top of page
Kirupakaran

ஆவிக்குரிய வளர்ச்சியில் பின்னடைவு


பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கல்வியிலும், பாடத்திற்கு அப்பாற்பட்ட காரியங்களிலும் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். உதாரணமாக, பெரும்பாலும் A மற்றும் B தரங்களை பெற்றுக் கொண்டிருக்கும் உங்கள் பிள்ளைகளின் கல்வித் திறன் திடீரென்று குறையத் தொடங்குகிறது என்று வைத்துக் கொள்வோம், மேலும் அதிகப்படியாக தொலைபேசி உபயோகிப்பது, அதிக நண்பர்கள் சேர்க்கை மற்றும் விருந்துகளில் கலந்துகொள்வது போன்ற செயல்களில் அவர்கள் கவனம் செலுத்தும் பொழுது, ஒரு பெற்றோராக நீங்கள் 'என் குழந்தையால்சிறப்பாகச் செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும்; அடுத்த மாதம் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்’ என்று சொல்லி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பீர்களா? உங்கள் குழந்தை அவர்களின் கல்வியில் பின்னடைவு அடைவதை நீங்கள் கவனிக்கும்போது, உடனடியாகத் தலையிட்டு அவர்களை மீண்டும் சரியான பாதையில் வழிநடத்த ஆரம்பிக்கிறீர்கள். எந்தவொரு பெற்றோரும் உள்நுழைந்து சரிப்படுத்த உதவுவதற்கு நிலைமை மோசமாகும் வரை காத்து இருப்பதில்லை.


கிறிஸ்துவுடனான நமது உறவும் அதே வழியில் செயல்படுகிறது. நாம் அவருடைய பிள்ளைகள், அவர் நம் பிதா. பிசாசு எப்போதும் ஒரு சகோதரனையோ சகோதரியையோ அவர்களுடைய கிறிஸ்தவப் பாதையிலிருந்து விலக்கி, பின்வாங்கும் வாழ்க்கைக்கு வழிநடத்த வழிகளைத் தேடுகிறான். தனது ஞானத்திற்கு பெயர் பெற்றவராகிய சாலொமோன் இராஜா நீதிமொழிகள் புத்தகத்தில் பின்வாங்குவதைப் பற்றி எழுதியுள்ளார்.


பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். நீதிமொழிகள் 14:14


பின்வாங்குதல் என்றால் என்ன?

  • 'பின்வாங்குதல்” என்பதை ஒரு இடைநிறுத்தம் அல்லது நமது ஆவிக்குரிய வளர்ச்சியில் பின்தங்கிய நிலை என்று விவரிக்கலாம்.

  • ஒவ்வொரு கிறிஸ்தவனுக்குமான தேவனின் திட்டமானது, ஆவிக்குரிய ரீதியில் வளர வேண்டும், சிசுக்களாக இருந்து பிள்ளைகளாகவும், பின்னர் இளைஞர்களாகவும், இறுதியில் ஆவிக்குரிய பெற்றோராகவும் மாற வேண்டும் என்பது தான்.

  • துரதிர்ஷ்டவசமாக, கிறிஸ்துவின் வழிக்குப் பதிலாக நம் வழியில் வாழும் தருணங்கள் நம் அனைவருக்கும் உள்ளன. ஆனால், நமது ஆவிக்குரிய வளர்ச்சியில் மேல்நோக்கிச் செல்வதே பொதுவான போக்கு. மேல்நோக்கிய படிகளின் எண்ணிக்கையானது கீழ்நோக்கிய படிகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும். பின்வாங்கும் போது, நமது ஆவிக்குரிய வாழ்க்கை அப்படியே நின்றுவிடுகிறது. ஆவிக்குரிய வளர்ச்சி நின்று, பின்னடைவு தொடங்குகிறது. சோகம் என்னவென்றால், நாம் நின்று போன அதே மட்டத்தில் நாம் இருப்பதில்லை. யாக்கோபு கூறும் பிற்போக்கு நிலைக்குச் செல்கிறோம், இதன் மூலம் நாம் கிறிஸ்துவிடமிருந்து திரும்பி, எப்பொழுதும் இருந்ததை விட மோசமாக கீழே சரிந்து விடுகிறோம்.

  • யாக்கோபு (யாக்கோபு 1:22-25) இந்த மக்களை "கேட்கிறதை மறக்கிறவன்" என்று அழைக்கிறார், ஏனென்றால் அவர்கள் உண்மையில் கிறிஸ்துவின் பாடங்களையும், கிறிஸ்துவில் அனுபவித்த விஷயங்களையும் மறக்கத் தொடங்குகிறார்கள்.

அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக்கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவமுகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான். அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான். யாக்கோபு 1:22-25


நீங்கள் கிறிஸ்துவுடன் ஒரு உறவைக் கட்டியெழுப்பவும், அவருடனான உங்கள் நடையில் ஆவிக்குரிய ரீதியில் வளரவும் உறுதி கொண்டிருந்தால், பின்வாங்குவதற்கான அறிகுறிகளை சுய பரிசோதனை செய்து அடையாளம் கண்டுகொள்வதும் மற்றும் நீங்கள் முன்பு இருந்த இடத்திற்குத் திரும்பிச் செல்லாமல் இருப்பதற்கும் நடவடிக்கை எடுப்பது அவசியம். நம்மை பின்வாங்குவதற்கு வழிவகுக்கிற 5 அறிகுறிகள் உள்ளன (பல இருக்கலாம், நான் இந்த 5 அறிகுறிகளைத் தேர்ந்தெடுத்துள்ளேன்).


1) பின்வாங்குதல் மனதில் இருந்து தொடங்குகிறது


  • சாத்தான் முக்கியமாக நம் 'மனதில்' கவனம் செலுத்துகிறான். வஞ்சகத்தால் ஏவாளின் மனதை குறிவைத்து, அவளது செயல்கள் சரியானவை என்று அவளை முழுவதுமாக நம்பவைத்த, அதே உத்தியையே நம்மை தேவனின் சித்தத்திலிருந்து விலக்கவும் பயன்படுத்துகிறான - ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 2 கொரிந்தியர் 11:3

  • பாவத்தின் மீதான வெற்றி என்பது எண்ணங்களில் வெற்றியைக் குறிக்கிறது - ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. ரோமர் 7:23

  • பின்வாங்குதல் மனதில் தொடங்குகிறது - நாம் இப்போது வாழும் உலகம்/நேரம்/இடம் நல்லதல்ல என்றும், நமது கடந்தகால பாவ வாழ்க்கையில் ஒரு சிறந்த இடம் இருந்தது என்றும் நம்ப வைப்பதன் மூலம் சாத்தான் நம்மை ஏமாற்றுகிறான். பாலைவனத்தில் தேவன் கொடுத்ததை விட எகிப்தில் வாழ்ந்த வாழ்க்கை சிறப்பாக இருந்தது என்று இஸ்ரேலியர்கள் நம்ப வைக்கப்பட்டனர். தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. எபிரேயர் 11:15

  • சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். யாக்கோபு 1:13-16

    • முதலில் ... அவர்களின் சுய இச்சையினாலே கவர்ந்திழுக்கப்பட்டு (தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு)

    • அடுத்தது ... சோதனை (இச்சையானது கர்ப்பந்தரித்து)

    • பிறகு ... பாவம் (பாவத்தைப் பிறப்பிக்கும்)

    • இறுதியாக .. பாவம் மரணத்தைப் (பாவம் பூரணமாகும்போது) பிறப்பிக்கிறது.

    • எச்சரிக்கை - வஞ்சிக்கப்படாதீர்கள் ("மோசம்போகாதிருங்கள்").

  • அதனால்தான் இயேசு, இச்சையான எண்ணத்தைக் கொண்டிருப்பதை விபச்சாரம் செய்வதற்கு ஒப்பிட்டார். ஒருவர் தனது சிந்தையிலும் மனதிலும் இச்சையோடு மற்றொரு நபரைப் பார்க்கும்போது, அவர்கள் ஏற்கனவே பாவம் செய்துவிட்டார்கள் என்று அவர் கூறுகிறார்.

    • விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடுபார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. மத்தேயு 5:27-28

  • நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். ரோமர் 12:2

  • மனிதர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெறாதீர்கள், மாறாக, தேவனுடைய வார்த்தையைப் பார்த்து, தியானித்து, அவருடைய வழிகளைக் கொண்டு உங்கள் மனதைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள், அப்பொழுது தான் அவருடைய சித்தத்தைச் செய்வது மகிழ்ச்சியாகவும் சரியானதாகவும் இருக்கும்.

2) பின்வாங்குதல் ஏமாற்றுதல்களுடன் தொடங்குகிறது


ஏமாற்றம் மனதில் தொடங்குகிறது. அதற்கு அப்பால், சுய முன்னிறுத்தல் மற்றும் சுய மேன்மை தொடர்பான ஏமாற்றங்கள் உள்ளன.


