ஜெபித்தால் அற்புதங்கள் நடக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இடைவிடாமல் ஜெபிக்கும்போது ஒரு ஜெபத்திற்கு வேறுவிதமான விளைவு உண்டு.
இது வேதத்தில் உள்ள சிறிய வசனம்,
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 1 தெசலோனிக்கேயர் 5:17
இடைவிடாமல் ஜெபிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்வதற்கு முன், நாம் ஏன் ஜெபிக்க வேண்டும் என்றும் அதன் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்வோம்.
நாம் ஏன் ஜெபிக்க வேண்டும்?
தேவனுக்கு முன்பாக மறைவானது என்று எதுவுமில்லை, நம் நிலைமையை, நம் தேவைகளை அவர் அறிவார். அப்படியானால், ஏன் ஜெபிக்க வேண்டும்?
நமது சூழ்நிலையை அவரிடம் விளக்கி அவரோடு தொடர்பு கொள்வதற்கு ஜெபம் ஒரு வழியாக இருக்கிறது.
ஜெபம் நமது சர்வவல்லமையுள்ள இரட்சகருடன் உறவை உருவாக்குகிறது. இது கணவன்/மனைவி, பெற்றோர்/பிள்ளை போன்ற ஒரு நெருக்கமான உறவு. சிறியவர்களாக இருக்கும்போது குழந்தை பெற்றோருடன் பேச முயற்சிப்பது போன்றது.
நாம் ஜெபிக்கும்போது, திரித்துவம் (இருதயம் / ஆத்துமா / மனம்) தேவனுடன் உறவை உருவாக்குவதற்கு, அவருடன் பேச ஒருங்கிணைகிறது.
ஜெபம் என்பது ஆத்துமாவின் உண்மையான ஏக்கமாகும், பேசினாலும் பேசாமல் இருந்தாலும், தேவனோடு தொடர்பு கொள்ள அணுகுகிறது.
ஜெபம் ஆவிக்குரிய வாழ்வின் சுவாசம், ஜெபம் இல்லாமல் ஆவிக்குரிய ரீதியில் வளர முடியாது.
ஜெபம் என்பது நாம் விரும்புவதைத் தேடுவது மட்டுமல்லாமல், தேவன் நாம் செய்ய விரும்புவதைக் கேட்பதும் ஆகும்.
இயேசு ஜெபித்தபடியே நாமும் ஜெபிக்க வேண்டும். நாம் அவரைப் பின்பற்றுபவர்களாக இருந்தால், நாமும் அவர் செய்ததைச் செய்ய வேண்டும்.
இயேசு தம் ஊழியத்தை ஜெபத்தில் தொடங்கினார்.
இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜெபத்துடன் தொடங்கினார். ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம்பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம்பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது. லூக்கா 3:21
இயேசு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் தனிமையில் ஜெபித்தார்.
அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். லூக்கா 5:16
அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். மாற்கு 1:35
ஜெபத்தைப் புறக்கணிப்பது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. இது, இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு ராஜாவைத் தேடியபோது,சாமுவேல் தீர்க்கதரிசிக்கு தேவனால் வெளிப்படுத்தப்பட்டது. நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். 1 சாமுவேல் 12:23
தேவன் நம் ஜெபங்களைக் கேட்க விரும்புகிறார் (நம் இருதயம்,மனம் மற்றும் ஆத்துமாவில் நாம் உண்மையாக இருக்கும்போது).அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 29:12-14
இடைவிடாமல் ஜெபிப்பதைத் தடுக்கும் விஷயங்கள்
நாம் அடிக்கடி ஜெபிக்கிறோம், ஆனால் “இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்” என்று வேதம் சொல்வதை பின்பற்றுவதில்லை. இடைவிடாமல் ஜெபிப்பதைத் தடுக்கும் பல விஷயங்கள் உள்ளன.
1) ஆவிக்குரிய சோம்பல்
நம்முடைய பிரச்சனைகள் அல்லது தேவையின் போது பிறர் நமக்காக ஜெபிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். போதகர் அல்லது மூப்பர் யாராவது தங்களுக்காக ஜெபித்தால் மட்டுமே ஜெபத்திற்கு பதில் கிடைக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.
