top of page
Kirupakaran

ஆவிக்குரிய நிலம்


உங்கள் வாழ்க்கையில், நீங்கள் எப்போதாவது தோட்டம் வளர்த்திருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு விதையை நட்டு அது முளைத்து வளர்வதைப் பார்க்கும் மகிழ்ச்சி ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். ஒரு செடி எவ்வாறு இலைகள், பூக்கள் மற்றும் பழங்களைத் தருகிறது என்பதைப் பார்ப்பதற்காக ஒவ்வொரு நாளும் காத்திருப்பது ஒரு குழந்தை வளர்வதைப் பார்ப்பது போல எப்போதும் உற்சாகமானது. இது வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு மகிழ்ச்சியான மற்றும் அற்புதமான உணர்வு. அதே போல் செடியில் ஏதேனும் பூச்சிகள் அல்லது களைகளால் தொற்று ஏற்பட்டால் நாமும் பாதிக்கப்படுகிறோம்.


அதேபோல் இயேசு லூக்கா 8 ஆம் அதிகாரத்தில் விதைப்பவரின் உவமையை விளக்குகிறார். அவர் அந்த உவமையைச் சொன்ன போது சீடர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் அதன் அர்த்தம் என்ன என்று அவரிடம் கேட்டார்கள்.


சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது: விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார். லூக்கா 8:4-8


ஒரு சாமானியரின் அறிவுத்திறனுடன் இதைப் படிக்கும்போது, பல்வேறு வகையான நிலப்பரப்புகளைக் கொண்ட ஒரு நிலத்தில் ஒரு விவசாயி தனது விதையை விதைக்கும் கதை என்று தான் நாம் விளங்கி கொள்கிறோம். பயிர் எவ்வாறு விளைகிறது என்பதை அது சொல்கிறது. ஆனால் இறுதியாக இயேசு இந்த உவமையை “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று கூறி முடித்தார்.


இந்த வாக்கியத்தைக் குறித்து சீடர்கள் குழப்பமடைந்து, இந்த உவமையின் அர்த்தம் என்ன என்று கேட்டார்கள். “அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது”. லூக்கா 8:9-10


“கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்”, “மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக” என்று இயேசு கூறும் இந்த வார்த்தைகள் கிறிஸ்துவைப் பின்பற்றும் நமக்கு நிறைய ஆவிக்குரிய பாடங்களைக் கொண்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால், ஒரு விவசாயி ஒரு நிலத்தில் விதை விதைத்த கதையாகவே இதைப் பார்க்க முடியும்.


இதை ஆவிக்குரிய ரீதியில் புரிந்து கொள்ள நாம் இந்த உவமையை

யோவான் 10:10 மற்றும் லூக்கா 8:11-15 இல் கொடுக்கப்பட்டுள்ள சூழலுடன் புரிந்து கொள்ள வேண்டும்.


திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். யோவான் 10:10


அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். லூக்கா 8:11-15


யோவான் 10:10 க்கும் / லூக்கா 8:11-15 க்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது.


பிசாசு ~ திருடன் தான் இரண்டிலும் இருக்கும் பொதுவான இழை. அவன் நம்மிடமிருந்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை எப்படி எடுத்துக்கொள்கிறான் என்று இயேசு விவரிக்கிறார். இது பொதுவாக "விதைப்பவரின் உவமை" என்று அழைக்கப்பட்டாலும், இதை "மண்ணின் உவமை" என்று அழைப்பது இன்னும் பொருத்தமாய் இருக்கும். வித்தியாசம் ஒருபோதும் விதையில் இல்லை, அது எந்த வகையான மண்ணில் விழுகிறது என்பதில் தான் இருக்கிறது.


இயேசு குறிப்பிடும் நான்கு வகையான நிலங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலத்தின் உவமையையும், இயேசுவின் விளக்கத்தையும் மேலும் அதற்கு யோவான் 10:10 இல் உள்ள ஆவிக்குரிய தொடர்பையும் பார்த்து நன்கு அறிந்து கொள்ளலாம்.


