ஒவ்வொரு நாளும் உணர்ச்சிகளை நாம் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்துகிறோம். சிலவற்றை நேர்மறையான வழியிலும் (அன்பு / பாராட்டு / சிரிப்பு / மகிழ்ச்சி / தைரியமான / ஆறுதல் / முதலியன), சிலவற்றை எதிர்மறையான வழியிலும் (கோபம் / பயம் / கசப்பு / காமம் / பேராசை / அழுகை / அவமதிப்பு / போன்றவை) வெளிப்படுத்துகிறோம். ஆக்ஸ்போர்டு (oxford) ஆங்கில அகராதியில் உணர்ச்சி என்பதற்கு "ஒருவரின் சூழ்நிலைகள், மனநிலை அல்லது மற்றவர்களுடனான உறவுகளிலிருந்து பெறப்படுகிற வலுவான உணர்வு" என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துவின் விசுவாசிகளாகிய நாம் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை உணர்வுகளுக்கு எவ்வாறு பதிலளிக்கிறோம் என்பதைப் பார்க்க சாத்தானால் எப்போதும் சோதிக்கப்படுகிறோம். உலகில் நம்முடைய எதிர்மறை உணர்ச்சிகள் எவ்வாறு உருவம் பெறுகின்றன என்பதைப் பார்க்க சாத்தானால் சோதிக்கப்படுகிறோம். அவன் நம் பதிலைப் பயன்படுத்தி (பெரும்பாலும் நாம் நமது மாம்சத்திலிருந்து / உலக வழியிலிருந்து பதிலளிக்கிறோம்) இரவும் பகலும் நம்மைக் குற்றம் சாட்டுகிறான்.
“அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான்”. வெளிப்படுத்தின விசேஷம் 12:10
சாத்தான் அனுப்பும் பெரும்பாலான உணர்ச்சிகள், நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, அது சரீரம் சார்ந்ததல்ல. யாரேனும் நம்மை அடித்து, உடலில் காயம் ஏற்பட்டால், அந்த வலி சிறிது நேரத்திற்குப் பிறகு குணமாகிவிடும். ஆனால் வார்த்தைகளாலும் அவமானங்களாலும் நம்மை யாரேனும் தாக்கினால் அந்த அதிர்ச்சி உடல் காயம் ஆறிய பிறகும் கூட மிக நீண்ட காலம் இருக்கும். நமக்கு எதிராக பேசப்படும் கோபமான வார்த்தைகள் கசப்பாக மாறி அது பகைமைக்கு வழிவகுக்கிறது. தேவனின் திட்டத்தில் இருந்து விலகி பாவத்தில் விழும்படிக்கு அதுதான் சாத்தானின் குறிக்கோள். அப்பொழுது சாத்தான், "ஏய் நீ தேவனின் பிள்ளை என்று சொல்கிறாய், அது செயல்படுவதை பார்க்கிறாயா? நீ என்ன செய்திருக்கிறாய் என்று பார், அவரைப் பின்பற்றுவதால் என்ன பயன்? நீ சாதாரண மனிதனை விட மோசமானவன்” என்ற சிந்தனையை நமக்கு கொடுத்து, இயேசுவின் மீதுள்ள விசுவாசத்திலிருந்து நம்மை விலக்கிவிடுவான்.
பவுல் இந்த உணர்வுகளை எவ்வாறு கையாண்டார் என்பதையும், அதை நம் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் நாம் கற்றுக்கொள்வோம். பவுல் கொரிந்துவில் அதிக நேரம் செலவிட்டார். தற்போது இருக்கிற "லாஸ் வேகாஸ்" (Las vegas) நகரத்தைப் போன்று கொரிந்து பட்டணம் பாவத்தின் நகரமாக இருந்தது. அவர் நற்செய்தியை முன்னெடுத்துச் சென்றபோது, அவர் பொய்யான போதகர், அவருடைய செயல்கள் முற்றிலும் சாத்தானுடைய வேலை என்றெல்லாம் ஒரு குழுவினர் குற்றம் சாட்டிக் கொண்டு இருந்தனர்.
