ஆரோக்கியமான வளர்ச்சி என்பது உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் ஆரோக்கியமாகவும் சீராகவும் இருப்பதை உறுதி செய்வதை உள்ளடக்கிய ஒரு கருத்தாகும். இது சரீர அல்லது பொருளாதார வெற்றியை அடைவது மட்டுமல்ல, உங்கள் வாழ்க்கையில் ஒரு பரிசுத்தமான அணுகுமுறையைக் கொண்டிருப்பது ஆகும். நீங்கள் சீரான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த ஆரோக்கியமான வளர்ச்சி ஒரு சிறந்த வழியாகும்.
அதே போல், ஆவிக்குரிய வாழ்விலும் எல்லா பகுதிகளிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி தானாக வருவதில்லை, முதுமை தானாக அந்த வளர்ச்சியை உருவாக்குவதில்லை, தேவனின் வாக்குத்தத்தங்களை விசுவாசிப்பது மட்டும் போதாது. ஒரு கட்டிடத்தை மேலே கொண்டு வருவதற்கு செங்கலுக்கு மேல் செங்கலை வைக்க வேண்டும். ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறுவதற்கு நாம் சரியான விஷயங்களை வைக்கிறோமா என்பதை இதில் உறுதி செய்ய வேண்டும்.
ஆவிக்குரிய ரீதியில் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நாம் கவனம் செலுத்த வேண்டிய பகுதிகள்
வேத அறிவில் வளருதல்
தேவனின் "வாக்குத்தத்தங்களை" பார்ப்பதற்கு மட்டுமே பலர் சிறு புத்தகங்கள் / நாட்காட்டி வசனங்களைப் பார்க்கிறார்கள்.
வேதத்தில் தேவனின் பிரமாணங்கள் உள்ளன. தேவன் தம்முடைய ஜனங்களை எவ்வாறு வழிநடத்தினார் என்பதற்கான வரலாறு உள்ளது,அதில் தீர்க்கதரிசனம் உள்ளது, தற்போதைய சூழலுக்கு ஏற்ற ஞானம் உள்ளது, நமது கிறிஸ்தவ கொள்கைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான சிறந்த கோட்பாடு உள்ளது. எனவே நமக்கான வாக்குறுதிகள், கட்டளைகள், எச்சரிப்பு, வழிகாட்டுதல் ஆகியவற்றில் வேதம் முழுவதுமாக புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
"முழு" வேதம் இல்லாமல் "முழுமையான" வளர்ச்சி சாத்தியமில்லை. "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது".2 தீமோத்தேயு 3:16-17.
தினமும் வேதத்தை படிப்பதற்கான நேரம் ஒதுக்கி ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வாருங்கள். பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் படிக்க முயற்சி செய்யுங்கள், பைபிளில் எழுதப்பட்டுள்ள எந்த ஒரு வார்த்தையையும் புறக்கணிக்காதீர்கள்.
ஒவ்வொரு வார்த்தையும் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. எனவே அதைக் கற்றுக்கொள்ள உற்சாகத்துடன் படியுங்கள், தேவன் உங்களோடு பேசட்டும். நீங்கள் உண்மையில் மேலும் வளர விரும்பினால் தேவனின் வார்த்தையை தியானியுங்கள்.
ஜெபத்தில் வளருதல்
ஜெபம் என்பது ஆவிக்குரிய வளர்ச்சிக்கான ஆக்ஸிஜன். ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நமக்கு இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் அடுக்கி, தேவனிடம் நிறைவேற்ற சொல்லி கேட்க வேண்டும் என்பது தான் ஜெபத்தைப் பற்றிய நமது பார்வை. ஆனால் தேவன் அப்படி பார்ப்பதில்லை. தேவன் ஜெபத்தை தேவனுடனான உறவாகக் கருதுகிறார், அங்கு நீங்கள் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் அவரிடம் சொல்லி உதவி கேட்கிறீர்கள்.