வழிபக்கம்

விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது.அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். லூக்கா 8:5,11-12


  • வழியருகே என்பது, வார்த்தைகளைக் கேட்கும் ஒரு மனிதனின் உள்ளத்தை விவரிக்கிறது, அவர் கிறிஸ்துவில் உண்மையான விசுவாசி அல்ல.

  • அவர் கிறிஸ்துவின் சகோதர /சகோதரி மூலமாகவோ, தேவாலயத்திலோ, ஒரு ஜெபக்கூட்டத்திலோ அல்லது மாநாட்டிலோ தேவனின் வார்த்தையைக் கேட்டிருக்கும், உலக வாழ்க்கையை வாழும் ஒரு நபராக இருக்கலாம்.

  • பிசாசு அவனிடமிருந்து தேவனுடைய வார்த்தையை அகற்றுவதற்கு உடனடியாக வருகிறான், ஏனெனில் நாம் யாரும் ஆண்டவரின் பாதையையோ அல்லது அவருடைய வார்த்தைகளையோ பின்பற்றுவதை பிசாசு விரும்புவதில்லை. நாம் உலகத்துடன் இணைந்திருந்து பாவத்திற்கு வழிவகுக்கும் வாழ்க்கையை வாழவே அவன் விரும்புகிறான், அதனால்தான் அவன் திருட வருகிறான் - “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.” யோவான் 10:10

  • “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று இயேசு கூறியதன் சூழலை இப்போது புரிந்துகொள்ளலாம்.

  • “வசனம்” என்பது இயேசுவிடமிருந்து மனிதன் பெற்றுக் கொள்ளும் ஒரு ஆவிக்குரிய ஆசீர்வாதம், அதனால் நாம் இரட்சிக்கப்படுகிறோம். பல சமயங்களில் ஆசீர்வாதம் என்பது நமது உலகப்பிரகாரமான ஆசீர்வாதம் (வீடு / கார் /பெரிய வங்கிக் கணக்கு மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கை போன்றவை..) என்று நினைக்கிறோம். ஆம், அது உண்மைதான், ஆனால் இயேசுவிடமிருந்து ஒருவருக்கு வரும் ஆவிக்குரிய ஆசீர்வாதம் தான் உண்மையான ஆசீர்வாதம் ஆகும்.

  • உங்களிடமிருந்து வார்த்தை பிசாசினால் திருடப்படுவதை எவ்வாறு பாதுகாப்பீர்கள்? இது எளிமையானது. இயேசுவிடம் சரணடைந்து, இயேசுவே எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது அல்லது நான் உங்களை விசுவாசிக்கிறேன் என்று சொல்லுங்கள். உள்ளத்திலிருந்து அதை ஒப்புக்கொண்டால், ஆசீர்வாதங்கள் பிசாசினால் பறிக்கப்படாமல் பாதுகாக்க அவர் தமது தூதர்களை அனுப்புவார். அது பாதுகாக்கப்பட்டவுடன் பிசாசு உங்களிடமிருந்து வசனத்தைத் திருட முடியாது.

  • ஆனால், உங்கள் விசுவாசத்தை ஒப்புக்கொண்ட பிறகும் பிசாசிடமிருந்து வரும் போராட்டம் நிற்காது, உண்மையில் பிசாசுடனான போராட்டம் இங்கே தான் தொடங்குகிறது. அதைத் திருட மீண்டும் கடுமையாகப் போராடுவான். வார்த்தையைத் (தேவனின் ஆசீர்வாதம்) திருடுவதற்காக உங்களை ஏமாற்றி பொய்களைச் சொல்வான்.

  • இயேசுவின் மீதான விசுவாசம் உங்கள் இருதயத்தில் வேரூன்றி இருக்காவிட்டால், அவன் உங்களிடம் இருந்து வசனத்தைத் திருடி பாவத்தின் பாதைக்கு அழைத்துச் செல்லுவான். விசுவாசத்திற்குள் வருவது என்பது ஒரு முறை நடக்கும் நிகழ்வு அல்ல, அது நம் வாழ்க்கை இந்த பூமியில் முடியும் வரை நாம் பின்பற்ற வேண்டியது.

