நம்மில் பெரும்பாலோர் உபவாசத்தை ஒரு பழங்கால நடைமுறையாக தொடர்புபடுத்துகிறோம் அல்லது சிலர் அதை மத தீவிரவாதம் என்று அழைக்கிறோம். எல்லா நம்பிக்கைகளும் உபவாசத்தின் ஏதோவொரு வடிவத்தைக் கொண்டுள்ளன. உபவாசம் என்றால் என்ன? விலகியிருப்பதன் மூலம் நமது மாம்சத்தை மறுப்பது. நாம் சில சமயங்களில் தொலைக்காட்சி பார்க்காமல் இருப்பது, அல்லது காபியை விலக்கி வைப்பது அல்லது இது போன்று வேறு ஏதாவது செய்கிறோம். வேதாகமத்தில், உபவாசம் எப்போதும் உணவுடன் தொடர்புடையது.
உபவாசத்தில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன.
1. முழுமையான உபவாசம் - இதில் நீங்கள் உணவு உண்ணவோ அல்லது தண்ணீர் குடிக்கவோ கூடாது (மூன்று நாட்களுக்கு மேல் இதை செய்ய முடியாது).
2. வழக்கமான உபவாசம் - இது வனாந்தரத்தில் பிசாசு இயேசுவைச் சோதித்தபோது, இருந்ததைப் போன்றது. இதில் நீங்கள் உணவு உண்ணாமல், தண்ணீர் மட்டும் குடிக்கலாம். (இதை 40 நாட்கள் வரை செய்யலாம்)
3. பகுதி உபவாசம் - இது உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை உள்ளடக்கியது. இது தானியேல் கூறியது போன்றது. "அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை". தானியேல் 10:3
உபவாசத்தைப் பற்றி எல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, உபவாசம் ஏன் மிகவும் முக்கியமானது, நாம் ஏன் அதைச் செய்ய வேண்டும்? அதன் வல்லமை என்ன? ஜெபத்தோடு உபவாசத்தை எப்படி செய்ய வேண்டும்? உபவாசத்தைப் பற்றி வேதம் என்ன கற்பிக்கிறது? இவை எல்லாவற்றையும் தான் இந்த ஆய்வில்
கற்றுக் கொள்ளப் போகிறோம்.
இதை நன்கு அறிய, பரிசேயர்கள் இயேசுவிடம் உபவாசம் பற்றி கேள்வி எழுப்பினர். இதை மத்தேயு 9:14-17 மற்றும் லூக்கா 5:33-35 வசனங்களில் வாசிக்கிறோம்.
“பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் பண்ணிக்கொண்டுவருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்”. லூக்கா 5 : 33-35
யோவானின் சீஷர்கள் உபவாசித்து ஜெபிப்பது போல இயேசுவின் சீஷர்கள் ஏன் செய்வதில்லை என்று பரிசேயர்களால் கேள்வி கேட்கப்படுகிறது. இயேசு உபவாசத்தின் விளக்கத்தை ஒரு திருமணத்தின் உவமையோடு பதிலளித்தார்.
1. மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? அவர்களுடைய கேள்விக்கு இயேசு அன்றைய நாளின் திருமண நடைமுறைகளின் உவமையுடன் பதிலளித்தார். திருமண விருந்து என்பது அந்த கலாச்சாரத்தில் மகிழ்ச்சிக்கும், சந்தோஷத்திற்கும் மிக தெளிவான காட்சியாக இருந்தது. ஒரு வாரகால திருமண விருந்தில், மதச் சடங்குகளுக்கு இணங்குவதை விட மகிழ்ச்சி தான் முக்கியமானதாகக் கருதப்பட்டது என்று புரிந்து கொள்ளலாம். எந்தவொரு சடங்கு அனுசரிப்பும் ஒரு திருமண விருந்தின் மகிழ்ச்சியைக் குறைக்கும் என்றால், அது தேவையில்லை.
2. ஆனால் நாட்கள் வரும் - இயேசு அவர்களுடன் உடல் ரீதியாக இருந்தபோது, அது உபவாசத்திற்கான நாள் அல்ல. இயேசுவைப் பின்பற்றுபவர்களுக்கு உபவாசிப்பதற்குத் தேவையான ஒரு நாள் வரும். நாம் உபவாசிக்க வேண்டிய நாட்களில் வாழ்கிறோம்.
