நாம் அனைவரும் தேவனின் மகிமையைப் பற்றி பேசுகிறோம். தேவமகிமை என்றால் என்ன? தேவ மகிமை என்பது அவரது தெய்வீக பிரசன்னத்தையும் வல்லமையையும் குறிக்கிறது. தேவமகிமை இருக்கும்போது, அந்த இடம் நம்மால் விளக்க முடியாத ஒருவகையான வல்லமையால் நிரப்பப்படுகிறது. ஆனால், அதே சமயம் இக்கபோத் - விலகிய மகிமையும் உண்டு.
இதைப் பற்றி 1 சாமுவேல் 1 - 4 ல் படிக்கிறோம். விலகிய மகிமையைப் பற்றி பிரதான ஆசாரியரான ஏலியிடம் இருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
பிரதான ஆசாரியனாகிய ஏலி
இஸ்ரவேலில் இராஜா இல்லாமல் இருந்த போது ஏலி பிரதான ஆசாரியராக இருந்தார். இஸ்ரவேல் ஜனங்களைத் திருத்தவும், கடிந்து கொள்ளவும், நடப்பிக்கவும் தேவன் ஏலியைத் தேர்ந்தெடுத்தார். அவர் ஏலியிடம் பேசி, அவர் மூலமாக ஜனங்களுக்கு எல்லா செய்திகளையும் வழங்கினார்.
ஏலிக்கு ஒப்னி பினெகாஸ் என்ற இரண்டு குமாரர்கள் இருந்தனர் (1 சாமுவேல் 1:3). இவர்கள் இருவரும் கர்த்தரின் பார்வையில் ஒழுக்கமில்லாதவர்களும் பொல்லாதவர்களுமாய் இருந்தனர்.
சிறுவனாகிய சாமுவேல் ஆசாரியனாகிய ஏலிக்கு ஊழியம் செய்து கொண்டு வந்தான். சாமுவேல் தீர்க்கதரிசி ஆகிறார். பின்பு தேவன் தாம் ஏன் ஏலி மற்றும் அவரது குமாரர்கள் மீது கோபமாக இருக்கிறார் என்று சாமுவேல் மூலம் பேசுகிறார். அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார். 1 சாமுவேல் 3:13,14.
தேவன் ஏலியின் குடும்பத்தை நியாயந்தீர்ப்பார் - ஏனென்றால் ஏலி பாவத்தை அறிந்திருந்தார், ".. அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும்..".
குமாரர்கள் தேவதூஷணம் செய்தார்கள், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டார்.
இந்தப் பாவங்கள் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை.
இஸ்ரவேலர்கள் பெலிஸ்தியர்களுடன் போரிடச் சென்றபோது, ஏலிக்கு பதிலாக சாமுவேலை தீர்க்கதரிசியாக நியமிக்க வேண்டும், ஏலியையும் அவரது குடும்பத்தையும் அழிக்க வேண்டும் என்ற தேவனின் திட்டம் நிறைவேறியது. ஏலியின் மருமகள் பிரசவத்தில் இறக்கும் தருவாயில் இந்த வார்த்தைகளைக் கூறினாள். தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப் போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். தேவனுடைய பெட்டி பிடிபட்டுப்போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள். 1 சாமுவேல் 4:21-22.
வாலிபர்களின் (ஏலியின் குமாரர்) பாவங்களினால் கர்த்தருடைய மகிமை விலகியது.
அநியாயம் செய்யும் எவரையும் தேவன் விட்டு வைப்பதில்லை. ஏலி ஒரு பிரதான ஆசாரியனாக இருந்தார், ஆனால் ஒரு தகப்பனாக அவர் தோற்றுவிட்டார். தேவன் அவரது குமாரரை தப்ப வைக்கவில்லை. தேவனின் மகிமை ஏன் விலகியது என்பதைப் பார்ப்போம்.
வாலிபர்களின் பாவங்களால் தேவனின் மகிமை ஏன் விலகியது?
1. ஏலியின் குமாரருக்கு தேவனைப் பற்றிய அறிவு, புரிதல் மற்றும் அறிந்து கொள்ளுதல் இல்லை.