பழைய ஏற்பாட்டு நாட்களில் இது தான் ஜெபிப்பதற்கான நடைமுறையாக இருந்தது. நமக்கு ஏதாவது தேவைப்பட்டால், நமக்காக ஒரு லேவியர் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடம் உள்ள பாவங்களால் நம்மால் நேரடியாக தேவனைத் தேட முடியாது. ஆனால், புதிய உடன்படிக்கையில், இயேசு தம்மை சிலுவையில் ஒப்புக்கொடுத்த போது, தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது. தேவனிடம் நெருங்குவதற்கு லேவியர் தேவையில்லை என்பதை இது குறிக்கிறது, இயேசுவின் மரணத்துடன் அவர் பழைய நாட்களில் இருந்த சடங்குகளை கிழித்துப் போட்டார். நாம் புதிய உடன்படிக்கையின் பிள்ளைகள். இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. மாற்கு 15:37-38
நாம் புதிய உடன்படிக்கையின் பிள்ளைகளாக இருப்பதால், அவருடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிறோம். கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:7-8
ஒரு பிள்ளை தன் தகப்பனிடம் தனக்கு என்ன வேண்டும் என்று நேரடியாகக் கேட்டால், அது நேரடியான மற்றும் நெருக்கமான தொடர்பு. இதேபோல், ஒருவர் மற்றொரு நபரை அவர்களுக்காக ஜெபிக்கும்படி கேட்கும்போது, அது அவர்களுக்கும் தேவனுக்கும் இடையே ஒரு பாலம் போன்ற ஒரு தொடர்பை உருவாக்குகிறது, அங்கு அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் தேவைகள் ஒரு மத்தியஸ்தரின் ஜெபத்தின் மூலம் தெரிவிக்கப்படுகின்றன. நாம் மற்றவரிடம் நமக்காக ஜெபிக்கும்படி கேட்கும்போது ஜெபத்தில் உள்ள நெருக்கம் தொலைந்து விடுகிறது.
தேவனைக் கண்டடைய நீங்கள் அவரைத் தேட வேண்டும். குறுக்குவழிகளை எடுக்க முடியாது. உங்கள் போதகருடன் சேர்ந்து அவரைக் கண்டடைய வேண்டும் என்று வேதம் கூறவில்லை. வாக்குத்தத்தம் தெளிவாக உள்ளது, ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். மத்தேயு 7:8
தேவன் உங்களுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், உங்கள் காரியத்தை யாரும் பரிந்துரைக்க முடியாது! தேவன் நமக்கு உதவ தயாராக இருக்கிறார் என்ற தீர்மானத்தோடு ஜெபிக்க வேண்டும்.
ஆனால், ஜெபிக்க மற்றவர்களிடம் உதவி தேடுவதில் தவறில்லை. ஒருவர் பிரச்சனையில் இருக்கும் போது (வியாதி, பிசாசு பிடித்திருப்பது, துக்கம் போன்றவை) உதவியை நாடலாம் என்று வேதம் பரிந்துரை செய்கிறது. இந்த நேரங்களில் தான் உங்களுக்கு ஜெபத்தில் உதவ மற்றவர்களைத் தேட வேண்டும். உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக;அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். யாக்கோபு 5:13-15
2) விசுவாசமின்மை
நமது ஜெபத்தில் உள்ள அவிசுவாசம் தான் ஜெபிப்பதில் இருந்து நம்மைத் தடுக்கும் பிசாசின் மிகப்பெரிய ஆயுதம். நாம் ஜெபிக்கும் போது, சில சமயங்களில் நாம் எதிர்பார்க்கும் பதில் கிடைப்பதில்லை. அதனால் உடனே, ஜெபம் செய்தது எதுவும் நடக்கவில்லை, ஏன் ஜெபிக்க வேண்டும் என்று சொல்லும் மனநிலைக்கு தள்ளப்படுகிறோம்.
