"அலங்கார வாசல்" என்றால் என்ன? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதுதான் அப்போஸ்தலர்கள் (இயேசுவின் சீடர்கள்) முதன் முதலில் அற்புதம் செய்த இடம். அந்த சீடர்களிடம் இருந்த பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்தவர்களாகிய நாம் இயேசுவைப் பின்பற்றும்படிக்கு, கிறிஸ்தவ அஸ்திவாரத்தை எவ்வாறு கட்டினார் என்பதைக் குறித்து நாம் இந்தப் பதிவில் பார்க்கலாம். இந்த நிகழ்வில் நமது ஆவிக்குரிய முதிர்ச்சிக்கு உதவக்கூடிய நிறைய விஷயங்கள் உள்ளன. அதற்கு முன்பாக , அந்த நிகழ்வு மற்றும் அதன் சூழலைத் தெரிந்து கொண்டால் இந்த பதிவை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். அதன் பிறகு, தீர்க்கதரிசிகளுக்கு சொல்லப்பட்டதை நிறைவேற்றும்படியாக அவர் சீடர்களுக்கும் அநேக ஜனங்களுக்கும் முன்பாகத் தோன்றினார். இறுதியாக, அவர் தமது சீடர்களுக்கு ஒரு "பெரிய கட்டளையை" வாக்குறுதி அளித்து பரலோகத்திற்கு ஏறினார் (மத்தேயு 28:16-20). இதன் தொடர்ச்சி அப்போஸ்தலர் 1:1-2,4-5 இல் உள்ளது.
“பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்து கொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,” மத்தேயு 28:16-19
தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியினாலே கட்டளையிட்டபின்பு,அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். அப்போஸ்தலர் 1:1-2
அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். அப்போஸ்தலர் 1:4-5
அப்போஸ்தலர் 1:5 இல் இயேசு வாக்களித்தபடி, சீடர்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெற்றார்கள். இது "பெந்தெகொஸ்தே நாள்" என்று அழைக்கப்பட்டது (அப் 2:4). பரிசுத்த ஆவியில் ஞானஸ்நானம் பெற்ற அனுபவம் பிரமிப்பு மற்றும் குழப்பமாக இருந்தது. (அப் 2:7,12)
4.அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். 7.எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 12.எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
அப்போஸ்தலர் 2:4,7,12
பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்ற பிறகு, பேதுருவும், யோவானும் பிற்பகல் 3:00 மணியளவில் அலங்கார வாசல் என்று சொல்லப்படுகிற தேவாலயத்திற்குச் சென்றார்கள். அவர்கள் ஆலயத்தின் வாசலில் பிறவியிலேயே சப்பாணியாய்ப் பிறந்த ஒருவன் பணத்திற்காக பிச்சை எடுப்பதைக் கண்டார்கள். அப் 3:6-9 வசனங்களில், அவர்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அந்த மனிதனை நடக்கச் செய்தார்கள் என்று காண்கிறோம். இயேசு எப்படி அற்புதம் செய்தாரோ அதே போன்று அவர்களும் செய்தார்கள். இது பரிசுத்த ஆவியின் மூலமாக சீடர்கள் செய்த முதல் அற்புதமாகும்.
‘அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி, வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன் கொண்டது.அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.அவன் நடக்கிறதையும், தேவனைத்துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:’
அப்போஸ்தலர் 3:6-9
பரிசுத்த ஆவியானவர் செய்த இந்த அற்புதத்திற்குப் பிறகு நான்கு மாற்றங்கள் நிகழ்ந்தன. அதே பரிசுத்த ஆவியானவர் செயலில் இருக்கிறார் என்பதையும், அப்போஸ்தலர்களுடன் அவர் செயலாற்றியது போன்றே நம்மையும் அதே போன்ற செயல்களையும், இன்னும் வல்லமையான காரியங்களையும் செய்ய வைக்க முடியும் என்பதையும் இது நமக்கு உறுதிப்படுத்துகிறது.
