பாவத்தால் ஆழமாக பாதிக்கப்பட்ட உலகில் நாம் வாழ்கிறோம். சரித்திரம் முழுவதும், மக்கள் பலியிடுவதை பரிகாரமாகச் செய்திருக்கிறார்கள். சில மதங்களில், கோழி அல்லது ஆடு போன்ற விலங்குகளை பலியிட்டு, சடங்கின் ஒரு பகுதியாக அவற்றின் இரத்தத்தைப் பயன்படுத்துகின்றனர். இது பலரை ஆச்சரியப்பட வைக்கிறது: இயேசுவின் மரணமும் உயிர்த்தெழுதலும் நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை எவ்வாறு இரட்சிக்க முடியும்? கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரத்தத்தின் மூலமான மீட்பின் வல்லமையைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்கள், ஆனால் அவருடைய இரத்தத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளாமல், அது நம்மைப் பாவத்திலிருந்து எவ்வாறு விடுவிக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம்.
வசனம் கூறுகிறது, அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 1 யோவான் 1:7
இயேசுவின் இரத்தம் நம் பாவங்களை சுத்திகரிக்குமா?
தேவன் தம்முடைய ஒரே குமாரனாகிய இயேசுவை நம்முடைய எல்லா பாவங்களுக்காகவும் இறுதியான பலியாக தெரிந்துகொண்டார் (ரோமர்3:25-26). அவர் முற்றிலும் குற்றமற்றவராகவும் பாவம் இல்லாதவராகவும் இருந்தபோதிலும், அவரே அவற்றைச் செய்தவர் போல மனுக்குலத்தின் பாவங்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டார் (1 பேதுரு 1:19, 1 பேதுரு 2:24).
தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார். ரோமர் 3:25-26
குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 1 பேதுரு 1:19
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 1 பேதுரு 2:24
பழைய ஏற்பாட்டில், வெள்ளாட்டுக்கடா மற்றும் பறவைகளின் இரத்தம் பாவத்தை சுத்திகரிக்க பயன்படுத்தப்பட்டது, ஆனால் இயேசு தமது சொந்த இரத்தத்தை நம்முடைய பாவங்களுக்காக இறுதி பலியாக கொடுத்தார் (எபிரெயர் 9:12, ரோமர் 3:25-26). அவர் சிலுவையில் அறையப்படுவதை விருப்பத்துடன் தேர்ந்தெடுத்தார், பாவத்தைச் சுத்திகரிக்க மற்றொருவரின் இரத்தத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, தம்மையே ஒப்புக்கொடுத்தார் (எபிரெயர் 9:12).
வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். எபிரெயர் 9:12
அவர் எவ்வாறு நம்மைத் தூய்மையாக்குகிறார்?
"வெகு காலத்திற்கு முன்பு நடந்த இயேசுவின் தியாகம் இன்று என்னை எவ்வாறு சுத்திகரிக்க முடியும்?" என்று பலர் ஆச்சரியப்படலாம் / கேள்வி கேட்கலாம்.
நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிடும்போது, இயேசுவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுகிறோம். நம்முடைய பாவங்களுக்கான சுத்திகரிப்பு வெவ்வேறு நிலைகளில் நடக்கிறது.
முதல் படி : கிறிஸ்துவில் விசுவாசம் - "இயேசுவே ஆண்டவர்"
ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், எபிரெயர் 10:19
இயேசுவின் இரத்தம் மட்டுமே உங்களைக் காப்பாற்றும் என்று விசுவாசியுங்கள். இயேசுவின் இரத்தம் நம்மை பாவத்திலிருந்து இரட்சிக்க முடியும் என்ற விசுவாசம்.
நாம் பாவத்தில் பிறந்து, பாவம் நிறைந்த உலகில் வாழ்ந்து, தேவனுடைய பரிசுத்த பிரசன்னத்தில் நம் சுயத்தால் பிரவேசிக்க முடியாதபடி இருக்கிறோம். பழைய ஏற்பாட்டு காலங்களில், ஜனங்கள் அவரை அணுகுவதற்கு பாவநிவாரண பலிகளைச் செலுத்த வேண்டியிருந்தது.
நாம் இயேசுவில் விசுவாசம் வைக்கும்போது, "இயேசுவே ஆண்டவர்" என்று பிரகடனம் செய்கிறோம். இந்த செய்தி கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்ல; இது அனைவருக்குமானது. இயேசு கிறிஸ்தவர்களுக்காகவோ அல்லது எந்தவொரு குறிப்பிட்ட பிரிவினருக்காகவோ மட்டும் மரிக்கவில்லை - அவரது தியாகம் நம்பிக்கை, ஜாதி, இனம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்காகவும் இருந்தது.
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்கும் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம் பன்னராயிருக்கிறார். ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். ரோமர் 10:9-13
இந்த விசுவாசத்தை நாம் ஏற்றுக்கொண்டவுடன், இயேசுவை நம்முடைய கர்த்தராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறோம். நம்முடைய பாவங்களுக்கான பரிசுத்த பலியாக அவரை அங்கீகரிக்கிறோம். ஏனென்றால் அவர் எல்லா ஜனங்களின் பாவங்களுக்காகவும் மரித்தார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். "ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமானமார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்" எபிரெயர் 10:19.
