மற்றவர்களுடனான அன்றாட தொடர்புகளில், நமது வார்த்தைகள் அளவற்ற வல்லமையைக் கொண்டுள்ளன. அவை இணைப்புப் பாலங்களை உருவாக்கலாம், உறவுகளை வளர்க்கலாம் மற்றும் நேர்மறையை பரப்பலாம். இருப்பினும், வார்த்தைகள் அழிக்கலாம், காயப்படுத்தலாம் மற்றும் பிளவுகளை உருவாக்கலாம். அவதூறு என்பது வார்த்தைகளின் மிகவும் தீங்கு விளைவிக்கும் பயன்பாடு. இது மற்றவர்களைப் பற்றி தவறான தீங்கிழைக்கும் கூற்றுகளை உள்ளடக்கியது. அவதூறு குறி வைக்கப்படும் நபரை காயப்படுத்துவது மட்டுமல்லாமல், சொல்பவரின் நேர்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், உறவுகள், சமூகங்கள் மற்றும் சபைகளின் கட்டமைப்பை பாதிக்கிறது.
அவதூறு (கோள் சொல்லுதல்) என்றால் என்ன?
கோள் சொல்லுதல் என்றால் என்ன? ஒருவர் இல்லாத சமயத்தில் அவரைப் பற்றி தவறாகப் பேசுவது அவதூறு அல்லது கோள் சொல்லுதல் அல்லது புறங்கூறுதல் என்று அழைக்கப்படுகிறது. அவதூறு செய்யும் செயல் யாருக்கும் உதவாது. இந்த பழக்கத்தை தேவன் வெறுக்கிறார். அவர் பிரமாணத்தில் கட்டளையிட்டுள்ளார். உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர். லேவியராகமம் 19 :16
அவதூறு எதிர்மறையான உணர்வு, தவறான குற்றச்சாட்டுகளினால் மற்றவரின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது அல்லது பாவத்திற்கு வழிவகுக்கும் தீய நடத்தையை ஊக்குவிக்கிறது.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் புறம் பேசுவதை வெறுக்கிறார். "எல்லாவற்றுக்கும் மேலாக, நான் உண்மையை தானே சொல்கிறேன்ˮ என்று நம்மை நாமே நியாயப்படுத்திக் கொள்ளலாம், தேவன் நம் உள்ளார்ந்த பாவங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவது போன்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் எப்படி உணருவீர்கள்? அது போல் தான் அவதூறு கூறுவதும்.
இந்த குணாதிசயத்தின் (அவதூறு) வேர் சாத்தானிடமிருந்து வருகிறது.
அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர் மேல் குற்றஞ்சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத்தள்ளப்பட்டுப்போனான். வெளிப்படுத்தின விசேஷம் 12:10
இங்கே சாத்தான் “நம்முடைய சகோதரர் மேல் குற்றம் சாட்டுபவன்” என்று அழைக்கப்படுகிறான்.
சாத்தான், "உங்கள் பிள்ளை அங்கே எப்படி நடந்து கொள்கிறது என்பதைப் பாருங்கள்! அங்கே எப்படிப் பேசுகிறது என்பதைப் பாருங்கள்!" என்று இரவும் பகலும் தேவனுக்கு முன்பாக நம்மைக் குற்றம் சாட்டுகிறான். பிசாசு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை கவனமாகக் கவனித்து, அதன் மூலம் தேவனுக்கு முன்பாக நம்மைக் குற்றம் சாட்டுவதற்கு ஏராளமான விஷயங்களைப் பெறுகிறான்.
சாத்தான் பழைய பாம்பு என்றும் பிசாசு என்றும் அழைக்கப்படுகிறான். கிரேக்க மொழியில் 'பிசாசு' என்பது 'diabolos' என்று சொல்லப்படுகிறது. இதிலிருந்து நாம் 'diabolical' என்ற ஆங்கில வார்த்தையைப் பெறுகிறோம். ஆனால் உண்மையில் கிரேக்க மொழியில் 'diabolos' என்ற வார்த்தைக்கு "அவதூறு செய்பவர்" அல்லது "புறங்கூறுபவர்" என்று பொருள். மேலும் இது 1 தீமோத்தேயு 3:11 இல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்க வேண்டும். 1 தீமோத்தேயு 3:11
இதன் பொருள் என்னவென்றால், பெண்கள் பிறரை அவதூறு செய்கிற, அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற பிசாசுகள் போல் இருக்கக்கூடாது.
