top of page
Kirupakaran

ஐந்து தூண்கள்


ஒரு கட்டிடமானது அஸ்திவாரத்தின் மீது வலுவாக நிற்கிறது, ஆனால், பாரத்தை சுமப்பதற்கு அதற்கு தூண்கள் மிகவும் முக்கியம். இது இல்லாமல் கட்டமைப்பை நன்றாக வைத்திருக்க முடியாது. அதுபோலவே நமது கிறிஸ்தவ வாழ்விலும் இயேசுவே அனைத்து ஆவிக்குரிய நடைகளுக்கும் அடித்தளமாக இருக்கிறார். அவர் மரணத்தை வென்று, எல்லாவற்றிலும் வெற்றி சிறந்தார். அதன் பிறகு இவ்வுலகில் ஊழியத்தின் பணிகளுக்காகத் தூண்களை நிறுவினார்.


மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். எபேசியர் 4:11-13


இயேசு நமக்காக நிறுவிய இந்த ஐந்து தூண்கள் யாவை? அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.


இந்தப் பதிவில், இந்த ஐந்து தூண்கள் எதைக் குறிக்கின்றன என்பதைப் பற்றி சுருக்கமாக அறிந்துகொள்வோம். தேவன் ஏன் அவற்றை நிறுவினார்? அவற்றுக்கான நோக்கம் என்ன? நாம் என்ன செய்ய அழைக்கப்பட்டுள்ளோம்? ஆகிய எல்லாவற்றையும் இங்கே பார்க்கலாம்.

நாம் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் என்று சொல்லும்போது, உலகில் கிறிஸ்தவர்களாக அங்கீகரிக்கப்படுகிறோம். ஆனால் ஆவிக்குரிய ரீதியில் நாம் கிறிஸ்துவின் சபையில் அவரது சரீரத்தின் ஒரு அவயமாக இருக்கிறோம். திருச்சபை மேலும் வளர, அவர் "அப்போஸ்தலர்கள்", "தீர்க்கதரிசிகள்", "சுவிசேஷகர்கள்", "மேய்ப்பர்கள்" மற்றும் போதகர்கள்" ஆகிய ஐந்து தூண்களைக் கொடுத்துள்ளார். இந்த ஐந்து தூண்களும் கிறிஸ்துவின் சரீரத்தில் இருந்து கட்டப்பட வேண்டும். இந்த தூண்களை கட்டுவது வெளியில் இருப்பவர்களுக்காக அல்ல.


அப்போஸ்தலர்கள்

  • வெப்ஸ்டர் (Webster) அகராதியில் அப்போஸ்தலர் என்பதற்கு "ஒரு பணிக்காக அனுப்பப்பட்டவர்" என்று அர்த்தம் கூறப்பட்டுள்ளது.

  • பரிசுத்த ஆவியானவர் தனக்குள் வாழ்கிறார் என்பதை உணர்ந்து அதை இருதயத்திலும் மனதிலும் விசுவாசிக்கிறவர்களைப் பார்த்து "நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்" என்று பவுல் கூறுகிறார். அப்பொழுது அவருக்கு அப்போஸ்தலரின் மனநிலை இருக்கிறது.

  • நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். 1 கொரிந்தியர் 12:27-28

  • கிறிஸ்து உயிர்த்தெழுந்தார், அவர் உங்களில் வாசம் செய்கிறார், உங்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார், நீங்கள் செய்யும் அனைத்தும் தேவனின் ஆவியால் செய்யப்படுகிறது என்ற விசுவாசம் உங்களுக்கு இருக்க வேண்டும்.

  • பவுல் இயேசுவின் அப்போஸ்தலராக இருந்தார் ~ அவர் எப்படி அப்போஸ்தலரானார் என்பதைக் குறித்து சாட்சியமளிக்கிறார்.

    • மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை. கலாத்தியர் 1:11-12,15,17-19

    • "அவர், சிலரை அப்போஸ்தலராகவும் … ஏற்படுத்தினார்” என்று வசனம் கூறுவது போல் - இங்கே பவுல் நமக்கு சாட்சியமளிக்கிறார், "என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்"

  • “நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்” - தேவன் தமது கிருபையால் இந்த ஈவை அளிக்கிறார். இது பவுலுக்கு மட்டுமல்ல, அதே கிருபை இன்று நமக்காகவும் செயல்படுகிறது. நாம் அவற்றைப் பற்றிக் கொண்டு அவருடைய மகிமைக்காகப் பயன்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். நீங்கள் கிறிஸ்துவின் சரீரம், அவருடைய பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டு, அவருடைய சித்தத்தின்படி காரியங்களைச் செய்கிறீர்கள் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால், கிறிஸ்துவுக்குள் அப்போஸ்தலர்களாக ஆவதற்கு நாம் வழிநடத்தப்பட முடியும்.

