சில சமயங்களில் நமது அன்றாட வாழ்வில், எதிர்பாராத பிரச்சனைகள் எழுவதை நாம் கவனிக்கிறோம். நமக்கு தொடர்பில்லாத நபர்கள் திடீரென நம்மை எதிர்ப்பதால், பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. தனிப்பட்ட முறையில், இதுபோன்ற சூழ்நிலைகளை நான் சந்தித்திருக்கிறேன். இது, அவர்களின் எதிர்ப்பைத் தூண்டுவதற்கு நான் என்ன செய்திருப்பேன் என்று என்னை சிந்திக்க வைத்தது. மக்கள் ஏன் தங்கள் சொந்த விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தி, மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதைத் தவிர்க்கக் கூடாது என்ற கேள்விக்கு இது என்னை இட்டுச் செல்கிறது.
பவுல் தெசலோனிக்கேயர் திருச்சபைக்கு எழுதிய நிருபத்தில், கிறிஸ்துவுக்குள்ளும் இந்த உலகிலும் நாம் எவ்வாறு வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதை தெளிவாக எழுதுகிறார்.
புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். 1 தெசலோனிக்கேயர் 4:11-12
வழிமுறைகள் தெளிவாக உள்ளன
அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும் - அமைதியான வாழ்க்கை இருக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் நாம் வாழ்க்கையை நடத்த வேண்டும். நம்முடைய உடைமைகளைக் காட்டுவதில் அதிக ஆரவாரம் இல்லாமல், அது தேவனுக்குள்ளான தாழ்மையான வாழ்க்கையாக இருக்க வேண்டும்.
உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும் - உங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொண்டு, கிறிஸ்துவின் பார்வையில் குற்றமற்ற மற்றும் தூய்மையான வாழ்க்கையை வாழ முயற்சி செய்யுங்கள். அதாவது, கறையற்ற, குற்றமற்ற வாழ்க்கை.
உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் - நேர்மையுடன் கடினமாக உழைக்கவும், உழைப்பின் பலனைப் பெறவும் உங்கள் பங்கை எப்போதும் தேடுங்கள். பிறருடைய உழைப்பை திருடும் வாழ்க்கையை வாழாதீர்கள். உங்கள் கைகளின் பிரயாசத்தின் பலனைத் தருவதற்கு தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
புறம்பேயிருக்கிறவர்களைப்பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு - இந்த மூன்று விஷயங்களையும் நாம் செய்யும் போது, உலகத்தில் உள்ளவர்களிடம் இருந்து மிகுந்த மரியாதையுடன் நமது வாழ்க்கை நடத்தப்படுகிறது, அவர்களிடமிருந்து மரியாதை சம்பாதித்துக் கொள்கிறோம். மேலும் நாம் மனிதர்களைச் சார்ந்து இல்லாமல் தேவனையே சார்ந்து இருக்கிறோம்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது மிகவும் எளிதாக இருந்தும் நாம் ஏன் அவற்றைப் பின்பற்றுவதில்லை? இந்த நான்கு முக்கிய விஷயங்களால் தான். (இன்னும் பல இருக்கலாம், நான் முக்கிய 4 விஷயங்களை மட்டும் முன்னிலைப்படுத்தியிருக்கிறேன்)
1) சாத்தானும் உலகமும்
இந்த உலகமும் இதின் காரியங்களும் சாத்தானின் கட்டுப்பாட்டில் உள்ளன. இயேசு அவனை "உலகத்தின் அதிபதி" என்றும், பவுல் "இப்பிரபஞ்சத்தின் தேவன்" என்றும் குறிப்பிடுகிறார்கள். வேதத்தில் சாத்தான் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறான்.
இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். யோவான் 12:31
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 2 கொரிந்தியர் 4:4
நாம் எப்படி வாழ வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதற்கு எதிராக சாத்தான் செயல்படுகிறான். அதனால்தான், அவனது ராஜ்யத்திற்குள் நாம் வருவதற்காக, நம்மை ஏமாற்ற உலக இன்பங்களைத் தருகிறான். இது மூன்று விஷயங்களால் நமக்கு வருகிறது.
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 1 யோவான் 2:16
மாம்சத்தின் இச்சை - நமக்குள் இருக்கும் சுய ஆசைகள்
கண்களின் இச்சை - உலக விஷயங்களின் மீதான பல ஈர்ப்புகள்
ஜீவனத்தின் பெருமை - எல்லாவற்றுக்கும் ஆதாரமான தேவனை அங்கீகரியாமல் நாம் நமது சொந்த பலத்தால் சாதித்தோம் என்ற பெருமை.
நம் அலுவல்களை நாம் கவனத்தில் கொள்ள, கற்றுக்கொள்ள வேண்டியது - 1 தெசலோனிக்கேயர் 4:11-12 ஐப் பின்பற்றவும்.
மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்தின் பெருமை ஆகியவை நம் சுயத்திலிருந்து அகற்றப்பட விழிப்போடிருங்கள். இவற்றை மேற்கொள்ள உதவுவதற்கு தேவனிடம் கேளுங்கள். நம்முடைய பலத்தால் செய்ய முடியாது. இயேசு நம்முடைய பாவங்களுக்காக மரித்தார்.சிலுவையின் வல்லமையால் நம்மால் நம் பலவீனத்தை மேற்கொள்ள முடியும்.
2) பிரிவினையின் ஆவி
நாம் தேவனோடு ஐக்கியப்படுவதை சாத்தான் விரும்புவதில்லை. நாம் நம் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் ஐக்கியமாக இருப்பதை அவன் விரும்புவதில்லை. பிரிவினையின் ஆவி இருந்தால், அது சாத்தானிடமிருந்து தான் வருகிறது. இதை அவன் எப்படி செய்கிறான்?
அவன் (சாத்தான்) உலகத்தின் நண்பருடன் நம்மை வழிநடத்தி, கெட்ட குணத்தால் தேவனுடைய பிள்ளைகளின் மனதைக் கெடுக்கிறான்.மோசம்போகாதிருங்கள்; ஆகாதசம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 1 கொரிந்தியர் 15:33
ஒருவன் உலகத்துடன் சேர்ந்து கெட்டுப்போனவுடன், அனைத்து நல்ல விஷயங்களையும் இழந்து வழிதவறிப் போய், பாவங்களுக்கு உணர்ச்சியற்றவனாக மாறுகிறான். மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். நீதிமொழிகள் 16:28
மக்கள் பேசும் வார்த்தைகளை வைத்து நம்மில் கோபத்தை வளர்த்து, அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்குகிறான். மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள். யோபு 36:13
நம் அலுவல்களை நாம் கவனத்தில் கொள்ள, கற்றுக்கொள்ள வேண்டியது - 1 தெசலோனிக்கேயர் 4:11-12 ஐப் பின்பற்றவும்.
உங்களோடு கூட்டு வைத்துள்ள, கெட்ட மனிதர்களைக் கண்டறியுங்கள். உங்களுடைய குணாதிசயங்கள் / நடத்தைகள் மோசமாகப் போவதை நீங்கள் கண்டால், அந்த நபரிடமிருந்து விலகி இருங்கள்.
பொல்லாத நபரிடமிருந்து விலகி இருங்கள் - யார் பொல்லாதவர் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்? வாயின் வார்த்தைகள் மூலம் அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். மத்தேயு 12:34
3) யாதொரு வேலையும் செய்யாமல் சும்மாயிருப்பது
“செயலற்ற மனம் பிசாசின் பட்டறை” என்று ஒரு பழமொழி உண்டு, தெய்வபக்தியற்ற பல விஷயங்களை குறித்து சதி செய்யும்படி சாத்தான் கால்பதிக்க இடம் கொடுக்கிறோம்.
உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச்சாப்பாட்டைச் சாப்பிட வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். 2 தெசலோனிக்கேயர் 3:11-13
நீங்கள் ஒன்றும் செய்யாமல் சும்மா இருக்கும் போது, மனம் சீர்குலைக்கும் விஷயங்களைத் தேடுவதற்குத் தூண்டுகிறது. அதனால், அவர்கள் என்ன செய்கிறார்கள்? எவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்கள்? பிறர் வாழ்க்கையில் என்ன கெட்டது நடக்கின்றது? அவர்களிடம் எவ்வளவு செல்வம் இருக்கிறது? உங்களிடம் இல்லாதது அவர்களிடம் என்ன இருக்கிறது? என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள மற்றவர்களின் வாழ்க்கையைப் பார்க்கத் தொடங்குகிறீர்கள்.
நாம் சுறுசுறுப்பாக இல்லாத போது, நமது மனம் மற்றவர்களின் வாழ்க்கையைப் பற்றி பேச வைத்து, பிறர் வாழ்க்கையில் தலையிடும் ஒருவராக நம்மை மாற்றுகிறது.
கிசுகிசு - இது ஒருவரைப் பற்றி அவர்கள் இல்லாதபோது பேசுவது ஆகும். அவர்கள் இல்லாதபோது அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது.
மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அவர்களைப் பற்றி கேட்பது சரி தான் என்று பெரும்பாலும் நாம் சாத்தானால் வஞ்சிக்கப்படுகிறோம். கிசுகிசு செய்பவர் மற்றும் கேட்பவர் (கிசுகிசுக்களை ஊக்குவிப்பவர்) இருவருமே சமமாக இந்த பாவத்திற்காக தேவனுக்கு பதிலளிக்க வேண்டும். துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். நீதிமொழிகள் 17:4
நம் அலுவல்களை நாம் கவனத்தில் கொள்ள, கற்றுக்கொள்ள வேண்டியது - 1 தெசலோனிக்கேயர் 4:11-12 ஐப் பின்பற்றவும்.