3. சில இறையியலாளர்கள் இந்த வசனத்தை தவறாகப் புரிந்துகொண்டு, நாம் உபவாசிக்கத் தேவையில்லை என்று கூறுகிறார்கள். இந்த வசனம் பரிசேயரின் கேள்வியின் சூழலில் பார்க்கப்பட வேண்டும்.
வேதம் நமக்கு என்ன கற்பிக்கிறது?
உபவாசம்
“நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்”. மத்தேயு 6:16-18
உபவாசம் என்ன சாதிக்கிறது?
இது ஒரு பழங்கால பாரம்பரியம், அதே போன்று யார் செய்வார்கள்? என்று நாம் கூறலாம். ஆனால் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் ஒவ்வொருவரும் உபவாசம் இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. இதைப் படியுங்கள்: அவருடைய எல்லா போதனைகளிலும், "நீங்கள் உபவாசித்தால்" என்று இயேசு சொல்லவில்லை, "நீங்கள் உபவாசிக்கும் போது" என்று கூறினார்.
அது என்ன சாதிக்கிறது? பல காரணங்கள் உள்ளன. ஆனால், மாம்சத்தின் மீதான கட்டுப்பாடு தான் முதன்மையானது ஆகும். வேதம் இவ்வாறு கூறுகிறது... "பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது". கலாத்தியர் 5:16-17
தேவனின் ஆவியிடம் சரணடைவதற்காக நம் மாம்சத்தைக் கட்டுப்படுத்துகிறோம்.
உபவாசம் ஆவியைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் நாம் ஆவியில் ஜெபிக்கும்போது பிதாவின் உதவியைக் கோருவதற்கு நம் ஆத்துமா நமக்காகப் பரிந்து பேசுகிறது.
நாம் எப்படி உபவாசிக்க வேண்டும்?
விதி 1 : வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம்: நீங்கள் உபவாசம் இருப்பதைக் காட்டுவதற்காக நீங்கள் உற்சாகமில்லாமல் முகவாட்டமாக இருந்து அதை வெளிக்காட்டக் கூடாது. பைபிள் கூறுகிறது, “நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்;”
விதி 2: ரகசியமாக இருக்க வேண்டும்: நீங்கள் இயல்பாக இருக்க வேண்டும், உங்கள் பசி உங்களை தொந்தரவு செய்யும் போது எப்படி உங்களால் இயல்பாக இருக்க முடியும்? அதற்கு ஆண்டவர் உங்களுக்கு உதவ வேண்டும். “நீயோ உபவாசிக்கும்போது, இந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார்”.
விதி 3: உபவாசம் ஜெபத்தோடு இருக்க வேண்டும்: உபவாசம் ஆவியைக் கட்டுப்படுத்தி, ஆத்துமாவோடு இடைப்பட்டு, நாம் ஜெபிக்க வேண்டியதற்கு பிதாவிடம் உதவி கோருகிறது. உங்களால் ஜெபிக்க முடியாவிட்டால் உபவாசம் இருக்காதீர்கள். வெறும் உபவாசத்தினால் பயன் இல்லை.
விதி 4: குறிப்பிட்ட நாட்கள் எண்ணிக்கையில் உபவாசம் இருக்க வேண்டுமா?: ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நாட்கள் உபவாசம் இருப்பது என்பது நீங்கள் முடிவு செய்ய வேண்டியதில்லை, அது தேவனால் வழிநடத்தப்பட வேண்டும். இது யாராலும் சொல்லப்பட வேண்டியதில்லை. 1 நாள் அல்லது 21 நாட்கள் அல்லது 40 நாட்கள் இப்படி எவ்வளவு காலம் உபவாசம் இருக்க வேண்டும் என்பது உங்களுக்கும் ஆண்டவருக்கும் இடையில் முடிவு செய்யப்பட வேண்டியது ஆகும்.