கற்பாறை

சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று.கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். லூக்கா 8:6,13


  • கற்பாறை நிலம் என்பது கீழே மண் குறைவாக இருக்கும் நிலப்பகுதி. அதாவது மண் சற்று கடினமாக இருக்கும் (களிமண்ணாக அல்லது கல்லாக இருக்கும்). இந்த நிலத்தில் மண்ணின் வெப்பம் காரணமாக விதை விரைவாக முளைத்தது, ஆனால் பாறை மண்ணின் காரணமாக விதை வேர் எடுக்க முடியவில்லை.

  • நீங்கள் இயேசுவின் நாமத்தில் இரட்சிக்கப்படுவதற்கும் கிறிஸ்துவின் விசுவாசியாவதற்குமான ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைப் பெறும்போது, பாடுகளும் சோதனைகளும் இருக்கும். “கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்”. 1 பேதுரு 4:13,16

  • பாடுகளிலே நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று வசனம் கூறுகிறது. ஆனால் இளம் கிறிஸ்தவர்கள் (கிறிஸ்துவை அறிந்துகொண்ட ஆரம்ப நிலை) விசுவாசத்திற்குள் வந்த பிறகு உலகத்துடன் இணைந்தும், கிறிஸ்துவுடனும் இரட்டை வாழ்க்கையை வாழ்கின்றனர். அவர்கள் இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருந்தாலும், வாழ்க்கையின் பாடுகளால் தடுமாறி விரைவாக கைவிட்டு விடுகிறார்கள். இதைத்தான் இயேசு லூக்கா 8:10(a) இல் “அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக” என்று விளக்குகிறார்.

  • லூக்கா 8 / யோவான் 10:10 இடையே உள்ள புள்ளிகளை இணைக்கலாம் - சாத்தான் என்ன செய்கிறான் என்றால், முதலில் வார்த்தையைத் திருட முயற்சிக்கிறான். அதை அவனால் செய்ய முடியவில்லை, இப்போது அவன், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து நம்மை அழிக்க வாழ்க்கையில் சிரமங்களை (ஒரு நோய் அல்லது கடினமான சூழ்நிலைகள்) அளிக்கிறான் - “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.” யோவான் 10:10

  • கடினமான கற்பாறையை மேற்கொள்ள ("கடினமான இருதயம்") தினமும் தேவனுடைய வார்த்தையைப் படித்து (பைபிள்) இயேசுவிடம் ஜெபியுங்கள். வேர் ஆழமாக வளர்வதற்கு அவர் இன்னும் அதிகமாக ஆவிக்குரிய நிலத்தை சேர்ப்பார். உங்கள் வாழ்க்கையின் பாவங்களிலிருந்து உடைந்து வெளியே வரும்படி அவற்றைக் காட்டுவார். அவருக்குப் பிரியமில்லாத பகுதிகளை வெளிப்படுத்துவார். உங்கள் இருதயத்தை மனந்திரும்புதலுக்கேற்றபடி திருப்புவார். ஒவ்வொரு நாளும் கடந்த காலத்தின் அதிகமான பாவங்களை வெளிப்படுத்துவார். கிறிஸ்துவின் இரத்தத்தால் உங்களைக் கழுவி பாவத்தின் வேர்களை அகற்றுவார். பழைய பாவ வாழ்க்கை அகன்று போய், நீங்கள் ஒரு புதிய நபராக மாறுவீர்கள். இதை பவுல் 2 கொரிந்தியர் 5:17 இல் நன்றாக விளக்குகிறார், “இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின”.

  • 1 பேதுரு 4:13 இல் உள்ளபடி, சோதனைகளுக்காக தேவனைத் துதிக்கும்படியான ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்குவீர்கள்,"கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்". சோதனைகளின் போது, இயேசுவுடனான உங்கள் விசுவாசம் இன்னும் நெருக்கமாகிவிடும், கிறிஸ்துவில் உங்களை இன்னும் முதிர்ச்சியடையச் செய்ய அவர் உங்களுக்கு பல ஆவிக்குரிய பாடங்களைக் கற்பிப்பார்.