நம் சொந்த உணர்வுகள், நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் அல்லது சாத்தானின் தீய சக்திகள் ஆகியவைகள் நாம் விசுவாசத்தினால் வாழ்கிறோம் என்று நம்மை முட்டாளாக்கும் விஷயங்கள். நம் கண்களே நம்மை ஏமாற்ற முடியும். பவுல் கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் விசுவாசத்தில் வாழ வழிகாட்டுகிறார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. ரோமர் 1:17
இயேசு திரளான ஜனங்களுடன் இருந்தார். அவர்கள் அவருடைய போதனையைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அவர்களுக்கு விசுவாசம் இல்லாத காரணத்தினால் அவர் அங்கே எந்த அற்புதத்தையும் செய்யவில்லை. நம் ஜெபத்திலும் அப்படித்தான், விசுவாசமற்ற ஆவியுடன் நாம் ஜெபிக்கிறோம், எனவே, நம் ஜெபங்கள் பதிலளிக்கப்படுவதில்லை. அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை. மத்தேயு 13:58
தவறான உள்நோக்கத்துடன் நாம் கேட்கும்போது நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கிடைக்காது, அது அவிசுவாசத்திற்கு வழிவகுக்கிறது. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். யாக்கோபு 4:3
ஜனங்கள் விசுவாசத்திலிருந்து அவிசுவாசத்திற்கு மாறுவதில் தேவன் பிரியப்படுவதில்லை. விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். எபிரேயர் 10:38
நம் ஜெபங்கள் இருமனதாய் அவிசுவாசத்தால் நிறைந்திருக்கும் போது தேவன் நம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில்லை. ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. யாக்கோபு 1:6-7
நம்முடைய தீர்வு நம்முடைய கர்த்தராகிய இயேசுவிடமிருந்து வருகிறது - அவிசுவாசத்தின் மாம்ச ஆசைகளை முறியடிக்க, நம்முடைய ஜெபத்தில் விசுவாசத்தைக் கொடுக்கும்படி அவரிடம் கேட்க வேண்டும். நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். மத்தேயு 26:41
3) பயம்
பிசாசின் மிகப்பெரிய ஆயுதம் பயம். பயப்படும்போது கொக்கிப் போட முயலுவான். நாம் பயத்திற்கு எதிர்த்து நிற்க வேண்டும். எ.கா., சீஷர் ஒருவர் தன்னால் நடக்க முடியும் என்று விசுவாசித்து பின் பயத்தின் காரணமாக நீரில் மூழ்கினார். அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. மத்தேயு 8:26
பயத்தின் முதல் வகை - பயம் என்றால் என்ன? பாவம் செய்வதற்கு பயப்படுதல். தேவன் நம் ஜெபத்தைக் கேட்க மாட்டார் என்று சொல்லி நம்மைக் கண்டிக்க பாவம் ஒரு தடையாக செயல்படுகிறது.
பிசாசானவன் தனது வழக்கமானப் பொய்களின் மூலம் வஞ்சிக்கிறான். நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப்பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். யோவான் 8:44
நம்முடைய பாவத்திற்காக சாத்தான் நம்மைக் குற்றப்படுத்துகிறான். அதேசமயம் தேவன் நம் பாவத்தை உணர்த்துகிறார். பாவம் செய்யக்கூடாது என்று பயப்படும் ஒரு மரியாதையான பயம் மட்டுமே நமக்கு இயேசுவிடம் உள்ளது.
பயத்தின் இரண்டாவது வகை - ஜெபத்திலிருந்து நம்மை விலக்கி வைக்க பிசாசு பயத்தைக் கொண்டுவருகிறான். நீங்கள் பிறருக்காக ஜெபிக்கும்போது, உங்கள் குடும்பத்தைத் தாக்குவதன் மூலமோ அல்லது அலுவலகத்தில் அல்லது உங்கள் அண்டை வீட்டாரிடமிருந்து ஏதேனும் சிக்கலைக் கொண்டுவருவதன் மூலமோ அவன் பயத்தைக் கொண்டுவருகிறான். இது நீங்கள் ஜெபம் பண்ணுவதிலிருந்து உங்களைத் தடுக்க அவன் பயமுறுத்தும் தந்திரம். நீங்கள் தேவனின் பிள்ளையாக இருப்பதால் அவனால் உங்களைத் தொட முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே அவன் உங்கள் ஜெபத்தை நிறுத்த வேறு வழிகளைப் பயன்படுத்துகிறான்.