சுய முன்னிறுத்தல்

  • "ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான்" என்று கலாத்தியர் 6:3 -இல் பவுல் எழுதுகிறார்.

  • பல சமயங்களில் நாம் தேவனுக்கு முன்பாக மிகவும் பரிசுத்தமானவர்கள் என்று நினைக்கிறோம். நாம் சபைக்கு செல்கிறோம், வெளிப்புற பார்வையில் இருந்து சரியான விஷயங்களைச் செய்கிறோம். எனவே மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து, நாம் நீதியுள்ளவர்களாக இருப்பதால், சிறந்தவர்களாக இருக்கிறோம் என்று நம்மை ஆறுதல்படுத்துகிறோம். சில நேரங்களில், "தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால்" என்று சொல்லப்பட்டு இருப்பது போல் நம் மனம் நம்மை நம்ப வைக்கிறது.

  • பரிசேயர்களும், சதுசேயர்களும் எப்போதுமே தாங்கள் பிரமாணங்களில் பரிபூரணமானவர்கள் என்று நினைத்தார்கள், அவர்கள் இயேசுவை கேள்வி கேட்டதன் நோக்கம், அவரை சோதித்து சிக்க வைப்பதற்காகவே இருந்தது. அவர்களின் கேள்விகள் தாங்கள் பரிபூரணமாக வேண்டும் என்பதற்காக கேட்கப்படவில்லை. அவர்கள் எப்போதும் பரிசுத்தமானவர்கள் என்றும் பிரமாணங்களில் பரிபூரணமானவர்கள் என்றும் நினைத்தார்கள், ஆனால் அவர்களின் இருதயத்தில், அவர்களின் அணுகுமுறை / நோக்கங்கள் எல்லாம் இயேசுவுக்கு முன்னால் கறைபடிந்ததாகவே இருந்தன. “பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக் குறித்து” கவனமாக இருக்கும்படி இயேசு நம்மை எச்சரித்தார்.

  • இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். மத்தேயு 16:6

  • புளித்த மாவு என்பது நாம் மற்றவர்களை விட சிறந்தவர்கள் மேலும், மோசமான பாவிகள் அல்ல என்ற மனப்பான்மையைக் குறிக்கிறது. இந்த மனப்பான்மை இருக்கும்போது நமது நடத்தை மாறுகிறது, அதனால் தான் இயேசு இதை புளித்த மாவு என்று குறிப்பிடுகிறார் - நம்முடைய ஒரு சிறிய அணுகுமுறை ஏமாற்றத்திற்கு வழிவகுத்து நாம் குருடராக்கப்படுகிறோம்.

சுய மேன்மை

  • நாம் ஏதோவொன்றாக இருக்கிறோம் என்று நினைக்கும் போது, சுயமேன்மைக்கு வழி வகுக்கிறோம் - அது பெரும்பாலும் மேன்மை அல்லது முக்கியத்துவத்தின் உயர்த்தப்பட்ட உணர்வுடன், தன்னை அதிகமாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் அல்லது உயர்த்திக் கொள்ளும் செயல்.

  • தன்னையே உயர்த்திக் கொள்வது பிசாசின் இயல்பு. மேலும் அது நாயக வழிபாடு, குருட்டுத்தன்மை, கையாளுதல்களுக்கு வழிவகுக்கிறது.

    • தான் பரலோகத்திற்கு ஏறி, தேவனுக்கு மேலாக எழும்புவேன் என்று சாத்தான் தனக்குத்தானே கற்பித்துக் கொள்வதை இங்கே பார்க்கலாம்.

    • அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஏசாயா 14:12-14

  • சாத்தானின் குணம் எப்பொழுதும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. அவன் எதிர்த்து நிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன் போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 2 தெசலோனிக்கேயர் 2:3-4

3) பின்வாங்குதல் பெருமையுடன் தொடங்குகிறது


  • சுய முன்னிறுத்தலும், சுய மேன்மையும் சீக்கிரத்தில் மெதுவாக, அமைதியாக பெருமைக்கு வழிவகுக்கிறது. நாம் ஒரு பெருமையான வழியில் வாழ்கிறோம் என்பதை நாம் அரிதாகவே அங்கீகரிக்கிறோம். அதிகமாக நம்மை நாமே உயர்த்திக் கொள்ளும்போது, நம்முடைய செயல்களை முதன்மையாக வைத்துக்கொள்ளவும், நமது சொந்த பலத்தால் அனைத்தையும் செய்வதன் மூலம் தேவனின் கிருபையை இழிவுபடுத்தவும் இடமளிக்கிறோம்.