இந்த குமாரர்கள் யார்? அவர்கள் கர்த்தருடைய ஆசாரியர்களாக இருந்தார்கள். அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஒப்னியும் பினெகாசும் இருந்தார்கள். 1 சாமுவேல் 1:3
ஆசாரியர்களாக இருந்தவர்கள், எப்படி தேவனை அறியாமல் இருக்க முடியும்? தேவன் அவர்களின் பாவத்தை அவமதிப்பாகக் கருதியதால் அவர்களின் செயல்கள் அவர்களைப் பிரதிபலிக்கவில்லை. ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். 1 சாமுவேல் 2:12,17
அவமதிப்பு பின்வரும் பாவங்களால் வருகிறது. அவர் முழு குடும்பத்தையும் அழித்தார் மற்றும் ஆசாரிய ஊழியத்தை அவர்களிடமிருந்து அகற்றினார். பாவநிவாரண பலி மற்றும் குற்றநிவாரண பலியை எவ்வாறு தேவனுக்கு செலுத்த வேண்டும் என்ற ஆசாரிய பொறுப்பை அவர்கள் மீறினார்கள்.
2. தேவனின் பரிசுத்தமான விஷயங்களை அவர்கள் மதிக்கவில்லை
ஒரு ஆசாரியன் இவற்றை எவ்வாறு கையாள வேண்டும் என்பது பற்றிய தேவனின் கட்டளை லேவியராகமத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
குற்றநிவாரண பலி - தகனிக்கப்பட்டு, கர்த்தருக்குச் செலுத்தப்பட வேண்டும், பின்பு ஆசாரியன் அதைப் புசிக்கலாம்.
தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக. கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக்காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார். லேவியராகமம் 6:6-7
அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடே கூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி. ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. லேவியராகமம் 7:3-6
பாவநிவாரண பலி - பரிசுத்த ஸ்தலத்திலே ஆசாரியனால் புசிக்கப்படவேண்டும். நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்கதகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது. பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும். லேவியராகமம் 6:25-26
தேவனுக்கான பலியை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள்?
பாவ நிவாரண பலிக்கான விதியை மீறினார்கள் - அவர்கள் பலியை கர்த்தருக்கு செலுத்தாமல் தானே புசித்தார்கள். அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து, அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள். 1 சாமுவேல் 2:13-14
குற்ற நிவாரண பலிக்கான விதியை மீறினார்கள் - தேவனுக்குப் படைக்கப்படுவதற்கு முன்பாக பச்சை இறைச்சியை அப்படியே எடுத்துக்கொண்டார்கள் / பலவந்தமாக எடுத்துக்கொண்டார்கள் - கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சிகொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை என்பான். அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான். 1 சாமுவேல் 2:15-16
குமாரர்களுக்கு என்ன நேர்ந்தது? தேவபயம் - இல்லாமல் போய்விட்டது.
தேவனின் காரியங்களின் மீதான மரியாதை - இல்லாமல் போய்விட்டது.
பல சமயங்களில், ஆரம்ப நாட்களில் பயமும் பயபக்தியும் இருக்கிறது ~ ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அது அகன்றுவிடுகிறது. பயமும் பயபக்தியும் இல்லாதபோது தேவனின் கோபம் வருகிறது.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே. எபிரேயர் 12:29
அவர் முன் பயத்தோடும் பக்தியோடும் இருக்க வேண்டும் என்பதே நம்மைப் பற்றிய எதிர்பார்ப்பு. ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். எபிரேயர் 12:28
ஏலியின் குமாரர்கள் பலியிடும் விதத்தில் பயபக்தியை இழந்தனர்.
விசுவாசம் இல்லாமல் அறிக்கையிடும் போது பக்தி மற்றும் பயம் இழந்து போகிறது.
நம்முடைய பாவங்களை அறிக்கையிடும்போது நாம் ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம். சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியா நாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப்பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்த ஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். அப்போஸ்தலர் 8:9,13,18,19
மனந்திரும்புதலுக்கேற்ற ஆவி இல்லை - ஆகையால் நீ உன் துர்க்குணத்தைவிட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். அப்போஸ்தலர் 8:22-23
சாபத்திலிருந்து தப்பித்தல் - அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான். அப்போஸ்தலர் 8:24
தேவனுடைய வார்த்தைகளில் கவனம் செலுத்துகிற முறையிலும், அவற்றை கைக்கொள்ளும் விதத்திலும் பக்தியும் பயமும் இழந்து போகின்றன.