முடவனிடத்தில் நடந்த மாற்றம்
“அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக் கொண்டு, அவர்களுடனே கூட தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:”
அப்போஸ்தலர் 3:8-9
அந்த முடவன் பரிசுத்த ஆவியானவரால் குணமடைந்தபோது அவனது மகிழ்ச்சியை அடக்க முடியவில்லை. அவன் "நடந்து, குதித்து" சென்றான் என்று படிக்கிறோம். இது உண்மை, பொய்யில்லை என்பதை மற்றவர்களுக்குக் காட்டும்படி அவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.
அவன் தேவனைத் (‘நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு’) துதித்தான். அவன் பேதுருவையோ யோவானையோத் துதிக்கவில்லை. இதுவே மாற்றத்தின் வல்லமை. அவன் இயேசு செய்த அற்புதங்களுக்காக அவரைத் துதித்தான்.
அவன் துதிப்பதையும் , நடக்கிறதையும் மக்கள் கண்ட போது அவர்களும் தேவனைத் துதித்தார்கள். ‘அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு’
“பிரமிப்பு” – ‘அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு:தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக் குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.’ அப்போஸ்தலர் 3:9-10. பரிசுத்த ஆவியின் அற்புதத்தின் அடையாளங்களை அந்த மனிதனிடம் கண்டு பிரமித்தார்கள். அதே மாதிரியான "அற்புதம் மற்றும் பிரமிப்பு" அனுபவத்தைத்தான் "பெந்தெகொஸ்தே நாள்" அன்று ஜனங்கள் அனுபவித்தனர்.
இந்த அதிசயம் எல்லா இடத்திற்கும் பரவி, ஊரெங்கும் அந்த மனிதனைப் பற்றிய பேச்சாகவே இருந்தது. “சாலொமோன் மண்டபம்" என்னப்பட்ட மண்டபத்திலே அவனைப் பார்க்க மக்கள் பிரமிப்போடு கூடியதை நாம் வாசிக்கிறோம்.
கூட்டத்தில் நடந்த மாற்றம்
இந்த அதிசயத்தின் விளைவாக அந்த மனிதனைக் காண அநேக ஜனங்கள் கூடியதால், அந்தக் கூட்டத்திலும் மாற்றம் ஏற்பட்டது.
யோவானும், பேதுருவும், இயேசுவும் இதே இடத்தை பல முறை கடந்து சென்றிருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இயேசு இந்த மனிதனை அவர் கடந்து செல்லும் போது பார்த்திருப்பார் என்று நம்புகிறேன். அது குறித்த நேரம் அல்ல என்பதால் அவர் அதிசயம் எதுவும் செய்யவில்லை. சரியான, குறித்த நேரத்தில் அற்புதம் செய்ய அவர் தமது சீடர்களைப் பயன்படுத்தினார். இதைப் பற்றி தியானிக்கும்போது நாம் கற்றுக்கொள்ள சில காரியங்கள் உள்ளன.
பேதுரு , யோவான் மேலும் மற்ற சீடர்கள் இதற்கு முன்பாக அற்புதம் செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. இதைப் பற்றி மத்தேயு 17:14-16 ல் படித்தோம்.
‘ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான்.அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான்’. மத்தேயு 17:15-16
அதே சீடர்கள் இப்போது இயேசுவோடு இல்லை, ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் பெற்று பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அற்புதத்தை நிகழ்த்தினார்கள்.
யோவானும், பேதுருவும் அற்புதத்தைக் கண்டு வியந்த மக்களைப் பார்த்து,தேவன் மீது வைத்துள்ள விசுவாசத்தினாலேயே அவனைக் குணப்படுத்தியதாகக் கூறினார்கள். இந்த அற்புதத்திற்கு அவர்கள் எந்தப் பெருமையையும் தேடிக் கொள்ளவில்லை.