  • நாம் சுயத்தை மேன்மைப்படுத்தும் போது பெருமை நம்மில் ஊடுருவிச் செல்கிறது - ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. கலாத்தியர் 6:3-5

  • பெருமையுள்ளவர்களை தேவன் எதிர்க்கிறார். அவர் எதிர்க்கிறார் என்பதற்கு நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபை பறிக்கப்படுகிறது என்று அர்த்தம். இது நாம் சுயமாக போராடும்படி செய்து நம் வேலைகளில் விழுந்து போய் தோல்வியடையும் படி செய்கிறது.

    • அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. யாக்கோபு 4:6

    • இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். நீதிமொழிகள் 3:34

  • நாம் தாழ்மையுடன் இருக்கும்போது, தேவன் நமக்கு அவருடைய கிருபையைத் தருகிறார், அவருடைய கிருபையால் நாம் உயர்த்தப்படுகிறோம்.

  • கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். யாக்கோபு 4:10

  • இயேசு தமது மலைப் பிரசங்கத்தில், நமது பணிவில் இருந்து (பெருமைக்கு முற்றிலும் எதிரானது) வரும் சாந்தமான மனப்பான்மை நமக்கு இருந்தால், நாம் பூமியை சுதந்தரித்துக் கொள்ளுவோம் என்று கூறுகிறார்.

  • சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கிவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். மத்தேயு 5:5

4) பின்வாங்குதல் - நமது கடந்த காலம் / பழைய மூட்டைகளை மறக்காமல் இருப்பதால் தொடங்குகிறது


  • நாம் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு வந்த பிறகு, நம்முடைய பாவத்திற்கு தேவனிடம் மன்னிப்பு கேட்கிறோம். சில பாவங்களின் வேர்கள் மிகவும் ஆழமானவை, நமது பாவங்கள் ஒரு மேற்பரப்பு மட்டத்தில் மட்டுமே போயிருக்கின்றன, ஆனால் வேர்கள் இன்னும் உள்ளன. இந்த சிறிய வேர்கள் நம்மை பழைய வழிகளுக்குச் செல்ல வைக்கின்றன.

  • பாவத்தின் மீதான வெற்றி நமக்குத் தேவை - இது அழித்தல் அல்ல, விடுதலை!

  • அழித்தல் - பாவத்தை நீக்குதல்

  • விடுதலை - பாவத்திற்கு உங்கள் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாதபடிக்கு அதை வேரிலிருந்து அகற்றுதல்.

    • பல நேரங்களில் தேவன் நம் வாழ்க்கையில் உள்ள பாவத்தைக் காட்டும்போது, ​​அது தொடங்கிய இடத்தின் வேர்களையும் காட்டுவார், நீங்கள் அவரிடம் வந்து வேரிலிருந்து அனைத்தையும் அகற்ற, மன்னிப்பு கேட்க வேண்டும்.

    • ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். ரோமர் 7:21

    • நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 1 யோவான் 1:9

  • நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய சொந்த மரபுகள் / குடும்ப வளர்ப்பு முறைகள் இருக்கின்றன. இவையே பழைய மூட்டைகளுக்கு வழிவகுக்கின்றன. உதாரணமாக, பல கிறிஸ்தவர்கள் எந்த ஒரு நிகழ்வையும் செய்ய மங்களகரமான நாட்களைத் தேடுகிறார்கள், மதமாற்றத்திற்கு முன்பு எவ்வாறு இருந்தோம் என்ற நமது பழைய வேர்களிலிருந்து இது வருகிறது. நம்மில் சிலர் கிறிஸ்துவிற்குள் மீண்டும் பிறந்த பிறகும் பழைய மரபுகளைக் கொண்டுள்ளனர். அதே நேரம், தேவன் படைத்த எல்லா நாட்களும் நல்லவையே என்று வேதம் சொல்கிறது.

  • நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. கலாத்தியர் 4:8-10

  • நாம் விடுதலை பெற்று, கிறிஸ்துவிற்குள் மீண்டும் பிறக்கும்போது, ஒரு புதிய நபராக இருக்கிறோம். ஆனால் நம்மில் இருக்கும் புதிய மனிதன் எப்போதும் பழையதையே பார்த்துக் கொண்டு, பழையது தான் சிறந்தது என்று சொல்லி , அதையே பின்பற்றத் தொடங்குகிறான். இதைத் தான் கலாத்தியர் 4:8-10 இல் பவுல் எடுத்துரைக்கிறார்.

