி விசுவாசியிலிருந்து தொடங்குகிறது?


கொடுக்கும் கிருபை

“அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்”. 2 கொரிந்தியர் 8:1-2


  • கிருபையினால் கொடுத்தல் - மக்கெதோனியா தேவாலயம் எவ்வாறு கொடுத்தது என்பதை பவுல் கொரிந்து தேவாலயத்திற்குக் கற்பித்ததிலிருந்து இந்தக் கொள்கையைக் கற்றுக்கொள்கிறோம். “மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம்.”

  • ஒருவர் கிருபையாகவும், தாராளமாகவும் கொடுக்க தயாராக இருந்தால், அது அந்த நபரின் வாழ்க்கையில் பரிசுத்த ஆவியானவரின் செயலாகும். நான் தேவனோடு நடக்கிறேன் என்றும் அதே நேரத்தில் கஞ்சத்தனமாக இருக்கிறேன் என்றும் ஒருவர் இந்த உலகில் கூறவே முடியாது. அது ஒரு முரண். உங்களால் அப்படி இருக்க முடியாது. கிருபையில் வாழ்வது என்பது கிருபையினால் கொடுப்பது. பவுல் பேசியதெல்லாம் தேவனின் கிருபையைப் பற்றியது தான்.

  • இப்போது கொரிந்துவில் இருக்கும் பணக்கார விசுவாசிகளைக் குறித்து பவுல் என்ன விளக்கம் கூறப்போகிறார். அவர் கொரிந்துவில் உள்ள பணக்கார விசுவாசிகளின் கஞ்சத்தனத்தை மக்கெதோனியா தேவாலயத்தின் ஏழை மற்றும் ஆதரவற்ற ஜனங்களின் மிகப்பெரிய தாராளத்துடன் ஒப்பிடப் போகிறார். “உங்களுக்கு அறிவிக்கிறோம்” என்று அவர் கூறும்போது, உண்மையான கொடுப்பது என்றால் என்ன என்பதை அவர்கள் பார்க்க வேண்டும் என்று பவுல் விரும்புகிறார். கொடுப்பது ஒரு விளைவு என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். கிறிஸ்து தமது வாழ்க்கையை ஒரு விசுவாசியின் மூலமாக வாழ்வதன் விளைவு இது. இது ஒரு விளைவு. இது நாம் கொண்டு வருவதல்ல. அது தேவனின் கிருபையால் நம் உள்ளத்தில் வருவது.

வாஞ்சையாய் கொடுக்கும் கிருபை

“அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்.மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்”. 2 கொரிந்தியர் 8:2-3

  • அவர்கள் சும்மா கொடுக்கவில்லை, வாஞ்சையோடு கொடுத்தார்கள். அவர்கள் ”மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில்”கொடுத்தார்கள்.

  • அவர்களின் வாஞ்சை மிகவும் தெளிவாகத் தெரிந்தது, அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்த துன்பம் மற்றும் வறுமையைப் பற்றி கவலைப்படவில்லை. அவர்கள் மகிழ்ச்சியோடு கொடுத்தனர் - “பரிபூரண சந்தோஷத்தினாலே”.

  • பவுல் அவர்களின் ஆர்வத்தை “மிகுந்த உதாரத்துவமாய்” என்று சுருக்கமாகக் கூறுகிறார். அவர்களது செயலைக் குறித்தும் சாட்சியளிக்கிறார் - “தங்கள் திராணிக்குத்தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன்.”

  • அவர்களின் ஆர்வம் தெளிவாகத் தெரிந்தது, கொடுப்பதற்கு யாரும் அவர்களை வற்புறுத்தவோ கெஞ்சவோ இல்லை. அவர்கள் தாங்களாகவே கொடுத்தார்கள் - “தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு”.

  • கிறிஸ்து நம்மில் வாழும்போதும், அவர் நம்மைக் கொடுக்கத் தூண்டும்போதும் இதுதான் நடக்கும்.

கிருபையாய் கொடுப்பதில் முன்னுரிமை

"மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்.” 2 கொரிந்தியர் 8:5

  • “தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்” என்பதிலிருந்து தான் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. நீங்கள் யார் என்பதும், என்னவாக இருக்கிறீர்கள் என்பதும் முழுமையாக தேவனிடம் இருந்து தான் வந்தது என்பதை ஒரு விசுவாசியாக நீங்கள் உணர்ந்தால் மட்டுமே இது நடக்கும். உங்களிடம் இருக்கும் எதுவும் உங்கள் திறமை / பணம் / செல்வம் அல்லது அதிகாரம் அல்லது நீங்கள் இருக்கும் பதவியின் உரிமையாளராக ஆக்க முடியாது.

