அன்பற்றவர்களை நேசித்தல்
- Kirupakaran
- Mar 16
- 5 min read

வாழ்க்கையில் கடினமான விஷயங்களில் ஒன்று, கடினமானவர்களையும் அன்பற்றவர்களையும் நேசிப்பது. என்றாலும், சுவிசேஷங்களில் இயேசு விளக்கியது போல, நம்முடைய சத்துருக்களை நேசிக்க வேதம் நமக்குக் கற்பிக்கிறது.
பவுலின் போதனைகளிலிருந்து, நாம் ஏன் வெறுப்பு உணர்வுகளுடன் போராடுகிறோம், அவற்றை சமாளிக்க நாம் என்ன படிகளை எடுக்கலாம் என்பதைப் பற்றிய வேறுபட்ட கண்ணோட்டத்தைப் பெறுகிறோம்.
பவுல் ரோமர் 12:9 இல் இவ்வாறு எழுதுகிறார் : உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
ஆங்கிலத்தில் ஒரு மொழியாக்கத்தில், உண்மையான என்றும் இன்னொன்றில் மாயமற்றதாக என்றும் கூறப்பட்டுள்ளது.
மாய்மாலம் என்றால் என்ன? - நாம் உண்மையானதாக முன்வைக்கிற ஒன்று, ஆனால் அது உண்மையானது அல்ல. அது உண்மையானதாகத் தோன்றுகிறது, ஆனால் உண்மையானது அல்ல. இது தொட்டியில் உள்ள பிளாஸ்டிக் பூவைப் போன்றது, எப்போதும் புதியதாகவும் நிஜம் போலும் தெரியும். ஆனால் அது போலியானது என்பதால் எந்த வாசனையையும் கொடுக்காது.
அன்பு எப்போது மாய்மாலத்தால் நிரப்பப்படுகிறது? நமக்குள் உண்மையான அன்பு இல்லாதபோது, அதுவே விரிசலுக்குக் காரணமாகி பகைமையை உருவாக்குகிறது.
உண்மையான அன்பு எவ்வாறு வெளிப்படுகிறது?
உலகத்தில் வேறு எவரையும் போலல்லாமல், தேவன் நம்மீது வைத்துள்ள அன்பு மிகவும் ஆழமானது. அவர் மூலமாக நாம் இரட்சிப்பைப் பெறுவதற்காக அவர் தம்முடைய ஒரே குமாரனை பலியாகக் கொடுத்தார். தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16
தேவனுடைய அன்பு பாசாங்குத்தனமானது அல்ல, அது உண்மையானது - நாம் பாவங்களால் மூடப்பட்டிருந்தபோதும், நாம் கீழ்ப்படியாதவர்களாக இருந்தபோதும், நாம் விசுவாசமற்றவர்களாக இருந்தபோதும் அவர் நம்மை நேசித்தார். கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரிக்க முடியாது என்று வார்த்தை கூறுகிறது, உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன். ரோமர் 8:39
மாய்மாலமான அன்பு எவ்வாறு வெளிப்படுகிறது?
இந்த மாய்மாலமான அன்பின் வேர் துன்மார்க்கத்தினால் வருகிறது - அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும். மத்தேயு 24:12
தேவன் இந்த மாய்மாலத்தை வெறுக்கிறார், மாயக்காரருக்கான தண்டனையானது : அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். மத்தேயு 24:51
மத்தேயு 15:19 இல் கூறப்பட்டுள்ளபடி, துன்மார்க்கம் என்பது இருதயத்தின் பொல்லாத சிந்தனைகளிலிருந்து தோன்றும் செயல்களின் விளைவாகும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும்.
இந்த மாய்மாலமான அன்பை சரிசெய்வது என்பது உங்கள் இருதயத்தை சரிசெய்வதாகும். இது நேர்மையற்ற கசப்பான பாசாங்குத்தனமான அன்பை, உங்கள் இருதயத்திலிருந்து அகற்றும்.
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 1 தீமோத்தேயு 1:5
இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; மத்தேயு 22:37
நீங்கள் தேவனை நேசிக்கத் தொடங்கியதும், தேவனுடைய நற்குணம் உங்கள் மாய்மாலத்தை முறியடித்து, தேவன் நம்மை நேசிப்பதைப் போல மற்றவர்களிடம் அன்பு செலுத்த உங்களை மேம்படுத்தும்.
