top of page
Kirupakaran

5/2 வைத்து 5000 பேரை போஷித்தார்



உங்கள் வீட்டில் உறவினர் ஒருவருக்கோ அல்லது உங்கள் மகள் அல்லது மகனுக்கோ திருமணம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதற்காக பல ஏற்பாடுகள் செய்வது உண்டு. நீங்கள் விருந்தினர்களை வரவேற்க வேண்டும், அதற்காக பலரை அழைக்கும் வகையில் வீடு, வீடாக சொல்லவேண்டியது இருக்கும். இது மட்டும் அல்லாமல் உணவு ஏற்பாடுகள், மணமகன் / மணமகள் ஆடைகள், உறவினர்களுக்கான பரிசுகள், மேடை அலங்காரம், மண்டபம் ஏற்பாடு, தேவாலய அலங்காரம் மற்றும் பலவற்றை நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். இதை கூறும் பொழுதே மலைப்பாக இருக்கும்; இது அத்தனையும் செய்து முடிப்பது எப்போதும் மன அழுத்தம் / பதற்றம் நிறைந்த வேலையாகும். திருமணம் முடிந்து விட்டபிறகு எப்படி ஓய்வு எடுக்கலாம் என்று தான் எண்ணுவோம். நம்முடைய மன அழுத்தம் மற்றும் சோர்வான நிலையிலிருந்து நமக்கு ஓய்வு தேவைப்படும். இந்த சூழ்நிலையில் திருமணத்திற்குப் பிறகு யாராவது வந்து உதவி கேட்கிறார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். பொதுவாக நாம் உதவி செய்ய மறுத்து விடுவோம். ஆனால் இயேசுவோ இதற்கு முற்றிலும் மாறுபட்டு செயல்பட்டார்.


5000 பேர் கொண்ட கூட்டத்தை இயேசு எப்படி சமாளித்தார், அவர்களுக்கு எப்படி உணவளித்தார் என்பதற்கு மேலே உள்ள கதையில் சில ஒற்றுமைகள் உள்ளன. நடந்த இந்த நிகழ்வைப் பார்ப்போம்.


'இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இதுவனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படி அவர்களைஅனுப்பிவிடவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப்போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லைஎன்றார்கள். அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக்கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியானதுணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறையஐயாயிரம்பேராயிருந்தார்கள். ' மத்தேயு 14:13-21


இதற்கு முன்பதாக யோவானஸ்நானன் ஏரோது ராஜாவால் தலை துண்டிக்கப்பட்டார். இயேசு இதைக் கேள்விப்பட்ட போது ஜெபம் செய்து தமது வருத்தத்தை வெளிப்படுத்த விரும்பினார். எனவே தனிமையில் ஜெபிப்பதற்காக ஒரு தனிமையான இடத்திற்குச் சென்றார். இது மத்தேயு 14:13 இன் ஆரம்பம்.


5000 பேரை போஷித்த காரியத்தில், நாம் இயேசுவிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் நம் ஆண்டவரின் இரக்கத்தைப் பற்றி பல பிரசங்கங்களைக் கேட்டு இருப்போம். இந்த சம்பவத்திலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு இரக்கத்தை விடவும் அதிகமான காரியங்கள் உள்ளன. அது இயேசுவில் நமது ஆவிக்குரிய முதிர்ச்சியை வளப்படுத்தும்.


1. இயேசு இரக்கமுள்ளவராக இருந்தார் – “இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில்வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்” என்று படிக்கிறோம். இந்த சூழ்நிலை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஒரு திருவிழா போன்று இருந்து இருக்கும். அந்த இடம் ஒரு தேவ அக்கினி சூழ்ந்ததாக இருந்து இருக்கும், ஏன் என்றால் அவர் அவரிடம் வந்த பலரைத் தொட்டு குணப்படுத்தினார் என்று படிக்கிறோம். அங்கே 5000 க்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர். திருமணத்தில் ஒரு சிறிய விருந்தினர் கூட்டத்திற்கு சேவை செய்வதற்கே நாம் சோர்ந்து போகிறோம். ஆனால், இயேசுவின் உடல் நிலையை கற்பனை செய்து பாருங்கள். அவர் தனது உடல் பலவீனத்தைப் பற்றி கவலைப்படவில்லை. அற்புதங்கள் தேவைப்படும் நபர்களை குணப்படுத்துவது மற்றும் கவனிப்பதில் அவர் அதிக அக்கறை கொண்டிருந்தார். அது தான் நம் இயேசுவின் இரக்கமுள்ள சுபாவம்.


