top of page
Kirupakaran

ஊக்கமான ஜெபமும் அதன் வலிமையும்

Updated: Apr 30, 2022



நமது நவீன, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சமூகத்தில் இயற்கைக்கு அப்பாற்பட்டவைகள் குறித்த கருத்து மறைந்து வருகிறது. அற்புதங்கள் அல்லது ஆண்டவருடைய கிரியைகள் பற்றிக் கேள்விப்படும் போது பலர், "தேவ ஆற்றல் என்று ஒன்றும் இல்லை, அதை நம்புபவர்கள் குறைந்தது இருநூறு ஆண்டுகள் பின்னால் இருக்கிறார்கள்" என்று தங்களுக்குள்ளே கூறிக் கொள்கிறார்கள். ஆனால் நாம் நம்மைச் சார்ந்து இருப்பதை நிறுத்திவிட்டு, தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை என்ற எளிய விசுவாசத்தோடு தேவனிடம் திரும்பும் போது ​​ இயேசுவின் மறைமுகமான கிரியைகளை இயற்கைக்கு அப்பாற்பட்ட வழியில் பார்க்கவும், அனுபவிக்கவும் தொடங்குவோம்.


ஆரம்பகால சபைகள் தேவனை சார்ந்து இருக்கும்படியான நம்பிக்கையையும், திறனையும் கொண்டிருந்து, தேவ தொடுதலையும்பெற்றிருந்தார்கள். தேவன் இதை அப்போஸ்தலர் 12 ஆம் அதிகாரத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த முழு அதிகாரத்தையும் படிக்கும் போதுஅதில் யாக்கோபு கொல்லப்பட்டது, பேதுருவின் விடுதலை மற்றும் ஏரோதின் அழிவு ​​ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகள் உள்ளதைக் கவனிக்கலாம்.


யாக்கோபின் மரணத்தில் தேவ ஆற்றல்


அக்காலத்திலே ஏரோது ராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி;யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். அப்போஸ்தலர் 12:1-2


இந்தத் துன்புறுத்தல் கிறிஸ்துவைக் கொல்ல முயன்ற மாவீரன் ஏரோதின் பேரனான ஏரோது அகரிப்பா-I இன் கைகளுக்கு வந்தது. ஏரோது முதலில் ஒரு அரசியல்வாதி. மேலும் அவனது நல்ல பிம்பம் மற்றும் மக்கள் ஆதரவைப் பற்றி தான் எப்போதும் அக்கறை கொண்டிருந்தான். அவன் யூத மக்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வதற்காக அவர்களைப் பிரியப்படுத்த ஆவலாய் இருந்தான். மேலும் இந்த ஆர்வமே ஆரம்பகால சபையின் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்த வழிவகுத்தது.


அப்போஸ்தலர் 12 ஐப் படிக்கும்போது, யாக்கோபு ஏன் ஏரோதுவால் இரத்தசாட்சியாக்கப்பட்டார் மற்றும் பேதுரு ஏன் விடுவிக்கப்பட்டார் என்ற கேள்விகள் வரலாம்.


தேவனுடைய அளவில்லாத இறையாண்மை ஞானம் என்பதே இதற்கான பதில் ஆகும். ஜீவன் மற்றும் மரணத்தின் பிரச்சினைகள் யாவும் இயேசுவின் கைகளில் இருக்கின்றன. நாம் மகிமை அடையும் வரை யாக்கோபின் மரணத்தைக் குறித்த கேள்விக்கு நம்மால் முழுமையான பதிலைப் பெற முடியாது.

  • நமது கண்ணோட்டத்தில், யாக்கோபின் மரணத்தை ஒரு துயரமாகப் பார்க்கிறோம். ஆனால், இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியங்களை செய்யும் மகிமையான ஆண்டவருடைய கண்ணோட்டத்தில், இது ஒரு அற்புதமான ஆசீர்வாதம்.

  • தேவன் பேதுருவை விடுவித்த அளவிற்கு அல்லது அதற்கு அதிகமாகவோ யாக்கோபை விடுவித்தார். அவர் யாக்கோபை மரணத்தின் மூலமாகவும் ,பேதுருவை மரணத்திலிருந்தும் விடுவித்தார்.

  • தமக்கு விருப்பமானதைச் செய்வதற்கான உரிமை இயேசுவிற்கு உண்டு. யாக்கோபின் காரியத்தில் , அவர் பரலோகத்தில் இருந்ததால் பேதுருவை விட சிறந்தவராக இருந்தார்.