ஒரு கணம் உங்களை பவுலினுடைய நிலையில் இருத்திப் பாருங்கள். அவர் யூத சட்டங்களில் ஒரு அறிஞர் மற்றும் கிரேக்க கலாச்சாரத்தை நன்கு அறிந்தவர். அந்தக் காலத்தின் கூர்மையான மற்றும் புத்திசாலி நபர்களில் ஒருவர். அவர் செய்த அனைத்து காரியங்களிலும் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்பட்டார். சிலர் அவரைப் பொய்யான போதகர் என்று குற்றம் சாட்டினர். மேலும், அவர் சிறையில் பல காலம் கழித்ததன் மூலம் சுவிசேஷத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டார், பலமுறை பசியுடன் இருந்தார். அநேகந்தரம், சில கும்பலால் அடிக்கப்பட்டு, சாலையோரத்தில் தூக்கி வீசப்பட்டார். நீங்கள் தகுதியானவர் என்றும், நீங்கள் செய்வது சரியானது என்றும் உங்களுக்குத் தெரிந்து இருந்து, நீங்கள் அப்படி நடத்தப்படும்போது உங்கள் உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? அதுபோன்று எனக்கு நடந்தால், நான் உடனடியாக கை விட்டுவிடுவேன்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, தன் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு எதிராக, 2 கொரிந்தியர் 10 ஆம் அதிகாரத்தில், பவுல் தனது ஊழியத்தை காத்துக் கொள்கிறார். "நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல". 2 கொரிந்தியர் 10:3.
அவர் சொல்லும் வார்த்தையை கவனியுங்கள் – “போர்செய்கிறவர்களல்ல” – “போர்“ என்பதை கவனத்தில் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்.
போர் என்றால் என்ன? - ஆக்ஸ்போர்டு அதிகாரத்தில் போருக்கு "இது வெவ்வேறு நாடுகள் அல்லது வெவ்வேறு குழுக்களுக்கு இடையேயான ஆயுத மோதலின் நிலை" என்று வரையறை கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு வலுவான வார்த்தை. அன்றாட நடைமுறையில், எந்தவொரு சூழ்நிலையையும் விவரிக்கும் போது, அது மிகவும் தீவிரமானதாக இல்லாவிட்டால், போர் என்ற வார்த்தையை நாம் பயன்படுத்த மாட்டோம்.
2 கொரிந்தியர் 10:3 ல் உள்ள இந்தக் கேள்விக்கான பதிலை பவுல் எபேசு சபைக்கு எபேசியர் 6 ல் விளக்குவதில் காணலாம்.
“சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.இரட்சணியமென்னும் தலைச்சீராவையும். தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்”. எபேசியர் 6:14-17
எபேசியர் 6 ஆம் அதிகாரத்தில் பவுல் தான் பயன்படுத்திய ஆவிக்குரிய ஆயுதங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
சத்தியத்தின் கச்சை, நீதியென்னும் மார்க்கவசம், சுவிசேஷத்தின் பாதரட்சைகள், விசுவாசத்தின் கேடகம், இரட்சிப்பின் தலைக்கவசம், ஆவியின் பட்டயம் என்ற இந்த ஆயுதங்களை அவர் நம்பியிருந்தார். சுய மனித (அடிப்படை) முறைகளுக்கு பதிலாக தேவன் மீது விசுவாசம் வைத்திருந்தார். ஆனால் உண்மையில், கோட்டைகளை வீழ்த்துவதற்கு இந்த ஆயுதங்கள் தேவனிடத்தில் வல்லமை வாய்ந்தவை.
கொரிந்திய கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ போருக்கு சரீர ஆயுதங்களை நம்பி வியந்திருந்தனர்:
சத்தியத்தின் கச்சைக்கு பதிலாக, அவர்கள் சூழ்ச்சியுடன் போராடினர்.