  • பவுலுக்குக் கொடுக்கப்பட்ட தேவ கிருபை தான் நமக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் உலகத்திலிருந்து பிரிந்து கிறிஸ்துவின் சரீரத்திற்காக வாழ வேண்டும். உலகத்திற்கும் கிறிஸ்துவிற்குமாக இரண்டு வாழ்க்கை வாழ்ந்தால், நாம் விபச்சார வாழ்க்கை வாழ்கிறவர்களாயிருப்போம். அப்பொழுது தேவனுக்கு விரோதமாகி, அவருடைய கிருபையிலிருந்தும் நமக்கான அவருடைய சித்தத்திலிருந்தும் விழுந்துவிடுவோம். விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். யாக்கோபு 4:4

தீர்க்கதரிசிகள்

  • அடிப்படையில், ஒரு தீர்க்கதரிசி தேவனின் சார்பாக பேசும் ஒரு தொடர்பாளராக இருக்கிறார் - கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும். யாத்திராகமம் 7:1-2

  • ஆம், தேவன் தீர்க்கதரிசிகள் மூலம் பேசுகிறார் - பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். எபிரேயர் 1:1-2

  • பிலேயாமின் தீர்க்கதரிசனத்தைப் பார்ப்போம் - தீர்க்கதரிசி என்பதற்கான விளக்கம் - தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவஆவி அவன்மேல் வந்தது. அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண் திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது, எண்ணாகமம் 24:2-4

    • கண்களினால் தெளிவாகப் பார்ப்பவர், தேவனின் வார்த்தையைக் கேட்பவர், சர்வவல்லவரின் தரிசனத்தைக் காண்பவர், அதைக் கண்டு தாழ விழுபவர், அப்பொழுது கண்கள் திறக்கப்படும்.

  • எரேமியா தீர்க்கதரிசி

    • உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர். எரேமியா 15:16-17

    • 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்குப் பின்னால் வரப்போகிற நிகழ்வுகளை முன்னறிவிப்பதைக் காட்டிலும், தங்கள் சொந்த தலைமுறைக்கு தேவனுடைய வார்த்தையைக் கொண்டு செல்வதே தீர்க்கதரிசிகளின் தலையாய பணியாக இருந்தது.

    • முன்னறிவிப்பு என்பது தேவனின் ராஜ்யத்தை மையமாகக் கொண்டு, சர்வவல்லமையுள்ளவரால் வெளிப்படுத்தப்படுகிற எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய அறிவிப்பாகும்.

    • முன்னோக்கிச் சொல்வது என்பது தெய்வீகத் தூண்டுதல் மூலம் மட்டுமே வெளிப்படுத்தக்கூடிய எதையும் தெரியப்படுத்துவது, இயற்கைக்கு அப்பாற்பட்ட சித்தத்தை அறிவிப்பது, தேவ திட்டங்களை விளக்குவது, மனிதகுலத்தின் மீது தாக்கத்தை உண்டாக்கும் நோக்கம் கொண்ட தேவ செய்தியை பகிரங்கமாக அறிவிப்பதும் ஆகும். அதைக் கண்டுபிடித்து விளக்கக்கூடியவர்கள் தீர்க்கதரிசிகள் மட்டுமே.

    • முன்னோக்கிச் சொல்வது - ஆமோஸ் தேவனின் நீதியை வலியுறுத்துகிறார். நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். ஆமோஸ் 5:14-15

  • நாம் அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றி நடக்கும் வரை, தேவன் நம்மைப் போன்ற அன்றாட மக்களுக்கு, அவருடைய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் திறனைக் கொடுக்க விரும்புகிறார். பழைய ஏற்பாட்டில் உள்ளவர்களுக்கு மட்டும் அவர் இந்த ஈவை ஒதுக்கவில்லை. புதிய தீர்க்கதரிசிகளை உருவாக்குவதற்கு அவர் தயாராக இருக்கிறார். அவருடைய சரீரத்தின் ஒரு அவயமாக, அவருடைய வழிகாட்டுதலைப் பெறுவதும், இந்த தீர்க்கதரிசன ஆவியுடன் அவர் நம்மை மேம்படுத்த விரும்புகிறாரா என்பதைத் தீர்மானிப்பதும் நம்முடைய பொறுப்பு.