பேதுருவின் விடுதலையில் தேவ ஆற்றல்


அப்போஸ்தலர் 12:3-17 ஐ வாசிக்கும் போது, பேதுருவுக்கு அவர் விடுதலை அளித்த விதத்தில் தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட தன்மையை நாம் புரிந்து கொள்ளலாம். இந்தப் பத்தியில் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.


பேதுருவின் சிறை நிலைமை


‘அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான்.’ அப்போஸ்தலர் 12:4


  • பேதுரு அதிகபட்ச பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்தார். பதினாறு வீரர்கள் ஒவ்வொருவரும் மூன்று மணி நேர இடைவெளியில் அவரை 24மணி நேரமும் கண்காணித்தனர். அறைக் கதவை இரண்டு வீரர்கள் பாதுகாத்தனர். பேதுருவின் ஒவ்வொரு கையிலும் இரண்டு வீரர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தனர்.

  • பேதுரு முன்பு ஒருமுறை மர்மமான முறையில் சிறையிலிருந்து தப்பினார் என்பதை ஏரோது கேள்விப்பட்டிருந்தபடியால் இந்த முறை தப்பிக்க எந்த வாய்ப்பையும் கொடுக்க விரும்பவில்லை. (அப்போஸ்தலர் 5:23). பஸ்கா பண்டிகை வரை பேதுருவைக் கொல்லக்கூடாது என்று திட்டமிட்டிருந்தனர். ஆனால் பேதுரு ஏழு நாட்கள் சிறையில் இருந்தார்.

சபையின் ஊக்கமான ஜெபம்


‘அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள்.’ அப்போஸ்தலர் 12:5


  • நிலைமை நம்பிக்கையற்றதாய் இருந்தது. சபையார் அனைவரும் தங்கள் பிரச்சினைக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட பதிலுக்காக தேவனை நோக்கி வேண்டினர்.

  • உலகப் பிரகாரமாகப் பேசினால், பேதுரு தப்பித்துக் கொள்வதற்கான எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை. ‘சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காக’ என்ற வார்த்தைகள் இதைக் காட்டுகிறது.

  • கிறிஸ்தவ சபையார் யாவரும் ஜெபிக்கச் சென்றனர். அவர்கள் தேவனிடம் சாத்தியம் இல்லாததை செய்யச் சொல்லியும், இயற்கைக்கு அப்பாற்பட்ட காரியத்தை செய்யவும் மன்றாடினர். பேதுருவை விடுதலை செய்வதற்கு இயற்கைக்கு அப்பால் வேலை செய்ய வேண்டும் என்று தேவனிடம் கோரினர்.

  • ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.’ சங்கீதம் 50:15 என்ற பழைய ஏற்பாட்டின் வாக்குறுதியை அவர்கள் அறிந்திருந்தனர்.

  • அவர்கள் யாவரும் ஊக்கத்தோடு இடைவிடாமல், ஒரே மனதுடன் பேதுரு சிறையிலிருந்து விடுதலை ஆக வேண்டி ஜெபித்தார்கள்.

  • வெளிப்படையாக எந்த ஒரு உடனடி பதிலும் இல்லை. பேதுரு வாரத்தின் முதல் பகுதியில் சிறைக்குச் சென்றார். அப்பொழுதே சபையினர் நிச்சயமாக ஜெபிக்கத் தொடங்கி இருப்பார்கள். சனிக்கிழமையில் பதில் வரவில்லை, ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் கிழமைகளிலும் பதில் எதுவும் இல்லை. வியாழன், வெள்ளிக்கிழமை வரையும் கூட பதில் ஒன்றும் இல்லை. அவர்கள் ஒற்றுமையாகவும், தொடர்ச்சியாகவும், குறித்த காரியத்திற்காகவும் ஜெபித்தார்கள், ஆனாலும், ஜெபத்திற்கு உடனடியாக பதில் வரவில்லை. பரத்திலிருந்து மௌனமே நிலவியது. ஆனால் இந்த கிறிஸ்தவர்கள் பதில் கிடைக்கும் வரை ஜெபத்தில் நிலைத்திருந்தார்கள்.


பேதுருவின் விடுதலை


‘ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.’ அப்போஸ்தலர் 12:6


  • மரணம் சமீபித்திருக்கையில், பேதுரு என்ன செய்துகொண்டிருந்தார்? ‘பேதுரு .. இரண்டு சேவகர் நடுவே நித்திரை பண்ணிக்கொண்டிருந்தான்’.

