நம் ஒவ்வொருவருக்கும் அன்றாட வாழ்வில் ஏதாவது ஒன்றைச் செய்யும்போது எதிர்பார்ப்புகள் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். மிகவும் சிறப்பான ஏதாவது ஒன்று நம்மை ஆச்சரியப்படுத்தும் என்று நாம் எதிர்பார்க்கும்போது, நம் வாழ்வில் இதுபோன்ற ஒரு சம்பவம் நமக்கு நிகழும் என்று நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. என் வாழ்க்கையில் எனக்கு இந்த அனுபவங்கள் உண்டு. நான் ஆன்மீக வலைப்பதிவு எழுதுவேன் அல்லது தேவனுக்காக பிரசங்கம் செய்வேன் என்று நான் நினைத்ததில்லை. அவை நியமிக்கப்பட்ட ஊழியக்காரர்களுக்கு மட்டுமே என்னைப் போன்று வேலைக்குச் செல்பவர்களுக்கு அல்ல என்று நான் எப்போதும் எண்ணியிருந்தேன். அவருடைய காரியங்களுக்கு என்னை பயன்படுத்துவதற்காக அவருக்கே கனம், மகிமை தந்து அவரைத் துதிக்கிறேன்.
மீனவராக இருந்த பேதுருவிற்கு அவர் இதே போன்று செய்த ஒரு சம்பவத்தை லூக்காவில் பார்க்கிறோம். தேவன் எதிர்பாராதவரை தேர்ந்தெடுத்து முதல் சீடராக்கினார். இச்சம்பவத்தில் இருந்து கற்றுக்கொள்ள பல ஆவிக்குரிய விஷயங்கள் உள்ளன.
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப்போகவேண்டும் என்றான். அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். லூக்கா 5:1-11
பெரிய வெளிப்பாடு வருகிறது…
முற்றிலும் எதிர்பாராத வழியில்
பேதுருவிற்கு தனது முழு வாழ்க்கையும் மாறப்போகிறது என்று தெரியவில்லை. தேவன் அசாதாரணமான முறையில் செயல்படுகிறார். நாம் வாழ்க்கையில், வியாபாரத்தில் வழக்கம் போல காரியங்களை செய்து கொண்டிருக்கிறோம். திடீரென்று நம் நடைகளைத் திசைதிரும்பும்படி கர்த்தர் தலையிடுகிறார். இதை முன்கூட்டியே கணிக்க முடியாது என்பது என் சொந்த அனுபவம். இயேசு யோவான் 3:8 ல் சுட்டிக்காட்டியபடி, ஆவியானவர் அவர் விரும்பும் இடத்திற்கு செல்கிறார். "ஆழ்கடலுக்குச் செல்ல" அழைப்பு எப்போது வரும் என்று உங்களுக்குத் தெரியாது.
தினசரி கீழ்ப்படிதலின் போக்கு
மீனவர்கள் மீன்பிடிப்பார்கள். அவர்கள் அதைத்தான் செய்கிறார்கள். முதல் நூற்றாண்டில், அவர்கள் இரவில் கலிலேயா கடலுக்குச் சென்று தண்ணீரில் வலைகளை வீசி, இரவு முழுவதும் மீன்பிடித்து, பின்னர் விடியற்காலையில் கரைக்கு வந்தனர். பேதுருவும் மற்றவர்களும்“வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்” என்று வேதம் கூறுகிறது. அதாவது நீண்ட இரவு முடிந்து, வலைகளை பராமரித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது தான் அடுத்த இரவு அவர்களால் மீன் பிடிக்கச் செல்ல முடியும்.
ஆசிரியர்கள் கற்பிக்கிறார்கள். பாடகர்கள் பாடுகிறார்கள். சமையல்காரர்கள் சமைக்கிறார்கள். எல்லோருக்கும் அப்படியே செல்கிறது. தேவனின் சித்தத்தைக் கண்டறிய நீங்கள் எங்கிருந்து தொடங்குகிறீர்கள்? தேவ சித்தத்தை இப்போதே செய்வது தான், எதிர்காலத்திற்கான தேவசித்தத்தை நீங்கள் கண்டறியும் வழி.