சுவிசேஷகர்கள்

  • அப்போஸ்தலர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் வசனத்தை அறிமுகப்படுத்துவதிலும் அவற்றை விளக்குவதிலும் கவனம் செலுத்துகின்றனர்.

  • சுவிசேஷகர்கள் மற்றும் மேய்ப்பர்கள்-போதகர்கள் வசனத்தை தனிப்பட்ட வாழ்க்கையில் பயன்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளனர்.

  • சுவிசேஷகர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பத்தைக் கையாள்கிறார்கள்.

  • தேவனின் ஆவி "புதிய சிருஷ்டியை" உருவாக்குகிறது. சுவிசேஷகருக்கு அவர் / அவள் தேவனின் ராஜ்யத்தில் பிறந்ததைப் பார்க்கும் பாக்கியம் உள்ளது.

  • சுவிசேஷகர்கள் மகப்பேறு மருத்துவர்களைப் போன்றவர்கள், புதிய கிறிஸ்தவர்களை உலகிற்குக் கொண்டுவர உதவுகிறார்கள்.

  • இந்த ஆண்களும், பெண்களும் மிஷனரிகளாக செயல்படுகிறார்கள், நற்செய்தியை தொலைதூரத்திற்கு எடுத்துச் செல்கிறார்கள். மேலும், தேவாலயங்களை ஸ்தாபிக்கிறார்கள். ஆனால் தேவாலயத்தை போதகர்கள்-மேய்ப்பர்களின் மேம்படுத்தும் பணிக்கு மாற்றி விட்டுவிட்டு அறுவடைக்கு புதியதாக இருக்கும் பிற இடங்களுக்குச் செல்கிறார்கள்.

  • இந்தியாவில் இந்த ஊழியத்தை செய்த சில ஆரம்பகால மிஷனரிகள் இருந்தனர், இதன் மூலம் நாம் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்.

  1. அப்போஸ்தலராகிய புனித தோமா : இயேசுவின் பன்னிரண்டு அப்போஸ்தலர்களில் ஒருவரான தோமா, இந்தியாவிற்கு வந்து, கிறிஸ்தவத்தின் ஆரம்பகால பரவலில் முக்கிய பங்கு வகித்ததாக பாரம்பரியம் கூறுகிறது.

  2. வில்லியம் கேரி : "அருட்பணி இயக்கங்களின் தந்தை" என்று அழைக்கப்படும் கேரி, 1793 இல் இந்தியாவிற்கு வந்தார். மேலும் செரம்பூர் மிஷனை நிறுவி, வேதத்தை ஏராளமான இந்திய மொழிகளில் மொழிபெயர்த்த பெருமைக்குரியவர்.

  3. அன்னை தெரசா : கத்தோலிக்க கன்னியாஸ்திரியாகிய அன்னை தெரசா, இந்தியாவில் உள்ள ஏழைகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சேவை செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பல்வேறு நாடுகளில் செயல்படும் மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி (Missionaries of Charity) என்ற ஸ்தாபனத்தை நிறுவினார்.

மேய்ப்பர்கள் - போதகர்கள்

  • போதகர்கள் ஒரு தேவாலயத்திற்கு மேய்ப்பர்களைப் போன்றவர்கள். அவர்கள், சபை மக்களை வழிநடத்துவதிலும் வழிகாட்டுவதிலும் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர்.

  • சபை போதகர்கள் அதிகாரபூர்வமான நபர்களாக அல்லாமல் உதாரணத்துவமாக வழிநடத்த வேண்டும். அவர்கள் உபதேசிப்பதை அவர்கள் பின்பற்றுவதன் மூலம், மற்றவர்களையும் அவ்வாறே செய்ய தூண்டுகிறார்கள். ஆனால் அவர்கள் கற்பிப்பதை அவர்கள் நடைமுறைப்படுத்தவில்லை என்றால், தங்கள் அதிகாரத்தை இழக்கிறார்கள்.

  • போதகர்களின் அதிகாரம் அவர்களின் ஆவிக்குரிய தொடர்பிலிருந்து வருகிறது. அந்த தொடர்பை அவர்கள் இழக்கும்போது, தங்கள் அதிகாரத்தையும் இழக்கிறார்கள். வழிநடத்துவதற்கான அதிகாரம் அவர்களின் பதவியின் அடிப்படையில் அல்லாமல், தேவனுடனான அவர்களின் தனிப்பட்ட உறவு மற்றும் அவர்களுக்கு இருக்கும் வரங்களின் அடிப்படையிலேயே இருக்கிறது.

