top of page

ஆவியில் கனியற்ற தன்மையை கண்டறிதல்

Kirupakaran


நாம் புதிதாக ஒன்றைத் தொடங்கும்போது, அதை முழு இருதயத்தோடும் மனதோடும் செய்ய அதிக உற்சாகமாயிருக்கிறோம். நாட்கள் செல்லச் செல்ல நாம் வழி விலகி, அதிலிருந்து முற்றிலுமாகத் தடம் புரண்டு விடுகிறோம். பல விஷயங்களை உதாரணங்களாகக் கூறலாம். பெரும்பாலான புத்தாண்டு தீர்மானங்கள் ஜனவரி இறுதி வரை கூட நீடிப்பதில்லை.

இயேசுவுடனான நமது கிறிஸ்தவ நடையில், உலகில் நமது ஆவிக்குரிய ஓட்டத்தை (பிலிப்பியர் 3:14), ஒரு மாரத்தான் போட்டிக்கு ஒப்பிடுகிறார், இங்கே பரலோகத்தில் இருக்கும் வெகுமதிகளை இலக்காகக் கொண்டு ஓடுகிறோம் (பிலிப்பியர் 3:20-21).


  • கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். பிலிப்பியர் 3:14

  • நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். பிலிப்பியர்3:20-21

நம்மைத் தடம் புரளச் செய்வதற்கும், இயேசுவோடுடனான ஆவிக்குரிய பயணத்தை முற்றிலும் பயனற்றதாக்குவதற்கும் இவ்வுலகின் அனைத்து இச்சைகளிலும் நாம் சிக்கிக் கொள்கிறோம். பாவ இச்சையால் நம்மை கனியற்றவர்களாக்கி, அதனால் நாம் விலகிச் செல்லும்படி செய்கிற,கர்ஜிக்கிற சிங்கமாக பிசாசு இருக்கிறான். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 1 பேதுரு 5:8


உலகின் கறைகளில் இருந்து தப்பித்து நம்மை திறம்பட ஆக்குவதற்கு  அப்போஸ்தலனாகிய பேதுரு ஒரு அறிவுரை தருகிறார். (கிறிஸ்தவ வாழ்க்கையின் விசுவாசம் முதல் அன்பு வரை).

வாழ்க்கையின் விசுவாசம் முதல் அன்பு வரை).


கிறிஸ்தவ வாழ்க்கை (விசுவாசம் முதல் அன்பு வரை)

இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். 2 பேதுரு 1:5-7


பேதுரு கூறும் இந்த விசுவாசம் முதல் அன்பு வரையிலான காரியம் என்ன?

  • முதலாவது நிலை : நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும் - நாம் கிறிஸ்துவிடம் ​​விசுவாசத்தின் மூலமாக வந்தோம், தேவன் நமக்கு விசுவாசத்தை கொடுத்தார். இது கலாத்தியர் 5:22-23 இல் எழுதப்பட்டுள்ள ஆவியின் கனியிலிருந்து வருகிறது. விசுவாசம் நமக்குள் தைரியமாக மாறுகிறது. நாம் கிறிஸ்துவின் நீதியான வாழ்க்கையை  ஆரம்பிக்கும் போது தைரியத்தை விவரிக்க முடியும்.

  • இரண்டாவது நிலை : தைரியத்தோடே ஞானத்தையும் - நாம் கிறிஸ்துவில் தைரியத்தைப் பெற்றவுடன், பாவத்திலிருந்து விலகி நடக்க கிறிஸ்துவின் நீதியைப் பெறுவதால், தேவன் அவரைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு நம்மை மாற்றுகிறார் - நாம் தியானிப்பதன் மூலம் அவரைப் பற்றிய ஞானத்தைப் பெறுகிறோம். வேதத்தைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் போது, வார்த்தை நமது உலக அறிவை தேவனின் தெய்வீக அறிவாக மாற்றுகிறது. இந்த அறிவால் பரிசுத்த ஆவியின் வரங்களைப் பெறுகிறோம் (அந்நிய பாஷை, தரிசனத்தை அறியும் தீர்க்கதரிசன அறிவு, அவருடைய ஜனங்களுக்கான திட்டங்கள் இன்னும் பிற).

  • மூன்றாவது நிலை : ஞானத்தோடே இச்சையடக்கத்தையும் - தேவ வார்த்தையைப் பற்றி நாம் அதிகம் அறிந்தவுடன், அவரைப் பற்றிய ஞானம் நம்மை வளரச் செய்கிறது. முதல் முறை நீங்கள் வேதத்தைப் படிக்கும் போது பெற்றுக் கொள்ளும் அனுபவமும், 10 வது முறை படிக்கும் போது பெற்றுக் கொள்ளும் அனுபவமும் வித்தியாசமானதாக இருக்கும். நாம் முதிர்ச்சியடையும் போது, தேவன் இச்சையடக்கம் என்னும் ஆவியின் கனியை நமக்குள் விதைக்கிறார். நாம் தேவனை அறிந்தவுடன், சுயமாகச் செயல்படுவதில்லை, வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நமக்கு உதவுவதற்கு தேவனை சார்ந்து இருக்க ஆரம்பிக்கிறோம்.

