top of page
Kirupakaran

ஆதி முதல் அந்தம் வரையிலான விசுவாசம்


“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது.” ரோமர் 1:17


நான் இந்த வசனத்தை தியானித்தபோது, ​​கர்த்தர், கிறிஸ்தவ வாழ்க்கையில் விசுவாசத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் எனக்கு புரிய வைக்கும்படி வெளிப்படுத்தினார். நம்மில் அநேகர், விசுவாசத்தை உலகத் தேவைகளை நோக்கியே பார்க்கிறோம். அதாவது இது போன்ற சூழ்நிலைகளில் தேவன் நமக்கு அதிசயம் செய்து உதவ வேண்டும் என்று ஜெபிக்கிறோம். விசுவாசம் என்பது நாம் அவரை நம்பி இருப்பதனால், அவர் நமது எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவது மாத்திரம் அல்ல. தேவனுக்கு முன்பாக நம்மை நீதிமான்களாக்கும்படியாக அது ஒரு முக்கியமான கோட்பாடு ஆகும். இந்த வசனத்தை விரிவாகப் புரிந்துகொள்ள ஒரு படி மேலே செல்வோம்.


சுவிசேஷம் என்றால் என்ன?


அந்தச் சுவிசேஷத்தினால்" என்று வசனம் கூறுகிறது. பவுல் சொல்கிற இந்த சுவிசேஷம் என்ன? சுவிசேஷத்திற்கு நீங்கள் கூறும் விளக்கம் என்ன? சுவிசேஷம் என்பது தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மூலம் தேவனுடைய கோபத்திலிருந்து நம்மை மீட்கும் இரட்சிப்பின் நற்செய்தியாகும். நாம் வாழ்கிற பாவமான வாழ்க்கை அல்லது நம்முடைய அநீதியான குணங்களின் விளைவு தான் கர்த்தருடைய கோபம்.


நீதி என்றால் என்ன?

நீதி என்ற வார்த்தையை வேதத்தில் படிக்கிறோம், அதன் அர்த்தம் என்ன?

  • "நீதி" என்ற வார்த்தைக்கு 'சமத்துவம், நீதி, ஒருமைப்பாடு' என்று அர்த்தம். இங்கே 'ஒரு தரத்திற்கு/ நடைமுறைக்கு இணங்குதல்' என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

  • தேவனுடைய தரநிலைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வது அல்லது இணங்கி நடக்காததன் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனுக்கும்,அவனவனுக்குத் தகுதியானதை வழங்குவதே நீதி ஆகும்.

  • கர்த்தருடைய வார்த்தையில் உள்ள அவரின் பரிசுத்த குணத்திற்கு இணங்குவது ஆசீர்வாதத்தைத் தருகிறது.

  • தேவனின் தரத்திற்கு இணங்கத் தவறுவது சாபத்தைக் கொண்டுவரும்.

  • நீதிக்குரிய பரிபூரணத்தின் இந்த தரநிலையில் ஏதேனும் குறைந்தால், அது மீறுபவர்கள் மீது தேவனின் முழு சாபத்தையும் கொண்டு வருகிறது.


தேவ நீதி என்றால் என்ன?

"தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது." என்று வாசிக்கிறோம். "தேவ நீதி" என்பது இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களுக்கு தேவனுடைய இலவச பரிசு. அவருக்குத் தேவையானதை, சுவிசேஷத்தில் தகுதி பார்க்காமல் இலவசமாய் கொடுக்கிறார்.


அது நாம் சம்பாதிக்கக்கூடிய அல்லது தகுதியான ஒன்று அல்ல. அது மேலே தேவனிடம் இருந்து வருகிறது. அதை அவர் இலவசமாகக் கொடுக்கிறார்.


தேவ நீதி நம்மிடம் இல்லை என்றால், நாம் அவருடன் சரியாக இல்லாமலும் அவருடைய நியாயமான கண்டனத்திற்கு உட்பட்டவர்களாயும் இருக்கிறோம். நம்மை தேவபக்தி அற்றவர்கள் என அழைக்கலாம். இந்த தேவபக்தியின்மை அவருடைய கோபத்தை வரவழைக்கிறது. கீழ்வரும் வசனம் நமக்கு தேவனுடைய நீதியைத் தேட வேண்டியதன் அவசியத்தை விளக்குகிறது.


“சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.” ரோமர் 1:18


தேவ நீதி தேவனிடம் இருந்து இலவசமாகப் பெறப்படுகிறது, ஆனால், 'விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி, விசுவாசத்திற்கென்று வெளிப்படுத்தப்படுகிறது' என்ற நிபந்தனையோடு.


விதிமுறை மிகவும் எளிமையானது - நீங்கள் இயேசுவின் மீது விசுவாசம் வைத்திருந்தால் மட்டுமே அணுக முடியும், இதை விசுவாசத்தின் மூலம் மட்டுமே பெற்றுக் கொள்ள முடியும். அதற்கு வெளியே வேறு வழி இல்லை.


விசுவாசம் என்றால் என்ன?

பவுல் பேசும் விசுவாசம் என்பது மனம், இருதயம் மற்றும் ஆத்துமாவை உள்ளடக்கிய ஒரு விரிவான புரிதல்.

  • மனதால் ஒருவர் சுவிசேஷத்தின் அடிப்படை உண்மையை, அது தேவனின் வார்த்தை/வேதாகமம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.

  • வார்த்தை ஒருவரது மனதிற்குள் சென்றவுடன், அவர் இருதயத்தில் அதன் உண்மைத்தன்மையை வற்புறுத்த வேண்டும். தேவ நீதிக்கான தனது தேவை குறித்து உறுதியாக இருக்க வேண்டும்.

  • இறுதியாக, அவர் தனது ஆத்துமாவில், இயேசு கிறிஸ்துவுக்கு தனது வாழ்க்கையின் தீர்க்கமான அர்ப்பணிப்பைச் செய்ய வேண்டும்.

  • இம்மூன்று செயல்களும் நிறைவடையும் போது, விசுவாசமானது தேவ நீதியைப் பெறுவதற்கான நுழைவாயிலாக செயல்படுகிறது.

விசுவாசம் தனிப்பட்டதாக இருக்க வேண்டும். ஒரு நபர் அனைத்தையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்காக வேறு யாரும் இந்த முடிவை எடுக்க முடியாது. அது அவரால் மட்டுமே செய்யக்கூடிய தனிப்பட்ட அர்ப்பணிப்பு. அவனுடைய மனைவி அவனுக்காக அதைச் செய்ய முடியாது. அவனுடைய பெற்றோர் அவனுக்காக அதைச் செய்ய முடியாது. அவனுடைய பிள்ளைகள் அவனுக்காக அதைச் செய்ய முடியாது.


உண்மையான விசுவாசம் இன்னும் தனது சொந்த பாவ வழிகளில் அமர்ந்திருக்காது. இந்த விசுவாசம் செயலற்ற நிலையில் உட்காருவதில்லை. விசுவாசம் வெறுமனே இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அளிக்கும் இரட்சிப்பைப் பற்றியும் மட்டுமே சிந்திப்பதில்லை.


விசுவாசம் கிறிஸ்துவைப் பற்றிய மிதமான மத உணர்வுகளை மட்டும் கொண்டிருப்பதில்லை. உண்மையான விசுவாசம் தீவிரமாக கிறிஸ்துவிடம் சென்று அவரைத் தழுவிக் கொள்ளும். அது இயேசுவை நோக்கிப் பார்த்து அவருடைய வார்த்தையைப் பெற்றுக் கொள்கிறது.


விசுவாசத்தில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

  • தேவனுடைய வார்த்தையில் இயேசு கிறிஸ்து முன்வைக்கப்படுவதால் விசுவாசம் அவர் மீது வைக்கப்பட வேண்டும். விசுவாசத்தைக் காக்கும் ஒரே வழியாக இயேசு கிறிஸ்துவே இருக்க வேண்டும்.

  • ஒரு மத சடங்கு அல்லது ஒழுக்க நடவடிக்கைகளின் மீது வைக்கும் நம்பிக்கை, தவறான விசுவாசம்.

  • நாம் முழுமையாக இயேசு கிறிஸ்துவின் மீது மட்டுமே விசுவாசம் வைக்க வேண்டும்.

  • இயேசுவுக்கு அப்பால் எதன் மீது வைக்கும் நம்பிக்கையும் தேவனின் கோபத்தை வரவழைக்கும்.

