top of page
Kirupakaran

உலர்ந்த எலும்புகள் நம்பிக்கை



அமெரிக்காவில் "மரண பள்ளத்தாக்கு" (Death Valley) என்று ஒரு இடம் உள்ளது, இது கிழக்கு கலிபோர்னியா மற்றும் நெவாடா முழுவதும் பரந்துள்ளது. இது அதன் தீவிரமான வெப்பநிலைகளுக்கு பெயர் பெற்றது. கோடை வெப்பநிலை பெரும்பாலும் 130 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டும், இது பூமியின் வெப்பமான இடமாக சாதனை படைத்துள்ளது. மொஜாவே (Mojave) பாலைவனத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த மகத்தான பாலைவனப் பகுதி, வட அமெரிக்காவின் மிகவும் வறண்ட மற்றும் தாழ்வான தேசிய பூங்காவாகும். அதன் தாழ்வான முனையான பேட்வாட்டர் பேசின் (Badwater Basin), கடல் மட்டத்திலிருந்து 282 அடி கீழே உள்ளது. அதன் கடுமையான தட்பநிலையிலும், இந்த மரணப் பள்ளத்தாக்கு அதன் தீவிர சூழலுக்குத் தக்கதான பல்வேறு வகையான வாழ்க்கை வடிவங்களை ஆதரிக்கிறது. எப்போதாவது பெய்யும் அரிதான மழைக்குப் பிறகு, துடிப்பான காட்டுப்பூக்கள் பூக்கும் போது பாலைவன நிலப்பரப்பு மாறுகிறது.

 

இந்த இடத்தை ஒருமுறை பார்ப்பதற்கு தேவன் எனக்கு கிருபையளித்தார். இது பார்க்கவே பயங்கரமான இடமாக இருப்பதால், இந்த இடத்தை கற்பனை செய்யும் பொழுது இப்பொழுதும் என் மனதில் சிலிர்ப்பு உண்டாகிறது. எசேக்கியேல் 37 ஆம் அதிகாரத்தைப் படித்தபோது எனக்கு இந்த இடம் நினைவுக்கு வந்தது. இங்கே. தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசியை இந்தப் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் செல்கிறார்.


பள்ளத்தில் உலர்ந்த எலும்புகள் மற்றும் கேள்விகள்

 

இந்த உலர்ந்த எலும்புகள் எதைக் குறிக்கின்றன?

கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. எசேக்கியேல் 37:1,2

  • உலர்ந்த எலும்புகள் நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கை தேவன் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் காட்டுகிறார்.

  • எசேக்கியேல் அவைகளை எல்லா இடங்களிலும் பார்த்தார், அவைகள் அங்கே அந்த திறந்த பள்ளத்தாக்கில் அநேகம் இருப்பதைக் கவனித்தார்.

  • உலர்ந்த எலும்புகள் - இவை ஆவியில் வறண்டு, எழுப்புதல் தேவைப்படும் ஜனங்களைக் குறிக்கிறது. சில நாட்களுக்கு முன்பு பார்க்கும்போது அவைகளுக்கு ஆவி இருந்தது, ஆனால் இப்போது இறந்துவிட்டன.

  • உலர்ந்த எலும்புகள் அப்போது இறந்தவை அல்ல, அவைகள் இறந்து மிக நீண்ட காலமாகிவிட்டது. ஜீவன் முடிந்த பிறகு எஞ்சியிருப்பது எலும்புகள் மட்டுமே. உயிர் இல்லாத எதுவும் எலும்புகளை விட்டுச் செல்லாது. இருப்பினும், இறந்து நீண்ட காலம் ஆகியிருந்தால், அது எப்போதாவது மீண்டும் ஜீவனை அடைய முடியும் என்ற நம்பிக்கையை நாம் இழக்கிறோம்.