  • அமைதியின்மை, பயம் மற்றும் பயத்தின் வேதனையில் இருப்பதற்குப் பதிலாக, அவர் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் பரிபூரண சமாதானத்தோடிருந்தார். மேலும் அவர் தனது விரல் நகங்களைக் கடித்துக் கொண்டோ , வேதனையில் அழுது கொண்டோ, அல்லது தனது இந்த நிலைமைக்காக தேவனை சபிக்கவோ இல்லை. அவர் மாட்சிமையான , இயற்கைக்கு அப்பாற்பட்ட வேலை செய்யும் தேவனிடத்தில் முற்றிலும் நிதானமாக இருந்தார்.

  • தேவாலய ஜெபத்தின் முதல் பலன் இங்கே காணப்படுகிறது. மிகவும் தீவிரமான சூழ்நிலைகளில் பேதுரு தேவனுடைய சமாதானத்தோடு இருந்தார். நெருக்கடி வேளைகளில் தம் ஜனங்களை ஓய்வெடுக்கவும், நிதானமாய் இருக்கும்படி செய்யவும் ஜெபம் தேவனை அசைக்கும்.


‘அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்துநின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.’ அப்போஸ்தலர் 12:7


  • காவலர்களை எழுப்பாமல், அவரது சங்கிலிகள் அறுந்து சத்தமில்லாமல் தரையில் விழுந்தன. அவர் அதிக பாதுகாப்பு நிறைந்த சிறையில் 16 காவல்காரர்கள் சுழற்சி முறையில் அவரைப் பாதுகாக்கின்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒருவருக்குக் கூட சத்தம் கேட்கவில்லை. இது தேவனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல்.

  • தேவன், தலையிடுவதற்கு கடைசி தருணம் வரை காத்திருந்தார். சபையாருக்கு விடாமுயற்சியோடு ஜெபிக்கக் கற்றுக் கொடுக்கவும் பேதுருவுக்கு கர்த்தருக்குள் இளைப்பாறுவதற்கு கற்றுக் கொடுக்கவும் தேவன் தாமதித்தார். ஜெபத்தில் பதில் அளிக்கப்பட ஏற்படும் தாமதத்தை, நமது ஜெபத்தை மறுத்ததாக நாம் ஒருபோதும் தவறாக எண்ணக்கூடாது.


‘தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இரும்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான். அப்போஸ்தலர் 12:8-11


  • பேதுரு இவை எல்லாவற்றையும் ஒரு தரிசனம் என்று எண்ணிக் கொண்டிருந்தார். ‘பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான்.’

  • இந்த முழு நிகழ்வும் மாட்சிமையான தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல் என்பதை பேதுரு உடனடியாக உணர்ந்தார்.


ஏரோதின் மரணத்தில் தேவ ஆற்றல்


பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல.ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தைவிட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான். குறித்தநாளிலே: ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான்.


அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். அப்போஸ்தலர் 12:18-19,21-23


  • அவர்கள் பேதுருவை நகரம் முழுவதும் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியாததால், அன்றைய தினம் ஏரோதின் படையில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ‘ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது’. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நிகழ்வுக்கு அவர்களிடம் விளக்கம் இல்லை.

  • பேதுருவின் விடுதலை தேவனுடைய இயற்கைக்கு அப்பாற்பட்ட செயல் என்று ஏரோது நம்பவில்லை.

  • ஏரோது எப்படி இறந்தான் என்பதை "கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்" என்று வாசிக்கிறோம். ஏரோதின் உடலில் உள்ள துவாரங்களில் புழுக்கள் ஊர்ந்து அவனைத் தின்று, அவன் சாகும்படி தேவன் அவனை அடித்தார். அவன் ஒரு ராஜா. எந்த ஒரு மன்னனின் மரணத்திற்கும் பல பாரம்பரியம் / கவனம் இருக்கும், ஆனால் ‘அவன் புழுப்புழுத்து இறந்தான்’ என்று நாம் படிக்கிறோம், தேவ சித்தத்திற்கு எதிராக நின்ற ஏரோதிற்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட மரணம் நிகழ்ந்தது.