  • உலகத்தின் வழிகளோடு ஒத்துப்போகும் செயல்களில் நாம் ஈடுபடும்போது, அவை பொதுவானவை என்பதால் அவை சரியானவை என்று கருதுகிறோம். இருந்தும், தேவனின் பார்வையில் அவை தவறாகக் கருதப்படலாம். எனவே, தேவனின் ஆவியானவரால் மட்டுமே நமது பாதையைப் பகுத்தறிந்து திருத்தத்தை நோக்கி நம்மை வழிநடத்த முடியும்.

  • சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். தேவாலயத்தைக் கட்ட உதவுவதற்காக நான் ஒரு காணிக்கையைச் செய்தேன். தேவாலயம் கட்டப்பட்டவுடன் நன்கொடையாளர்களின் பெயர்களைப் பட்டியலிடுவது வழக்கம். என் பெயரைச் சேர்க்க அவர்கள் என்னை அணுகியபோது, நான் மறுத்துவிட்டேன். இந்த முடிவு தேவனின் கொள்கைகளுடன் ஒத்துப்போவதைப் பற்றிய எனது புரிதலின் அடிப்படையில் அமைந்தது. முதல் பார்வையில், உலக நடைமுறையாக, நன்கொடையாளரின் பெயரைக் காட்சிக்கு வைப்பது சரி போலத் தோன்றலாம். ஆனால், வலது கை செய்வதை இடது கை அறியாமல் கொடுக்கும்படி தேவன் நம்மை அழைத்திருக்கிறார். நன்கொடையாளர் பலகையில் நம் பெயர்களை வைக்கும்போது, அது தங்கள் செயல்களைப் பற்றி பெருமை பேசும் பரிசேயர்களின் நடத்தையை ஒத்திருக்கும். இப்படிச் செய்வதால், நமது செயல்களினால், தேவனின் கிருபையை இழக்க நேரிடும்.

  • முந்திக் கற்றதை விட்டுவிடும் மனப்பக்குவம் நமக்கு இருக்க வேண்டும். தேவனுடைய ஆவியின் மூலம் கிறிஸ்துவில் புதிய வாழ்க்கையை கற்றுக்கொள்ளுங்கள். அந்த மனப்பான்மையைக் கற்றுக்கொள்ள உங்களை வளைந்து கொடுக்கும்படி தேவனிடம் அதிகமாக ஜெபியுங்கள். இந்தப் பின்னடைவை ஏற்படுத்தும் பழைய பகுதிகளை உங்களுக்குக் காண்பிக்க வேண்டி அவரிடம் ஜெபியுங்கள், அதனால் அவருடைய பரிசுத்தம் நம்மை சிறப்பாக வளரச் செய்யும். புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. எபிரெயர் 8:13

5) நாம் வேதம் சொல்வதைக் கேட்பவர்களாக மட்டும் இருந்து, செய்பவர்களாக இல்லாமல் இருப்பதில் இருந்து பின்வாங்குதல் தொடங்குகிறது.


நாம் நிறைய பிரசங்கங்கள் மற்றும் தேவனின் ஆலோசனைகளைக் கேட்கிறோம், ஆனால் அதன்படி செயல்படுவதில்லை.


  • நமக்கு எதிராக சாத்தானின் சக்திவாய்ந்த ஆயுதங்களில் ஒன்று தள்ளிப்போடுதல் ஆகும். நம் செயல்களைத் தாமதப்படுத்தும்படி அவன் நம்மை சமாதானப்படுத்துகிறான். 'நான் அதை பின்னர் செய்வேன்' என்று சொல்லும்படி நம்மை வழிநடத்துகிறான். பெரும்பாலும், பின்னர் நாம் அதை மறந்துவிட்டு, செயலில் ஈடுபடுபவர்களாக இல்லாமல் செயலற்ற கேட்பவர்களாக மாறுகிறோம்.

  • நாம் உடனடியாகக் கீழ்ப்படியவில்லை என்றால், நம்மைக் குற்றவாளியாக்கும் வார்த்தையில் அர்த்தமில்லை. இதை நினைத்துப் பாருங்கள், நாம் அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியத் தவறினால், சிலுவையில் அவர் செய்த காரியத்தை கேலிக்கு உள்ளாக்குகிறோம். அது ஒரு பாவம்.