  • தேவன் எசேக்கியேலை பள்ளத்தாக்கு வழியாக நடக்கச் செய்தார். என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க் கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. எசேக்கியேல் 37:2

  • தேவன் நம்மை பள்ளத்தாக்கின் வழியாக நடக்கச் செய்யும் போது, ​​உயிர் பெறுவதற்கு எந்த நம்பிக்கையும் இல்லாத இறந்து போன உலர்ந்த எலும்புகளும் உயிர் பெற முடியும்.

 

தேவனின் கேள்வி

அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். எசேக்கியேல் 37:3

  • தேவன் அவரிடம் “மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா” என்று கேட்கிறார்.

  • தேவன் நம்மிடம் காட்டி, இந்தக் கேள்வியைக் கேட்டால், நம் பதில் என்னவாக இருக்கும்? நானாக இருந்தால், அவர்கள் இறந்துவிட்டதால் அவர்களால் உயிர் பெற முடியாது, அது எப்படி முடியும் தேவனே என்று சொல்லியிருப்பேன். ஆனால், அதுதான் நமக்கும் தேவனின்  தீர்க்கதரிசிக்கும் (எசேக்கியேல்) உள்ள வித்தியாசம். அவர் நம்மைப் போல் பதில் சொல்லவில்லை. எசேக்கியேல் அழகாக பதிலளித்தார்.

  • எசேக்கியேல் தேவனின் கேள்விக்கு “கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர்”, என்று விசுவாசத்துடன் பதிலளித்தார்.

  • எசேக்கியேலுக்கு எலும்புகளின் மீது நம்பிக்கை இல்லை, ஆனால் அவர் தேவன் மீது விசுவாசம் வைத்திருந்தார்.

  • எலும்புகளை தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்பதை எசேக்கியேல் ஊகிக்கவில்லை.

  • தேவனுக்குத் தெரியும் என்று எசேக்கியேல் உறுதியாக இருந்தார்.

  • தேவனுக்கு முன்பாகத் தாழ்மையாயிருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் - உலர்ந்த எலும்பைக் கூட உயிர்ப்பிக்க தேவனுக்குத் தெரியும்.

 

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • பல சமயங்களில் தேவன் நம் வாழ்க்கை சூழ்நிலைகளைப் பயன்படுத்தி, நம்மிடம் காணப்படுகிற வறண்ட நிலையைக் காட்ட நம்மைப் பள்ளத்தாக்குகளுக்கு அழைத்துச் செல்வார். அது நீங்கள் இருக்கும் நிலையா என்று பார்த்துக் கொள்ளுங்கள். வறண்ட நிலை என்பதில் உங்கள் வாழ்க்கைப் பகுதிகள் அல்லது மற்றவர்களுடனான உறவுகள் அல்லது விடுபட முடியாமல் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருக்கும் நீண்ட கால பழக்கவழக்கங்கள் ஆகியவை அடங்கும்.

  • உலர்ந்த எலும்புகள் என்பது வாழ்க்கையின் பகுதிகளாகும். ஒருவரிடம் நீண்ட காலமாக இருக்கும் குணாதிசயங்களைக் கொண்டு அவர் இப்படி இருக்கிறார் என்று அவரை விட்டுவிடுவது, மேலும், வாழ்க்கைத் துணை அல்லது குழந்தைகள் அல்லது நாம் விரும்பும் ஒருவரை விட்டுவிடும் போராட்டச் சூழ்நிலைகள் என்பவை அதில் அடங்கும்.

  • உங்களில் உள்ள வறண்ட பகுதிகள், இறுக்கமான நடத்தை ஆகியவற்றை தேவன் காட்டும்போது, நான் x அல்லது y காரணமாக இதைச் செய்கிறேன் என்று உங்களைக் காத்துக் கொள்வதற்கு குதித்துக் கொண்டு வந்து பதில் சொல்லாதீர்கள். தேவனிடம் அர்ப்பணிக்கவும் தாழ்மையோடு இருக்கவும், எசேக்கியேல் தீர்க்கதரிசியைப் போல் செயல்படுங்கள்

  • அவர் மட்டுமே வாழ்க்கையின் சூழ்நிலைகளை புதுப்பிக்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

 

எழுப்புதல் பாடங்கள்: உணர்வு மற்றும் வளர்ச்சி

உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்க தேவன் எசேக்கியேலைப் பயன்படுத்துவதை இங்கே காண்கிறோம், சிலவற்றைப் பார்ப்போம்.