  • கற்பிக்கும் போதகர்கள் கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய ஆரோக்கியத்திற்கான மருத்துவர்களைப் போலவே இருக்கிறார்கள். அவர்கள் ஒரு நல்ல "ஆவிக்குரிய உணவை" உறுதி செய்கிறார்கள், "ஆவிக்குரிய குறைகளை" நிவர்த்தி செய்கிறார்கள் மற்றும் அதிகமான "ஆவிக்குரிய செயல்பாடுகளை" ஊக்குவிக்கிறார்கள். விசுவாசிகளின் விசுவாசத்தை வளர்ப்பதில் அவர்கள் பங்கு வகிக்கிறார்கள்.

  • மேய்ப்பர்களும் - போதகர்களும், ஒரு கட்டட வடிவமைப்பாளரின் திட்டத்தைப் பின்பற்றி கட்டிடத்தில் ஒரு கல்லை வடிவமைத்து சரியான இடத்தில் வைக்கும் கொத்தனார் போன்றவர்கள்.

இந்த ஐந்து தூண்களின் நோக்கம்


மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவானவளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும் வரைக்கும், எபேசியர் 4:11


1. கிறிஸ்து இந்த தூணின் தலை மற்றும் அஸ்திபாரம்

  • "அவர் .... ஏற்படுத்தினார் - அவர்களின் பலம் கிறிஸ்துவிடமிருந்து வருகிறது. இந்த ஐந்து தூண்களும் அவருடைய மகிமைக்காக வேலை செய்ய கொடுக்கப்பட்டவையே அன்றி தனிப்பட்ட ஆதாயத்திற்காக கொடுக்கப்பட்டவை அல்ல. இது தேவனை மேம்படுத்துவதாகும். ".... கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும்," ~ “தேவாலயம்". (எபேசியர் 4:12)

2. கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தில் ஒற்றுமை - "மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி". எபேசியர் 4:11

  • இங்கே பவுல் பேசும் விசுவாசம் நம்புவதைப் பற்றியோ அல்லது கீழ்ப்படிவதைப் பற்றியோ அல்ல; இது கிறிஸ்தவ போதனைகள் மற்றும் கோட்பாடுகளைப் பற்றியது.

  • கொரிந்து தேவாலயத்திற்கு பவுல் இந்தச் செய்தியைப் பேசுகிறார் : புரிதல் மற்றும் ஆவிக்குரிய வளர்ச்சி ஜனங்களிடம் இல்லாதபோது சபை ஒற்றுமையின்மை ஏற்படுகிறது. விசுவாசிகள் சரியான போதனையைப் பெற்று, சேவையில் ஈடுபட்டு, ஆவிக்குரிய ரீதியில் வளரும்போது, விசுவாசத்தில் ஒற்றுமை இயல்பாகவே வருகிறது . பகிர்ந்து கொள்ளப்பட்ட விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டால் மட்டுமே ஐக்கியம் உண்மையானதாக இருக்கும். எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும். 1 கொரிந்தியர் 3:10-15

3. தேவனுடைய குமாரனைப் பற்றிய அறிவு - "மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும்" எபேசியர் 4:11

  • தேவனின் அறிவு புரிந்து கொள்ள முடியாத இரகசியம். இதை யாரும் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை, புரிந்து கொள்ளவும் முடியாது. அவருடைய கிருபையே நம்மை மேலும் அறிய வைக்கிறது.

  • பவுல் தேவனைப் பற்றிய தனது அறிவு தேவனின் கிருபையின் மூலமும் கிறிஸ்துவின் வெளிப்பாட்டின் மூலமும் வந்தது என்கிறார். இது மற்ற தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்கு விலக்கி வைக்கப்பட்டிருந்தது. உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே; அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார். இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன். அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. எபேசியர் 3:2-6

  • இது நீங்கள் விசுவாசத்தில் வளரும் ஒரு அற்புதமான பகுதியாகும். மனம் தளராதீர்கள் ஏனென்றால் தேவ குமாரனைப் பற்றிய ஆழமான புரிதலைப் பெறுவதற்கு வாழ்நாள் முழுவதும் எடுக்கும், நாம் அவரை நேரில் சந்திக்கும் வரை அது நிறைவடையாது. தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள்!. பவுல் தனது அனுபவத்தினால் இதை சிறப்பாக விளக்குகிறார். தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன். உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும் பொருட்டாக, இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எபேசியர் 3:7,10-11

4. குழந்தைகளில் இருந்து பெரியவர்களாக நம்மை முதிர்ச்சியடையச் செய்ய - ".... பூரணபுருஷராகும் வரைக்கும்" எபேசியர் 4:11.