  • நாம் தேவனை நேசித்து, அவரில் வளர விரும்பினால், நாம் கீழ்ப்படிவோம். நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். யோவான் 14:15

    • மறைமுகமான கீழ்ப்படிதல் - தேவன் உங்களை திருத்தத்தை நோக்கி வழிநடத்துகிறார் என்பதை நீங்கள் உணரும் போது கீழ்ப்படிதல் ஏற்படுகிறது, அது இயல்பாகவே நடக்கிறது. முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும்போது தான், நீங்கள் தேவனுக்குச் செவிசாய்த்து, தாமதமின்றி கீழ்ப்படிவீர்கள்.

    • தேவனின் சிட்சையின் மூலம் கீழ்ப்படிதல் - பலமுறை தேவன் நமக்கு வாய்ப்பளித்து, அதன் பின்னரே நம்மைத் திருத்தும்படி நம்மை சிட்சிக்கிறார்.

  • அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். எபிரேயர் 12:5-6

  • தாவீது தனது சங்கீதத்தில் எப்படி சொல்லிக் கொடுக்கிறாரோ, அது போன்ற கீழ்ப்படிதலைக் கடைப்பிடியுங்கள். கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். சங்கீதம் 119:57-58,60

பின்னடைவில் இருந்து திரும்புவது எப்படி?


உங்களிடம் பின்வாங்குதலின் அறிகுறிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய, இந்த 5 பகுதிகளை சுயபரிசோதனை செய்துகொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறேன். மேலும் லூக்கா 15:11-22 இல் சொல்லப்பட்டுள்ள "தொலைந்து போன குமாரன்” உவமையில் இயேசு போதித்ததை நாம் பின்பற்ற வேண்டும்.

  • நீங்கள் அவரை விட்டுப் பின்வாங்கியிருந்தால் மனந்திரும்புங்கள்.

  • அவர் உங்களை திரும்ப அழைத்துச் செல்ல ஆவலுடன் காத்திருக்கிறார். அவர் இரக்கத்தின் தகப்பன். அவர் நம் சீர்கேட்டில் நம்மைக் கைவிடவில்லை என்பதை நினைவில் வையுங்கள். நாம் மனந்திரும்பி அவரிடம் மன்னிப்பு கேட்டால் அவர் நம்மை மீட்டு ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


நாம் பின்னடைவிலிருந்து திரும்பியதும், ஓசியா 14 இல் அவர் சொல்லிருப்பதைப் போல் மீட்டெடுப்பதாக வாக்குறுதியளித்திருக்கிறார்.

நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று. நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும். அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப் போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும். ஓசியா 14:4-7

  • நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன் - நம் சீர்கேட்டினால் உண்டான பின்னடைவை நிறுத்துவார்.

  • அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன் - தேவ அன்பு நம்மிடம் திரும்பும், அவர் நம்மை நேசித்தால், நமக்கு அதிக கிருபையை அளிப்பார்.

  • என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று - நாம் இருதயத்திலிருந்து மனந்திரும்புதலைக் கேட்கும்போது தேவனின் கோபம் திரும்பும்.

  • நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன் - தண்ணீர் இல்லாவிட்டாலும் சிறு செடிகளுக்குத் தேவையான தண்ணீரை பனியே வழங்குகிறது. இஸ்ரவேலரைப் போல இருக்க நம்மைப் பலப்படுத்த தேவனுடைய மன்னா ஒவ்வொரு நாளும் நமக்குக் கொடுக்கப்படும்.

  • அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான் - லீலிப் புஷ்பம் தினமும் வராது, ஜூலை முதல் ஆகஸ்ட் வரை தான் வரும்.

  • அவன் கிளைகள் ஓங்கிப் படரும் - ஒரு குழந்தையைப் போல வளர தேவன் நம்மை மீட்டெடுப்பார். அவர் இஸ்ரவேலை மீட்டெடுக்கும்போது, அவருடைய ஜனங்கள் தாங்கள் மட்டும் ஆசீர்வதிக்கப்படாமல், மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.

  • தேவனின் மகிமை நம் வாழ்வில் மிகுதியாக மீட்டெடுக்கப்பட்டு வெளிப்படும் (ஒலிவ மரத்தைப் போல புத்துயிர் பெறுவீர்கள் ... திராட்சைச் செடியைப் போல வளர்வீர்கள் ... வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப் போல இருக்கும்).

30 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page