அவதூறு பேசக் கூடாது என்ற ஆலோசனை பெண்களுக்கு மட்டுமானது அல்ல, நிச்சயமாக, ஆண்களும் அவதூறு செய்பவர்களாக இருக்கக்கூடாது. ஏனெனில், கர்த்தர் வந்து நம்மை நியாயந்தீர்க்கும் கடைசி நாட்களில் நாம் வாழ்கிறோம். இது 2 தீமோத்தேயு 3:1-5இல் கூறப்பட்டுள்ளது. மேலும், கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
2 தீமோத்தேயு 3:4 இல் எழுதப்பட்டதை எளிமையாக சொல்வதென்றால், "கடைசி நாட்களில், கடினமான காலங்கள் வரும், மனுஷர்கள் பிசாசுகள் போல இருப்பார்கள்". மேலும், தீத்து 2:3 இல் “முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும்,” என்று சொல்லப்பட்டுள்ளது.
எனவே ஆண்களும் பெண்களும் பிறரை அவதூறு செய்யும் "பிசாசுகளாக" மாறாமல் இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள்!
ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்துவின் பெயரைப் பெறுவது போல, அவதூறு செய்பவர் சாத்தானின் பெயரைப் பெறுகிறார்.
தேவன் யோபுவை ஆசீர்வதித்ததால்தான் யோபு தேவனுக்கு ஊழியம் செய்தார் என்று சாத்தான் தேவனுக்கு முன்பாக யோபு மீது குற்றம் சாட்டினான். சாத்தான் யோபுவையும் அவரது குணாதிசயங்களையும் குறித்து எவ்வாறு குற்றம் சாட்டினான் என்பதைப் புரிந்துகொள்ள யோபு 1−2 அதிகாரங்களைப் படியுங்கள்.
புறங்கூறுபவர்களை தேவன் வெறுக்கிறார் (மிரியம், ஆரோன் வாழ்க்கை உதாரணம்).
எண்ணாகமத்தில் மிரியாம் / ஆரோன் மற்றும் மோசே பற்றிய ஒரு சம்பவத்தைப் படிக்கிறோம். அங்கு புறங்கூறிய நிகழ்வுகள் நடந்த போது,இதை தேவன் எவ்வாறு கையாண்டு மோசேவைப் பாதுகாத்தார் என்று காணலாம்.
எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரே, எங்களைகொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். எண்ணாகமம் 12:1-2
இஸ்ரவேலர்களை தாம் வாக்குப்பண்ணிய தேசத்திற்கு அழைத்துச் செல்ல தேவன் மோசேயைத் தேர்ந்தெடுத்தார். ஆரோன் அவரது உதவியாளராகவும் பேசுவதற்கு பிரதிநிதியாகவும் இருந்தார்.
மிரியாம் ஆரோனின் சகோதரி. வேதத்தில் தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்பட்ட பத்து பெண்களில் மிரியாமும் ஒருவர். யாத்திராகமம் 15:20
நீங்கள் தலைமைப் பதவியில் இருந்தால், உங்கள் சொந்த குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் விமர்சனத்தை எதிர்பார்க்கலாம். அதுதான் இங்கே நடந்தது, மோசே தலைமைப் பொறுப்பில் இருந்தார், அவர் மிரியாம் மற்றும் ஆரோனால் விமர்சிக்கப்பட்டார்.
மிரியாமும் ஆரோனும் மோசேயின் தலைமையைப் பார்த்து பொறாமை கொண்டனர். அதனால், அவரை விமர்சிக்க அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தை - அவரது திருமணத்தைப் பயன்படுத்துகின்றனர்.
மோசேக்கு எதிரான புகார் இரண்டு வகையாக இருந்தது.
முதலாவது, ஒரு கேள்விக்குரிய செயலைச் செய்ததாகக் கூறுவதன் மூலம், மோசேயை இழிவுபடுத்துவதற்காக பதிவு செய்யப்பட்டது: எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம் பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: எண்ணாகமம் 12:1. அவரது முதல் மனைவி சிப்போராள் மரித்த பிறகு மோசே இந்த ஸ்திரீயை விவாகம் செய்திருக்கலாம். இந்த ஸ்திரீ எகிப்திலிருந்து இஸ்ரவேலரோடு சேர்த்து காப்பாற்றப்பட்ட அந்நியர்களில் ஒருவராகவோ அல்லது அரேபியாவில் வசிக்கும் எத்தியோப்பியரின் மகளாகவோ இருந்திருக்கலாம்.
