வாழ்க்கை, தேர்வுகள் மற்றும் தீர்மானங்களால் நிரம்பியது. அவை நம்மை உருவாக்குகின்றன அல்லது உடைக்கின்றன. திட்டமிடுவதில் தவறு செய்தால், அது நம்மை மட்டுமல்லாமல், நம்மோடு தொடர்புடைய அனைவரையும் பாதிக்கிறது. பெற்றோரின் மோசமான திட்டமிடல் அவர்களின் குடும்பத்தையும், ஒரு மேலாளரின் மோசமான திட்டமிடல் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தையும், ஒரு போதகரின் மோசமான திட்டமிடல் அந்த சபையையும், ஒரு நிர்வாகியின் மோசமான திட்டமிடல் முழு நகரத்தையும் / நாட்டையும் பாதிக்கிறது. தவறான தேர்வுகள் தடுமாற்றம் மற்றும் குழப்பத்திற்கும் சில நேரங்களில் மீள முடியாத சேதத்திற்கும் வழிவகுக்கும்.
தேவ பிள்ளைகள் (இரட்சிப்பின் கீழ் உள்ளவர்கள்), தேர்வு செய்ய வேண்டியது "நல்லது" மற்றும் "கெட்டது" இவற்றிற்கு இடையே இல்லை. "நல்லது" மற்றும் "சிறந்தது" இவற்றிற்கு இடையே தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இரட்சிப்பு என்பது "புதிய உரிமையாளரின் (கிறிஸ்து)" கீழ் வருவது. கிறிஸ்து நமது "இரட்சகராக" மட்டுமல்ல, நமது "கர்த்தராகவும்" ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார். நமது திட்டமிடல் அவர் சித்தத்தின்படி இருக்க வேண்டும், அவருடைய சித்தத்தை செய்வது உலகத்திற்குரிய தேர்ந்தெடுக்கும் உரிமை அல்ல, அது ஒரு நித்திய கடமை.
மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். நீதிமொழிகள் 19:21
பல நேரங்களில் நாம் தோல்வியடைகிறோம், ஆண்டவரின் திட்டம் மட்டுமே வெற்றி பெறுகிறது. நாம் நமது திட்டங்களோடு அவரின் சித்தத்தை தவறாகப் புரிந்து கொண்டு அது தேவனின் திட்டம் என்று கூறுகிறோம்.
தேவன் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு முன்குறிக்கப்பட்ட திட்டம் (பரிபூரண சித்தம் என்றும் அழைக்கப்படுகிறது) வைத்திருக்கிறார். ஆனால் நாம் அவருடைய வார்த்தையைப் பின்பற்றும்போது மட்டுமே சரியான நேரத்தில் அது நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள். உபாகமம் 29:29
தேவன் நமக்காக இவ்வளவு திட்டமிடும் போது, மனிதர்களாகிய நாம் ஏன் பலமுறை தோல்வியடைகிறோம், சிலர் எப்படி வெற்றி பெறுகிறார்கள்?இந்தக் கேள்விக்கான பதில் நாம் செய்யும் 2 பொதுவான தவறுகளில் உள்ளது.
திட்டமிட்ட பிறகு ஒப்புதல் கேட்டு தேவனிடம் வராதீர்கள்
நமது திட்டங்கள் "சிறந்ததாகவும், மிகச் சிறந்ததாகவும்" இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், ஆனால் நாம் என்ன செய்ய முனைகிறோம்? நாம் நமது வாழ்க்கை நிகழ்வுகள் / ஆசைகளை திட்டமிடுகிறோம். பின்பு நமது திட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டு அவரிடம் வருகிறோம். அது அவருடைய திட்டம் அல்லாததால் அவர் நம் திட்டத்தை ஆதரிப்பதில்லை. இதற்கு உதாரணம் வேதத்தில் எசேக்கியேல் புத்தகம் 14 ஆம் அதிகாரத்தில் உள்ளது.