நீதியின் மார்க்கவசத்திற்குப் பதிலாக வெற்றி பிம்பத்துடன் போராடினார்கள்.
நற்செய்தியின் பாதரட்சைகளுக்குப் பதிலாக, அவர்கள் மென்மையான வார்த்தைகளால் போராடினர்.
விசுவாசத்தின் கேடகத்திற்குப் பதிலாக, அதிகார உணர்வோடு போராடினார்கள்.
இரட்சிப்பின் தலைக்கவசத்திற்கு பதிலாக, அவர்கள் அதிகாரத்தோடு போராடினர் (அந்நிய தெய்வம் vs இயேசு).
ஆவியின் பட்டயத்திற்குப் பதிலாக, அவர்கள் மனித திட்டங்களுடன் போராடினர்.
பவுல் எவ்வாறு போரை நடத்தினார் என்பதை விவரிக்கிறார்.
"எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்". 2 கொரிந்தியர் 10:4-6
"சத்தியத்தின் கச்சை" மூலம் வாதங்களை உடைத்துப் போடுங்கள் - அவர்கள் வந்து முன்வைத்த ஒவ்வொரு வாதத்தையும் தேவனின் வார்த்தை வழிநடத்துதலின் மூலம் போராடினார்.
"ஒவ்வொரு பாசாங்குகளையும்" "நீதியின் மார்க்கவாசத்துடன்" முறியடித்தார் - பவுல் தனது சுய விருப்பத்திற்கு பதிலாக தேவனுடைய சித்தத்திற்கு கீழ்ப்படியும்படிக்கு தேவன் அவரை தொடர்ந்து வழிநடத்தினார். இதனால், தேவ நீதி அவர்களுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தவறான நோக்கங்களை வெளிப்படுத்தி முறியடித்தது.
நாம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்
வாழ்க்கையில் பதட்டத்திற்கு இட்டுச் செல்லும் உணர்ச்சி நிலையுடன் போராடும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரிடலாம், அந்த சூழ்நிலையை நாமே சமாளிக்கிறோம்.
சரீர, மனித வழி என்பது அடக்குவது, ஆதிக்கம் செலுத்துவது, திறமையாகக் கையாள்வது மற்றும் சூழ்ச்சி செய்வதாகும்.
ஆவிக்குரிய, இயேசுவின் வழியானது, உங்களைத் தாழ்த்தி, சுயத்திற்கு மரித்து, தேவன் தம்முடைய உயிர்த்தெழுதலின் வல்லமையை உங்கள் மூலம் வெளிப்படுத்தச் செய்வது ஆகும்.
ஜெபத்தின் மூலம் உங்கள் உணர்ச்சிகளை தேவனிடம் ஒப்புக் கொடுங்கள் - நீங்கள் தேவனுடன் நடந்து, "தேவனின் பிள்ளை" என்ற உறுதியைப் பெற்றிருந்தால், மனித உணர்வுகளை ஜெபத்தின் மூலம் அவரிடம் வெளிப்படுத்துங்கள். ஒரு குழந்தை தனது தந்தையிடம் எப்படிச் சொல்லுமோ அதைப் போன்று வெளிப்படுத்துங்கள். அதைச் செய்யும்போது, “நீங்கள் வெளிப்படுவதற்கும், எனக்காக உணர்ச்சிப்பூர்வமான போரை நடத்துவதற்கும் நான் என் உணர்ச்சிகளை உங்களிடம் விட்டுக் கொடுக்கிறேன்” என்று இயேசுவிடம் கூறுங்கள்.
தேவன் பின்வருவனவற்றைச் செய்வார்
கேடகம் - தேவன் நிலைமையைக் கட்டுப்படுத்துகிறார் என்ற விசுவாசத்தை அவர் உங்களுக்குத் தருவார்.