நம்முடைய தேவன் யூத ராஜசிங்கம். பயப்பட வேண்டாம் என்பது தேவனின் வாக்குத்தத்தம். நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, எரேமியா 1:8
பயத்திற்கான தாவீதின் அறிவுரை, நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். சங்கீதம் 56:3
4) ஆவிக்குரிய பெருமை
தேவன் உங்களை அதிகமாக ஆசீர்வதிக்கும்போது, உங்களுக்கு எதிராக பெருமையின் போராட்டங்கள் அதிகமாக வரும்.
தேவனுடன் நெருக்கமாக நடக்கும் போது, பிறரைத் தாழ்வாகவும், மற்றவர்களை விட நம்மை உயர்ந்தவராகப் பார்க்கவும் ஆவிக்குரிய பெருமை நமக்குள் வருகிறது. இது ஆவிக்குரிய பெருமையைத் தவிர வேறில்லை.
பெருமை மனிதனை மகிமைப்படுத்தி தேவனுக்குரிய மகிமையைப் பறிக்கிறது.
பெருமை எவ்வாறு நிகழ்கிறது என்பதற்கான செயல்முறை ரோமர் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாகமாற்றினார்கள். ரோமர் 1:21-23
படி 1 - அவர்களின் இருதயங்களின் பாவ ஆசைகளுக்கு அவர்களை ஒப்புக்கொடுத்தார்.
படி 2 - அவர்கள் தேவனைப் பற்றிய உண்மையை பொய்யாக மாற்றினர், மேலும் படைத்தவரை விட படைப்புகளை வணங்கி அவைகளுக்கு ஊழியம் செய்தனர்.
பிசாசு நமக்கு எதிராக எப்பொழுதும் பயன்படுத்தும் முக்கியமான ஆயுதங்களில் ஒன்று பெருமை. இதைக் கொண்டு ஊழியத்தில் இருக்கும் எவரையும் அவனால் வீழ்த்த முடியும்.
போதகரை அவரது நல்ல பிரசங்கத்தைப் பற்றி பெருமிதம் கொள்ள வைப்பது, விடுமுறைப்பள்ளி ஆசிரியையை தான் கற்பிப்பதில் பெருமிதம் கொள்ள வைப்பது என அவன் பல விஷயங்களில் நம்மை பெருமைக்கு உட்படுத்த முடியும். நாம் கவனமாகப் பார்க்க வேண்டும். ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. 1 தீமோத்தேயு 6:3-5
ஜெபத்தில் எழுப்புதல் பெறுவது எப்படி?
நாம் எப்படி இடைவிடாமல் ஜெபித்து, ஜெபத்தில் எழுப்புதல் பெறுவது? முந்தைய வசனத்தில் ரகசியம் உள்ளது. எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 1 தெசலோனிக்கேயர் 5:16-18
விழித்திருந்து ஜெபியுங்கள் - ஒரு காவலாளி வாயிலை எப்படி விழித்திருந்து பார்க்கிறானோ அதைப் போல விழித்திருந்து ஜெபியுங்கள், அதனால், நீங்கள் பாவத்தில் விழுவதைத் தடுக்க முடியும்.
தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மை - தேவனைப் பிரியப்படுத்துவது உங்கள் ஜெபத்தைப் பற்றியது அல்ல, உங்களைத் தாழ்மையாய் அவரிடம் ஒப்புக் கொடுப்பதே உங்கள் ஜெபத்திற்குப் பதிலளிக்க அவரைப் பிரியப்படுத்தும்.
பாடுகளில் களிகூர்ந்து தேவனைத் துதியுங்கள் - பின்பற்றுவது மிகவும் கடினம், ஆனால், ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள், நல்ல பலனைக் காண்பீர்கள். நாம் துதிக்கும் போது சாத்தானின் கோட்டைகள் பலவீனமடையும்.
விசுவாசம் பலப்பட ஜெபியுங்கள் - நாம் உலகில் நடக்கும் போது நம் கண்கள் / சூழ்நிலைகள் நம்மை ஏமாற்றுகின்றன. நம் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்கு, நமக்கு உதவ தேவனிடம் கேட்க வேண்டும்.
தேவ கிருபைக்காக ஜெபியுங்கள் - சூழ்நிலையை மாற்றுவதற்கு, நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அவருடைய கிருபையினால் ஆகும்.