இரண்டாவது படி : பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கான நிச்சயம்
அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், எபிரெயர்10:20
வெள்ளாடுகளையோ பறவைகளையோ பலியிடும் பழைய ஏற்பாட்டு வழக்கத்தை நாம் இனியும் பின்பற்றுவதில்லை, ஏனென்றால் கிறிஸ்து தாமே ஒரேதரமாக ஜீவ பலியாக மாறினார் (எபிரெயர் 7:27 / ரோமர் 6:10). நாம் புதிய ஏற்பாட்டு வாழ்க்கையை வாழ அழைக்கப்படுகிறோம்.
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். எபிரெயர் 7:27
அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். ரோமர் 6:10
பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பது நமது சொந்த கிரியைகளினால் அல்ல, மாறாக சிலுவையில் நிறைவேற்றப்பட்ட கிரியையின் மூலம் நிறைவேறுகிறது. ஆலயத்தின் திரைச்சீலை கிழிவது பரிசுத்த ஸ்தலத்திற்குள் நாம் பிரவேசிப்பதைக் குறிக்கிறது.
அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. மாற்கு 15:38
சிலுவை பலியும், ஆலயத் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்ததும் நமக்கு பிரவேசிப்பதற்கு வழியைக் கொடுத்தது.
அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். லூக்கா 23:44-46
நாம் கிறிஸ்துவுக்குள் வரும்போது, நாம் கிறிஸ்துவின் சரீரத்தை அணிந்திருக்கிறோம்.
எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார். எபேசியர் 1:23
மூன்றாவது படி - குமாரரும் குமரத்திகளுமாயிருக்கிற நாம் ஆசாரியர்களாக ஆக்கப்படுகிறோம்
நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1:6
பழைய ஏற்பாட்டு காலத்தில், லேவியர்கள் மட்டுமே பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் புதிய உடன்படிக்கையின் கீழ், பலிபீடத்தை அணுகி தேவனுக்கு நம்மை அர்ப்பணிக்கும் சிலாக்கியத்துடன் நாம் குமாரராகவும், குமரத்திகளாகவும், ராஜாக்கள் மற்றும் ஆசாரியர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த சிலாக்கியம் வழங்கப்படுகிறது. அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். எபிரெயர் 5:1,5,6
பரிசுத்த ஸ்தலத்தில் நாம் தனியாக இல்லை - மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நமது பிரதான ஆசாரியரான இயேசு நம்முடன் நிற்கிறார். இது தேவனுடைய பிரசன்னத்திற்குள் பிரவேசிப்பதற்கான உறுதியை நமக்குத் தருகிறது. கிறிஸ்து தாமே நமது பிரதான ஆசாரியராக இருப்பதால், இந்த பரிசுத்த ஸ்தலத்திற்கு நம்மை வழிநடத்தும் லேவியர்கள் நமக்கு இனி தேவையில்லை. எபிரெயர் 10:21 இவ்வாறு கூறுகிறது, “தேவனுடைய வீட்டின் மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்”.
நான்காம் படி : கழுவி நம்மை தூய்மையாக்குகிறார்
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். எபிரெயர் 10:14
இயேசு நமது பிரதான ஆசாரியர், அவர் பரிசுத்த தேவன், அவர் தம்முடைய இரத்தத்தில் கழுவுவதன் மூலம் நம்மை பரிசுத்தமாக்குகிறார் (பழைய நாட்களில் ஈசோப்பு, சுத்திகரிப்பு விழாக்களில் இரத்தம் / தண்ணீரை தெளிக்க ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது). நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். சங்கீதம் 51:7
நம்முடைய பாவங்களிலிருந்து நம்மைச் சுத்தப்படுத்த இயேசு தம்முடைய சரீரத்தின் இரத்தத்தையும், தண்ணீரையும் பயன்படுத்துகிறார் - இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். 1 யோவான் 5:6
இதன் மூலம், நாம் நம்முடைய பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுகிறோம், நம்மை ஆக்கினைத் தீர்க்கும் அதன் வல்லமையிலிருந்து விடுவிக்கப்படுகிறோம். அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். ரோமர் 6:10