அன்புக்கு பவுல் கோடிட்டுக் காட்டும் இரண்டு பக்கங்கள் உள்ளன.
அன்பின் நேர்மறையான விளைவு (ரோமர் 12:9a)
"உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக ... ". ரோமர் 12:9a
இந்த உண்மையான அன்பை பெற்றவுடன், சக மனிதர்கள் மீதான உங்கள் அன்பு சகோதர அன்பாக மாறும். அது தேவன் உங்கள் மீது காட்டிய அன்பு. அதில் பாரபட்சம் இல்லை, நீங்கள் உங்களை நேசிப்பது போல அன்பைக் காண்பிப்பீர்கள் - சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ரோமர் 12:10
இந்த உண்மையான அன்பை நீங்கள் பெற்றவுடன், இந்த அன்பானது கர்த்தர் மீதான உங்களின் வைராக்கியத்தை அதிகரிக்கச் செய்யும் - இது உங்கள் ஆவியை ஆவிக்குரிய ஆர்வத்தில் வைத்திருக்க அக்கினியை எரியச் செய்து, ஊழியக்காரரின் மனப்பான்மையைக் கொடுக்கிறது. இது தேவனிடமிருந்து நாம் பெறக்கூடிய மிகப்பெரிய ஆவிக்குரிய ஆசீர்வாதமாகும். அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். ரோமர் 12:11
இந்த உண்மையான அன்பை நீங்கள் பெற்றவுடன், இது பொறுமையான மனப்பான்மையை உண்டாக்குகிறது, ஏனென்றால், உங்கள் சுயம் போய்விடுகிறது. இது இப்போது அவரது அன்பால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, இது காரியங்களை மேற்கொள்ள "பொறுமை / தேவனை விசுவாசிப்பதற்கான நம்பிக்கை" என்ற ஆவியின் கனியை உருவாக்குகிறது. இது தேவனுடனான ஜெப நேரத்தை அதிகரிக்கிறது. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். ரோமர் 12:12
இந்த உண்மையான அன்பை நீங்கள் பெற்றவுடன், தேவையில் இருக்கும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் மனதை இது தருகிறது, மற்றவர்களை உபசரிக்கும் நடைமுறை ஊழிய மனப்பான்மையுடன் வருகிறது. பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள். ரோமர் 12:13
அன்பின் எதிர்மறை விளைவை மேற்கொள்ளுதல் (ரோமர் 12:9b)
“… தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்”. ரோமர் 12:9b
ரோமர் 12:14-21 இல் பவுல் கொடுக்கும் அறிவுரை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நடைமுறைக் கண்ணோட்டமாகும். இதை நாம் பின்பற்றினால், தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக்கொள்ளலாம்.
நம்மை வெறுப்பவர்களை வெறுப்பதே உலகத்தின் வழியாக இருக்கிறது, ஆனால் தேவனின் பிள்ளைகளாக, நாம் வித்தியாசமாக செய்ய அழைக்கப்பட்டுள்ளோம். நம்மைத் துன்புறுத்துகிறவர்களை வெறுப்பதற்குப் பதிலாக, நாம் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள். ரோமர் 12:14
உண்மையான அன்பு உங்களிடம் இருந்தால், வெறுப்பை வைத்திருக்காமல், சாதாரணமாக இருங்கள். பல நேரங்களில், சுயமானது, இந்த மனப்பான்மையை எதிர்த்துப் போராட வரும். சுயத்தை எதிர்த்து இந்த மனப்பான்மையைக் காத்துக் கொள்ள கர்த்தரிடம் சரணடையுங்கள். சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். ரோமர் 12:15
நீங்கள் தீமையை வெறுக்கத் தொடங்கும்போது, மற்றவர்களின் செயல்களை நியாயந்தீர்க்காமல் அவர்களுடன் நல்லிணக்கத்தை வளர்க்க உதவுகிறீர்கள். அவர்களுடைய கருத்துகளுக்கு மதிப்புக் கொடுப்பீர்கள், அவர்களை உயர்வாக மதிப்பீர்கள், மனத்தாழ்மையோடு அவர்களை உங்களுக்கு மேலாக வைப்பீர்கள். அவ்வாறு செய்யும்போது, தேவனின் நன்மை உங்கள் செயல்களை வழிநடத்தி, உங்கள் ஆவிக்குரிய ஆர்வத்தை பராமரிக்க உதவுகிறது. ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். ரோமர் 12:16