புகாரின் இரண்டாம் பகுதி, மோசே மட்டுமே தேவனின் ஒரே பிரதிநிதி அல்ல என்று பரிந்துரைத்து மிரியாம் மற்றும் ஆரோனை மேம்படுத்த பதிவு செய்யப்பட்டது. கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரே, எங்களைகொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். எண்ணாகமம் 12:2
மிரியாமும் ஆரோனும் என்ன செய்தார்கள்? - அவர்கள் கூட்டு சேர்ந்து மோசேக்கு எதிராகப் பேசுவதற்கு ஒப்புக்கொண்டனர். மிரியாம், ஆரோன் இருவரும் தீர்க்கதரிசிகள், அவர்கள் தேவனின் சட்டத்தை அறிந்திருந்தனர். அவர்கள் மோசேக்கு எதிராக அவதூறு கூறினார்கள் / புறங்கூறினார்கள். அவர்கள் இருவரும் ஆவிக்குரிய உணர்வை இழந்தனர்.
தேவன் தம்முடைய நீதியுள்ள மக்களை எவ்வாறு கையாண்டு அவர்களைப் பாதுகாக்கிறார் என்பது கவனிக்க வேண்டிய ஒரு சுவாரஸ்யமான விஷயம். " ... கர்த்தர் அதைக் கேட்டார்". எண்ணாகமம் 12:2
தேவன் அவர்கள் பேசுவதைக் கேட்கிறார், மோசே இந்த வார்த்தைகளைக் கேட்கவில்லை. தேவன் அதைக் கேட்கும் போது அவர் நீதிமான்களுக்காக யுத்தம் செய்கிறார். மோசே தேவனோடு நேருக்கு நேர் பேசியதை நாம் அறிவோம்.
புறங்கூறுதலை தேவன் எப்படி கையாண்டார்?
தேவன் மோசே, ஆரோன், மிரியாம் மூவரையும் அழைத்தார். பின்பு, ஆரோனையும் மிரியாமையும் தனியே பிரித்தார்.
சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்று பேரும் ஆசரிப்புக்கூடாரத்துக்குப் புறப்பட்டு வாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள். கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள். எண்ணாகமம் 12:4-5
தேவன் மோசேக்காக ஆரோன் மற்றும் மிரியாமுடன் வாதாடினார். அவர் வேறு எந்த தீர்க்கதரிசியிடமும் பேசாமல் ஏன் மோசேயிடம் மட்டும் பேச விரும்பினார் என்று விளக்கினார்.
அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற் போனதென்ன என்றார். எண்ணாகமம் 12:6-8
மோசே ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பதை தேவன் நியாயப்படுத்தினார்.
தேவனின் எல்லா வேலைகளிலும் மோசே உண்மையுள்ளவராக இருந்தார் - என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். எண்ணாகமம் 12:7
பூமியிலுள்ள யாவரையும் விட மோசே சாந்தகுணமுள்ளவராயிருந்தார் - மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். எண்ணாகமம் 12:3
தேவன் மற்ற தீர்க்கதரிசிகளை எப்படி நடத்தினார், மோசேயை எப்படி நடத்தினார் என்பதை விளக்கினார்.
இந்த அவதூறு மற்றும் புறங்கூறும் பாவத்திற்கு எதிராக தேவனின் கோபம் பற்றி எரிந்தது
கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான். எண்ணாகமம் 12:9-10
தேவனின் கோபம் அவர்கள் இருவர் மீதும் பற்றி எரிந்தது. அவரது கோபத்தினால் மிரியாம் குஷ்டரோகியானாள்.
மோசே அவளைக் குணப்படுத்தும்படி தேவனிடம் கெஞ்சினார். அவள் பாளயத்துக்குப் புறம்பே 7 நாட்கள் விலக்கி வைக்கப்பட்டாள், இது தேவனின் திட்டத்தை நோக்கிய அவர்களின் முழு பயணத்தையும் தாமதப்படுத்தியது - அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே. அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார். அப்படியே மிரியாம் ஏழு நாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கபட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள். எண்ணாகமம் 12:13-15
அவதூறு ஒரு பாவம், அது சாத்தானுக்கு இடம் கொடுக்கிறது.