விசுவாசத்தின் கிரியைகள்

கீழ்ப்படிதல்

“அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும்,தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார்.” ரோமர் 1:6,7

  • இந்த வசனத்தில் பவுல் விசுவாசத்தின் செயல்களை விவரிக்கிறார். “அவருடைய நாமத்தினிமித்தம் விசுவாசத்தினால் வரும் கீழ்ப்படிதலின்” அவசியத்தை பவுல் விவரிக்கிறார்.

  • விசுவாசத்தினால் வரும் கீழ்ப்படிதல்’ என்பது இதன் அர்த்தம்.வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மெய்யான விசுவாசம் எப்போதும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியும்படி செய்கிறது. எளிமையாகச் சொன்னால், கீழ்ப்படிதல் உண்மையான விசுவாசத்திலிருந்து வருகிறது. மாறாக, கீழ்ப்படியாமை என்பது அவிசுவாசத்தின் விளைவு.

“ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே.அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.” யாக்கோபு 2:24,26

  • யாக்கோபு 2:24 இல் பவுல் இவ்வாறு எழுதுகிறார், விசுவாசம் மட்டும் இருந்தால் போதாது, விசுவாசம் என்பது தேவ நீதிக்கு நம்மை அழைத்துச் செல்லும் நமது செயல்களின் ஒரு பகுதி மட்டுமே. கிரியைகள் இல்லாத விசுவாசம் வெறுமையானது "கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது". உண்மையான விசுவாசம் என்பது கீழ்ப்படிதலுள்ள விசுவாசம். இயேசுகிறிஸ்துவை உண்மையாக விசுவாசிக்கிற எவரும் அவருடைய அதிகாரத்தின் கீழ் வந்து அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பர்.

  • ஒருவரது மனம், இருதயம் மற்றும் ஆத்துமா இம்மூன்றும் தேவனுடைய வார்த்தையை விசுவாசித்து கீழ்ப்படியத் தொடங்கும் போது, அவர் தேவ நீதியைப் பெறுகிறார். அவர் தேவனின் தரத்திற்கு முழுமையானவராக இல்லாவிட்டாலும், தேவன் அவரை ஏற்றுக்கொண்டு தமது கோபத்திற்கு அவரை விலக்கி அழைத்துச் செல்கிறார்.

விசுவாசத்தின் பலன்கள்

“இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேதிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” நீதிமொழிகள் 27:17 என்று வேதம் கூறுகிறது. இரண்டு வாள்கள் ஒன்றோடொன்று உராய்ந்து, அவற்றின் வெட்டுகிற விளிம்பைக் கூர்மைப்படுத்துகின்றன. தான் எதிர்பார்த்திருந்த ரோமாபுரி பயணத்தில் பவுல் விரும்பியது இதுதான்.

  • ஒருவருக்கொருவரான நம் பரஸ்பர ஐக்கியத்தில் நம் இருதயத்தின் தீப்பிழம்புகளைத் தூண்டுவதற்கு நம் அனைவருக்கும் மற்ற விசுவாசிகள் தேவை. இது பிற விசுவாசிகளிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதுவே விசுவாசத்தின் வல்லமை.

  • விசுவாசத்தின் மூலம் கீழ்ப்படியும் போது , நாம் மாற்றப்படுகிறோம், இந்த செயல் இயேசு கிறிஸ்துவின் வல்லமையை நம் மூலம் காணும்படியாக மற்றவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். நம்மிடம் இருந்து மிகவும் வித்தியாசமான மனிதன் வெளிப்பட்டு, நம் பழையவை மறைந்து போகின்றன. இது கிறிஸ்துவிடம் வருவதற்கும், தேவ நீதியை அனுபவிப்பதற்கும் மற்றவர்களுக்கு முன்பாக சாட்சியாக செயல்படுகிறது.

விசுவாசம் - ஆதி முதல் அந்தம் வரை

ஆங்கில மொழிபெயர்ப்பில் 'For in the gospel the righteousness of God is revealed—a righteousness that is by faith from first to last, just as it is written: “The righteous will live by faith.” (Romans 1:17) என்று எழுதப்பட்டுள்ளது.