இஸ்ரவேலுடைய மூப்பரில் சிலர் என்னிடத்தில் வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர் மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துகொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா? ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன். அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னை விட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். எசேக்கியேல் 14 :1-5
இங்கு இஸ்ரவேலின் மூப்பர்கள் விக்கிரகங்களை நிறுவி, தீர்க்கதரிசியிடம் ஒப்புதல் கேட்க வந்தனர். ஆனால் தேவன் இந்த திட்டத்தை ஆதரிக்கவில்லை. அவர்கள் அனுபவிக்கப் போகும் கோபத்தைப் பற்றிக் கூறி அவர்களை எச்சரித்தார் (வசனம் 8 முதல் 15).
எசேக்கியேல் புத்தகத்தை நமது காலத்தின் தற்போதைய சூழலுக்கு ஏற்ப படிக்கும்போது "விக்கிரகங்கள்" என்பதை நாம் வியக்கின்ற நமது ஆசைகள் மற்றும் நாம் ஆலோசனை செய்கின்ற திட்டங்களுடன் பொருத்திப் பார்க்கலாம்.
தேவன் உங்கள் திட்டத்தை ஆதரிக்க மாட்டார். அவர் அதை உங்கள் திட்டத்தின்படி ("சுயாதீன விருப்பம்") செய்ய விட்டுவிடுவார். பெரும்பாலான நேரங்களில் இந்த திட்டங்கள் தேவனின் திட்டத்திலிருந்து விலகிச் செல்கின்றன, ஏனெனில் இந்த திட்டம் நமது "சுயாதீன விருப்பத்தில்" இருந்து வருகிறது.
நாம் இதைச் செய்யும்போது, தேவன் அவருடைய “அனுமதிக்கப்பட்ட சித்தத்திற்கு” (permissive will) வழிவகுக்கிறார். நாம் அவருடைய விருப்பத்திற்குக் கீழ்ப்படியத் தவறிவிடுகிறோம். நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் "சுயாதீன விருப்பத்தின்" காரணமாக, அவருடைய விருப்பத்திற்கு மாறாக செய்யும்படி நாம் தேர்வு செய்கிறோம். இதன் விளைவாக, அவருக்கு எதிராக பாவம் செய்கிறோம். தம் பிள்ளைகள் தொடர்ந்து பாவம் செய்வதை அவர் விரும்பாததால், அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி, தம் விருப்பத்திற்குத் திரும்புவதற்குக் கைகொடுக்கிறார். ஏசாயா 30:1,2 பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என்ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும், என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இரகசியத் திட்டங்கள் தோல்வியடைகின்றன
நம்மில் பலருக்கு இரகசிய ஆசைகள் உள்ளன, அவை தேவனின் பரிபூரண சித்தத்தைக் கண்டுபிடிப்பதைத் தடுக்கின்றன. நாம் நமது நோக்கங்களையும் எண்ணங்களையும் அவரிடம் மறைத்து இரகசியமாக காரியங்களைச் செய்ய முடியும் என்று நினைக்கிறோம்.
ஏசாயா 29:15 - "தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ!".
“அவர்களுக்கு ஐயோ” என்று பைபிள் சொல்கிறது - அதற்கு, அப்படிப்பட்ட செயல்களைச் செய்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பார்கள் என்று அர்த்தம்.
தேவனிடம் இருந்து மறைக்கக்கூடியது எதுவுமில்லை. எபிரேயர் 4:13 - "அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய, கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்".
நாம் பலவற்றைத் திட்டமிடலாம், ஆனால் தேவனுக்கு எதிராக எதுவும் நிலைநிற்க முடியாது. நீதிமொழிகள் 19:21 - மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
நமது திட்டங்களை எவ்வாறு சரியாகப் பெறுவது?
அப்படியானால், நமக்கு விருப்பங்கள் இருக்க முடியாது என்று அர்த்தமா? நமது விருப்பங்கள் தேவனின் சித்தத்திற்கு ஒத்துப்போகின்றன என்பதை நாம் எப்படி அறிவோம்? இந்த கேள்விக்கான பதில் தேவனின் சித்தம் என்பதன் வரையறையில் உள்ளது. உபாகமம் 29:29 - "மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்".
நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைப் பின்பற்றினால், அது நமக்கு வெளிப்படுத்தப்படும். தேவன் உங்களுக்கு வழிகாட்டுவதைப் பின்பற்றுங்கள். நம் ஒவ்வொருவருக்கும் தேவனின் தனித்துவமான திட்டம் உள்ளது, அவர் அதை ஒரு நேரத்தில் ஒவ்வொருபடியாக வெளிப்படுத்துவார். அதனால்தான் அவருடைய திட்டத்தை அறிந்துகொள்ள ஒவ்வொரு நாளும் அவருடன் இணைந்திருப்பது முக்கியம்.
தேவ சித்தத்திற்கு எவ்வாறு ஒத்துழைப்பது என்பதை ஒலிவமலையில் வைத்து தமது ஜெபங்களின் மூலம் இயேசு நிரூபித்துக் காட்டினார். "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரைபண்ணுகிறதைக் கண்டு: நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்". லூக்கா 22 : 42-46
இயேசுவிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் தொடர்ச்சியாக இங்கே உள்ளன.
இயேசு பிதாவிடம், "பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று ஜெபித்தார்.
அடுத்ததாக, அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.
அடுத்ததாக, அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.
அடுத்து அவர் தம் சீடர்களிடம், “சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள்" என்று கூறுகிறார். நாம் தூண்டப்படும் நமது சுயாதீன இச்சைகளைத் தான் அவர் சோதனை என்று குறிப்பிடுகிறார்.
நமக்கு பல ஆசைகள் இருக்கலாம். இந்த ஆசைகள் என் உள்ளத்தில் உள்ளன என்று ஜெபத்தின் மூலம் தேவனிடம் கூறுவது சரி தான். அவர் விருப்பப்படி செய்ய அவரிடம் கேளுங்கள். அப்படிப்பட்ட ஜெபத்தை நாம் இருதயத்திலிருந்து செய்யும்போது, அவரிடம் இருந்து வராத எல்லா ஆசைகளையும் அவர் எரித்துவிடுவார். 1 கொரிந்தியர் 3:15 - "ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்". நமது சுய ஆசைகளால் நமக்குக் காத்திருக்கும் தோல்விகளில் இருந்து நாம் காப்பாற்றப்படுவோம்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் கர்த்தருடைய வார்த்தையைப் படித்து, அவர் உங்களுக்குச் சொல்வதற்குக் கீழ்ப்படிந்து அவருடன் நடக்கும் போது அவர் தம்முடைய சித்தத்தின்படி உங்களை வழிநடத்துவார். பிலிப்பியர் 2:13 - "ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார்".
உங்களுக்கு ஆசைகள் வரும்போது, அது தேவனின் சித்தமா என்பதைச் சோதித்து, அவருக்கு ஒப்புக்கொடுத்தால், அவர் தம்முடைய சித்தத்தின்படி வழிநடத்துவார். சங்கீதம் 37:5 - "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்".
நாம் தேவனுடைய சித்தத்தின்படி நடக்கிறோமா என்பதை அவருடைய வார்த்தை மட்டுமே நமக்கு உறுதிப்படுத்தும். அவர் தமது வார்த்தையின் மூலம் (அறிவு / ஞானம்) பேசி, (ஆவியானவர் நமக்குத் தருகிற புரிதல்) உங்களை வழிநடத்துவார். கொலோசெயர் 1:9-10 -"இதினிமித்தம், நாங்கள் அதைக்கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும்,".
உங்களுக்கு ஆசைகள் வரும்போது இந்த கேள்விகளை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் -
எனக்கு உண்மையில் இதற்கு மேலும் தேவையா?
இந்த ஆசை தேவனிடம் ஜெபத்தில் சொல்லப்பட்டதா?
இந்த ஆசைக்காக நான் எனது ஜெப நேரத்தையும் குடும்ப நேரத்தையும் தியாகம் செய்ய வேண்டுமா?
நான் தேவனுடைய விருப்பத்தில் இருந்து மீறி "பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி" (ஏசாயா 30:1) இந்த ஆசைகள் பாவத்தை ஏற்படுத்துமா?
இப்படி உங்கள் வாழ்க்கையைத் திட்டமிடத் தொடங்கினால், எல்லாத் திட்டங்களும் தேவனிடம் ஒப்புக் கொடுக்கப்பட்டு, அவருடைய திட்டங்கள் வெற்றி பெறும். சங்கீதம் 103:21 -"கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்".
Comments