வேத பிரசங்கத்தின் போது பகல் கனவு காண்பது.
வசனத்தை தியானிக்கும் போது தூங்குவது போன்றவை.
தேவன் நம்மிடம் என்ன கேட்கிறார்? - நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால், கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே,கேளுங்கள். எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?. எரேமியா 5:20-22
வேதத்தைப் படிக்க / கேட்க நாம் அமரும் போது அவருக்கு முன்பாக நடுங்குமாறு அழைக்கிறார். என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். ஏசாயா 66:2
நாம் தேவனுக்கு ஊழியம் செய்யும் விதத்தில் பக்தியும் பயமும் இழந்து போகின்றன.
பயத்தோடும் நடுக்கத்தோடும் நாம் அவருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். சங்கீதம் 2:11
அலட்சிய மனப்பான்மையோடு ஊழியம் செய்வது தேவ கோபத்தை வரவழைக்கிறது. கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன். எரேமியா 48:10
3. அவர்கள் அசுத்தமான ஆசாரிய வாழ்க்கை வாழ்ந்தனர்
ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு, 1 சாமுவேல் 2:22
ஆசாரிய உடுப்புகளை அணிந்தவர்கள் சுத்தமாகவும் பரிசுத்தமாகவும் இருக்க வேண்டும், ஆனால் அவர்கள் சுத்தமில்லாமல் இருந்தார்கள், வேசித்தனமான பாவங்களைச் செய்தார்கள்.
மோசேயின் பிரமாணம் என்ன சொல்கிறது?
ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். லேவியராகமம் 20:7-8,10
இந்த குமாரர்கள் என்ன செய்தார்கள்? வேசித்தனம் செய்வதற்கு தங்கள் ஆசாரிய அந்தஸ்தைப் பயன்படுத்தினர்.
இந்த காம இச்சைக்காகத் தான் தண்டனை கிடைத்தது. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டை பண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள். 2 பேதுரு 2:9-10
பாவம் செய்தால் தேவாலயத்தில் யாருக்கும் தெரியாது என்று அவர்கள் நீதியான சூழலைப் (சர்ச்) பயன்படுத்தி, பிறரையும் பாவம் செய்யத் தூண்டினர். இப்படி செய்வது கர்த்தர் பார்வையில் அருவருப்பானது, ஏனெனில் நீங்கள் தேவனின் பரிசுத்த ஸ்தலத்தை அசுத்தமாக்குகிறீர்கள். எனவே, கவனமாக இருங்கள்.
இந்தப் பாவங்களை நீங்கள் உணரும்போது, தேவனுக்கு கீழ்ப்படிந்திருங்கள், பிசாசானவன் ஓடிப் போவான் என்று வேதம் கூறுகிறது. ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். யாக்கோபு 4:7
4. அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு செவிசாய்க்கவுமில்லை, கீழ்ப்படியவுமில்லை
ஏலியின் குமாரர்கள் தங்கள் தகப்பனுக்குக் கீழ்ப்படியவில்லை. மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக்கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார். 1 சாமுவேல் 2:25
மனிதனின் முதல் பாவம் - கீழ்ப்படியாமை, முட்டாள்தனமாக சாத்தானுடன் பேசியதன் விளைவு.
கீழ்ப்படியாமைக்காக தேவனின் பிள்ளைகள் மேல் ஏன் தேவகோபம் வருகிறது?
நாம் ஒரு புதிய வாழ்க்கையை வாழ அழைக்கப்பட்டிருப்பதால் கோபம் வருகிறது. ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்புவார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே. கொலோசெயர் 3:5-10
ஒளியின் பிள்ளைகளாகிய நாம் இருளில் வாழக்கூடாது. நாம் இருளின் பக்கம் செல்லும் போது அல்லது இருளைத் தேர்ந்தெடுக்கும்போது கோபம் வருகிறது. மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. இப்படிப்பட்டவைகளினிமித்த மாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். எபேசியர் 5:3,6-8
மிரியாமும் ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசினார்கள் (எண்ணாகமம் 12:2). விளைவு - இக்கபோத் (மகிமை விலகியது).