2. இயேசுவின் முன்னிலையில் நேரம் வெகு விரைவாக கடந்தது – “சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இதுவனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப்போய்த் தங்களுக்கு போஜனபதார்த்தங்களைக்கொள்ளும்படிஅவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.” என்று வாசிக்கிறோம். அவர்கள் அற்புதங்கள் செய்வதிலும், பிசாசுகளை விரட்டி மக்களுக்குச் சேவை செய்வதிலும் மும்முரமாக இருந்தார்கள். அவர்கள் வழக்கமாகச் செய்யும் காரியங்களைக் குறித்து யோசிக்கக் கூட நேரம் இருக்க வில்லை. இயேசுவின் பிரசன்னம் அந்த இடத்தை அவ்வாறு மாற்றியது.


3. 5000 பேருக்கு உணவு அளித்தது– “இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப்போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும்இல்லை என்றார்கள்”, என்று நாம் படிக்கிறோம்.


  • அவர்களிடம் 5 அப்பங்களும், 2 மீன்களும் மட்டுமே இருந்தன என்பதும், அனைவரும் உண்பதற்கு அது போதாது என்பதும் இயேசுவுக்குத் தெரியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இருந்தும், சீடர்களுக்கு தம் மீது உள்ள விசுவாசத்தை சோதித்துப் பார்ப்பதற்காக உண்பதற்கு ஏதாவது கொடுக்கும்படி கேட்டார்.

  • சீடர்களின் மனநிலை, நம்மைப்போல உதவி செய்வதிலிருந்து விலகிச் செல்லும் மனித மனதைப் போன்றது, ஆனால் இயேசு வேறுபட்டவர், அவர் நம்முடைய நித்திய தந்தை, நமக்கு இரக்கத்தைக் காண்பித்து உதவும் உன்னதர்.

  • அவர்கள் தங்கள் கையில் இருக்கும் 5 அப்பம் / 2 மீனை மட்டும் பார்த்து, அற்புதங்கள் மூலம் தங்களை திருப்திப்படுத்தும் நித்திய பிதா தங்களுடன் இருக்கிறார் என்பதை மறந்துவிட்டனர்.

  • சீடர்கள் நாள் முழுவதும் இயேசுவோடு இருந்து, அற்புதங்களை கண்கூடாகப் பார்த்த பிறகும் கூட, இயேசுவின் மூலம் அற்புதம் நடக்க முடியும் என்ற எண்ணம் இல்லாமல், அவர் தங்களோடு இருப்பதை முற்றிலும் மறந்து இருந்தனர்.

  • தந்தையின் சித்தத்திற்கு அடிபணிந்து, அப்பத்தை எடுத்து உடைத்து, சீடர்களுக்கு உணவளிக்கச் சொன்னதன் மூலம் இயேசு மீண்டும் தமது இரக்கத்தை நிரூபித்தார்.

  • கடைசியாக இவ்வாறு படிக்கிறோம், “எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டுகூடைநிறைய எடுத்தார்கள்.” இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காரியங்கள்

    • உங்களிடம் உள்ளதை புத்திசாலித்தனமாக பயன்படுத்துவதற்கு தேவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

    • தேவனுடைய வரம்பற்ற வளங்களை நம்புங்கள்.

    • அவர் கொடுப்பதை வீணாக்காதீர்கள்.

இதில் இருந்து நாம் செய்யக்கூடிய செயல்கள்

சுயநம்பிக்கை - நாம் துன்பத்தில் இருக்கும்போதோ அல்லது சோர்வாக இருக்கும்போதோ ​​ இயேசு செய்ததற்கு நேர்மாறானதைச் செய்ய முனைகிறோம். பிரச்சனைகளைத் தீர்க்க நம்முடைய சொந்த பலத்தின் பின்னால் ஓடுகிறோம். ஆனால், இயேசுவின் சித்தத்தைத் தேடவும், அவரிடம் இருந்து உதவியைப் பெற்றுக் கொள்ளவும் நாம் அவரைப் பின்பற்றவும், தனிமையில் ஜெபிக்கவும் வேண்டும். நாம் நமது சுயத்தை சார்ந்து இருப்பதிலிருந்து விடுபட்டு, எளிய ஜெபங்களுடன் தந்தையிடம் ஜெபம் செய்வதன் மூலம் அவரைச் சார்ந்து இருக்க வேண்டும்.