நம்மில் பலர் அந்த உயரமான மலை உச்சி அனுபவங்களுக்காக, அந்த உணர்ச்சிகரமான தருணங்களுக்காக, தேவன் நமக்கு உண்மையாகத் தோன்றும் தருணங்களுக்காகக் காத்திருக்கிறோம். ஏறக்குறைய நாம் அவரை நெருங்கித் தொடலாம் என்பது போல. "தேவனே, உமது விருப்பத்தை எனக்குக் காட்டுங்கள்" என்று நாம் கூறும்போது, "ஆண்டவரே, எனக்கு உணர்வையும், நுண்ணறிவையும்,ஆவிக்குரிய வெளிப்பாட்டையும் கொடுங்கள்" என்ற அர்த்தத்திலேயே கூறுகிறோம். அதற்கு, “எனது சித்தத்தை நான் ஏற்கனவே உங்களிடம் காட்டிவிட்டேன். இப்போது, எழுந்து அதைச் செய்!” என்று அவர் கூறுகிறார்.
கீழ்ப்படிதலின் சிறிய படிக்குப் பிறகே..
கடற்கரையில் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசுவதற்கு, ஒரு வகையான மிதக்கும் பிரசங்க மேடையாக பயன்படுத்திக் கொள்வதற்காக இயேசு பேதுருவிடம் முதலில் படகைக் கேட்டார். வலைகளை சுத்தம் செய்வதில் மும்முரமாக இருந்த பேதுருவிற்கு அது சரியாகத் தெரிந்தது. உண்மையில், இது ஒரு சிறிய விஷயம். ஆனால் கீழ்ப்படிதலின் அந்தச் சிறிய படியே பேதுருவின் வாழ்க்கையை மாற்றிய அதிசயத்திற்கு வழிவகுத்தது. அந்தப் பெரிய அதிசயங்கள் எப்போது அருகே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. ஆனால் தினசரி கீழ்ப்படிதலின் பாதையில் நாம் பயணிக்கும்போது அவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பேதுரு தம் படகை இயேசு மிதக்கும் பிரசங்க மேடையாக பயன்படுத்துவதற்கு ஒப்புக்கொண்ட பிறகு, இயேசு இப்போது பேதுருவை நோக்கி, “ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்று கூறி விசுவாசத்தின் ஒரு பெரிய படிக்கு சவால் விடுகிறார். எனவே முதலில் நாம் சிறிய விஷயங்களில் கீழ்ப்படிய வேண்டும். தினசரி கீழ்ப்படிதலில் இருந்து, நமக்கு முன்னால் ஒரு பெரிய சவாலை நாம் காணலாம்.
லூக்கா 5:1-11 கிறிஸ்து எவ்வாறு பேதுருவை தம்முடைய சீடராக அழைத்தார் என்பதை நமக்குக் கூறுகிறது. இந்தக் கதையின் போக்கு மிகவும் எளிமையானது. முதலில் பேதுரு மீன் பிடித்தார், பிறகு இயேசு பேதுருவைப் பிடித்தார், பிறகு பேதுரு மனிதர்களைப் பிடித்தார். இவை எல்லாம், நீண்ட, கடினமான இரவுக்குப் பிறகு விரக்தியடைந்த ஒரு மீனவர் தனது வலைகளை சுத்தம் செய்வதில் இருந்து தொடங்குகிறது.
கற்றுக்கொள்ள வேண்டிய ஆவிக்குரிய பாடங்கள்
தேவை உணர்வு : வசனம் 1-3, 5a
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். லூக்கா 5:1-3,5
மீன்பிடிப்பது ஒரு கடினமான வேலை. பேதுரு, அந்திரேயா, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோர் கலிலேயா கடலில் ஆண்டு முழுவதும் மீன்பிடித்தனர். அவர்கள் தங்கள் மீன்களை உள்நாட்டிலோ அல்லது உப்பு சேர்த்து பதப்படுத்தி ஸ்பெயின் போன்று தூரத்தில் உள்ள நாடுகளுக்கோ விற்றனர். அந்த வழியில் பணக்காரர் ஆக முடியாது, ஆனால் ஒரு கடின உழைப்பாளி தனது குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும்.
இப்போது விடியற்காலமாகிவிட்டது, பேதுருவும் மற்றவர்களும் களைப்பாகவும், முற்றும் சோர்வடைந்த மனநிலையிலும் இருந்தனர். இப்போது வலைகளை சரிசெய்வதில் மும்முரமாக இருந்தனர். முந்தின இரவில் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியால், நேரத்தை எடுக்கும் இந்த வேலை அவர்களுக்கு கடினமாக இருந்தது.