வளமான நிலம்

சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். லூக்கா 8:7,14


  • பெரும்பாலான கிறிஸ்தவர்கள் வளமான நிலத்தின் வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று நான் கூறுவேன். அவர்கள் சர்ச்சுக்குச் செல்கிறார்கள், ஆவிக்குரியபடி இருக்கிறார்கள். ஆனால் இன்னும் அவர்கள் பூமியில் உள்ள வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டு, தங்களைச் சார்ந்து இருந்து முதிர்ச்சியடையாமல் இருக்கிறார்கள்.

  • பெரும்பாலான கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள்ளும், உலகத்துக்காகவும் வாழ்கிறார்கள். நம் வாழ்வில் பாசாங்குத்தனம் அதிகம் உள்ளது. “பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்”.

  • கிறிஸ்துவில் முதிர்ச்சியடைவது என்பது கிறிஸ்துவில் இன்னும் பல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெறுவதாகும்.

  • ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். 1 கொரிந்தியர் 12 :7-11. இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதம் கலாத்தியர் 5:22-23 இல் விவரிக்கப்பட்டுள்ள ஆவியின் கனியை உருவாக்குகிறது. "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை".

  • கிறிஸ்துவில் முதிர்ச்சியடைவது என்பது தேவாலயத்திற்குச் செல்வது அல்லது லெந்து நாட்களில் கூட்டங்களுக்குச் செல்வது அல்லது ஒவ்வொரு நாளும் வசனத்தை What's App இல் அனுப்புவது அல்ல. இவையெல்லாம் ஒருவரை கிறிஸ்துவில் மேலும் ஆசீர்வதமாக்குவதில்லை. எல்லா ஆவிக்குரிய ஆசீர்வாதங்களிலும் அவரைச் சார்ந்து இருப்பதே கிறிஸ்துவின் உண்மையான ஆசீர்வாதம். முதலில் அவரைத் தேடுங்கள், பின்னர் உலகத் தேவைகள் இயேசுவால் வழங்கப்படும். மத்தேயு 6:33 "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்".

  • வாழ்க்கையின் கவலைகள் / செல்வங்கள் மற்றும் இன்பங்கள் ஆகியவை வளமான கிறிஸ்தவ வாழ்க்கையில் முட்களாக இருக்கின்றன. நம்மை கிறிஸ்துவில் முதிர்ச்சியடையாமல் வஞ்சிக்கும்படிக்கு இந்த முட்கள் சாத்தானால் விதைக்கப்பட்டு சுய கிரியைகளைத் தேடும்படி செய்கின்றன. சுய இச்சைகள் தேவனுக்கு எதிரான பாவத்திற்கு நம்மை வழிநடத்துகின்றன.

  • "மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்". கலாத்தியர் 5:19-21

  • சகோதரரே நான் பாலியல் ஒழுக்கக்கேடான வாழ்க்கையை நடத்துவதில்லை என்று நீங்கள் கூறலாம். ஆம் அது நம் பார்வையில் உண்மையாக இருக்கலாம். ஆனால் கர்த்தருடைய பார்வையில் "பாவம் என்றால் பாவம் தான், அதில் பெரிய பாவம் சிறிய பாவம் என்ற வித்தியாசம் இல்லை". நீங்கள் திருமணமான பின்னர் வேறு ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான உறவில் இருந்தாலோ அல்லது ஒரு பெண்ணை கண்களில் இச்சையோடு பார்த்தாலோ இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவரது தரநிலைகள் நமக்கு உயர்ந்தவை. நம்மால் சுயமாக ஒரு வாழ்க்கையை வாழ முடியாது, அதனால்தான் கிறிஸ்துவைச் சார்ந்து வாழ்கையை அதிக பரிசுத்தமாகவும், அதிக பாவமற்றவர்களாகவும் வாழ நாம் கிறிஸ்துவில் முதிர்ச்சியடைய வேண்டும்.