நீங்கள் தொடர்ந்து தீமையை வெறுக்கும்போது, தீமைக்குத் தீமை செய்வதைத் தவிர்க்கிறீர்கள். தீமை சாத்தானிடமிருந்து வருகிறது. தேவனிடமிருந்து வருவதில்லை, ஏனென்றால் தேவன் முற்றிலும் நல்லவர், அவருக்குள் தீமை இல்லை. தீமை செய்யத் தேர்ந்தெடுப்பதன் மூலம், உங்கள் ஆவிக்குரியப் பயணத்தில் சாத்தானைக் காலூன்ற அனுமதிக்கிறீர்கள். இதனால்தான் பவுல் நம்மை எச்சரிக்கிறார், ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். ரோமர் 12:17
சில நேரங்களில், கிறிஸ்துவின் விசுவாசியாக நீங்கள் மோதலைத் தவிர்ப்பதாலும், தீமையை வெறுப்பதாலும் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்யலாம், ஏனென்றால் நீங்கள் மோதலைத் தவிர்த்து, தீமையை வெறுக்கிறீர்கள். அதனால்தான் பவுல் கூறுகிறார், கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். ரோமர் 12:18
"கூடுமானால்" என்ற பவுலின் வார்த்தை, சமாதானம் முக்கியம் என்றாலும், எல்லாரையும் பிரியப்படுத்தாவிட்டாலும், சில சமயங்களில் உங்கள் நம்பிக்கைகளில் உறுதியாக நிற்க வேண்டியிருக்கும் என்பதைக் காட்டுகிறது. கிறிஸ்தவம் என்பது எல்லாவற்றையும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்வது அல்ல - சில நேரங்களில் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
“உங்களாலானமட்டும்” என்று பவுல் சொல்லும்போது, சிலருக்கு மற்றவர்களைவிட சமாதானமாக வாழ்வது எளிதாக இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்கிறார். உணர்ச்சிகளை நிர்வகிப்பது மற்றும் அமைதியைப் பேணுவது என்று வரும்போது ஒவ்வொருவரும் வெவ்வேறு சவால்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை அவர் அங்கீகரிக்கிறார்.
நாம் நன்மையைப் பற்றிக்கொண்டிருந்தால் அதன் விளைவாக ரோமர் 12:18 இல் சொல்லப்பட்டிருப்பது நடக்கும்.
நாம் நன்மையானவைகளைப் பற்றிக்கொள்ளும்போது நேர்மையற்ற அன்பு காட்டுகிறவர்களைப் பழிவாங்க வேண்டுமென்ற தூண்டுதலை அடக்குகிறோம். பதிலாக, நமக்காக அவர் யுத்தம் பண்ணுவார் என்று நம்பி, அவரிடம் விட்டுவிடுகிறோம். பெரும்பாலும், நம்முடைய சுயமும் பழைய சுபாவமும் தேவனின் திட்டத்திற்குத் தடையாக இருக்கின்றன, இதனால் எதிரிகள் பல ஆண்டுகளாகியும் எதிரிகளாகவே இருக்கிறார்கள். ஆனால் நாம் தேவனிடம் சரணடையும்போது, நம் யுத்தங்களை நம் சார்பாக அவரே கவனித்துக்கொள்கிறார். பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். ரோமர் 12:19
நாம் நன்மையைப் பற்றிக்கொள்ளும்போது மற்றவர்கள் உண்மையாக இல்லையென்றாலும், நாம் உண்மையாக இருப்போம். இந்த நேர்மை அவர்களைக் குழப்பி, அவர்களின் தீய செயல்களிலிருந்து விலக்கி வைக்கும். தொடர்ந்து நன்மை செய்யுங்கள், ஏனென்றால் நன்மை தீமையை வெல்லும். அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்கு போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். ரோமர் 12:20
நாம் "நன்மையைப் பற்றிக்கொள்ளும்போது" நம் மூலம் தேவனின் நன்மை சத்துரு கொண்டுவரும் தீமையை வென்று உள்வாங்கும். - நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு. ரோமர் 12:21
சுருக்கம்
உங்களை எதிர்ப்பவர்களுடன் அல்லது வெறுப்பவர்களுடன் இருக்கிற உங்கள் உறவை மேம்படுத்த உதவும் சில நடைமுறை வழிகாட்டுதல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மனிதரும் தேவனுக்கு அருமையானவர்கள். ஒவ்வொரு ஆணுக்காகவும் பெண்ணுக்காகவும் நல்லவரோ கெட்டவரோ யாவருக்காகவும் கிறிஸ்து மரித்தார். அவர் அனைவருக்கும் ஒரே மாதிரியானவர். எனவே முதலில் உங்களை மாற்றுவதற்கு அவருடைய அன்பைக் குறித்துத் தியானியுங்கள். அவரால் முற்றிலும் மாற்ற முடியும். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். மத்தேயு 5:45