தனிப்பட்ட தோல்வியைச் சகித்துக்கொள்ள அனுமதிப்பதன் மூலம் தேவன் இன்னும் நம்மை அவருடைய அழைப்புக்கு தயார்படுத்துகிறார்.
பேதுருவிடம் படகைப் பயன்படுத்தலாமா என்று இயேசு கேட்டபோது, அவர் உடனே ஒப்புக்கொள்கிறார். அவருக்கு இயேசுவைத் தெரியும். அவரைப் பெரிதும் போற்றுபவர். ஆகவே, இயேசு தனது படகை பிரசங்க மேடைக்கு பயன்படுத்த விரும்பும்போது, அந்த வேண்டுகோளை நிறைவேற்ற பேதுரு பெருமைப்படுகிறார்.
எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. இயேசு, பேதுரு தோற்ற இடத்திற்கு வந்து, தமது வார்த்தையைப் பிரசங்கிக்க அதைப் பயன்படுத்துகிறார். சாதாரணமானதை எடுத்து புனிதமாக்குகிறார். அவர் ஒரு எளிய மீன்பிடி படகை ஒரு பெரிய அதிசயத்திற்கு அமைப்பாக பயன்படுத்துகிறார்.
இந்தக் கதையில் எதுவும் தற்செயலாக நடக்கவில்லை. அனைத்தும் நமக்கு ஒரு முக்கியமான உண்மையைக் கற்பிப்பதற்காகவே நடந்தது.“தனிப்பட்ட தோல்வியைச் சகித்துக்கொள்ள அனுமதிப்பதன் மூலம் தேவன் இன்னும் நம்மை அவருடைய அழைப்பிற்கு தயார்படுத்துகிறார்”. நாம் அவருடைய தேவையை உணரும் வரை, அவரைப் பின்பற்றத் தயாராக இருக்க மாட்டோம். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் தன்னிறைவு பெற்றவர் என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு ஏன் கிறிஸ்து தேவை? நாம் அவரால் பெரிதும் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு நம் தன்னம்பிக்கையை அகற்ற வேண்டும். கிறிஸ்துவின் அழைப்புக்கு பதிலளிக்கத் தயாராகும் முன்பே பேதுரு உடைந்து போயிருந்தார்.
கீழ்ப்படிதலுக்கான சவால் : வசனம் 4-5
அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். லூக்கா 5:4,5
இயேசுவின் வார்த்தைகளில் கட்டளை மற்றும் வாக்குறுதி இரண்டும் அடங்கியுள்ளன. "ஆழமான தண்ணீருக்குள் சென்று, வலைகளை கீழே போடுவோம், பிறகு என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என்று இயேசு சொல்லவில்லை. பேதுரு கீழ்ப்படிந்தால் மீன்களைப் பிடிப்பார் என்று இயேசு வாக்குறுதி அளித்தார். ஒரு நீண்ட பலனற்ற இரவு மீன்பிடிக்குப் பிறகு, பேதுருவிற்கு இதை நம்புவது கடினமாக இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.
அந்த நேரத்தில் அர்த்தமற்றதாக தோன்றினாலும் அப்படிப்பட்ட கட்டளைகளை தேவன் ஒருபோதும் கொடுப்பதில்லை.
இதிலிருந்து சில பயனுள்ள பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்.
அந்த நேரத்தில் அர்த்தமற்றதாக தோன்றினாலும் அப்படிப்பட்ட கட்டளைகளை அவர் ஒருபோதும் கொடுப்பதில்லை.
தயக்கமின்றி தமக்குக் கீழ்ப்படிவோரை தேவன் ஆசீர்வதிக்க நினைக்கிறார்.
பொதுவாக, அவருடைய மிகப்பெரிய அற்புதங்களுக்கு நமது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.