5. தேவ சித்தத்திற்கு / ஆலோசனைக்கு கீழ்படியாமை
ஏலி தன் குடும்பப் பொறுப்புகளில் தவறிவிட்டதால் தேவனின் கோபம் ஏலியின் மீது வந்தது. தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார். ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 1 சாமுவேல் 2:27,29-30
ஏலி தேவனின் ஆலோசனையைக் கைவிட்டு, அதற்கு கீழ்ப்படியாமல் இருந்து விட்டார். அவர் பொதுப்படையான காரணங்களில் தேவனின் வார்த்தைக்கு உண்மையாக இருந்தார், ஆனால் தனிப்பட்ட காரியங்களில் தவறிவிட்டார் (அவரது குடும்பத்தினரைக் குறித்த காரியங்கள்).
நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நாம் மத ஈடுபாடுடையவர்களாகவோ ஆவிக்குரியவர்களாவோத் தோன்றுகிறோம். ஆனால், உண்மையில் தேவனுக்குக் கீழ்ப்படிகிறோமா?
இங்கே ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 1 சாமுவேல் 1 ஆம் அதிகாரத்தில், ஏலி இஸ்ரவேலின் பிரதான ஆசாரியராக இருந்த போது, அவர் தேவனைத் தேடி ஆலோசனையைப் பெற்றுத் தருவதால் அவருடைய ஆலோசனைக்காக ஜனங்கள் யாவரும் அவரிடம் வருவதாகக் காண்கிறோம். ஆனால், இங்கே 1 சாமுவேல் 2:27 இல், “தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி," என்று வாசிக்கிறோம்.
நம்முடைய மத அந்தஸ்து எதுவும் அவருடைய நீதியான தீர்ப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றாது. நாம் பலருக்கு ஊழியம் செய்திருக்கலாம், பலரை இரட்சிப்பிற்குள் நடத்தியிருக்கலாம், சிறந்த பிரசங்கங்களை வழங்கியிருக்கலாம், சிறந்த ஜெபங்களை செய்திருக்கலாம், அந்நிய பாஷைகளில் பேசியிருக்கலாம், ஆனால், ஏதாவது ஒன்றில் நம் மேல் தவறு இருக்கிறதா என்று மிகவும் தீவிரமாக கவனியுங்கள். தூய்மையும் பரிசுத்தமும் தேவனுடைய பிள்ளைகளுக்கு மிகவும் முக்கியம். இதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.
தேவன் ஒரு காரியத்தை சொல்லும்போது, அவருக்கு முழுமையாக கீழ்ப்படிதல் அவசியம்.
சுருக்கம்
ஏலி போன்ற ஆசாரியர்களுக்குத் தான் இந்த இக்கபோத் பொருந்தும், நான் ஒரு சாதாரண மனிதன் என புறக்கணிக்க வேண்டாம்.
பிரதான ஆசாரியனாகிய ஏலியை எப்படி அளந்தாரோ அப்படியே தேவன் தம் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அளக்கிறார். அவர் நம்மை ஒரு ராஜ்யமாக ஆக்கி, நாம் தேவனின் பிள்ளையாக மாறியவுடனேயே அவருக்கும் பிதாவுக்கும் ஊழியம் செய்ய நம்மை ஆசாரியனாக ஆக்கினார் என்று வார்த்தை கூறுகிறது.
உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். வெளிப்படுத்தின விசேஷம் 1:5-6
பின்வருவனவற்றைச் செய்வதால், நம் வாழ்வில் இக்கபோத் உண்டாகிறது :
நாம் தேவனை அறிவோம், ஆனால் நாம் செய்யும் பாவங்களை அடையாளம் கண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கத் தவறுகிறோம்.
நாம் செய்யும் எந்த வேலையிலும் தேவன் மீது பயமும் பக்தியும் இருக்காது.
அசுத்தமான பாவங்கள் – முறைகேடான வாழ்க்கையின் பாவங்கள் (நாம் ஒருவரை இச்சையாய் பார்க்கும்போது நம் கண்கள் கூட வேசித்தனத்திற்கு வழிவகுக்கும்) / தகாத ஆசை.
தேவனின் அழைப்புக்குக் கீழ்ப்படியாமை - வேண்டுமென்றே தேவனுக்குக் கீழ்ப்படியாமல் இருப்பது.
தேவனுக்கு ஓரளவு மட்டும் கீழ்ப்படிதல்.
Amen