வெளிப்படுத்தின விசேஷத்தின் முதல் மூன்று அதிகாரங்களை நீங்கள் படிக்கும்போது, ஏழு தேவாலயங்களைக் குறித்து இயேசு யோவானிடம் பேசுகிறதை அறிந்து கொள்ளலாம். எனது முந்தைய பதிவான “வெதுவெதுப்பான ஆவிக்குரிய நிலை” யில் நான் “சர்ச் ஆஃப் லாவோடிசியா” குறித்து எழுதி உள்ளேன். இந்த 7 தேவாலயங்களும் இன்றைய உலகிற்கு மிகவும் பொருத்தமானவை. அவற்றில் "சர்ச் ஆஃப் சர்திஸ்" நம்மில் பலருக்கு மிகவும் பொருத்தமானது என்று தேவன் எனக்கு உணர்த்தினார். அவைகளின் ஆவிக்குரிய வாழ்க்கை உயிர் இருந்தும் இறந்த நிலையில் இருந்தது, அவ்விதமாக தான் நம்மில் பலரும் உள்ளோம்.
"சர்திஸ் தேவாலயம்('சர்தை சபை’)" பற்றி யோவானிடம் பேசின வார்த்தைகள்- வெளிப்படுத்துதல் 3: 1-6-ல் விளக்கப்பட்டுள்ளன.
'சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். 'வெளிப்படுத்தின விசேஷம் 3:1-3
சர்திஸ் (சர்தை சபை): பண்டைய நகரமான சர்திஸ், லிடியாவின் தலைநகரம். இதைப்பற்றி எசேக்கியேல் 27: 10 ல் எழுதப்பட்டு இருக்கிறது. அது மிகுந்த செழிப்பான நகரமாகும். ஒரு செல்வந்த நகரமாக இருந்தது. அப்படியிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. பொருளாதாரத்தில் மட்டும் அல்ல, அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்விலும் கூட அந்த சரிவு காணப்பட்டது.
“சபையின்” என்ற வார்த்தையை நாம் படிக்கும்போது, இந்த வார்த்தை யாருக்கோ அல்லது ஏதோ தேவாலயத்திற்காகவோ எழுதப்பட்டு இருக்கிறது என்று புரிந்துகொள்ளவேண்டாம். இவை நமக்காக தரப்பட்ட தேவனுடைய வார்த்தைகள்.
சர்திஸ் தேவாலயத்தின் மீதான இயேசுவின் பார்வை
'சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். 'வெளிப்படுத்தின விசேஷம் 3:1
“உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்”: ஒவ்வொரு தேவாலயத்திற்கும் சொன்னது போல, இயேசு சர்தீஸுக்கும் சொன்னார். தேவாலயம் என்றால் என்ன, ஒரு தேவாலயம் என்ன செய்கிறது இவை எதையும் இயேசுவிடமிருந்து ஒருபோதும் மறைக்க முடியாது. நமக்கும் இதுவே உண்மை. நாம் யார், நாம் என்ன செய்கிறோம் என்பதை ஒருபோதும் ஏசுவினிடம் இருந்து மறைக்க முடியாது. நாம் பொதுவில் ஒரு வாழ்க்கையையும் தனிமையில் வேறு ஒரு வாழ்க்கையையும் வாழலாம். ஆனால் நம் ஒவ்வொருவருடைய வெளிப்புற மற்றும் உள் பக்கத்தை அவர் அறிவார்.
“நீ உயிருள்ளவனென்று”: சர்தீஸில் உள்ள தேவாலயத்திற்கு ஒரு நல்ல பெயர் இருந்தது. அதற்கு தேவனுடைய பார்வையில் ஒரு நற்பெயர் / வாழ்க்கை மற்றும் உயிர்ச்சக்தி இருப்பதை இயேசு கண்டார். அதைப்போல் தான் நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு ஆளுமைகள் உள்ளன. நம்மிடம் இருக்கும் நற்பெயரின் முகத்தையும் அவர் அறிவார். ஆனால் நம்முடைய செயல்கள் உயிரற்று இருப்பதை அவர் காண்கிறார். வேர்கள் வலுவாக இல்லாததால் நற்பெயர் உயிருடன் இல்லை என்று எண்ணுகிறார்.
“பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்”: அவர்கள் உண்மையில் என்ன என்று இயேசு அவர்களைக் கண்டார். “செத்தவனாயிருக்கிறாய்” என்ற வார்த்தை, மக்கள் பெற்றுள்ள புகழ், பெயர் அல்லது அங்கீகாரம் போன்றவை உண்மையான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆவிக்குரிய வாழ்வில் நீங்கள் உயிர் இருந்தும் இறந்த நிலை என்று கூறுவது ஒரு வகையான எச்சரிக்கையைக் காட்டுகிறது. அவ்வாறு கூறுவதற்கு தேவன் நம்முடைய உள்புறத்தையும் / வெளிப்புறத்தையும் காண்கிறார். அவர்களுடைய நற்பெயரில் கடவுள் அக்கறை காட்டுவதில்லை.
ஆகவே நாம் உயிர் அற்ற நிலையில் எப்படி இருக்க முடியும்? கிறிஸ்துவில் உயிரோடு இருக்கிறோம் அன்றியும் எப்படி இந்த நிலை உருவாகும்?
பணத்தின் இன்பங்களும், உலகின் இன்பங்களும், இயேசுவைப் பின்பற்றுவதை விட, இயேசுவிடமிருந்து நாம் பெறும் பணமும், ஆசீர்வாதமும் நம்மைக் காப்பாற்றும் என்று நாம் நினைக்கிறோம்.
இயேசுவின் வருகை சமீபமாய் இருக்கிறது என்று அநேக முறை கேட்டு இருக்கிறோம். என் குழந்தைப் பருவத்திலிருந்தே அதைக் கூற கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் அவர் இன்னும் வரவில்லை. அதனால் இன்னும் கொஞ்ச காலம் உலகத்துடன் இணைக்கப்பட்ட வாழ்க்கையை வாழலாம் என்று சிலர் தங்களுடைய ஆவிக்குரிய வாழ்வை இரட்டை வாழ்வாக மாற்றி வாழுகின்றனர். இந்த வாழ்க்கையை இயேசு உயிரற்ற வாழ்வு / செத்த வாழ்வு என்று கருதுகிறார்.
இயேசு கூறும் நம்மில் உள்ள உயிரற்ற வாழ்விற்குரிய அறிகுறிகள் என்னென்ன?
இதை மத்தேயுவில் ஒரு எளிய உவமையுடன் இயேசு விளக்கியுள்ளார்.
'ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். ' மத்தேயு 13:18-21
தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்போது, யாராவது பிரசங்கிக்கும்போது அல்லது தேவனுடைய வார்த்தையைப் படிக்கும்போது நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள். “ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது.”. “நீ உயிருள்ளவனென்று பெயர் கொண்டிருக்கிறாய்” என்று இயேசு சொல்வது இதுதான்.
தேவனுடைய ஆவிக்குரிய வேரை நாம் இழந்துவிட்டதால் இந்த வார்த்தை நம்மில் பயணிக்காது. மேலும், தேவன் விரும்பும் கனிகள் நம் வாழ்வில் இருப்பதில்லை. இதைத் தான் ஏசு இவ்வாறு கூறுகிறார், “ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்;”.
நீங்கள் ஆண்டவரோடு ஆவிக்குரிய வாழ்வில் நடந்துகொண்டு, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும்போது, தேவனுடைய சமாதானம் உங்களை துன்புறுத்தல் மற்றும் கஷ்டமான சூழ்நிலைகளைக் குறித்து கவலைப்படுவதிலிருந்து விலக்கிக் காத்துக் கொள்கிறது. இந்த சமாதானம் நாம் செய்யும் பல சுய காரியங்களில் இருந்து நம்மைத் தடுக்கும். இதைத் தான் மத்தேயு, “வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.” என்று விளக்குகிறார்.
வெளிப்புறத்தில் இறந்து போய் காணப்படுகின்ற கடினமான மண்ணைப் போல நாம் மாறிவிடுகிறோம். உலகின் இன்பங்களை நம்பியிருப்பதால், நாம் ஆவிக்குரிய ரீதியில் உயிரற்றவர்களாக இருக்கிறோம். ஆனால் வெளியே ஒரு தெய்வீக வாழ்க்கை வாழ்வது போன்று நடிக்கிறோம்.