1.   உயிர்ப்பிக்கும் வல்லமை உங்களிடம் உள்ளது

அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப் பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். எசேக்கியேல் 37:4

  • நாம் தேவனுடைய பிள்ளைகள், சிலுவையின் மூலம் அவர் நமக்கு அதிகாரத்தை ஒப்படைத்திருக்கிறார். நாம் அவரோடு நடக்கும்போது இந்த புத்திர சுவீகாரத்தைப் (குமாரர் மற்றும் குமாரத்திகள்) பெற்றுக் கொள்கிறோம்.

  • உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்” என்று எசேக்கியேல் கூறியது போல், தேவனுடைய வார்த்தையைப் பயன்படுத்தி நம் வாழ்வின் வறண்ட பகுதிகளை உயிர்ப்பிக்க நமக்கு அதிகாரம் உள்ளது.

  • கர்த்தருடைய வார்த்தையில் அதிக வல்லமை இருக்கிறது என்பதை நினைவில் வையுங்கள். படித்து பயன்பெறுங்கள். அது எழுப்புதலடையவே நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

  • இந்த உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்க எசேக்கியேல் என்ன தீர்க்கதரிசனம் கூறினார்? கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார். எசேக்கியேல் 37:5-6

    • நம் தேவன் வாழ்க்கையின் சூழ்நிலைகளை புதுப்பிக்க விரும்புகிறார். இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள்.

    • அவர் நமக்குக் கொடுத்த நாம் சுவாசித்துக்கொண்டிருக்கும் மூச்சு ஒரு சொடுக்கு போடும் நேரத்தில் உயிர்பெறும். தேவனால் கூடாதது எதுவும் இல்லை.

    • அவர் கொடுக்கும் வாக்குத்தத்தம் - “நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து,”.

    • அவர் நமக்கு கொடுக்கும் வாக்குத்தத்தம் - அவர் வாழ்க்கையின் சூழ்நிலைகளை மாற்றி (நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து) அதை மீட்டமைத்து (உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி) அதை அழகுபடுத்தி (உங்களைத் தோலினால் மூடி) அவரது ஆவியை நம்மில் வாசம் பண்ண செய்வார் (உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன், அப்பொழுது நீங்கள் உயிரடைந்து).

நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

  • மீட்டெடுப்பது தேவனுக்கு ஒன்றும் கடினமானது இல்லை. அது பல ஆண்டுகளாக இருக்கும் ஒரு பழைய காரியமாகவோ அல்லது குணாதிசயமாகவோ அல்லது உறவோ அல்லது உங்கள் தலைமுறை தலைமுறையாக வரும் எந்தவொரு விஷயமாகவோ இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவரால் அதை மீட்டெடுக்க முடியும். அவர் மீட்கத் தயாராக இருக்கும் பகுதிகளைக் காட்டும்படி தேவனிடம் ஜெபத்தில் கேளுங்கள்.

  • குயவனுக்கு களிமண் இருப்பதைப் போலவும், எசேக்கியேலைப் போலவும் தாழ்மையுள்ளவர்களாக இருங்கள். அப்பொழுது அவர் உங்கள் சூழ்நிலையைப் பயன்படுத்தி வடிவமைக்க முடியும்.

  • தேவனுடைய வாக்குத்தத்தத்தைப் பிடித்துக் கொண்டு, அவருடைய பிள்ளைகளாகிய நமக்குக் கொடுக்கப்பட்ட வல்லமையை உபயோகிப்போம்.