  • நான்காவது நிலை : இச்சையடக்கத்தோடே பொறுமையையும் - எல்லா விஷயங்களுக்கும் நாம் தேவனை சார்ந்து இருக்கும் போது, இதை உடைக்க உலகில் நிறைய போராட்டங்கள் வரும். நாம் கிறிஸ்துவுக்காக வாழும் போது சிலர் அவதூறு கூறுவார்கள், சிலர் நம்மை தோற்றுப் போனவர்கள் என்று அழைப்பார்கள். நீங்கள் இவற்றைச் சந்திக்கும்போது, தேவன் தம்முடைய பொறுமை என்னும் ஆவியின் கனியைத் தருவார் - நாம் அவதூறு செய்யப்படும் போது அல்லது ஏதேனும் பிரச்சனைகள் வரும்போது பொறுமையோடு இருப்போம். பிரச்சனைகள் கஷ்டங்களைப் பற்றி புலம்புவதை விட, தேவனின் திட்டத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுவதற்காக நாம் அவரை ஸ்தோத்தரிப்போம்.

  • ஐந்தாவது நிலை : பொறுமையோடே தேவபக்தியையும் - நம் வழியில் வரும் போராட்டங்களின் போது நாம் கிறிஸ்துவில் பொறுமையோடே இருந்தால், புதிய ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், கிறிஸ்துவில் இன்னும் ஸ்திரப்படுகிறோம். அவர் நம்மைச் சுத்திகரித்து, நம்மைத் தூய்மையாகவும், பரிசுத்தமாகவும் ஆக்குவதன் மூலமும், தேவபக்தியை நம்மில் உண்டாக்குவதன் மூலம் நம் நடையை மேலும் சிறப்பாக ஆக்குவதற்கு முயல்கிறார் - இது அவரது  பரிசுத்தத்தைக் குறிக்கிறது, அவர் நம்மை ஒவ்வொரு நாளும் சிறப்பாக மாற்றுகிறார். ஒரு பாறை நல்ல சாயலாய் செதுக்கப்படுவது போல, ஒவ்வொரு நாளும் தமது சொந்த சாயலுக்கு நம்மை செதுக்குகிறார்.

    • உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். லூக்கா 21:19

    • சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச்செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். ரோமர் 2:7

  • ஆறாவது நிலை : தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும் - நாம் கிறிஸ்துவில் தேவபக்தியில் வளர்ந்தவுடன், பாவத்தின் கண்காணிப்பாளர்களாக நடந்துகொள்கிறோம். இது இரட்சகராகிய நம் கர்த்தரை வருந்த செய்யுமா என்பதைப் பார்க்க நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கவனிக்கிறோம். உலகில் இருக்கும் சக சகோதர சகோதரிகள் கிறிஸ்துவில் இரட்சிக்கப்பட, அவர்களை சகோதர சிநேகத்துடன் கவனிக்க ஆரம்பிக்கிறோம் - அவர்கள் கெட்டுப் போய்விடக் கூடாது என்கிற சகோதர சிநேகம்.

  • ஏழாவது நிலை : சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள் - நாம் சகோதர சிநேகத்திலிருந்து அன்பிற்கு (அகாபே அன்பு /தேவ அன்பு) முதிர்ச்சியடைகிறோம். அதாவது தேவனைப்  பிரியப்படுத்தவும் அவரது அன்பைப் பெறவும் மட்டுமே வாழ்க்கையில் செயல்படுகிறோம். தேவன் நம்மிடம் வெளிப்படுத்தும் அதே வகையான அன்பையே நாமும் மற்றவர்களிடம் வெளிப்படுத்துகிறோம். இந்த அன்பு ஏன் மிகவும் முக்கியமானது? ஏனெனில் அன்பு இல்லாமல் தேவன் நாம் செய்ய விரும்புவதை நம்மால் செய்ய முடியாது.

    • அகாபே அன்பு - அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது. அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோகும், அறிவானாலும் ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13:4-8

    • நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 1கொரிந்தியர் 13:2-3

  • விசுவாசம் கட்டைவிரல் போன்றது, அன்பு ஆள்காட்டி விரல் போன்றது - இவை இல்லாமல் நீங்கள் கிறிஸ்துவில் எதையும் முழுமையாக பிடித்துக் கொள்ள முடியாது.

  • இந்த விசுவாசம் முதல் அன்பு வரையிலான வெளிப்பாடுகள் நம்மிடத்தில் காணப்பட்டால், தேவன் நமக்காக வழங்கிய வெகுமதிக்கு நம்மை வழிநடத்தும் ஒரு ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதற்கு, நாம் தெய்வீக வாழ்க்கையில் நடக்க ஆரம்பிப்போம்.


ஆவிக்குரிய வாழ்வில் கனியற்ற தன்மை

நாம் சில நிலைகளை அடைந்த பிறகு இந்த விசுவாசம் முதல் அன்பு வரையிலான விஷயங்களை விட்டு விடுவதால் பயனற்றவர்களாகிவிடுகிறோம். கிறிஸ்தவ வாழ்க்கையில் நாம் ஏன் பயனற்றவர்களாகவும் பலன் கொடுக்காதவர்களாகவும் இருக்கிறோம் என்பதற்கான காரணங்களை பேதுரு நமக்குத் தருகிறார்.

இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. 2 பேதுரு 1:8

  • அதிக அறிவைப் பெற வேண்டும் என்ற இச்சை, அவற்றை தேவனுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நம்மைப் பெருமைப்படுத்துகிறது- இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால்”.

  • சுய இச்சைகள் தேவனுக்காக சாதிப்பதை விட தனக்கே அதிகம் சேர்த்துக் கொள்கிறது. சபை, ஊழியம் என்பது தேவனுக்குரியது. பலர் நன்றாக ஆரம்பித்து, நாளடைவில் தேவனிடமிருந்து மெதுவாக விலகிச் சென்று சபை மற்றும் ஊழியத்தை தங்களுடையதாக பாவிக்க ஆரம்பிக்கிறார்கள் - வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது.

  • சோம்பேறித்தனத்தால் நிரம்பும்போது நாம் கனியற்றவர்களாகிறோம். நம்மிடம் அறிவு அதிகமாக இருக்கும் போது, எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வந்து, நம் வாழ்க்கையில் தேவனின் திட்டத்தை மீறும்படி பெருமை நமக்குள் உண்டாகிறது. அப்பொழுது கனியற்றவர்களாகிறோம்.

  • அதே சமயம் ஒரு எச்சரிக்கையும் உள்ளது. இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். 2 பேதுரு 1:9. இந்த வரங்களைக் கொண்டு நாம் தயாராக இல்லாவிட்டால், நாம் வந்த இடத்தை விட்டு விலகிச் செல்லலாம்.

  • எனவே விசுவாசத்தில் இருந்து அன்பு வரையிலான காரியங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையை நடத்த போதுமான அளவு சமநிலையில் இருக்க வேண்டும். நம் வாழ்வின் குறிக்கோள் எல்லாவற்றையும் பெரிதாக்குவது அல்ல. நாம் போதுமானதைப் பெற வேண்டும் (ஆவிக்குரிய ஆசீர்வாதம் மற்றும் உலக ஆசீர்வாதம்). அதுவே நமது ஜெபமாக இருக்க வேண்டும்.


நம்மில் உள்ள ஆவியில் கனியற்ற தன்மையை எவ்வாறு அடையாளம் காண்பது?

நமது கனியற்ற நிலையை கண்டுபிடிக்கும் பல சுய மதிப்பீடுகள் உள்ளன. அதன் மூலம் பின்வாங்குதலில் இருந்து மீண்டு வரலாம்.

  • எத்தனை பிரசங்கங்களைக் கேட்ட பிறகு, அதன்படி செயல்படவில்லை என்பதை சுயமாக ஆராய்ந்து பாருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். யாக்கோபு 1:23-24

  • உங்களுக்கான தேவனின் கட்டளையைக் கேட்ட பிறகும் நீங்கள் எதைக் கடைப்பிடிக்கவில்லை? நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற் போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம். பிரசங்கி 5:4-5

  • ஏற்கனவே வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைக் கடைப்பிடிக்காமல் எத்தனை எழுப்புதல் கூட்டங்கள் / ஜெபக் கூட்டங்களுக்கு ஓடுகிறீர்கள் என்பதைப் பாருங்கள். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். மத்தேயு 6:33

  • உங்களைப் பலனற்றதாக ஆக்குகிற எந்த ஆவிக்குரியப் பெருமையைப் பெற்றுள்ளீர்கள் என்பதை ஆராய்ந்து பாருங்கள். அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. நீதிமொழிகள் 11:2

 

இந்த கனியற்ற நிலையிலிருந்து உங்களைப் பாதுகாக்க ஒவ்வொரு நாளும் தேவனிடம் ஜெபியுங்கள். பகைவன் வஞ்சிக்கிறவன், நம்மைச் செயலிழக்கச் செய்ய, நம்மை ஆக்கிரமிக்கும் பலவற்றை மெதுவாக செய்கிறான். தேவனைத் தேடுவதும், நம் குறைகளை அடையாளம் கண்டு திருத்தும்படி கேட்பதும் மட்டுமே நம்மைச் சிறந்தவர்களாக்கும். நமது மனித ஞானத்தையும் அறிவையும் வைத்து சிறந்து விளங்குவது சாத்தியமற்றது. பரிசுத்த ஆவியானவர் மட்டுமே நம்மை  வழிநடத்தவும் நம்மைத் திருத்துவதற்கு செயல்படவும் முடியும். நம்மை மேம்படுத்த தேவனுக்கு நம்மை ஒப்புக் கொடுக்க வேண்டும். நாம் ஒப்புக் கொடுக்காமல் தேவனால் செயல்பட முடியாது.

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Feb 11, 2024
Rated 5 out of 5 stars.

Good Anna

Like

Subscribe Form

Thanks for submitting!

©2023 by TheWay. Proudly created with Wix.com

bottom of page