உபவாசம் மற்றும் ஜெபம்
நெகேமியாவின் முதல் அத்தியாயம், எருசலேம் பாழானது என்ற செய்தியால் நெகேமியா ஆழ்ந்த மன உளைச்சலின் காரணமாக உபவாசித்து ஜெபம் செய்வதை விவரிக்கிறது. அவர் கண்ணீரோடும், உபவாசத்தோடும், அவரது ஜனங்களின் நிமித்தம் பாவத்தை ஒப்புக் கொண்டு, இரக்கத்திற்காக தேவனிடம் கெஞ்சி பல நாட்கள் வேண்டுதல் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது கவலைகளின் வெளிப்பாடு மிகவும் தீவிரமாக இருந்தது, அவர் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் கூட அத்தகைய ஜெபத்தின் நடுவில் "ஓய்வு எடுக்க" முடியும் என்பது கிட்டத்தட்ட நினைத்துப் பார்க்க முடியாதது.
“இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே. ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்”. நெகேமியா 1 : 4-11
நெகேமியாவின் உபவாசம் மற்றும் ஜெபத்திலிருந்து நம் வாழ்வில் கடைப்பிடிக்கும்படி நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
1. “துக்கித்து, உபவாசித்து, மன்றாடி”
a) துயரத்தின் ஆவி, இங்கே நெகேமியா இஸ்ரேலின் பாவங்களால் தாக்கப்பட்ட துக்கத்தால் நிரப்பப்பட்டார்.
b) நாம் ஜெபிக்க வேண்டிய காரியத்தின் மீது நமக்கு ஒரு பெரிய பாரம் இருக்க வேண்டும் (அதை நீங்கள் பசி / துக்கம் அல்லது விரக்தி என்று அழைக்கலாம்).
c) மத்தேயு 5:4 இல் இயேசு கொடுக்கிற வாக்குத்தத்தம், "துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்".
2. தேவனைத் துதித்தார் – “பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே”
a) தேவனின் மகத்துவமான தன்மைக்காக அவரைத் துதித்தார். அவர் எடுத்தவுடனே நேரடியாக அவரது துக்கத்தைக் கொட்டி அழுது புலம்பவில்லை.
b) தேவனைத் துதியுங்கள் - துதிக்கும்போது, அவருடைய மதிப்பையும், வல்லமையையும், அதிகாரத்தையும் வழிபடுகிறோம். அவரைத் துதிக்கும்போது, துதி அவரை மகிழ்வித்து, அவருடைய கவனத்தை உங்கள் பக்கம் திருப்புகிறது. உங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும் (நல்லது அல்லது கெட்டது அல்லது மோசமானது) தேவன் துதிக்கப்படுவதற்குத் தகுதியானவர்.
3. கவனத்திற்காக மன்றாடினார் – “உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும் பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக;”
a) நம்முடைய ஜெபத்தைக் கேட்கும்படி நாம் பரிசுத்த ஆவியிடம் மன்றாட வேண்டும். நாம் உபவாசிக்கும் போது, தேவ ஆவியிடம் சரணடைவதற்கு நம் மாம்சத்தை கட்டுப்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
b) நாம் ஜெபத்தில் மன்றாடும்போது, ஆவியானவர் ஆத்துமாவிடம் பிதாவிடம் உதவி கேட்கும்படி கேட்டுக்கொள்கிறார்.
4. பாவங்களை அறிக்கையிடல் - “நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும்”.
a) நெகேமியா ஒரு தீர்க்கதரிசி. அவர் தனது பாவங்களையும் அவரது குடும்பம் / தலைமுறையினரின் அனைத்து பாவங்களையும் ஒப்புக்கொள்கிறார். நீங்கள் ஒப்புக்கொள்ளும்போது, தேவ இரக்கம் பாவத்தின் வல்லமையை முறியடித்து, பாவத்தின் பிணைப்பை உடைக்கிறது.
b) உங்கள் பாவங்களை நீங்கள் ஒப்புக்கொள்ளும் வரை, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட முடியாது. நாம் ஒப்புக்கொள்ளும் தருணத்தில் அவர் நமக்காக சிந்திய அவருடைய இரத்தத்தின் மூலம் பாவத்தின் பிணைப்புகளிலிருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம்.
c) நீங்கள் ஒப்புக்கொள்ளும்போது, தேவனிடமிருந்து இரக்கம் பெறுகிறீர்கள். நமக்கு வருகின்ற ஆசீர்வாதங்களைத் தடுக்கின்ற பாவத்தின் வேர்களை அவர் அகற்றுவார். "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" என்று நீதிமொழிகள் 28:13 கூறுகிறது.