புதிய ஆவிக்குரிய வரங்களுக்காக ஜெபியுங்கள் - பிதா வழங்குவதற்கு ஏங்குகிறார். அவர் நமக்குத் தருவதற்குத் தயாராக இருக்கிறார், எனவே கேளுங்கள்.
உண்மையுடன் ஜெபியுங்கள் - நோக்கம் சரியாக இருக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம் பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். யாக்கோபு 4:3
அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் ஜெபியுங்கள் - அந்த அர்ப்பணிப்பு மனப்பான்மைக்கு அவர் ஒருவரே உதவ முடியும் என்று ஜெபியுங்கள்.
வெளிப்படைத்தன்மையோடு ஜெபியுங்கள் - ஜெபத்தின் விளைவைப் பற்றிய முன்கூட்டிய முடிவுடன் அல்லாமல் திறந்த மனதோடு ஜெபியுங்கள். ஜெபத்தின் முடிவை தேவனே தீர்மானிக்க வேண்டும், நாம் அல்ல. இது விசுவாசத்திலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது.
தேவ சமாதானம் - நமது ஜெபங்கள் பயனுள்ளதாக இருக்கும் போது, அவர் தரும் சமாதானம், அவர் நமக்குச் செவிசாய்த்து அவருடைய வழியில் செயல்படுவதற்கான அடையாளமாகும்.
எப்படி ஜெபிக்க வேண்டும்?
ACTS என்ற ஒரு ஜெப முறை உள்ளது. இது திருமதி. கெட்டிசியல் மோகன் அவர்களால் கற்பிக்கப்பட்டது.
ஆராதனை (ADORATION A) : தேவனை தொழுதுகொள்ளுதல்
அறிக்கை (CONFESSION C) : பாவங்களை அறிக்கையிடுதல் / சுத்தப்படுத்துதல்
நன்றி செலுத்துதல் (THANKSGIVING T) : தேவனுக்கு நன்றி செலுத்துதல்
வேண்டுதல் (SUPPLICATION S) : நமது தேவைகளுக்காக தேவனிடம் வேண்டுதல்.
1. தேவனைத் தொழுது கொள்ளுதல்
தேவனைத் துதியுங்கள். வெவ்வேறு நாமங்களால் அவரை ஆராதியுங்கள்.
அவருடைய தன்மைக்கு மகிமையுண்டாகும்படி அவரைத் துதியுங்கள்.
வேதத்தில் நீங்கள் கற்றுக் கொண்டதற்காக அவரைத் துதியுங்கள்.
2. அறிக்கையிடுதல்
தேவனிடம் பணிந்து, உங்கள் தியானத்தில் அல்லது பிறர் மூலம் தேவன் என்ன பேசினார் என்பதை அறிக்கையிடுங்கள்.
3. தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்
நீங்கள் கடந்து செல்லும் பாடுகளுக்காக நன்றி சொல்லுங்கள் - இதைச் செய்யும்போது பிசாசின் வல்லமை முறியடிக்கப்படுகிறது.
நீங்கள் பெற்ற வெற்றிக்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள் - அவரது மகிமைக்காக அவரைத் துதியுங்கள்.
4. மற்றவர்களின் தேவைகளுக்காக ஜெபியுங்கள்
உங்களைப் போலவே பிறரையும் நேசியுங்கள் என்ற தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்.
5. உங்களை வெறுப்பவர்களுக்காக ஜெபியுங்கள்
சூழ்நிலைகள் மாற ஜெபியுங்கள் - தானியேல் ஜெபித்தபோது நிலைமை மாறியது / யோசேப்பு ஜெபித்தபோது நிலைமை மாறியது.
6. தேசம் / தேவாலயம் / இரட்சிக்கப்படாத மக்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் - அவர்களுக்கான பாரம் உங்கள் ஜெபத்தில் வர வேண்டும்.
7. உங்கள் தனிப்பட்ட தேவைக்காக ஜெபியுங்கள் – இது கடைசியாக இருக்க வேண்டும்.
பயனுள்ள சீரான ஜெபத்தைப் பயிற்சி செய்ய இந்த 7 படிகளைப் பின்பற்றவும். மேலும், இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்.
留言