தேவன் நம்மீது எவ்வளவு பொறுமையாக இருக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நம்மிடம் பல தோல்விகள் மற்றும் ஏமாற்றங்கள் இருந்தபோதிலும், அவர் நம்மை ஒருபோதும் கைவிடவில்லை. இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவன், மற்றவர்களை மன்னிக்கும்படி நம்மை அழைக்கிறார் - சில தரம் அல்ல, ஏழு எழுபது தரம். வாலிபனாகிய யோசேப்பு தனக்கு துரோகம் செய்து தன்னை குழியில் விட்டுச் சென்ற தன் சகோதரர்களை மன்னித்தான். தேவன் தம்முடைய இரக்கங்களை நமக்குக் கொடுப்பதற்கு இந்த வகையான மன்னிப்பை மதிக்கிறார். ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக்கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். யாக்கோபு 2:13
உங்கள் சத்துருக்களுக்காக ஜெபம் செய்யுங்கள் – அன்பானது, ஜெபம் என்ற மண்ணில் வளர்கிறது. நம்மை வெறுக்கும் ஒருவருக்காக நாம் ஜெபிக்க ஆரம்பிக்கும் போது அவரை நேசிப்பது அல்லது மன்னிப்பது எப்போதும் எளிதாகிவிடும். உங்களை வெறுப்பவரை நேசிக்க முடியாத உங்கள் இயலாமையை தேவனிடம் அறிக்கையிடுங்கள், உங்களை இரட்சித்த அதே அன்புடன் இதை உடைக்க தேவன் தம்முடைய அன்பை உங்கள் இருதயத்தில் ஊற்றுவார். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். மத்தேயு 5:44
நாம் ஜெபிக்கும்போது, நம்மால் சுயமாக செய்ய முடியாததை செய்வதற்கு தேவனுடைய ஆவியானவர் நமக்கு அதிகாரம் அளிக்கிறார். நம்மை அவமானப்படுத்துபவர்களுக்கு எதிராக நம் நாவைக் கட்டுப்படுத்தவும், துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும்போது அமைதியாக இருக்கவும் தேவையான பலத்தை அவருடைய ஆவி நமக்கு அளிக்கும். தம்மைக் குற்றம் சாட்டியவர்களுக்கு முன்பாக இயேசு அமைதியாக இருந்ததைப் போல, அவர் நம்மை அமைதியான ஆவியால் நிரப்புவார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும்,தன்னை மயிர்க்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். ஏசாயா 53:7
கசப்பு உங்கள் இருதயத்தில் வேரூன்ற அனுமதிக்காதீர்கள், ஏனென்றால் அது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் கெடுத்துவிடும். நீங்கள் கோபப்படும்போது, தேவனிடம் திரும்பி, அதை மேற்கொள்ள அவருடைய உதவியை கேளுங்கள். கட்டுப்படுத்தப்படாத கோபம் கசப்பாக வளர்ந்து, மற்றவர்களிடம் பகைமைக்கு வழிவகுக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் இருதயத்தைக் காத்து, மன்னித்து முன்னேற தேவனுடைய பெலனைத் தேடுங்கள். ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், எபிரெயர் 12:15
பழிவாங்குதலைக் கையாள தேவனை நம்பியிருங்கள் - அதை உங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அது உங்கள் வீழ்ச்சிக்கு மட்டுமே வழிவகுக்கும் (மத்தேயு 26:52). அதற்கு பதிலாக, உங்களைத் துன்புறுத்தியவர்களுக்கு நன்மை செய்ய வாய்ப்புகளைத் தேடுங்கள், ஏனென்றால் உண்மையான வெற்றி தயவில் காணப்படுகிறது (ரோமர் 12:19-21). நீங்கள் நன்மையினால் பதிலளிக்கும்போது, தேவனால் உங்கள் சத்துருக்களிடமும் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, கிருபையுடன் செயல்படத் தேர்ந்தெடுத்து, மற்றதை அவரிடம் விட்டுவிடுங்கள். ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். நீதிமொழிகள் 16:7
Amen