  • “பூரணபுருஷராகும் வரைக்கும்” என்பது குழந்தைகளாயிருப்பதிலிருந்து அப்போஸ்தலர் / தீர்க்கதரிசி / சுவிசேஷகர் / மேய்ப்பர் / போதகர் போன்ற பொறுப்புகளைப் பெறுவதற்கு நாம் முதிர்ச்சியடைவதைக் குறிக்கிறது.

  • நாம் அனைவரும் ஐந்து தூண்களைப் பெற வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். ஆனால் எதைக் கொடுக்க வேண்டும் என்பதை நம்முடைய ஆசைகள் மற்றும் வலிமையின் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுப்பார். சிலர் சுவிசேஷத்திலும், சிலர் போதிப்பதிலும், சிலர் ஜெபத்திலும் தீர்க்கதரிசனத்திலும் சிறந்து விளங்குவதைக் காணலாம். இயேசுகிறிஸ்துவின் சரீரத்தில் உள்ள நம் ஒவ்வொருவருக்கும் அவருடைய திட்டத்தின் / சித்தத்தின்படியே இது நடக்கிறது.

  • நாம் நமது ஓட்டத்தை முடித்துவிட்டு அவரிடம் செல்லும்போது நாம் தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்பட வேண்டும் என்பதற்காகவே எல்லாம் செய்யப்படுகிறது. கிறிஸ்துவின் பரிபூரணத்தை நாம் அறிவோம், மேலும் அவருடைய படைப்பின் நோக்கத்தின்படி பரலோகத்தில் பயன்படுத்தப்படும்படி அவருடைய பரிசுத்தத்தை அணிந்திருக்கிறோம்.

5. கடைசி நாட்களில் இருந்து பாதுகாப்பு - நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், எபேசியர் 4:14

  • பவுல் சந்தித்ததைப் போன்ற போலியான கிறிஸ்தவர்கள் உள்ளனர் - அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; 2 கொரிந்தியர் 11:26

  • கலாத்தியர் சபைக்கு பவுல் எச்சரித்ததைப் போன்ற போலியான சுவிசேஷங்கள் உள்ளன - நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். கலாத்தியர் 1:8

  • போலி ஊழியக்காரர்கள் உள்ளனர் - அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். 2 கொரிந்தியர் 11:14-15

  • போலி உபதேசங்களும் இருக்கும் - ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 1 தீமோத்தேயு 4:1

  • இந்தப் போலிகள் அனைத்தும் சாத்தான் வழிபாட்டையும் முழு உலகத்தின் சேவையையும் ஏற்றுக்கொள்ளும் அந்திகிறிஸ்துவாகியபோலி கிறிஸ்துவின் தோற்றத்துடன் முடிவடையும்.

    • நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 2 தெசலோனிக்கேயர் 2:8-10

    • உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 13:8

  • கடைசி நாட்களில் நாம் படிக்க வேதப்புத்தகம் இருக்காது. அந்திகிறிஸ்துவின் நாட்களில் நம்மால் ஜெபிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாம் அவரைப் பற்றும் அறிவில் வலுவாக இருப்பதையும், தவறான போதகர்களிடம் சிக்காமலும், கெட்டுப்போகாமல் இருப்பதையும் உறுதிசெய்வதே தேவனின் திட்டம்.

நாம் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருப்பதால், தேவன் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டு, அவரிடம் திரும்பி, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற அவருடைய சரீரத்தின் அவயமாக இருப்போம். நாம் அவரிடம் நெருங்கி வர முன்வர வேண்டும், அவர் நம் அக்கிரமங்களை நீக்கி நம்மை நல்வழிப்படுத்தி, அவருடைய கிருபையை அளிப்பார்.


தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4:8-10


வசனம் அதை தெளிவாக சொல்கிறது, நாம் தான் செயல்பட வேண்டும்.


நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார். வெளிப்படுத்தின விசேஷம் 3:21-22

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page