ஒரு விசுவாசி ஏதேனும் அறியப்பட்ட பாவங்களை வளர்த்துக்கொண்டால், அவன் சாத்தானுக்கு இடம்கொடுக்கிறான். பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். எபேசியர் 4:27. இடம் கொடுப்பது என்பது, சாத்தானுக்கு உள்ளே நுழைவதற்கும், பெரிய பாவங்களுக்கு வழி வகுக்கவும் வாய்ப்பளிக்கிறது.
கெட்டவார்த்தை அல்லது இழிவான பேச்சு
கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். எபேசியர் 4:29
கெட்ட வார்த்தை என்றால் என்ன? ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி தவறாகப் பேசுவதும், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி கிசுகிசுப்பதும் ஆகும். அவதூறாகப் பேச வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசுவது. நாம் பேசும்போது, பாதி உண்மையான காரியங்கள் பொய்யாக மாறி, அந்தப் பொய் மற்றவர் கேட்கும்போது அவர்களைக் காயப்படுத்துகிறது. பதிலுக்கு ஒருவருக்கொருவர் கசப்பையும் கோபத்தையும் ஆத்திரத்தையும் உருவாக்குகிறது. இவற்றை தான் ஆரோக்கியமற்ற பேச்சுக்கள் உருவாக்குகிறது.
மற்றொரு வகையான ஆரோக்கியமற்ற பேச்சு - சில சமயங்களில் நாம் கோபம், வெறுப்பு மற்றும் கசப்பு ஆகியவற்றைத் தூண்டுகிற கீழான நகைச்சுவையை பேச முனைகிறோம். அடுத்த முறை நீங்கள் சமூக ஊடகங்களில் அந்த வகையான நகைச்சுவையைப் பார்க்கும்போது அல்லது நீங்கள் அதில் பங்கெடுக்கும் போது, அதை ஆராய்ந்து பார்த்து உங்களிடம் அந்த நடத்தை இருக்கிறதா என்று கவனியுங்கள்.
நாம் போதுமான அளவு வேலை செய்யாத போது / அதிக நேரம் யாதொரு வேலையும் செய்யாமல் இருக்கும் போது, வேலையில்லாமல் இருக்கும் போது தேவையற்ற பேச்சுக்கள் உண்டாகிறது. இது, பிறர் விஷயங்களில் தலையிடுவது ~ வதந்தி ~ தேவையற்ற பேச்சுகளுக்கு வழிவகுக்கிறது. இதை சரிபார்த்து, இதில் இருந்து விடுபட தேவனைத் தேடுங்கள். உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 2 தெசலோனிக்கேயர் 3:11
நம் நாவு தான் இந்த “ஆரோக்கியமற்ற பேச்சுக்கு”ஆதாரமாக இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தேவனைத் தவிர வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. நாவு சரீரத்தைக் கெடுத்து, மெதுவாக சாத்தானுக்கு இடம் கொடுத்து நம் இருதயத்தைக் கறைப்படுத்துகிறது. நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. யாக்கோபு 3:6,9-10
அவதூறு / புறங்கூறுதல்
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. எபேசியர் 4:31
தேவாலயத்தின் வயதான பெண்கள், அவதூறு பண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களுமாக இருக்க வேண்டும் என்று பவுல் அறிவுரை கூறுகிறார். அவர் இதைப் பற்றி 1 தீமோத்தேயு 3:11 இல் கூறுகிறார். அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறு பண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்க வேண்டும்.
விசுவாசிகள் வதந்திகளையும் அவதூறுகளையும் பகிர்ந்து கொள்ளும்போது அவர்கள் சாத்தானுக்கு வேலை செய்கிறார்கள், அவனுக்கு இடம் கொடுத்து அவனுடைய வேலையை செய்கிறார்கள்.
வாள் ஒருவரை காயப்படுத்துவது போல அல்லது காயத்தில் குத்தப்பட்ட அம்பு போல அவதூறு ஒருவரை நெருக்கி காயப்படுத்தும். அவதூற்றினால் உண்டாகிற சேதம் கொடியது.
பல பெரிய ஆவிக்குரிய தலைவர்கள் தங்கள் எதிரிகளால் அவதூறு செய்யப்படுகிறார்கள் (ஒவ்வொரு சுவிசேஷத் தலைவர்களும் சிலரால் சமூக ஊடகங்களில் அவதூறு செய்யப்படுகிறார்கள்).