  • பவுல் ஒரு இரகசியத்தை நமக்கு இங்கே காட்டுகிறார். வாழ்க்கையில் எங்கு சென்றாலும் கொடுப்பதற்கு இதுதான் திறவுகோல். உங்கள் வாழ்வில் கிறிஸ்துவின் கர்த்தத்துவதிற்கு உங்களை ஒப்புக்கொடுப்பதும், அடிபணிவதும் முதலாவதாக இருக்க வேண்டும். “தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள்” என்று கூறுகிறார். இதுதான் நாம் பேசும் முதன்மையான காரியம். அது இருக்க வேண்டும். ஒரு விசுவாசியானவன் தன்னை தேவனிடம் ஒப்புக்கொடுக்கும் போது, அவன் அனைத்தையும் கொடுக்கிறான்.

  • நம் வாழ்வில் உள்ள எல்லாவற்றின் மீதும் அவருக்கு இருக்கும் இறையாண்மையைக் காட்டுவதற்காகவே "கர்த்தர்" என்ற வார்த்தை இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவே என் ஆண்டவர் என்று நான் சொன்னால், நான் அவருக்கு சொந்தம் என்று அர்த்தம். அவர் எனக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல, எனக்கு சொந்தமானது என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்தையும் அவர் சொந்தமாக வைத்திருக்கிறார். வங்கியில் இருப்பது என் பணம் இல்லை; அவருடைய பணம் தான் என்னிடம் உள்ளது. என்னிடம் இருப்பது என் கார் இல்லை, அவருடைய கார் தான் என்னிடம் உள்ளது. எனக்கு வீடு இல்லை, நான் வசிக்கும் வீடு அவருடையது. அந்த மாதிரியான அணுகுமுறை வேண்டும். இங்கிருந்து தான் அது தொடங்குகிறது.

  • நீங்கள் அவரிடம் ஒப்புக்கொடுத்தவுடன், அனைத்தும் அவர் சொந்தமாகிறது. ஒரு மனிதன் சொன்னதால் நீங்கள் உண்மையில் கொடுக்கவில்லை. நீங்கள் ஒரு மனிதனுக்கு கொடுக்கவில்லை, நீங்கள் அதை அவருக்குத் திருப்பிக் கொடுக்கிறீர்கள். அதை வைத்து செய்யத் தேர்ந்தெடுத்ததை அவர் செய்கிறார். நாம் தேவ பிள்ளைகளை நம்புகிறோம். ஏனெனில், அவர்களில் வாழும் தேவனை நாம் விசுவாசிக்கிறோம். அவர் அதைத்தான் அவர்களுக்கு சென்றடைய முயற்சிக்கிறார். இது கண்மூடித்தனமான அர்ப்பணிப்போ, கொடுப்பதோ அல்ல, அது தேவ சித்தம் (தேவனுடைய சித்தத்தினாலே). தேவனுடைய உயர்ந்த நோக்கம் என்னவென்றால், ஜனங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தேவையை அவர் தெரிவிக்க விரும்பினார்.

கொடுப்பதால் ஏழையாக மாட்டீர்கள்

“எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம்” 2 கொரிந்தியர் 8:14

  • பல நேரங்களில், நம்மிடம் இருப்பதைக் கொடுப்பதன் மூலம் நாம் ஏழையாகி விடுவோம் என்று நினைக்கிறோம். அது சாத்தான் நம் மனதில் விதைக்கும் ஒரு பொய், அதன் மூலம் கொடுக்காமல் இருக்கும்படி நம்மைத் தடுக்கிறான். நாம் நிறைய வைத்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்பவில்லை.

  • பவுல் கூறுவது என்னவென்றால், அவர்களின் தேவைக்கு நீங்கள் கொடுக்கும்போது, அவர்கள் மீண்டும் தங்கள் கால்களில் நிற்கும் காலம் வரும். அவர்கள் சொந்தக் கால்களில் நிற்கும் நிலை வரும்போது, திரும்பி​மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு, ஒருவேளை கொரிந்தியர்களுக்கு கூட அவர்கள் கொடுக்கலாம். அவர்கள் தங்கள் பொறுப்பிலிருந்து விடுபடுவது இல்லை என்று பவுல் கூறுகிறார்.

  • நீங்கள் தேவனுக்கு கொடுக்கும்போது நம்மை பாழாக விடமாட்டார். அவருக்குக் கொடுக்கும்போது அவர் உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார். நாம் கொடுக்கும்போது அவர் நமக்கு அளிக்கும் வாக்குத்தத்தம் இது.

“விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள்”. 2 கொரிந்தியர் 9:10-11

  • கர்த்தருக்கு கொடுப்பதன் பலனை நாம் சுவைக்க வேண்டும். இதை ருசித்த பலர், அவர் ஒரு முதலீட்டு வங்கியாளர் என்பது போல இதை ஊழியத்தில் வணிகமாக்கியுள்ளனர். இங்கு தேவனின் நோக்கம் அதுவல்ல.