  • "ஆதி முதல் அந்தம் வரை" (from first to last”) என்பது நமது கிறிஸ்தவ வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் விசுவாசத்தோடு வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

  • இது நமது சபை வாழ்க்கையை மட்டுமல்ல, நமது வணிக வாழ்க்கையையும், குடும்ப வாழ்க்கையையும், பொழுதுபோக்கு வாழ்க்கையையும் குறிக்கிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு அங்கமும் விசுவாசத்தோடு வாழப்பட வேண்டும்.

  • நாம் சுயசார்புடையவர்களாக இருக்க வேண்டியதில்லை. நம் யாருடைய வாழ்வும் சுயசார்பானதாக இருக்கக்கூடாது. நம் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நாம் எப்போதும் தேவனுடன் இணைந்திருக்க வேண்டும்.

  • அவருடனான நமது உறவுக்கு மட்டுமல்லாது , பூமியில் உள்ள நமது எல்லா உறவுகளிலும் நமக்கு தேவன் தேவை. நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் விசுவாசத்தோடு வாழ வேண்டும்.

விசுவாசத்தோடு வாழ்வோம்

“விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்” என்று எழுதப்பட்டு இருக்கிறது.

  • விசுவாசத்தோடு வாழ்வது தேவனின் வரம். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கு தேவன் இந்த உன்னதமான ஆற்றலைக் கொடுக்கும்போது,அது ஒரு உறுதியான நம்பிக்கையாகும், அது ஒருபோதும் விசுவாசிப்பதை நிறுத்தாது, அது சில நேரங்களில் பலவீனமாகலாம் , சில நேரங்களில் மெதுவாக இருக்கலாம், ஆனால் அது கிறிஸ்துவை விசுவாசிப்பதை ஒரு போதும் நிறுத்தாது.

  • விசுவாசம் நித்தியம் வரை நிலைத்திருக்கும்.

    • இந்த உண்மை முக்கியமானது. ஏனெனில், எழுதப்பட்ட ஜெபத்தை திரும்பத் திரும்பச் செய்வது, தேவாலய நடைபாதையில் நடப்பது,கையை உயர்த்துவது அல்லது பாடகர் குழுவில் சேர்வது, வெறுமனே இவையெல்லாம் செய்து விட்டு, தாம் தேவனின் ராஜ்யத்தில் இருப்பதாகக் கருதுவது விசுவாசம் அல்ல.

    • அவர்கள் விசுவாசத்தோடு முன்னேறி வாழத் தவறினால், அது உண்மையான, இரட்சிக்கும் விசுவாசத்தின் அடையாளம் அல்ல. அப்படிப்பட்ட ஒருவர் உலக வழமைக்குத் திரும்பி, முன்பு செய்ததைப் போலவே பாவத்தில் வாழ்ந்தால், அது உண்மையான இரட்சிக்கும் விசுவாசத்தின் அடையாளம் அல்ல. உண்மையான விசுவாசம் என்றைக்கும் நிலைத்திருக்கும்.

    • அது தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளும் தவறான நம்பிக்கை. உண்மையான மனமாற்றம் உண்மையான விசுவாசத்தில் தொடங்குகிறது, மேலும் நாளுக்கு நாள் அது விசுவாச நடையில், விசுவாச வாழ்வில் தொடர்கிறது.

விசுவாசத்தின் மூலம் தேவ நீதியை பெற்றுக் கொள்வதற்கு சுவிசேஷத்தையும் இயேசுவையும் ஏற்றுக் கொள்ள உறுதி கொள்ளுங்கள். தேவனின் கோபத்தைத் தவிர்க்க வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஆதி முதல் அந்தம் வரை விசுவாசத்தோடு வாழுங்கள். தேவ கோபம் என்ன செய்யும் என்று சிலருக்குத் தெரியாது. சிலர் அதை இலேசாக எடுத்துக் கொள்கின்றனர்.


இது குறித்து ரோமர் 1:18-31 - இல் பவுல் எழுதியிருப்பது மிகவும் பயங்கரமாய் இருக்கிறது. இந்தச் செய்தியின் தொடர்ச்சியாக அடுத்த வாரம் இதைப் பற்றிய விரிவான பதிவை வெளியிடுகிறேன்.

293 views0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page