வார்த்தை வளர்ந்ததில் தேவ ஆற்றல்


‘தேவவசனம் வளர்ந்து பெருகிற்று.’ அப்போஸ்தலர் 12:24

  • ராஜாக்களும் ராஜ்யங்களும் வீழ்ந்தன. குடியரசுகளும் ஜனநாயகங்களும் மண்ணைக் கவ்வின. சர்வாதிகாரிகளும் பெரிய நாடுகளும் வந்து போயின, ஆனால் தேவனுடைய வார்த்தை இயற்கைக்கு அப்பாற்பட்டதாக வளர்ந்து பெருகிக் கொண்டே இருந்தது. ஏனெனில் தேவனுடைய கரம் அங்கே இருந்தது. இதை முந்தைய அதிகாரத்தில் படித்தோம், கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநே ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.’ அப்போஸ்தலர் 11:21

  • சுவிசேஷத்தின் மூலம் தேவன் இந்த உலகில் தமது நோக்கங்களை நிறைவேற்றுவதை எதுவும் தடுக்க முடியாது.

நமக்கான ஆவிக்குரிய பாடம்


  • ஜெபம் எவ்வளவு முக்கியம்? இந்த உலகில் கிறிஸ்துவின் ராஜ்யத்தின் முன்னேற்றத்திற்கு, இது அடிப்படையான , இன்றியமையாத மற்றும் அவசியமான ஒன்றாகும். தேவனுடைய தெய்வீக ஆற்றலை நம்மில் திறக்க இது நமக்கு முக்கியமானது.

  • ஜெபம் தேவனுடைய இரகசியத் திட்டத்தை மாற்றவில்லை, ஆனால் தேவன் இந்த ஜெபங்களை பேதுருவின் விடுதலைக்கு இறுதி முடிவைக் கொண்டுவர பயன்படுத்தினார். நமது கண்ணோட்டத்தில், ஜெபம் தேவன் நமக்காக கிரியை செய்யும்படி செய்யும். சபையினர் குழுவாக ஜெபித்த பொழுது தேவன் தலையிட்டார். தேவன் தம்முடைய ஜனங்களின் வசம் வைத்த ஜெபத்தின் மகத்தான வல்லமையை இது காட்டுகிறது.

  • மேலும், ஜெபத்தில் பதில் அளிக்கப்பட ஏற்படும் தாமதத்தை, நமது ஜெபத்தை மறுத்ததாக நாம் ஒருபோதும் தவறாக எண்ணக்கூடாது. தேவன் குறித்த நேரத்தில் ஜெபத்திற்கு பதிலளிக்கின்றார்.

  • நமது ஜெபத்தில் பெரும்பகுதி சக்தியற்றதாக இருக்கிறது, ஏனெனில் அதில் ஒரு தீவிரம் இல்லை. உண்மையில் நாம் அதிகம் கவலைப்படாத விஷயங்களில் தேவன் அக்கறை காட்ட வேண்டும் என்ற மனப்பான்மையுடன் அடிக்கடி ஜெபிக்கிறோம்.


நாம் எப்படி ஊக்கமாக ஜெபிப்பது?

  • இயேசு கற்பித்தபடி எளிய வார்த்தைகளால் ஜெபியுங்கள். அது தேவனிடம் இருந்து, இயற்கைக்கு அப்பாற்பட்ட தொடுதலுடன் நடக்கும் என்ற நம்பிக்கையுடன் இருதயத்தில் இருந்து ஜெபிக்கவும்.

  • தனித்தனியாகவும் , குழுவாகவும் ஜெபியுங்கள்.

  • உபவாசித்து ஜெபியுங்கள் - உபவாசிக்கும் போது, தேவன் தமது தெய்வீக ஆற்றலால் சாத்தானின் வலுவான பிடியை உடைக்கிறார்.

  • ஜெபத்தில் உணர்ச்சிகளை ஊற்றி, உங்கள் நம்பிக்கை அற்ற நிலைமையை தேவனிடம் காட்டுங்கள். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்று சொல்லி, உங்கள் நம்பிக்கையற்ற உணர்வை அவரிடம் பகிர்ந்து, உங்களிடம் இரக்கம் காட்டும்படி ஜெபியுங்கள். ஜெபத்தில் அவரிடம் உங்கள் இருதயத்தைத் திறந்து காண்பியுங்கள். லூக்கா 22:44 இல் 'அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது'. என்று வாசிக்கிறோம். இயேசு "ஒலிவ மலையில்" தம் பிதாவிடம் ஊக்கமாக ஜெபித்த போது வியர்வை இரத்தமாக சொட்டியது.

  • நம் ஆண்டவராகிய ‘இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'. எபிரேயர் 13:8. நாம் நம்முடைய பிதாவிடம் ஊக்கத்துடன் காரியங்களைக் கேட்கும்போது ஆரம்பகாலச் சபையில் அவர் செய்த காரியங்கள் இன்று நமக்கும் சாத்தியமாகும்.

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page