சந்தேகப்படுவதற்கு பேதுருவிற்கு நிச்சயமாக காரணங்கள் இருந்தன. ஒரு தொழில்முறை மீனவனாக, அவருக்கு ஏரி பற்றி நன்கு தெரியும். சில சமயங்களில் சிறந்த மீனவர்கள் கூட தோற்றுப் போவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார். "மன்னித்துக் கொள்ளுங்கள், ஆண்டவரே, ஆனால் அவ்வளவு சிரமப்படும் அளவிற்கு அதற்கு மதிப்பு இல்லை" என்றோ அல்லது "இதில் நான் கைதேர்ந்தவன்" என்றோ அவர் சொல்லியிருக்கலாம். இப்போது "மீன் பிடிக்க செல்ல வேண்டும் அல்லது கைவிடவேண்டும்", இதில் ஒன்றை முடிவெடுக்க வேண்டிய நேரம் வருகிறது. பேதுரு என்ன செய்தார்? “ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்” என்றார்.
"உம்முடைய வார்த்தையின்படியே" என்று பேதுரு சொல்லும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். King James பதிப்பில், "இருப்பினும், உம்முடைய வார்த்தையின் படி" என்ற சொற்றொடர் உள்ளது. இது ஞானிகளின் கூற்று. நிலைமை இருண்டு போனதாக இருக்கலாம், உலகம் நமக்கு எதிராக போராடலாம், சூழ்நிலைகள் நம்மை அடக்கலாம், மேலும் நமது அச்சங்கள் நம்மை மூழ்கடிக்கலாம். ஆனால் தேவன் பேசும் போது அவருடைய பிள்ளைகளாகிய நாம், "இருப்பினும், உமது வார்த்தையின் படி" என்று கூறியபடி வல்லமையான தேவனுக்குக் கீழ்ப்படிந்து செல்கிறோம். நடுத்தர வயது ஆபிரகாம் "இருப்பினும், உமது வார்த்தையின்படி" என்று இதற்கு மேல் எதுவும் இல்லாமல் பாலைவனத்தினூடே போகப் புறப்பட்டார். "இருப்பினும், உமது வார்த்தையின் படி" என்பதற்கு மேல் ஒன்றும் இல்லாமல்,நோவா விசுவாசிக்காத இந்த உலகின் முன்னிலையில் ஒரு பேழையைக் கட்டினார். வானத்தைப் பார்த்து, "இருப்பினும், உமது வார்த்தையின்படி" என்றபடியே மோசே பார்வோனை எதிர்த்து நின்றார். யோசுவா "இருப்பினும், உமது வார்த்தையின்படி" என்பதை உள்ளத்தில் வைத்துக் கொண்டே எரிகோவைச் சுற்றி ஒவ்வொரு நாளும் அணிவகுத்துச் சென்றார். வாலிபனான தாவீது, "இருப்பினும்,உமது வார்த்தையின்படி" என்ற இந்த விசுவாசத்துடன் பள்ளத்தாக்கிற்குள் அணிவகுத்துச் சென்றதன் மூலம் இஸ்ரவேலின் சந்தேகத்திற்குரிய ஆண்கள் அனைவரையும் குழப்பினார்.
அப்போது பேதுரு, “வலையைப் போடுகிறேன்” என்று சொன்னார். நாம் செய்ய இன்னும் ஒரு பங்கு உள்ளது. மீன்கள் தாமாகவே படகிற்குள் குதிக்கப் போவதில்லை. இன்னும் நாம் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும். நாம் வேலைக்குச் செல்ல வேண்டும், உணவு கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், கூட்டங்களுக்குச் செல்ல வேண்டும், ஆலோசகரிடம் செல்ல வேண்டும், நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ள வேண்டும், வீட்டு வேலைகளை செய்ய வேண்டும், term பேப்பரை எழுத வேண்டும், திட்டமிட்ட பணிகளை முடிக்க வேண்டும். இன்னும் நாம் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது.
கீழ்ப்படிதலின் பலன் - மீன்கள் எல்லா நேரத்திலும் அங்கே தான் இருந்தன என்பதைக் கவனியுங்கள். இயேசு அந்தக் கணத்தில் மீனைப் படைக்கவில்லை. அந்த மீன்கள் முந்தைய நாள் இரவும் தண்ணீரில் தான் இருந்தன. பேதுருவால் அவைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இயேசு படகில் இருக்கும்போது எல்லாம் மாறியது. எல்லாம் தேவனுடைய திட்டப்படி நடந்தது. இயேசுவின் உதவியால் என்ன செய்ய முடியும் என்பதை பேதுரு கற்றுக்கொள்வதற்காக ஆண்டவர் பேதுருவை தோல்வியடைய அனுமதித்தார்.