இதனால்தான் நாம் நேர்மையான இருதயத்தோடு அறிக்கையிடும்போது பாவத்தின் குற்றம் நீக்கப்படுகிறது. மன்னிக்கப்பட்டவுடன், பாவத்திற்கு இனி அந்த நபர் மீது அதிகாரம் இல்லை, மேலும் அவர்கள் அதன் பிடியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள். முன்னாள் குடிகாரர்கள் அல்லது ஒரு காலத்தில் கிறிஸ்துவை எதிர்த்தவர்கள் போன்ற பலரிடம், வேதாகமத்தை எடுத்து சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கின்ற மாற்றத்தை நாம் காண்கிறோம். துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். எபிரேயர் 10:22
ஒரு காலத்தில் நம்முடைய பாவங்களை ஒரு பிடியாக வைத்திருந்த அனைத்து சாபங்கள், அசுத்த ஆவிகள் மற்றும் பில்லிசூனியம் ஆகியவை உடைக்கப்பட்டன. ஏனென்றால் இயேசு ராஜாவாக உயர்ந்தபோது அவர்களை தோற்கடித்தார். இயேசுவின் இரத்தத்தால் நாம் சுத்திகரிக்கப்படும்போது சாத்தானுக்கு நம்மீது எந்த அதிகாரமும் இல்லை, அதனால்தான் அவன் இயேசுவின் நாமத்தைக் கேட்டு நடுங்குகிறான். அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற்போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 1 பேதுரு 3:19,20
சுருக்கம்
கிறிஸ்து அனைவருக்கும் பாவநிவாரண பலியாக மரித்தார்; எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காகவும் அவர் தன்னை தியாகம் செய்யவில்லை. ஆண்கள், பெண்கள், அனைத்து நிறம், மதம், அனைத்து தேசங்களின் மக்கள், அவரை விசுவாசிப்பவர்கள், விசுவாசிக்காதவர்கள் என மனிதகுலம் முழுமைக்காகவும் அவர் மரித்தார். அவர் தங்களுக்காக மரிக்கவில்லை என்று யாரும் கூற முடியாது; அனைவரும் அதில் அடங்குவர். அவரது மரணம், ஒவ்வொருவரையும் மனந்திரும்புதலுக்கும் அவரது நித்திய திட்டங்களுக்குள் கொண்டுவருவதற்கும் ஆகும். வசனம் கூறுகிறது, தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9
அவர் நம்மைக் கழுவ காத்திருக்கிறார் - அவருடைய இரத்தத்தால் நம்மைக் கழுவுகிறார், அவர் நம்மைக் கழுவாத வரையில் நம்மில் தூய்மை அடைய முடியாது. பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். யோவான் 13:8
இயேசுவே நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமானவர் என்று நாம் விசுவாசித்து சுத்திகரிக்கப்பட்டவுடன், நாம் அவருடைய ராஜ்யத்தின் குமாரர்களாகவும் குமாரத்திகளாகவும் ஆக்கப்பட்டு, ராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் நியமிக்கப்படுகிறோம்(வெளிப்படுத்தின விசேஷம் 1:6). எனவே, சாத்தானுக்கு நம்மீது எந்த அதிகாரமும் இல்லை. நாம் பாவத்திலிருந்து தப்பி ஓடி, உள்ளிருந்து நம்மை சுத்திகரிக்க அவருடைய ஒளியைப் பயன்படுத்துவதன் மூலம் கீழ்ப்படியத் தொடங்குகிறோம். இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். 1 யோவான் 5:1-2
பாவத்தால் நிரம்பியிருக்கும் உலக அமைப்பு, இனி நம்மைக் கட்டுப்படுத்தாது; நாம் உலகத்தை மேற்கொள்பவர்களாக மாறுகிறோம். தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 1 யோவான் 5:4-5
நீங்கள் ஜெயங்கொள்பவராக மாறியதும், தினமும் உங்கள் சிலுவையை எடுத்துக்கொள்கிறீர்கள் (இயேசுவைப் போல). சோதனைகள், இச்சைகள் மற்றும் அனைத்து பாவ ஆசைகள் மீதும் கிறிஸ்துவின் மூலம் ஜெயம் கொள்கிறீர்கள், ஏனெனில் இந்த பாவங்களை நீங்களே மேற்கொள்வது சாத்தியமற்றது. நீங்கள் தடுமாறும்போது, ஒவ்வொரு நாளும் அவருடைய கிருபையால் உங்களை சுத்திகரிக்க இயேசுவின் மன்னிப்பைத் தேடுகிறீர்கள். ஒரு ஜெயங்கொள்பவராக, உங்களுக்கு வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். வெளிப்படுத்தின விசேஷம் 3:21
உங்களைத் தாழ்த்தி, இதயப்பூர்வமான விசுவாசத்துடன், இயேசுவிடம் ஜெபியுங்கள்: "நான் இயேசுவை என் இரட்சகராகவும் ஆண்டவராகவும் ஏற்றுக்கொள்கிறேன். ஆண்டவராகிய இயேசுவே, வேறு எவரும் அறியாத, என் இருதயத்தில் மறைந்திருக்கும் பாவங்களை எனக்கு மன்னிக்கும்படி உம்மை வேண்டுகிறேன். இந்தப் பாவங்களினின்று நான் விடுதலையாகும்படி உமது இரத்தத்தால் என்னைக் கழுவும். கர்த்தராகிய இயேசுவே, என்னை உங்கள் மகனாக / மகளாக ஏற்றுக்கொண்டு இரட்சியும், பிதாவே”, ஆமென்.
Amen
Amen