  • அவர் மாம்சம் / தோல் / ஆவி / உயிர் என்று யாவற்றையும் உறுதியளிக்கிறார். உங்களை நம்பாமல் அவர் மீது விசுவாசம் வையுங்கள்.

2.   எலும்புகள் உயிர்பெறுதல்

எசேக்கியேலின் பார்வையில் தேவன் செய்த பல காரியங்கள் அவர் வாக்குத்தத்தம் கொடுத்த பிறகு பொருந்துகிறது. எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது. நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. எசேக்கியேல் 37:7-8

  • ஒரு இரைச்சல் உண்டாயிற்று; - அதே போல், நிறைய எதிர்ப்புகள் / அவமானங்கள் / வேதனைகள் / நிறைய தடைகள் என்று வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும் பார்க்கலாம்.

  • ஆனால், தேவன் மீது விசுவாசம் வையுங்கள். நீங்கள் காண்பதை வைத்து ஏமாறாதீர்கள். தேவனின் வார்த்தையின் மீது விசுவாசம் வையுங்கள் - ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது.

  • எழுப்புதல் நிகழும்போது - அது பல நிலைகளில் நடக்கிறது. முதலில் அனைத்து சதைகளும் அதன் எலும்புகளுடன் சேரும், அடுத்ததாக தோல்களால் மூடப்படும், எழுப்புதலின் ஆவி இறுதியாக வருகிறது.

  • எலும்புகள் ஒன்றாக இணைந்த பிறகு, தசைகள் மற்றும் திசுக்கள் அதன்  மீது வந்தன. எலும்புகள் செயல்பாட்டிற்கு வந்தன, இருந்தும் அவற்றில் உயிர் மூச்சு இல்லை.

  • உலர்ந்த எலும்புகள் உயிர் பெறுவது தெளிவாக படிப்படியாக நடந்தது.

    • எலும்புகளின் அசைவு.

    • எலும்புகளின் இணைப்பு.

    • எலும்புகள் மீது நரம்புகள் மற்றும் சதை.

    • எலும்புகளை மூடும்படி திசுக்களின் மீதான தோல்.

    • தேவனின் சுவாசத்திற்காக காத்திருத்தல்.

 

3.   ஆவியின் எழுப்புதல்

அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். எசேக்கியேல் 37:9

  • முந்தைய வசனத்தில் (எசேக்கியேல் 37:8), பள்ளத்தாக்கு முழுவதும் உயிரடைந்த, இன்னும் ஆவி மட்டும் இல்லாதிருந்த உடல்களால் நிறைந்திருந்தது. இப்போது ஆவியை (ஆவி, காற்று) அழைத்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊதும்படி எசேக்கியேலுக்கு கூறப்பட்டது.

  • எசேக்கியேல் இறந்த உலர்ந்த எலும்புகளுக்கு ஏற்கனவே தேவனின் வார்த்தையை அறிவித்து ஒரு குறிப்பிடத்தக்க வேலை நடந்திருந்ததைக் கண்டார். இன்னும் அது போதவில்லை; பரிசுத்த ஆவியானவரால் ஒரு வேலையும் ஆக வேண்டி இருந்தது.

  • எசேக்கியேல் ஜெபிக்கும்படி கட்டளையிடப்பட்டார் - ஆவிக்கு தைரியமாக தீர்க்கதரிசனம் உரைக்கும்படி சொல்லப்பட்டார் - தேவனுடைய வார்த்தை யாரிடம் கிரியை செய்ததோ அவர்கள் மீது ஆவியை பிரவேசிக்கப் பண்ணும்படி கட்டளையிடப்பட்டார். எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள். எசேக்கியேல் 37:10

  • எசேக்கியேல் தேவனுடைய செய்தியை நம்பிக்கையோடு அறிவித்த பிறகு, உலர்ந்த எலும்புகளை உயிர்ப்பிக்கும் வேலை முடிவடைந்தது. தேவனின் ஆவி புத்துயிர் பெற்ற உடல்களுக்குள் வந்தது, அவர்கள் காலூன்றி  நின்றார்கள்.