சர்திஸ் தேவாலயத்திற்கு இயேசுவின் எச்சரிக்கை
'நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ' வெளிப்படுத்தினவிசேஷம் 3:2
'நீ விழித்துக்கொண்டு: இயேசுவின் முதல் அறிவுறுத்தல் “சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து” என்பதாகும். சர்திஸ் தேவாலயத்தின் ஆவிக்குரிய நிலை மோசமாக இருந்தபோதிலும், அது நம்பிக்கையற்றது அல்ல என்று இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். ஆவிக்குரிய ரீதியில், பலப்படுத்தக்கூடிய விஷயங்கள் இயேசுவின் பார்வையில் இருந்தன. இயேசு அவர்களைக் கைவிடவில்லை. இது நமக்கும் பொருந்தும் உண்மை. நாம் நம்மீது நம்பிக்கையை இழந்து விட்டிருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யக்கூடிய பல விஷயங்களை இயேசு காண்கிறார், ஏனெனில் நாம் செய்யும் பல செயல்கள் அவருடைய பார்வையில் சரியானவை என்று அவர் காண்கிறார். அவர் தனது 2 வது வருகையை தாமதப்படுத்தியதற்கான காரணம், நாம் அவரிடம் நெருங்கி வருவதற்கே. உங்கள் வாழ்க்கை களிமண் போல இருக்கலாம், தேவனின் வார்த்தைக்கு மட்டுமே களிமண்ணை உலர்ந்த மண்ணாக மாற்றும் சக்தி உள்ளது. அவரிடம் நெருங்கி வந்தால் அவர் உங்களை பலப்படுத்த முடியும்.
'ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். 'வெளிப்படுத்தின விசேஷம் 3:3
“ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து:” நம்மில் பலருக்கு இது மிகவும் பொருத்தமானது. செய்தியைக் கேட்கும்போது நாம் உற்சாகமடைகிறோம், ஆனால் சிறிது நேரம் கழித்து மறந்து விடுகிறோம். நீங்கள் பைபிளைப் படிக்கும்போது / தேவன் பேசிய வார்த்தையைக் கேட்கும்போது, நீங்கள் படித்த / கடவுளிடமிருந்து கேட்ட விஷயங்களைப் பின்பற்ற சிறிய முயற்சி செய்யுங்கள். ஆரம்பத்தில் இது கடினமாக இருக்கும், தேவனின் உதவியைக் கேளுங்கள், நீங்கள் கேட்பதைச் செயல்படுத்துவதற்கு அவர் உங்களுக்கு உதவ காத்திருக்கிறார். நீங்கள் செய்ய வேண்டியது கடவுளிடம் கேட்பது மட்டுமே.
“அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு“- நீங்கள் வேதத்தை படிக்கும்போது, அது உங்கள் இதயத்தில் ஆழமாகச் செல்லும் வகையில் அதைப் படியுங்கள். வேதத்தை படிக்கும்போது சாத்தான் உலக விஷயங்களைக் கொண்டு வருவதன் மூலம் வேதத்தை மறக்க வைக்கவும் / உங்களை திசைதிருப்பவும் பல வழிகளில் முயற்சிப்பான். உலக விஷயங்களால் திசை மாறி விடவேண்டாம். வேதத்தை வாசித்த உடன் அதின் காரியங்களைக் குறித்து தியானித்து உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பார்த்து மனந்திரும்புங்கள். மனந்திரும்புதல் என்பது வெறும் அப்பா என்னை மன்னியுங்கள் என்று சொல்வது மாத்திரம் அல்ல, பாவ சுபாவம் நமக்குள் வராதபடி தேவனின் உதவியுடன் நடக்க பழகவேண்டும். ஒரு வேளை இந்த பாவ இச்சை வந்தால் தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள், அவர் உங்களுக்கு உதவிசெய்வார்.
“திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய்”: ஒரு திருடன் போல நான் வருவேன் என்று பல முறை வேதத்தில் எழுதப்பட்டிருப்பதை நாம் படித்து இருக்கலாம். எந்த திருடனும் எச்சரிக்கையுடன் வருவதில்லை. அதைப்போல தான் இயேசுவின் 2 வது வருகைக்கு எச்சரிக்கைகள் இருக்காது. அவருடைய வருகை திடீரென்று இருக்கும். உலகத்திற்கு ஏற்ப நாம் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால், நாம் நித்திய வாழ்வை இழந்துவிடுவோம். தேவன் திட்டமிட்ட நித்திய ஜீவனைப் பெற மாட்டோம். ஆகவே, அவருடைய எச்சரிக்கைக்குசெவிகொடுத்து அவரிடம் திரும்புங்கள். தேவன் நம் மீது கொண்ட நம்பிக்கையை இழக்கவில்லை, நம்மிடம் இன்னும் வேர்கள் உள்ளன என்று அவர் காண்கிறார், அவைகளை உயிர்ப்பித்து நாம் அவரிடம் திரும்பி வர வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
வேர்கள் மீண்டும் புத்துயிர் பெற உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை ஒரு செயல் நிறைந்த வாழ்க்கையாக மாற்றுங்கள்.
Comments