  • லூக்கா 8 / யோவான் 10:10 இடையே உள்ள புள்ளிகளை இணைக்கலாம் - சாத்தான் என்ன செய்கிறான் என்றால், முதலில் வார்த்தையைத் திருட முயற்சிக்கிறான். அதை அவனால் செய்ய முடியவில்லை, இப்போது அவன், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து நம்மை அழிக்க வாழ்க்கையில் சிரமங்களை (ஒரு நோய் அல்லது கடினமான சூழ்நிலைகள்) அளிக்கிறான் - “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.” யோவான் 10:10

  • வாழ்க்கையின் கவலைகள், செல்வம் மற்றும் இன்பங்களின் முட்களை நீங்கள் எவ்வாறு அகற்றலாம்? பவுல் சொல்வதைப் பின்பற்றுங்கள். கிறிஸ்துவின் சித்தத்தின்படி உங்களை வழிநடத்தும்படி ஒவ்வொரு உலக ஆசைகளையும், உங்களைத் தொந்தரவு செய்யும் விஷயங்களையும் அவரிடம் விட்டுவிடுங்கள். "அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே". 1 பேதுரு 5:7-9. பிசாசை எதிர்த்து, விசுவாசத்தில் உறுதியாக இருங்கள் என்று வேதம் கூறுகிறது. உங்களால் அவனை வெல்ல முடியும்.

நல்ல நிலம்

சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். லூக்கா 8:8,15

  • நல்ல நிலம் என்பது தேவனுடைய பரிபூரண சித்தத்தின்படி வாழ்ந்து அவர் அவர்களுக்குக் கட்டளையிடுவதற்கு கீழ்ப்படிபவர்களைக் குறிக்கிறது. அவர்கள் இந்த உலகத்தில் போராடினாலும் (உலகின் இன்பங்கள் vs. தேவ கட்டளைகள்) தேவனின் பார்வையில் நேர்மையான வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆண்டவரின் கிருபையும் இரக்கமும் நிறைந்த ஒரு நீதியான வாழ்க்கை.

  • “நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே…”

    1. உண்மையான இருதயம் - சிறந்த தனிப்பட்ட குணங்கள் அல்லது தேவனின் உயர்ந்த தார்மீகக் கொள்கைகளைக் கொண்டிருத்தல் அல்லது காட்டுதல்.

      1. தேவன் நம்முடைய சுயநல நடத்தைகளை கத்தரித்து, தம்முடைய நீதியான பண்புகளை கொடுத்தால் மட்டுமே அது நடக்கும்.

      2. கர்த்தராகிய இயேசுவின் கிருபையினாலும், இரக்கத்தினாலும் நாம் மன்னிக்கப்படும்போது தான் அது நடக்க முடியும்.

    2. நன்மையான இருதயம் - இது தேவனிடம் இருந்து வருகிறது. வசனத்தைக் கேட்கும்போது அதைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள், வார்த்தை உங்களை உள்ளிருந்து புறம்பாக நல்ல உள்ளம் கொண்ட நபராக மாற்றும்.

      1. உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இயேசுவை நோக்கி பந்தயத்தில் ஓட முயலும்போது வரும்.

      2. நீங்கள் சோதனைகள் மற்றும் பாடுகளுக்கு ஆளாகி, கிறிஸ்துவின் பெலத்தால் மேற்கொள்ளும் போது நல்ல இருதயம் வருகிறது.

  • வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.

    1. வசனத்தைக் கேட்கும் ஒருவன், அதைத் தன் இருதயத்தில் காத்து அதன்படி வாழத் தொடங்குகிறான். தேவன் அவனுக்குக் கற்பிக்கும் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிகிறான்.

    2. பல சமயங்களில் ஆண்டவருக்கு கீழ்ப்படிதல் நமது உலக அறிவுரையை மீறுவதாக இருக்கலாம். இது ஒருவரை உலகின் பார்வையில் தோல்வியுற்றவராகக் காட்டலாம்.

  • பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள் - இது தேவன் ஒருவருக்குக் கொடுக்கும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தையும், அதை அவர் அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு எவ்வாறு கடத்துகிறார் என்பதையும் குறிக்கிறது. அது ஒருவருக்கு கொடுக்கும் பணம், உணவு அல்லது அவை போன்ற பொருளாதார ஆசீர்வாதமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆவிக்குரிய ஆசீர்வாதம் என்பது போராடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கோ அல்லது ஆண்டவரின் உதவி தேவைப்படும் ஒருவருக்கோ தேவையான ஒரு எளிய ஜெபமாக இருக்கலாம். இது எப்போதும் போதகர் மூலம் மட்டுமே செய்யப்படுகிறது என்று கருதப்படுகிறது. இல்லை. தேவன் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை மற்றவர்களுக்கு ஆசீர்வதமாக இருக்கவே வழங்கினார். இது போதகருக்கு மட்டுமல்ல, நம்மைப் போன்ற சாதாரண மக்களுக்கும் தான்.