கிசுகிசு பேசுவதைக் கேட்பதும் கிசுகிசு சொல்வதைப் போலவே மோசமானது. எனவே, ஒருவர் மற்றவர்களைப் பற்றி பேசத் தொடங்கும் போது இந்த 3 கேள்விகளைக் கேட்டு எதிர்மறையான பதிலைக் கொடுங்கள்:
அது அவருக்கு நன்மை தருமா?
அது உங்களுக்கு பயன் தருமா?
அது தேவனை மகிமைப்படுத்துமா?
இல்லையெனில், கிசுகிசு பேசுபவர்கள் என்ன பேசுகிறார்களோ அதை ஊக்குவிக்காமல், அந்த நபரிடமிருந்து விலகி இருங்கள்.
ஒருபோதும் சும்மா இருக்காதீர்கள். உங்களுக்கு நேரம் இருந்தால், யாருக்காவது நன்மை செய்யுங்கள். இல்லையெனில், தேவனுடைய வார்த்தையை தியானியுங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் அவருடைய சித்தத்தைச் செய்யும்படி அறிவுறுத்தி, உங்களை வழிநடத்துவார். ஒருபோதும் சும்மா இருக்காதீர்கள், உங்கள் வயது என்னவாக இருந்தாலும் இந்த உலகில் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
4) நமது மனதிற்கு குறி
சாத்தான் வஞ்சிப்பதன் மூலம் முதலில் நம் மனதைக் கைப்பற்ற முயற்சிக்கிறான், அவன் நம் மனதை கெட்ட மனமாக மாற்றுகிறான்.
அதனால்தான் பேதுரு, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்;” என்று நினைவூட்டுகிறார் - தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8
சாத்தான், உண்மையை திரித்து, நம் மனம் சரியானது தான் என்று நம்மை நம்ப வைத்து ஏமாற்றி பாவத்தில் விழ வைக்கிறான். இதைத் தான் ஏவாளிடமும் செய்தான். ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 2 கொரிந்தியர் 11:3. எடுத்துக்காட்டாக, யோபின் மனதை அவனால் கெடுக்க முடியவில்லை; அதனால்தான் அவர் சரீரத்தைத் தொட்டான்.
பின்னடைவு மனதில் தொடங்குகிறது. அநேக நேரங்களில், அவன் நம் பழைய பாவ வாழ்க்கையை நமக்கு நினைவூட்டி, தற்போதைய வாழ்க்கையை விட அது தான் சிறந்தது என்று நம்ப வைக்கிறான். அவன் ஒரு பொய்யன். இஸ்ரவேலர்கள் தேவனால் தினமும் மன்னாவை கொண்டு போஷிக்கப்பட்ட போது அவர்களுடன் இதைச் செய்தான். பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப்பூண்டுகளையும் நினைக்கிறோம். இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். எண்ணாகமம் 11:4-6. தேவன் அவர்களுக்கு காடையைக் கொடுத்தார்.
நம் அலுவல்களை நாம் கவனத்தில் கொள்ள, கற்றுக்கொள்ள வேண்டியது - 1 தெசலோனிக்கேயர் 4:11-12 ஐப் பின்பற்றவும்.
பாவத்தின் மீதான வெற்றி என்பது எண்ணங்களில் வெற்றியைக் குறிக்கிறது. ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. ரோமர் 7:23
உங்கள் மாம்சத்தை சிலுவையில் மரிக்க செய்யவும், உங்கள் மனம் தேவ ஆவியால் கட்டுப்படுத்தப்படவும் தேவனிடம் ஜெபியுங்கள்.
அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. ரோமர் 8:5-7
இயேசுவில் உண்டாகிய புதிய வாழ்க்கைக்கு எதிராக பழைய வாழ்க்கை சிறந்தது என்று நீங்கள் பார்க்கும் இடத்தில், பின்வாங்கும் மனதைக் கவனியுங்கள்.
குப்பைகளை வெளியேற்றி, தகுதியானவற்றைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். பிலிப்பியர் 4:8-9
உங்கள் மனம் குப்பையாக விடாதீர்கள். குப்பை பொறுக்குபவராக இருக்காதீர்கள்! வடிகட்டுங்கள்! கழுகுகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதை உங்களால் தடுக்க முடியாது; ஆனால் உங்கள் தலையில் கூடு கட்டுவதையும் முட்டையிடுவதையும் நீங்கள் நிச்சயமாக நிறுத்தலாம்!
Comments