தலைக்கவசம் - இந்த கடினமான காலங்களில் அவர் உங்களுக்கு வழிகாட்டுவார், நீங்கள் தனியாக நடப்பதாக உணர மாட்டீர்கள். நாம் வெளிப்படுத்தக்கூடிய எதிர்மறை உணர்ச்சிகளின் பொதுவான வெளிப்பாடுகளைச் செய்யாமல் "நீதியின் மார்க்கவசத்தால்" அவர் உங்களைப் பாதுகாப்பார். மாறாக அந்த சூழ்நிலையில் நீதியான செயலை வெளிப்படுத்துவார்.
பட்டயம் - அந்த சூழ்நிலையில் உங்களை ஆறுதல்படுத்த அவர் உங்களுக்கு வார்த்தையைக் கொடுப்பார் ("சத்தியத்தின் கச்சை").எல்லா கொந்தளிப்பின் மத்தியிலும் தேவ சமாதானம் உங்களுடன் வரும். நீங்கள் "சமாதானத்தின் சுவிசேஷத்தில்" நடக்கலாம்.
அன்றாடம் நடக்கும் ஒவ்வொரு உணர்ச்சிப் போராட்டத்தையும் நாம் தேவனிடம் கொண்டு வர வேண்டும். இது ஒரே முறை நடக்கும் செயல் அல்ல.
மனிதர்களாகிய நாம் ஆதரவற்ற பாதிக்கப்பட்டவர்களோ அல்லது நமது எண்ணங்களைப் பெறுபவர்களோ அல்ல. நம் எண்ணங்களை நிறுத்தி, ஒவ்வொரு எண்ணத்தையும் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு சிறைபிடிக்க நாம் தேர்வு செய்யலாம். காம எண்ணங்கள், கோப எண்ணங்கள், பய சிந்தனைகள், பேராசையின் எண்ணங்கள், கசப்பான எண்ணங்கள், தீய எண்ணங்கள் - இவை யாவும் ஒவ்வொரு எண்ணத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். அவை கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்குள் சிறைபிடிக்கப்பட வேண்டும்.“உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம்". 2 கொரிந்தியர் 10:6
தேவையற்ற வார்த்தைகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கும் செயல்களால் நீங்கள் தோற்றுப் போனவர் என்று உலகம் சொல்லும். தேவன் உங்களுக்காகப் போராடுகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர் தமக்கு சரி என்று நினைப்பதை, எதிர்த்துப் போராடுவதற்கான ஆவியை உங்களுக்குத் தருவார். “நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில், இருக்கும்பொழுது மாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும்”. கலாத்தியர் 4:18
சாத்தானின் தொல்லைகளுக்காக தேவனைத் துதியுங்கள். நீங்கள் கடந்து செல்லும் போராட்டங்களுக்காக அவருக்கு நன்றி சொல்லுங்கள். அது சாத்தானை பலவீனமாக உணரச் செய்து அவன் போராட்டத்தைத் தோற்கடிக்கச் செய்கிறது.“என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே”. மத்தேயு 5:11-12
இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், "பிசாசுகளின் தலைவனான பெயல்செபூலினால் அவர் பேய்களை ஓட்டுகிறார்" என்று அவர்கள் கூறிய குற்றச்சாட்டுகள் எதற்கும் அவர் கோபப்படவில்லை. ஆனால் அவர்கள் வாங்குவதற்கும் விற்பதற்கும் அவருடைய வீட்டை மாற்றியபோது அவர் கோபமடைந்தார். “இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து: என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்”. மத்தேயு 21:12-13
அதே வழியில், தேவன் தமது மகிமையை பாதிக்கும் இடத்தில் அதை எதிர்த்து போராட கோபத்தின் ஆவியை கொடுப்பார்.
மோசம் போகாதீர்கள். அன்றாட வாழ்வில் நமது மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்த சாத்தான் நம்மைத் தூண்ட முயற்சிக்கிறான், அதற்குப் பதிலாக, ஒவ்வொரு எண்ணத்தையும் கிறிஸ்துவின் கீழ்ப்படிதலுக்கு அடிமைப்படுத்துங்கள்.
Comments