  • லூக்கா 8 / யோவான் 10:10 இடையே உள்ள புள்ளிகளை இணைக்கலாம் - சாத்தான் என்ன செய்கிறான் என்றால், முதலில் வார்த்தையைத் திருட முயற்சிக்கிறான். அதை அவனால் செய்ய முடியவில்லை, இப்போது அவன், இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து நம்மை அழிக்க வாழ்க்கையில் சிரமங்களை (ஒரு நோய் அல்லது கடினமான சூழ்நிலைகள்) அளிக்கிறான் - “திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.” யோவான் 10:10

  • சாத்தானை எப்படி மேற்கொள்வது - தேவனிடம் தாழ்மையோடு ஒப்புக்கொடுத்து, உங்களிடம் உள்ள பெருமையை நீக்குமாறு அவரிடம் கேளுங்கள். தேவனோடு நெருக்கமாக வாழும்போது நம்மைச் சுற்றியுள்ளவர்களை விட நாம் உயர்ந்தவர்கள் என்று சாத்தான் உணர வைப்பதால், பெருமை வருகிறது. உங்களுக்கு அந்நியபாஷை வரம் இருந்தால் தேவன் அதைக் கொடுத்தார் என்று பெருமைப்படாதீர்கள், ஞானத்தின் ஆவி உங்களிடம் இருந்தால் தேவனின் வார்த்தையைப் புரிந்து கொள்ள முடிகிறது என்று பெருமைப்படாதீர்கள். பவுல் 2கொரிந்தியர் 6:9-10 இல் கூறுவதைப் போல தாழ்மையோடு கிறிஸ்துவுக்குள்ளாக வாழுங்கள். "அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்".2 கொரிந்தியர் 6:9-10

  • இதைச் செய்வது மிகவும் கடினம், ஆனால் உங்கள் பலவீனத்தில் ஆண்டவருடைய உதவியை நாடுங்கள். "நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்". 2 கொரிந்தியர் 11:30

  • "அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்". 2 கொரிந்தியர் 12:10

  • கிறிஸ்துவின் ஜீவத் தண்ணீர் உங்களிடமிருந்து மிகுதியாக வெளியேறட்டும். அதன் மூலம் பெலவீனமானவர்களுக்கு ஆசீர்வாதமாக இருங்கள்.

  • நல்ல நிலத்தைப் போன்ற இருதயம் கொண்ட மக்களுக்கு நியாயத்தீர்ப்பு நாளில் தேவன் மிக உயர்ந்த தரங்களை வைத்திருப்பதை நினைவில் கொள்ளுங்கள், எனவே மிகவும் பரிசுத்தமாகவும் தூய்மையாகவும் இருக்க முயற்சிக்கும் வாழ்க்கையை வாழுங்கள். பிசாசு நம் பரிசுத்தத்தை "திருடவும்", நம் தெய்வீகத்தன்மையை "கொல்லவும்", நமது நீதியை "அழிக்கவும்" வருகிறான் என்பதை நினைவில் வையுங்கள். அவனிடம் விழிப்புடன் இருங்கள்.

சுருக்கம்


இதைப் படித்த பிறகு நீங்கள் இயேசுவோடு வாழ்வில் எங்கு நிற்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இயேசு “கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று கூறுகிறார். அவருடைய சத்தத்தைக் கேட்டு அவரிடம் திரும்புங்கள், நீங்கள் எந்த நிலையில் வாழ்ந்தாலும் பரவாயில்லை. உங்களைத் தம் இரத்தத்தினால் கழுவி உங்களை மேலும் தூய்மையாகவும் பரிசுத்தமாகவும் ஆக்குவதற்காக அவர் இருக்கிறார்.

9 views0 comments

Recent Posts

See All

The Joy

Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
bottom of page