உங்கள் ஜெபங்களில் விண்ணப்பங்கள், மற்றவர்களுக்கான பரிந்துரைகள் மற்றும் உங்களுக்கும் பிறருக்கும் அவர் செய்தவற்றிற்கான ஸ்தோத்திரங்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும். "நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்". 1 தீமோத்தேயு 2:1
தேவ சித்தத்தை நீங்கள் புரிந்துகொண்டால், உங்கள் ஜெபம் ஒரு பயனுள்ள ஜெபமாக இருக்கும். "நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்". 1 யோவான் 5:15
தேவனுடைய வார்த்தையைப் படிப்பது அவருடைய சித்தத்தைப் புரிந்துகொள்ள உதவுவதோடு, நம்முடைய தவறுகளையும் நமக்கு உணர்த்துகிறது. "தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது". எபிரேயர் 4:12
ஆராதனையில் வளருதல்
தேவனை ஆராதிப்பது வெவ்வேறு வடிவங்களை கொண்டுள்ளது. சிலர் அதை ஜெபத்தில் செய்கிறார்கள், சிலர் சத்தமாக பாடி ஆடி ஆராதிக்கிறார்கள், சிலர் சத்தமிட்டு ஸ்தோத்தரிக்கிறார்கள்.
அவரை ஆராதிப்பதற்காகவே நாம் இந்த உலகில் படைக்கப்பட்டுள்ளோம். நாம் அதை அடிக்கடி மறந்துவிட்டு, கஷ்டத்தில் இருக்கும் போது அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே ஆராதிக்கிறோம்.
நாம் ஒவ்வொரு நாளும் / ஒவ்வொரு கணமும் அவரை ஆராதிக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். நாம் பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு ஆசீர்வாதமும், மரியாதையும் அவரோடு கூட ஆராதிக்கப்பட வேண்டும்.
நாம் பரலோகம் செல்லும்போது இந்த ஆராதனை நித்தியத்திலும் தொடரும் வகையில் அவரை ஆராதிக்கப் பழகுங்கள். அவருடைய மகிமை / நன்மை / கனம் மற்றும் வல்லமை / விசுவாசம் / அன்பு இவற்றை ஆராதியுங்கள்.
அவர் பாத்திரராய் இருப்பதற்காக அவரைத் துதியுங்கள். "கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்". வெளிப்படுத்தின விசேஷம் 4:11
பரிசுத்தத்தில் வளருதல்
நாம் உலகின் அசுத்தங்களால் நிரம்பியிருக்கிறோம். அன்றாட வாழ்வில் ஏதோ ஒரு பாவத்தில் தவறி விழுந்து விடுகிறோம். நாம் தவறி விழுந்த பாவத்தை உணர்ந்து, அதற்காக தேவனிடம் பாவமன்னிப்பு கேட்டு சுத்தப்படுத்திக் கொள்வது தான் ஆவிக்குரிய வளர்ச்சிக்கானத் திறவுகோல்.
நம்முடைய பாவ சுபாவம் நம்மை தேவனோடு ஐக்கியம் கொள்வதிலிருந்து தடுக்கிறது.
முதலில், செய்த பாவங்களை ஒப்புக்கொள்ளத் தொடங்குங்கள் - இது, நம் எண்ணம், வார்த்தை அல்லது செயலில் நாம் செய்த பாவமாகும். இந்த பாவம் வேண்டுமென்றே அல்லது தற்செயலாக செய்யப்பட்டு இருக்கலாம். "வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார்". மத்தேயு 15:18-20
முதிர்ச்சியடையும் போது, நாம் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்ட, அந்த வகையானப் பாவங்களையும் அறிக்கையிடுங்கள். இவை என்னவெனில், நாம் செய்ய வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை கற்பிக்கும் காரியத்தை செய்யாமல் விடுவதாகும். "அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மை செய்யவேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது நன்மை செய்வதோ என்னிடத்திலில்லை". ரோமர் 7:18. தேவையில் உள்ள ஒருவருக்கு உதவ வேண்டும் என்று தேவனின் வார்த்தை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது, பல நேரங்களில் நாம் அதை தவறவிடுகிறோம், அது அவருடைய பார்வையில் பாவம்.
எப்பொழுதும் மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் நன்றாக இருக்கிறோம் என்று சொல்கிறோம். பரிசுத்தத்தில் வளர இயேசுவோடு ஒப்பிட்டுப் பாருங்கள். "நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக". லேவியராகமம் 11:45.
கீழ்ப்படிதலில் வளருதல்
சாத்தான் நம்மைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதால் தான் பல சமயங்களில், தேவன் நம்மைச் செய்ய அழைப்பதற்கு நாம் கீழ்ப்படிவதில்லை. "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்". எபேசியர் 2:1-2
இயேசு கீழ்ப்படிதலை "கற்றுக்கொண்டார்" என்று அவரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது. "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லைமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி,". எபிரேயர் 5:7-9. நாம் துன்பப்படும்போதும் இயேசுவின் குணத்தைப் பின்பற்றி நடக்க வேண்டும் அதற்காகத் தான் நாம் பரிபூரணமாக ஆக்கப்பட்டோம்.