  • உங்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் நேரத்தை தேவனுக்கு கொடுக்கலாம். அதற்கு பதிலாக, அவருடைய சமாதானம், மகிழ்ச்சி மற்றும் அவரது பரிசுத்த ஆவியினால் உங்களை நிரப்புகிறார். இது நீங்கள் பணத்தால் அளவிடக்கூடியதோ அல்லது ஒருவருக்கு பணத்தை வழங்குவதன் மூலம் பெறக்கூடிய ஒன்றோ அல்ல. தேவனிடம் இருந்து வரும் தாராளமான பரிசு இது. இது நீங்கள் தேவனிடமிருந்து பெறக்கூடிய பெரிய நித்திய பரிசு.

கொடுப்பதில் சமநிலை

“சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக”. 2 கொரிந்தியர் 8:15

  • எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், சிறியவர்களாக இருந்தாலும் அவர்களின் தேவைகளை சந்திப்பதில் தேவனை எந்த அளவு விசுவாசிக்கலாம் என்பதை பவுல் விளக்குகிறார். யாத்திராகமம் அதிகாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருந்த பொழுது, அவர்களால் தங்களுக்குப் போதுமான உணவைக் கண்டுபிடிக்க முடியவில்லை, அதனால் அவர்கள் தேவனிடம் கூக்குரலிட்டார்கள். தேவன் வானத்திலிருந்து, மன்னா என்று அழைக்கப்பட்ட உணவை வழங்கினார்.

  • தேவன் ஜனங்களுக்கு மன்னாவை வழங்கினார். அது மிகவும் மெல்லியதாக, வெள்ளை செதில்களாக இருந்தது. அவை ஒவ்வொரு நாள் காலையிலும் தரையில் விழும். தேவன் இஸ்ரவேலர்களிடம் அந்த நாளுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு மட்டும் சேகரிக்கச் சொன்னார். சிலர் மற்றவர்களை விட அதிகமாக சேகரித்தனர், ஏனென்றால் அவர்களுக்கு தேவை அதிகமாக இருந்தது. சிலர் கொஞ்சம் சேகரித்தனர். ஆனால் ஒருவரிடமும் அதிகமாகவும் இல்லை, ஒருவரிடமும் குறைவாகவும் இல்லை. அவரவர்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவே இருந்தது. அவர், "நீங்கள் அங்கே எதையும் வைக்காதீர்கள்" என்று சொல்லியிருந்தார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், “நான் கொடுப்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், ஆனால் எதையும் மீதம் வைக்காதீர்கள். அதை சேமித்து வைக்காதீர்கள்" என்று கூறினார்.

  • தொடங்குவதற்கு இது ஒரு நல்ல இடம் என்று பவுல் கூறினார். உங்களிடம் உள்ளதை வைத்துத் தொடங்குங்கள். தேவன் உங்களுக்கு மிகுதியாக கொடுத்துள்ளார்; அந்த மிகுதியிலிருந்து அவருடைய ஜனங்களை கவனித்துக்கொள்ள பயன்படுத்துங்கள். நாம் கொடுக்கும் காரியங்களை முறையே பராமரிப்பவர் என்று தேவனை விசுவாசிக்கலாம் என்று பவுல் வலியுறுத்துகிறார்.

சுருக்கம்

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்.

  • வற்புறுத்தலினால் கொடுக்கிறீர்களா? அல்லது உற்சாகமாக கொடுக்கிறீர்களா?

  • நீங்கள் கொடுக்கும்போது, ​​வாஞ்சையாய் கொடுக்கிறீர்களா? அல்லது வெறுப்புடன் கொடுக்கிறீர்களா?

  • தேவனுக்கு கொடுப்பதை முதலீடு மாதிரி கருதுகிறீர்களா, அதாவது, நீங்கள் கொடுப்பதை 4 மடங்காக உங்களுக்குத் திருப்பித் தருவார் என்ற எதிர்பார்ப்புடன் கொடுக்கிறீர்களா?

  • உங்கள் ஆசீர்வாதத்தின் ஆதாரம் எங்கிருந்து வந்தது என்று நீங்கள் உணர்கிறீர்கள்? உங்கள் சொந்த பலத்தில் வந்ததாக நினைக்கிறீர்களா? அல்லது தேவனிடமிருந்தது அனைத்தையும் பெற்றதாக நினைக்கிறீர்களா? இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கும்போது நேர்மையாக இருங்கள், ஏனெனில் நம்மில் பெரும்பாலோர் இது தேவனிடமிருந்து வந்ததாகக் கூறுகிறோம், ஆனால் அவர்களின் சொந்த முயற்சியால் பெற்றதாக அவர்களின் செயல்கள் கூறுகின்றன.

  • இந்த செய்தியைப் படிக்கும்போது, தேவன் நமக்குக் கொடுத்ததை இன்னும் அதிகமாக திருப்பிக் கொடுக்க அவருடைய கிருபை உங்களைத் தூண்டும்படிக்கு நான் ஜெபித்துக் கொள்கிறேன்.

17 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page