இதைப் பார்க்கும் மற்றொரு வழி: அவர் இல்லாமல் வெற்று வலைகள்; அவருடன் இருக்கும் போது நிரம்பிய வலைகள். ஒவ்வொரு நாளும் இயேசுவோடு மீன்பிடிக்க செல்வோம்!
பேதுருவிடம் இருந்து வந்த ஒப்புதல் வாக்குமூலம் : V8-10
சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப்போகவேண்டும் என்றான். அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். லூக்கா 5:8-10
“ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப்போகவேண்டும்” தன்னை விட்டு விலகி போகும்படி பேதுரு ஏன் இயேசுவிடம் கெஞ்சினார்? நம்மில் பெரும்பாலோருக்கு வெற்றியை விட தோல்வியைக் கையாள்வது எளிது. ஏசாயா 6:5 ஆம் வசனத்தில் சொல்லப்பட்டதை பேதுரு எதிர்கொண்டார். “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்”. ஏசாயா 6:5. கிறிஸ்துவின் தூய்மை மற்றும் வல்லமைக்கும் தனது சொந்த பாவத்தன்மைக்கும் இடையேயான வேறுபாட்டை பேதுருவால் தாங்க முடியவில்லை.
இவை அனைத்திலும் நாம் சிந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான பாடம் உள்ளது: நாம் இயேசுவை சந்தித்த பிறகு, நாம் மீண்டும் முன்பு இருந்த மாதிரி அதே போல் இருக்க மாட்டோம். இயேசுவைச் சந்தித்து விட்டு மாறாமல் யாராலும் விலகிச் செல்ல முடியாது. நாம் அவரோடு நெருங்கி வரலாம் அல்லது நம் இதயங்களை கடினப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இயேசுவைச் சந்தித்து விட்டு, யாரும் அவர்கள் முன்பு இருந்ததைப் போல இருப்பதில்லை. பேதுருவின் விஷயத்தில், அவரது ஒப்புதல் வாக்குமூலம் அவரது சாட்சியத்தின் ஒரு பகுதியாக மாறியது. அவர் ஒரு பாவி என்பதை அவர் அறிந்திருந்தார், அதை ஒப்புக்கொள்ள அவர் வெட்கப்படவில்லை. தன்னுடைய பலவீனத்தை அறிந்து அதை மறைக்க முயற்சி செய்யாத மனிதனை தேவனால் பயன்படுத்த முடியும்.
தேவனுடைய சித்தம் எப்போதும் நல்லது, ஆனால் அது எப்போதும் வசதியாக இருக்காது. மேலும் நிச்சயமாக இது கணிக்க முடியாதது.
பேதுரு இந்த உண்மையை நிரூபிக்கிறார். தேவனுடைய சித்தம் எப்போதும் நல்லது, ஆனால் அது எப்போதும் வசதியாக இருக்காது. மேலும் நிச்சயமாக இது கணிக்க முடியாதது. ஒரு நாள் நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள், அடுத்த நாள் நீங்கள் மனுஷரைப் பிடிக்கிறீர்கள். ஒரு நாள் படகில் செல்கிறீர்கள், அடுத்த நாள் இயேசுவைப் பின் தொடர்ந்து தூசி நிறைந்த சாலையில் செல்கிறீர்கள். ஒரு நாள் உங்கள் வலைகளை எங்கே வீசுவது என்று வாதிடுகிறீர்கள், அடுத்த நாள் பரிசேயர்களுடன் வாதிடுகிறீர்கள். ஒரு நாள் உங்கள் மேலங்கியில் இருக்கும் மீன் வாசனையை துவைக்கிறீர்கள், அடுத்த நாள் இயேசு யவீருவின் மகளை மரித்ததிலிருந்து எழுப்புவதைப் பார்க்கிறீர்கள்.
அதுவே எப்போதும் தேவனின் முறையாக இருக்கிறது. அவர் இந்த உலகை அசைக்க நினைக்கும் போது முதலில் ஒரு ஆணையோ பெண்ணையோ கண்டுபிடித்து அவர்களை அசைக்க ஆரம்பிக்கிறார். அவர்கள் அசைக்கப்படும்போது, அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை அசைக்க அவர்களைப் பயன்படுத்துகிறார்.
Comments