முடமான மனிதன் எப்படி தான் பெற்றுக் கொண்ட அதிசயத்திற்காக தேவனைப் புகழ்ந்தானோ அதே போலத்தான் இதுவும் இருக்கிறது. இங்கே யோவானும் பேதுருவும் கூட தேவன் செய்த அற்புதத்திற்காக அவரைத் துதித்தார்கள்.
அவர்கள் அதோடு நிற்கவில்லை. அவர்கள் இந்த நேரத்தை (விசுவாசிக்கின்ற நேரம்) பிரசங்கிக்கவும், பலரை கிறிஸ்துவுக்குள் விசுவாசத்தில் கொண்டு வரவும் பயன்படுத்தினர்.
அவர்களின் பிரசங்கம் கண்டனத்தைக் கொண்டு வரவில்லை. மாறாக அவர்கள் ஜனங்களை அவர்களுடைய பாவங்களுக்காக தேவனிடம் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினர்.
12 சீடர்களாக இருந்த அவர்கள் (கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பிறகு அவர்கள் "அப்போஸ்தலர்களாக" ஆனார்கள்) இந்த அற்புதத்திற்குப் பிறகு "ஐயாயிரம் பேரை" கிறிஸ்தவர்களாகச் சேர்த்தனர். மேலும் இயேசுவை ஏற்றுக் கொண்ட ஜனங்கள் யாவரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டனர்.
இந்த "பிரமிப்பு" மூப்பர்கள் / நியாயாதிபதிகள் கவனத்தை ஈர்த்தது. இவர்கள் தான் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். இந்த ஈர்ப்பு யோவான் மற்றும் பேதுரு செய்த அதிசயத்திற்காக அவர்களை எதிர்க்கும்படித் திருப்பியது. மேலும் யாருடைய அதிகாரத்தில் இந்த அதிசயத்தை செய்தார்கள் என்று அவர்களை நோக்கி கேள்வி எழுப்பினர்.
சிறையில் தள்ளப்படும் அளவிற்கு, அவர்களுக்கு மிகுந்த எதிர்ப்பு இருந்தது.
மூப்பர்கள் / பிரதான ஆசாரியனிடத்தில் நடந்த மாற்றம்
அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
‘அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள்.’ அப்போஸ்தலர் 4:7
பிரபல அமெரிக்க இறையியலாளர் போயஸ் , இயேசுவைப் பின்பற்றுபவர்களை எதிர்க்கும் 11 வெவ்வேறு குழுக்கள் அல்லது தனிநபர்களை அப்போஸ்தலர் 4:1-6, பட்டியலிடுகிறது என்று குறிப்பிடுகிறார்.
குழுக்கள்: ஆசாரியர்கள் மற்றும் சதுசேயர்கள் (அப் 4:1); அதிகாரிகள், மூப்பர்கள், வேதபாரகர்கள் (அப் 4:5); மற்றும் பிரதான ஆசாரியரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் (அப் 4:6).
தனிநபர்கள்: ஆலயத் தலைவர் (அப் 4:1); பிரதான ஆசாரியரான அன்னா, காய்பா ,யோவான் மற்றும் அலெக்சாண்டர் (அப் 4:6).
அதேசமயம், பரிசுத்த ஆவி அவர்கள் தற்காத்துக் கொள்ளவும் , வேத பாரகர்களுக்கு முன்பாக ஒரு பிரசங்கம் செய்யவும் உதவினார்.
‘அப்பொழுது பேதுரு பரிசுத்த ஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே; பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக் குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால்,
உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது.
வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர்.அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை;நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்.’ அப்போஸ்தலர் 4:8-12
பரிசுத்த ஆவியின் பிரமிப்பு அவர்களை எதிர்த்த மக்களாலும் உணரப்பட்டது.
‘பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள்.’ அப்போஸ்தலர் 4:13
அவர்களுக்கு எதிரான ஜனங்கள் பரிசுத்த ஆவிக்கு எதிராகப் போராடியதால் அவர்களால் தற்காத்துக் கொள்ள முடியவில்லை.