  • எழுப்புதலின் ஆவி ஜீவனைக் கொடுக்கவும் ஒரு பெரிய சேனையாக காலூன்றி நிற்க செய்யவும் வருகிறது. எனவே, தேவன் நமக்காக இருந்தால், யார் நம்மை எதிர்த்து நின்று போரிட முடியும். உலர்ந்த எலும்புகளை அவர்கள் ஒரு பெரிய சேனையாக காலூன்றி நிற்கும்படி அவர் உயிர்ப்பிக்கிறார் - அது தான் அவரது வல்லமை. அவரால் ஒரு தனிப்பட்ட சூழ்நிலையை உயிர்ப்பிக்க முடியும், ஜனங்களை உயிர்ப்பிக்க முடியும், உங்களுக்கு அருகாமையிலுள்ள இடத்தை உயிர்ப்பிக்க முடியும், அதையே உங்கள் நகரத்திலும் நாட்டிலும் அவரால் செய்ய முடியும்.

  • நாம் எழுப்புதலுக்கு பயன்படுத்தப்பட வேண்டுவதற்கு அவர் நம்மிடம் என்ன விரும்புகிறார் என்று தேவனிடம் கேளுங்கள். அவருடைய எழுப்புதலுக்காக நாம் சில விஷயங்களைத் தியாகம் செய்ய வேண்டுமென அவர் விரும்புவார்.

 

நீங்கள் கருத்தில் கொள்ளக்கூடிய செயல்கள்

  • அவருடைய பாரத்தை உங்களுக்குக் காட்ட தேவனிடம் ஜெபியுங்கள். அவர் உங்களைத் தமது எழுப்புதலுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஜனங்கள் / இடம் / ஊழியம் ஆகியவற்றை உங்களுக்குக் காட்டுவார்.

  • எசேக்கியேல் 37 இல் நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய எழுப்புதலுக்காக ஜெபியுங்கள்.

  • எழுப்புதலைக் குறித்த தேவனின் வாக்குத்தத்தம் தலைமுறை தலைமுறையாக நீடிக்கும். நாம் இந்த உலகில் அவருக்காகவும் அவருடைய சித்தத்தைச் செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளோம். எனவே அவரது எழுப்புதல் பணியைச் செய்ய நமது குறைவான நேரத்தைப் பயன்படுத்துவது முக்கியம்.

  • எழுப்புதலில் நிறைய எதிர்ப்புகள் இருக்கும். எசேக்கியேல் 37:7 ஐ நினைவில் வையுங்கள் (... நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது). போராட்ட சூழ்நிலைகளை பொருட்படுத்தாதீர்கள். தொடர்ந்து ஜெபியுங்கள், அவர் உங்களை செய்ய சொல்வதை தொடர்ந்து செய்யுங்கள்.

  • எழுப்புதல் என்பது ஒரு சூழ்நிலையில் மட்டும் அல்ல, அது தேவனின் மகிமையை நிறைவேற்றுவதற்கும் மக்கள் சேனையை எழுந்து நிற்கச் செய்யும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் பார்வையில் நீங்கள் ஒருவரைக் காணலாம், ஆனால் தேவனின் பார்வையில், அது ஒரு சேனை. " ... அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள்". எசேக்கியேல் 37:10

  • நீங்கள் தேவனின் குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அவருடைய உயிர்த்தெழுதலின் மூலம் நமக்கு  எல்லா வல்லமையும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வல்லமையின் மூலம் நாம் உயிர்ப்படைய முடியும். வார்த்தையைப் பிடித்துக் கொள்ளுங்கள். அவர் உங்களை வழிநடத்துகிறார் என்று நம்புங்கள், அவருடைய வல்லமையால் உயிர்ப்படைய ஜெபம் செய்யுங்கள்.

 

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
bottom of page