சுவிசேஷகர்களின் குறைகளை அம்பலப்படுத்தி அவதூறு செய்வதன் மூலம் கர்த்தருடைய வேலையைச் செய்வதாக சில விசுவாசிகள் காட்டிக் கொள்ளுகிறார்கள். இப்படி கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் அவதூறாகப் பேசுவதைக் கண்டு சாத்தான் சந்தோஷப்படுகிறான்.
அவதூறு செய்யும் பழக்கம் தேவனோடு நடப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அது யாருக்கும் ஏற்படலாம். இந்தப் பாவத்தைப் பயன்படுத்தி தேவனோடு நடக்கும் விசுவாசிகளை அவரிடமிருந்து பிரிக்க சாத்தான் குறிவைக்கிறான்.
நீங்களும் நானும் பிறருக்காக ஜெபித்து, அவர்களது பாவத்தை மறைக்க முற்படுவதற்குப் பதிலாக அவர்களை அவதூறு செய்யும்போது, நாம் பிசாசுக்காக வேலை செய்கிறோம்.
நாம் ஏற்றுக் கொண்டு, ஒப்புக் கொள்ள மறுக்கும் எந்தவொரு பாவமும் சாத்தான் மேலும் தாக்குவதற்கு இடம் கொடுக்கும்.
அன்பின்மையே புறங்கூறுதலுக்கு அடிப்படைக் காரணம். அன்பு அநியாயத்தில் சந்தோஷப்படாது - அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 1 கொரிந்தியர் 13:6
நாம் யாரையாவது குறித்து அவதூறு பேசும்போது, நாம் பேசுவதை தேவன் தாம் முதலில் கேட்கிறார் என்பதை நாம் உணர்வதில்லை. மோசே / மிரியாம் & ஆரோன் காரியத்தில் அதையே பார்த்தோம்.
புறங்கூறுவது பரிசுத்த ஆவியை துக்கப்படுத்துகிறது, ஏனெனில் அது அவருடைய இயல்புக்கு எதிரானது - கெட்டவார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. எபேசியர் 4:29-31
அவதூறு செய்வதில் இன்பம் காண்பவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றம் காண்பதில்லை.
புறங்கூறுவது திருச்சபையின் வளர்ச்சியையும் தடுக்கிறது, பவுல் இதைப் பற்றி கொரிந்து தேவாலயத்திற்கு எழுதுகிறார். ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்; மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக் குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோ வென்றும் பயந்திருக்கிறேன். 2 கொரிந்தியர் 12:20-21
அந்திக்கிறிஸ்துவின் இறுதி நாட்களில், அவதூறு என்ற பாவம் மிகவும் ஆபத்தானதாக மாறும். அந்திக்கிறிஸ்துவின் ஆவி அவதூறில் ஈடுபடுபவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி, தேவனை நிந்திக்கவும், அவருக்கு எதிராக பேசவும் வழிவகுக்கும். இந்தப் பாவத்தை இலகுவாக எடுத்துக் கொள்ளாதீர்கள்; இது தேவனிடமிருந்து மக்களைத் திருப்பக்கூடிய ஒரு பெரிய குற்றம். தேவன் அவதூறுகளை வெறுக்கிறார். அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. வெளிப்படுத்தின விசேஷம் 13:6
அவதூறுகளை எப்படி சமாளிப்பது?
நீங்கள் அவதூறு கூறும்படி தூண்டப்படும்போது, இந்தக் கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:
இது உண்மையா?
இது அவசியமா?
இது அன்பானதா?
புறங்கூறுபவர் உங்களிடம் வரும்போது, அவரிடம் இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
அது எனக்கு ஏதாவது நன்மை செய்யுமா?
அது உங்களுக்கு ஏதாவது நன்மை செய்யுமா?
அது அந்த நபருக்கு ஏதாவது நன்மை செய்யுமா?
உங்களைக் குறித்து புறங்கூறப்பட்டால் அல்லது அவதூறு செய்யப்பட்டால்,
எதிர்த்து நிற்காதீர்கள்!
காயப்படாதீர்கள்!
ஆனால் ஆசீர்வதியுங்கள்!
அவர்களுக்காக ஜெபியுங்கள்!
Amen