5. விண்ணப்ப ஜெபம் – “ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்”.
a) அவர் இறுதியாக தனது ராஜாவின் தயவு கிடைக்கும்படி ஜெபம் செய்தார். இதுபோலவே நாமும் தேவனிடம் நம் கோரிக்கையை வைக்க வேண்டும்.
b) தேவன் நம் தேவைகளை அறிந்திருந்தால், நாம் ஏன் அவரிடம் சொல்லி ஜெபிக்க வேண்டும் என்று சிலர் ஆச்சரியப்படலாம். ஒரு குழந்தை தன் தந்தையிடம் எப்படிக் கேட்கிறதோ, அதைப் போல நாம் அவரிடம் கேட்க வேண்டும் என்று வேதம் சொல்கிறது. “ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”மத்தேயு 7:8-9,11
c) இந்த மாதிரி நீங்கள் கேட்கும்போது, அவரது வாக்குத்தத்தம் “உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?” என்று கூறுகிறது. அவர் நன்மையானவைகளை நமக்கு ஆசீர்வாதமாக வழங்குவார்.
தேவனுடைய பிள்ளைகளுக்கு ஜெபமும் உபவாசமும் ஒரு பாரமாகவோ அல்லது கடமையாகவோ இருக்கக்கூடாது. மாறாக தேவனுடைய நன்மை மற்றும் இரக்கத்தைக் கொண்டாடும் கொண்டாட்டமாக இருக்க வேண்டும்.
உபவாசம் மற்றும் ஜெபத்தின் வல்லமை
இயேசு லூக்கா 5:36-39 மூலம் உபவாசத்தின் வல்லமையை விளக்கினார்.
“அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது. ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், துருத்திகளும் கெட்டுப்போகும். புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்”. லூக்கா 5 : 36-39
இயேசுவின் கருத்து தெளிவாக உள்ளது. “உங்கள் பழைய பழக்கங்களைத் திருத்த நான் வரவில்லை. நான் முற்றிலும் புதிய ஆடைகளுடன் வருகிறேன்" என்று இயேசு கூறுகிறார்.
இயேசு ஒரு புதிய நிறுவனத்தை உருவாக்கினார் - தேவாலயம் - இது யூதரையும் புறஜாதியாரையும் முற்றிலும் புதிய சரீரத்திற்குள் கொண்டு வந்தது.
பழைய மற்றும் தேக்கநிலையில் இருப்பதைப் புதுப்பிக்கவோ அல்லது சீர்திருத்தவோ முடியாது என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார்.
வேதாகமத்தில், திராட்சைரசம் என்பது பரிசுத்த ஆவியின் சின்னம். கர்த்தர் தொடர்ந்து நமக்குள் புதிய திராட்சரசத்தை ஊற்ற விரும்புகிறார். ஆனால் பிரச்சனை என்னவென்றால், மதவெறியானது மக்களை பழைய துருத்திகளைப் போல உறுதியாகவும் கடினமாகவும் ஆக்குகிறது. அவர்களால் புதிய விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.
நாம் உபவாசிக்கும்போது, புதிய திராட்சரசத்தை ஊற்றுவதற்காக நம்மிடம் உள்ள பழைய துருத்திகளைக் கொடுக்கிறோம். நம்மில் உள்ள சுயமானது ஆவியானவரிடம் சரணடைந்து, தேவனின் புதிய வல்லமையைப் பெற உதவும்படி கேட்கிறது.
ஆவியானது நேரடியாக ஆத்துமாவில் கேட்பதால், ஜெபங்கள் நமது சாதாரண ஜெபத்தை விட அதிகமாக மதிக்கப்படுகின்றன மற்றும் நமது ஜெபத்திற்கு அதிக வல்லமையைக் கொண்டுவருகின்றன.
சுருக்கம்
வாழ்க்கையில் உங்கள் போராட்டங்கள் எதுவாக இருந்தாலும், நெகேமியா எப்படி உபவாசித்து ஜெபித்தாரோ, அதே போல, அந்த போராட்டங்களை முறியடிக்க மிகுந்த விசுவாசத்துடன் உபவாசித்து ஜெபம் செய்யுங்கள்.
Comments