‘சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு:’
அப்போஸ்தலர் 4:14-15
விசாரணைக்குப் பின் பேதுரு / யோவான் இல் நடந்த மாற்றம்
‘அவர்கள் விடுதலையாக்கப்பட்ட பின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டு தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர்.’ அப் 4:23-24
அவர்கள் தேவனுடைய செயல்களுக்காக அவரைத் துதித்தார்கள். மேலும், தைரியமாக வார்த்தையைப் பேசும்படி ஊழியக்காரர்களுக்காக ஜெபித்தனர்.
அவர்கள் ஜெபித்த போது அந்த இடம் அசைந்தது என்று வாசிக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் அவர்களை நிரப்பி அவர்களுக்கு தைரியத்தைத் தந்தார். மேலும், எல்லா விசுவாசிகளும் ஒரே இருதயமும் ஒரே மனமும் உடையவர்களாய் இருக்கும்படி மாற்றினார்.
‘அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள்.’ அப் 4:31
ஒரு பெரிய கட்டளை பேதுரு மற்றும் யோவானால் நிறைவேற்றப்பட்டது. ‘ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,’
மத்தேயு 28:19
பெரிய கட்டளை என்பது பேதுரு / யோவானுக்கு மட்டுமல்ல, இயேசு திரும்பும் நாள் வரை அது இன்னும் செயலில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதைத் தொடர வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.
இந்த நிகழ்விலிருந்து ஆவிக்குரிய பாடங்கள்
அதே பரிசுத்த ஆவியானவர் இன்றும் நம்மோடு நடந்து நம்மை வழிநடத்துகிறார். கல்வியறிவற்ற மனிதர்களான பேதுரு/யோவான் ஆகியோரை வேத பாரகர்களுக்கு எதிராகத் தங்களை தற்காத்துக் கொள்ளும்படி மாற்றும் போது , அதே பரிசுத்த ஆவியானவர் உங்களையும் என்னையும் நமது சூழ்நிலையின் அடிப்படையில் அதே போல் மாற்ற முடியும்.
விசுவாசம் மற்றும் மனந்திரும்புதல் ஆகிய எளிய செயல்கள் ஆயிரக்கணக்கான மக்களை பரிசுத்த ஆவியைப் பெறச் செய்தன. நாமும் தேவனிடமிருந்து இதை பெற வேண்டும் என்றால் அதுவே முதல் படியாகும்.
பரிசுத்த ஆவியானவர் செயல்படும் போது, பாஸ்டர் அல்லது ஜெப வீரர் அல்லது யாராக இருந்தாலும் அந்த நபர் எந்த ஒரு புகழ்ச்சியையும் தனக்கென்று எடுதுக் கொள்ள மாட்டார். அவர் எப்பொழுதும் தேவனுக்கே மகிமையைச் செலுத்துவார். அது தான் பரிசுத்த ஆவியின் உண்மையான அடையாளம்.
பரிசுத்த ஆவியைக் கொண்டு நீங்கள் என்ன வகையான வேலையைச் செய்ய வேண்டும் என்பதை இயேசு தீர்மானிக்கிறார். அதை எப்படிச் செய்ய முடியும் என்று கேள்வி கேட்கும் அதிகாரம் நம்மில் யாருக்கும் இல்லை.
நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும்போது எதிர்ப்பு இருக்கும். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு "தைரியத்தின்" ஆவியை தருவதால் நீங்கள் எதிரிக்கு பயப்பட மாட்டீர்கள்.
நீங்கள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருக்கும் போது உங்களால் அமைதியாக இருக்க முடியாது. மற்றவர்களால் பார்க்கப்படும் செயல்கள் இருக்கும். உங்கள் அனுபவத்தின் மகிழ்ச்சியை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவீர்கள். அவர்கள் பயனடைவார்கள். இது ஒரு பரவலான அனுபவமாக மாறும்.
அருமையான பதிவு...Fantastic post