இரக்கம்

  • நாம் உண்மையாக அவரிடம் வரும்போது கர்த்தர் எப்போதும் இரக்கமுள்ளவராக இருக்கிறார். இயேசு அவர் போதித்தபடி வாழ்ந்தார். "உன்னைப் போலவே உன் அண்டை வீட்டாரையும் நேசி" லூக்கா 10:27, அது அவர் வெளிப்படுத்திய அகாபே அன்பு.

  • மற்றவருக்கு உதவி தேவைப்படுவதைப் பார்க்கும்போது நாம் இரக்கப்படுகிறோமா? மற்றவருக்கு உதவ நம்மிடம் போதிய அளவு இல்லாத சூழ்நிலைகளில் கூட, அந்த நபருக்காக ஜெபிக்க வேண்டும் என்று ஒரு பாடத்தை இயேசு கற்பிக்கிறார். இதனால் அந்த நபர் எதிர்பார்க்கும் உதவியை நம் தகப்பன் வழங்க முடியும்.

விசுவாசத்தின் சோதனை

  • கண்களை குருடாக்குதல்பல சமயங்களில் நாம் சீடர்களைப் போலத்தான் இருக்கிறோம். இயேசுவின் அற்புதங்களைக் கண்டு, அவர்களின் கண்கள் குருடாகிவிட்டன. தற்போதைய நிகழ்வை அவர்கள் தவறவிட்டார்கள். கடந்த காலத்தில் தேவன் தம்முடைய வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருந்திருக்கிறார் என்ற விசுவாசத்தைப் போக்க சாத்தான் நம் கண்களைக் குருடாக்குகிறான்.

  • தேவனுக்குக் கீழ்ப்படிதல் - நாம் கர்த்தருக்குக் கீழ்ப்படியும் பொழுது விசுவாசம் வேலை செய்கிறது. மக்களை அமரச் சொன்ன பொழுது அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்தனர். உண்பதற்கு எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டு யாரும் அங்கு இருந்து போகவில்லை. ஆனால் அவர்கள் இயேசு என்ன செய்யச் சொன்னாரோ அதற்குக் கீழ்ப்படிந்தார்கள். வாழ்க்கையில் அநேக நேரங்களில், சவால்களை எதிர்கொள்ளும் போது, இயேசு கட்டளையிடுவதற்குக் கீழ்ப்படியுங்கள். நம் நம்பிக்கைக்கு நேர்மாறாக விஷயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.

  • இயேசுவிடம் சரணடைதல் - இயேசுவின் சித்தத்திற்கு சரணடையுங்கள். எந்த சூழ்நிலையில் இருந்தாலும், அவர் வெறுமையானபொருட்களை அற்புத நிலைக்கு மாற்றுவார். இயேசு அப்பத்தை எடுத்து வானத்தை நோக்கிக் காட்டி, அவர்களுக்கு உணவளிக்க தந்தையிடம் உதவி கேட்டதன் மூலம் இதைச் செய்தார். அதைப் போல நாமும் நம்முடைய பரம தந்தையிடம் சரணடைந்தால் நமக்கும் அவர் உதவிசெய்வார்


நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. இயேசுவிடம் உதவி கேளுங்கள். நாம் அவரிடம் வரவேண்டும் என்று தினமும் அதே இரக்கத்துடன் காத்திருக்கிறார். அவர் நம்மைப் போலவே எல்லா வலிகளையும், துன்பங்களையும் கடந்து வந்திருப்பதால், நாம் என்ன செய்கிறோம் என்பது அவருக்குத் தெரியும். இதனால், அவர் இன்னும் அதிக அக்கறை கொள்கிறார். எனவே, எளிய ஜெபத்துடன் அவரை அணுகி,சரணடைந்து, உதவி கேளுங்கள். அவர் உங்கள் பிரச்சனைகளை மாற்றுவார்.

163 views0 comments

Recent Posts

See All

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page