அவர் எப்போதும் கீழ்ப்படிதலுடன் இருந்தார். சோதனைகளுக்கு அடிபணிந்து அவர் ஒருபோதும் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போகவில்லை.
ஆவியில் வளருவதற்கு, நாம் மனமுவந்து கீழ்ப்படிய வேண்டும், முழு மனதுடன் கீழ்ப்படிய வேண்டும். கீழ்ப்படிதலில் மகிழ்ச்சியான அனுபவம் இருக்க வேண்டும். உடனடியாகக் கீழ்ப்படியும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
மன்னிக்கும் தன்மையில் வளருதல்
மன்னிக்கும் தன்மை பின்பற்றுவதற்கும் வளர்வதற்கும் கடினமானது. ஏனெனில் நமது ஆணவம் நம்மை வளர்ச்சியிலிருந்து தடுக்கிறது. பல நேரங்களில் நாம் ஒரு முறை மன்னிக்கிறோம், அது மீண்டும் நடந்தால், தேவனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிவதை விட நம் அகங்காரம் முன்னெடுப்பதை அனுமதிக்கிறோம்.
இயேசு ஏழுதரம் மாத்திரம் அல்லாமல் ஏழெழுபதுதரம் மன்னிப்பதற்கு நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். "அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்துவந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்". மத்தேயு 18:21-22
நாம் மீண்டும் மீண்டும் தவறுகள் செய்யும் போது, அவர் எழுதியிருப்பதைப் போலவே நம்மை மன்னிக்கிறார். நாமும் அந்த மனப்பான்மையில் வளர வேண்டும். அது மிகவும் கடினம் என்று எனக்குத் தெரியும். உங்களை மாற்றுவதற்கு அவரின் உதவியை நாடுங்கள்.
பொறுமையில் வளருதல்
நாம் வேகமான தகவல் தொழிநுட்ப உலகில் வாழ்வதால், உடனடி முடிவுகளை விரும்புகிறோம். நமது ஆவிக்குரிய வாழ்விலும் இதையே எதிர்பார்க்கிறோம்.
நாம் ஆவியில் வளர்ச்சியடையும் போது, ஆவியின் கனிகளைப் பெறுகிறோம். அவற்றில் ஒன்று "சாந்தம் மற்றும் இச்சையடக்கம்". "ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம். சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை". கலாத்தியர் 5:22-23
இந்த "சாந்தமும் இச்சையடக்கமும்" நம்மிடம் இருந்தால், நாம் பொறுமையில் வளர்வோம். உதாரணத்திற்கு, ஜெபத்தில்
ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் - உடனடி பதில்களைப் பெறுகிறோம்.
வளரும்போது - தாமதமான பதில்களைப் பெறுகிறோம்.
மேலும் வளருகையில் - வெவ்வேறு பதில்களைப் பெறுகிறோம்.
மனத்தாழ்மையில் வளருதல்
நாம் ஆவியில் வளரும்போது மனத்தாழ்மையிலும் வளர வேண்டும். மனத்தாழ்மை இல்லாமையே நம்மை தேவனிடமிருந்து பிரிக்கிறது.
நாம் மேலும் வளரும்போது, சாத்தான் நமக்கு ஆவிக்குரிய பெருமையை ஊட்டுகிறான். நாம் தேவனுக்கு நெருக்கமாக இருக்கிறோம் என்று உணர வைத்து அதனால் எந்தக் காரியத்தை வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்க வைக்கிறான், பணக்கார பெற்றோரின் பிள்ளையைப் போல நடந்துகொள்ள வைக்கிறான். தேவனின் கிருபையில் இருந்து நாம் விழுவதற்கு இது ஒரு பொறி.
மாறாக நாம் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்.
ஒரு பாவியாக : "பிரதான பாவி நான்" - "பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான்". 1 தீமோத்தேயு 1:15
ஒரு பரிசுத்தவானாக : "பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான்" - "பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது". எபேசியர் 3:8
ஒரு அப்போஸ்தலனாக : "அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்" - "நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல". 1 கொரிந்தியர் 15:9
உங்கள் வாழ்க்கையில் இவைகளைக் கைக்கொண்டு ஆரோக்கியமான வளர்ச்சி அடைய தேவன் உங்களுக்கு வழிகாட்டும்படி அவரிடம் ஜெபியுங்கள்.
Comments